Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

 மொபைல் லோகத்தில் நடக்கும் மூன்று முக்கிய நிகழ்வுகளை இந்த வாரத்தில் பார்க்கலாம்.

முதலில், snapchat... இந்த அலை மென்பொருளைச் சென்ற வருடத்தில் மேலெழுந்தவாரியாக இந்தத் தொடரின் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய நினைவு. நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய புகைப்படங்களை அவர்களது 'பார்வைக்கு மட்டுமே’ என அனுப்பித் தொடர்புகொள்ள உதவும் மென்பொருள் இது. உங்கள் நண்பர் உங்களது பார்வைக்காக snapchat  வழியாக அனுப்பும் புகைப்படத்தைப் பார்க்க, நீங்கள் அலைபேசியின் ஸ்க்ரீனில் விரலை அழுத்தியபடி இருக்க வேண்டும். 10 நொடிகளுக்குப் பின்னர் அந்தப் படம் மறைந்துவிடும். இந்த மென்பொருளின் இயக்கம் புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளும் இளைய சமூகத்துக்கு ஒருவிதப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க, தீயாகப் பிரபலமாகிவருகிறது snapchat. கிட்டத்தட்ட  1 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டைத் திரட்டியிருக்கிறது இந்த மென் பொருளை இயக்கும் நிறுவனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

snapchat-ன் பிரபலத்தைப் பார்த்து ஃபேஸ்புக் நிறுவனம் Poke என்ற மென்பொருளை ஈயடிச்சான் காப்பியாக வெளியிட்டாலும், அந்த மென்பொருள் எந்தக் காரணத்தினாலோ பிரபலமாக வில்லை. ஆனால், snapchat-ன் வெற்றி சமூக ஊடகத் தொடர்பு தொழில்நுட்பத் தொழில்முனைவுகளில், புதிய சிந்தனைகளைக் கொண்டுவருவதைப் பார்க்க முடிகிறது. அதற்கு நல்ல உதாரணம், சென்ற வாரத்தில் வெளியாகியிருக்கும் Heard என்ற அலை மென்பொருள். இந்த மென்பொருளை உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்துவிட்டு, இயக்க ஆரம்பித்ததும், உங்களைச் சுற்றியிருக்கும் சத்தங்களைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வரும். நீங்கள் கேட்ட எதை யாகிலும் நிரந்தரமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்றால், மென்பொருளை இயக்கி, அது சற்று முன் கேட்ட சத்தங்களைத் தற்காலிகமாக வைத்திருக்கும் தனது மெமரியில் இருந்து நிரந்தரமாகப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, திடீரென ‘Will you marry me?’ எனக் காதலன் கேட்பதையோ, 'அம்மா’ என உங்கள் குழந்தை முதல் வார்த்தை சொல்வதையோ, நீங்கள் நிரந்தரமாகப் பதிந்துவைத்துக்கொள்ள Heard உதவும். அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மென்பொருட்களில் கடந்த 12 நொடிகளை எப்போதும் கேட்கலாம். அதற்கும் அதிகமான நேரம் வேண்டுமெனில், சில டாலர்களைக் கொடுக்க வேண்டும். மென்பொருளின் வலைதளம்: http://heardapp.com/

