பாஸ்வேர்டு்

'இவனுங்க கொடுக்கிற சம்பளத் துக்கு இந்த அளவுக்கு வேலை பார்க்கிறதே அதிகம். இவன் ஏன் தேவையில்லாம அவ்வளவு வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் பண்றான்!’ என்று அடுத்தவரின் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகும் பலர், பின்நாட்களில் பெரும் பதவிகளில், மதிப்பான பொறுப்புகளில் அமர்வதைப் பார்த்த அனுபவம் நிறையப் பேருக்கு இருக்கலாம்.

##~##

'7,000 ரூபாய் சம்பளத்துக்கு எதுக்குத் தூங்காம வேலை பார்க்கணும்?’ என்ற கேள்வி மிகவும் நியாயமானதுதான். '50,000 ரூபாய் சம்பளம் வாங்குற அந்த ஆள், காலைல லேட்டாத்தான் ஆபீஸுக்கு வர்றார். பெருசா எதுவும் வேலை பார்க்குறது இல்லை. ஆனா, மத்தியானம் சாப்பிடப் போறப்பவே, வேற ஏதாவது சாக்கு சொல்லிட்டுக் கிளம்பிடுறான்’ என்று மனசு அரிப்பது ஒன்றும் சர்வதேசக் குற்றம் இல்லை. ஆனால், நான் வாங்கும் 7,000 ரூபாய் சம்பளம் ரொம்பக் குறைவாகத் தெரிவதற்குக் காரணம், அந்த 50,000 ரூபாய் ஆசாமியை அடிக்கடி கவனித்துக்கொண்டு இருப்பதுதான் என்பதையும், இந்த இடத்தில் மறுப்பதற்கு இல்லை.

நான் முதன்முதலில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அந்த நிறுவனத்தின் மேலாளர், புதிதாக வேலைக்குச் சேர்ந்த எங்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார். 'இங்கு யார் யாருக்கு என்ன சம்பளம் என்பதுபற்றி யாரும் கவலைப்படாதீர்கள். உங்கள் திறமை என்ன என்பதை நீங்கள் சொன்னதைவைத்தும், உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விஷயங்களை வைத்தும், உங்கள் சம்பளம் தீர்மானிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் இனிதான் உங்களை, நீங்கள் நிரூபிப்பதற்கான வாய்ப்பு தொடங்குகிறது. எப்போதுமே நிறுவனம் தரும் சம்பளத்தின் அளவு என்னவோ, அதை ஒரு குறியீடாக நிறுத்தி உங்கள் பணி களைச் செய்யாதீர்கள். உங்கள் திறமை என்ன... அது எவ்வளவு விஷயங்களைச் சாதிக்கக்கூடியது என்பதை மனதில் இருத்திக்கொண்டு செயல் படுங்கள். அதான் நீங்கள் காலம் முழுவதும் தொடர வேண்டிய வாழ்க்கைப் பயிற்சி’ என்றார்.

'இந்த ஆளுக்கு 20,000 ரூபாய் கொடுக்கறதால, அள்ளிவிடுறாண்டா!’ என்று டீக்கடை முக்கில் நின்று அவரை வசைபாடி முடித்துவிட்டு, வேலைகளைத் தொடங்கினோம். அந்த மேலாளர் 350 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவராம். பரபரவென இருப்பார். உற்சாகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருப்பார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் 20,000 ரூபாய் செய்கிற வேலை இது என்று நண்பர்களுக்குள் கேலி பேசிக்கொள்வோம்.

ஆனால், 20,000 ரூபாய் சம்பளம் என்பதால், அவர் பரபரப்பாக இயங்கவில்லை... 350 ரூபாய் சம்பளம் கொடுத்தபோதுகூட அவர் இதேபோல உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும்தான் வேலை பார்த்தார் என்பதைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு ரொம்ப நாள் ஆனது. மற்ற மேலாளர்களைவிட, அவர் எங்களோடு நெருங்கிப் பழகுவார். அவருக்கு இணையான பதவியில் இருந்த அவரைவிடக் குறைவான வேலை பார்த்த பலரும் சம்பளம் போதவில்லை என்று அடிக்கடி புலம்பும்போது, இவர் ஆர்வம் குறையாமல் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்.

பாஸ்வேர்டு்

'வேலைல சேரணும், நாலு காசு சம்பாதிக்கணும்’ என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, காசு எவ்வளவு வருகிறதோ, அந்த அளவுக்கு வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலையும் பல நேரங்களில் இயல்பாகவே வந்துவிடுகிறது. யாரோ ஒருவர் கொடுக்கும் சம்பளமும் பதவி உயர்வும்தான் வேலை சார்ந்த தன்முனைப்பைத் தருகிற கருவியாக முன்நிற்கிறது.

எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அனுபவித்துச் செய்ய வேண்டும், என் திறமையை 100 சதவிகிதம் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துசக்தியை சம்பளக் கவர் சாகடித்துவிடுகிறது. இந்த வேலையை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை விட்டுவிட்டு, நோகாமல் இந்த வேலையை முடிக்க இருக்கும் வழிகள் என்னஎன்ன என்று மனசு திட்டம் போடுகிறது.

அநியாயத்துக்குப் பொறுப்பாக இருக்கிற அந்த மேலாளர் மீது எரிச்சல் வருகிறது. இந்த ஆள் நம்மையும் கூடுதலாக வேலை பார்க்கவைக்கிறானே என்று கோபம் வருகிறது. சம்பளமோ, பதவி உயர்வோ எந்தக் குறியீடுகள் பற்றியும் கவலைப்படாமல் வேலை செய்ய, தன் திறமைக்கேற்ற வேகத்தில் ஓடச் சிலரால் மட்டுமே முடிகிறது!

ஆனால், அப்படி ஓடுகிறவர்கள் எப்போதும் உற்சாகத்தோடும், தொடர்ந்து வெற்றிபெற்று உயர்ந்துகொண்டே போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விமர்சிக்கிற, கிண்டலடிக்கிற பலரும் இருந்த இடத்திலேயேதான் இருக்கிறார்கள். நம்மில் சிலருக்குத்தான் செய்கிற வேலை சிறியதா, பெரியதா என்ற பார பட்சம் பார்க்காமல், அதை நேசிப்போடும் திருப்தியோடும் செய்ய முடிகிறது.

சிவபதிக்கு கட்டடம் கட்டுவதற்குத் தேவையான கம்பிகள் செய்கிற நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி வேலை. கடை கடையாக ஏறி இறங்கி, டீலர்களிடம் பேசி கம்பி விற்க வேண்டும். அவன் அறையில் கட்டடப் பொருட்கள் தொடர்பான புத்தகங்கள் நிறையக்கிடக்கும். அது சம்பந்தமான செய்திகளை நிறையப் படிப்பான். கட்டடப் பொருட்கள் தொடர்பான விற்பனைக் கண்காட்சி நடந்தால், அங்கேயே கிடப்பான். 'கம்பி விக்கிறதுக்கு ஏண்டா இவ்வளவு சீன் போடுற?’ என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பது உண்டு. ஆனால், சிவபதி அதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டதே இல்லை. 'நீ வேணும்னா, என்னை சாதாரண கம்பி விக்கிறவன்னு நினைக்கலாம். ஆனால், நானும் அப்படி நினைச்சுட்டா, என் வேலை மேல எனக்கு மரியாதை போயிரும்’  என்பான்.

பாஸ்வேர்டு்

சர்வதேச அளவில் எந்தெந்தக் கட்டுமான நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன, அவர்களின் தொழில்நுட்பம் என்ன என்று பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பான். 'பேச்சு சாதுர்யத்தை வைத்துக் கம்பியை விற்க வேண்டியதுதானே! இவன் படிக்கிற இந்த விஷயத்தை எல்லாம் கடைக்காரன்கிட்ட சொன்னா, அவனுக்குப் புரியப்போகுதா?’ என்று விமர்சனம் வருகிறபோது, சிவபதியிடம் இருந்து தீர்க்கமாகப் பதில் வரும். 'நான் செய்ற வேலை பத்தி எனக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கோ, அதுக்கேத்த மாதிரி என் பேச்சும் அடுத்தவனுக்குப் புரியிற மாதிரி இருக்கும்’ என்று அசராமல் சொல்வான். ஆறு வருடத்தில் நிறுவ னத்தின் முதல் ஐந்து நபர்களில் ஓர் ஆளாக உயர்ந்து நின்றான். 'ஏதோ நேரம்... பெரிய ஆளாயிட்டான்’ என்ற விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல், சிவபதி உலகம் முழுக்கப் பறந்துகொண்டிருக்கிறான்.

சிவபதிக்கும் நம்மைப் போல் நிறையப் பொருளாதாரத் தேவைகள் உண்டு. ஆனால், அந்தப் பொருளாதார முன்னேற் றம் என்பதை மட்டுமே, அவன் தன்னு டைய தன்முனைப்புக்கான குறியீடாக முன்வைக்கவில்லை என்பதுதான் அவன் பக்குவம்.

இப்படியான மனசும் சிந்தனையும்கொண்ட சிவபதிகள் நிறையப் பேர் உண்டு. அவர்களைத் தேடி பதவி உயர்வும் சம்பள உயர்வும் தானாகவே வருகின் றன. நம் கையில் உள்ள செல்போனில் இருக்கும் வசதிகள் என்னென்ன, அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொண்ட அளவுக்குக்கூட, நம் வேலைபற்றிப் பல நேரங்களில் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

'இந்த ஆளிடம் இவ்வளவு பேசினால் போதும்... அந்த வாடிக்கையாளருக்கு இதைவிடச் சொல்ல ஒன்றுமில்லை’ என்று நம் வேலையோடு தொடர்புடைய மனிதர்களின் திறனை ஒட்டி நம்முடைய திறனை மட்டுப்படுத்துகிறோம். முதலாளி தரும் சம்பளத்தின் அளவுக்கேற்ப என் மூளையின் செயல்பாட்டை முடக்கிக்கொள்வேன் என்று முடிவெடுப்பது நம்முடைய அறிவு சார்ந்த வளர்ச்சியை நாமே தடுக்கிற வேலை.  

இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வேலையை உயர்வாகப் பேசும். அந்த வேலையால் கிடைக்கும் சம்பளம், அந்த வேலையில் இருக்கக்கூடிய வசதி ஆகியவற்றைப் பொறுத்து, அது மாறிக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் 'வாத்தியார் உத்தியோகம் வசதி’ என்றது. கொஞ்சம் காலம் 'டாக்டர்தான் நல்ல வேலை’ என்றது. 'பேங்க் வேலை என்றால் வாழ்க்கை செட்டில்’ என்று சிலகாலம் பேசியது. 'இன்ஜினீயர் ஆகவில்லை என்றால் வாழ்க்கையே போச்சு’ என்று பேசியவர்கள், பொருளாதாரப் பின்னடைவுக்குப் பிறகு இன்ஜினீயர் வேலை அவ்வளவு பாதுகாப்பில்லாத உத்தியோகம் என்றார்கள்.

பாஸ்வேர்டு்

உலகம் தான் வைத்திருக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வேலைக்கும் அவ்வப்போது ஒரு ரேங்க் போடுகிறது. வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும். என் முழுத் திறனை வெளிப்படுத்திச் செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், எந்தத் துறையில் இருந்தாலும் ஜெயிக்கிறார்கள். உலகம் சொல்கிற உயர்வான வேலை, சாதாரண வேலை என்ற பாரபட்சம் அவர்களைப் பாதிப்பது இல்லை.

ஏதோ ஒரு டீக் கடையில் கூட்டம் அதிகமாக நிற்பதன் பின்னணியில், அந்த டீ மாஸ்டரின்  உழைப்பு மனசு நிரம்பிக்கிடக்கிறது. அப்படி மனசைக் கொடுத்து வேலை பார்த்த டீ மாஸ்டர்கள்தான், விரைவில் சொந்தக் கடை போட்டு, அடுத்த உயரத்துக்குச் செல்வார் கள். நம் திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்பதற்காகச் சுருங்கிக்கொள்வதைவிட, அடுத்தவர் கொடுக்கும் விலைக்கும் என் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு வருவதுதான் நமக்கு நல்லது.

சிவபதி இன்னமும் புதிது புதிதாக ஏதோ படிக்கிறான். ஆய்வு மாணவன்போல தேடிக்கொண்டே இருக்கிறான். அவனால் வேலை, குடும்பம் என எல்லாவற்றையும் உற்சாகத்தோடு அணுக முடிகிறது. அவன் திறமையை யாராலும் விலை பேச முடியாது. என்ன விலை வைத்தா லும் அவன் அதுபற்றிக் கவலைப்பட்டுக்கொள்ளாமல் அவன் தேடலைத் தொடர்கிறான்!

- ஸ்டாண்ட் பை...