அறிவிழி

அடுத்து, இணைய பயனீட்டாளர்களிடம் ஏற்கெனவே பிரபலமாகியிருக்கும் Instagram. புகைப்படங்கள் மூலம் ஆளுமைகளை வெளிப்படுத்திக்கொள்ளும் தொடர்பு ஊடகம் என்று இந்த அலை மென்பொருளைச் சொல்லலாம். சென்ற வருடம் 1 பில்லியன் டாலர்களுக்கு இந்த மென் பொருளை வாங்கிப்போட்ட ஃபேஸ் புக், இதைத் தனது சேவையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்காமல் தனியாகவே இயங்க அனுமதித்திருந்தது. சென்ற வாரத்தில் Instagram வீடியோக்களை எடுத்துப் பகிர்ந்துகொள்ளும் வசதியையும் கொண்டுவந்துவிட்டது. ட்விட்டருக்குச் சொந்தமான Vine மென்பொருளுக்குப் போட்டியாகவே, ஃபேஸ்புக் இதை வெளியிட்டுஇருக்கிறது. ஆறு நொடிகளுக்குள் Vine-ல் வீடியோவை எடுக்க வேண்டும். Instagram-ல் 15 நொடிகள் வரை எடுக்கலாம். இது தவிர, வீடியோக்களை எளிதாக tagging செய்வதன் மூலம் மற்றவர்கள் கண்டறியும்படி செய்யலாம் என்று பல ப்ளஸ் பாயின்ட்டுகள் இருப்பதால், சுருக் வீடியோ பந்தயத்தில் Instagram முன்னணி வகிப்பது தெரிகிறது. தனிப்பட்ட பயனீட்டாளர்கள் தவிர, நிறுவனங்களும் இந்த வசதியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். உதாரணத்துக்கு, குடிநீர் உரிமைக்காகப் போராடும் Charity Water தன்னார்வ நிறுவனத்தின் Instagram வலைப் பக்கத்தைப் பாருங்கள்.  http://instagram.com/charitywater

மூன்றாவது நடந்துவிட்ட நிகழ்வு அல்ல; மாறாக, நடக்கப்போவதாக மொபைல் உலகில் இந்த வாரம் பேசப்படும் கிசுகிசு. ஸ்மார்ட் போன் பயனீட்டாளர்கள் பலருக்கும் பரிச்சயமானது Flipboard என்ற அலை மென்பொருள். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக ஊடக மற்றும் செய்திச் சேவைகளை இணைத்துக்கொண்டு, மிக அழகிய வடிவில் அவற்றின் தகவல்களை ஓர் அச்சுப் பத்திரிகையைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் இந்த மென்பொருளை, 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருளின் பிரபலத்தைப் பார்த்து அதைப் போலவே உங்களது ஃபேஸ்புக் தகவல்களைப் பத்திரிகை போல அழகாகக் கொடுக்கப்போகிறது ஃபேஸ்புக். Reader என்ற பெயரில் தயாராகிவரும் இந்த மென்பொருளை உங்களது Timeline (அதாவது, நீங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளும் விவரங்கள்) மற்றும் Newsfeed (உங்களது நண்பர் கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள்) இரண்டையும் குழைத்துப் பத்திரிகைபோல கொடுக்கப்போகிற தாம். இது பிரமாண்டமாக வெற்றி அடையுமா அல்லது Poke போல புஸ்வாணமாகுமா என்பது ஃபேஸ்புக் இதை வெளியிட்ட சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அறிவிழி

'ஒருபாலினத்தவர்கள் செய்துகொள்ளும் திருமணம் அதிகாரப்பூர்வமானது’ என்று சென்ற வாரத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் தீர்ப்பு, அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒருபாலினத்தவர்களுக்கான உரிமைகளுக்குப் போராடும் அமைப்புகள் தீர்ப்பைக் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றன. பல டெக் நிறுவனங்கள் ஒருபாலினத்தவர்களின் உரிமைக்குத் தொடந்து ஆதரவு அளித்துவருவது அவர்களது வலைப்பதிவுகளைப் படித்தால் தெரியவரும். குறிப்பாக, இந்தத் தீர்ப்பைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் Gay என்ற வார்த்தையைத் தேடுபவர்களுக்கு, வானவில் போன்ற வடிவைத் தேடல் பதிலில் காட்டிவருகிறது. நான் ஒருபாலினத்தவன் எனப் பெருமையுடன் சொல்லும் Gay Pride பதத்துக்குக் குறியீடு வானவில் என்பது உங்களுக்குத் தெரியும்தானே!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism