
உணவு விடுதியின் மெலிதான வெளிச்சம், தீபாவின் கண்கள் ஈரத்தில் பிரதிபலித்தன. குரலில் இயலாமையில் எழுந்த கோபம் இருந்தது.
'சென்னைல ஷங்கர் சார் ஆபீஸ்ல விசாரிச்சிட்டு வரேன்... பூஜை நேரத் துல செந்தில் போனே எடுக்கலை. அதனால பாரிக்கு வாய்ப்பு கெடைச்சுதுனு சொன்னாங்க. செந்திலை என்ன பண்ணீங்க?'
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'சத்தியமா செந்திலுக்கு என்ன ஆச்சுனு எனக்குத் தெரியாது' என்று பாரி, பொறுமையாக வாகனம் மாறி ஏறியதை விவரித்தான்.
'சினிமாங்கறது எனக்குத் தானா அமைஞ்ச வாய்ப்பு. விதியோட விளையாட்டு. சூப்பர் ஸ்டார் கையால ஆசீர்வாதம் கிடைச்சது. இனி, இதான் என் வாழ்க்கை. உங்களுக்கு உதவ முடியல. மன்னிச்சிருங்க.'
##~## |
பாரியின் கண்களில் பொய் இல்லை என்பதை தீபா கவனித்தாள்.
'வரேன்...' என்று எழுந்தாள்.
'பஸ் ஸ்டாண்ட் வரை துணைக்கு வரேன்...' என்று பாரியும் எழுந்தான்.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும், 'என் காதல் உண்மைன்னா, செந்தில் சீக்கிரமே எனக்குக் கெடைப்பார்' என்று உறுதியான குரலில் தீபா கூறினாள்.
இன்ஸ்பெக்டர் துரை அரசன், தன் முன்னால் நின்றவனை நிமிர்ந்து பார்த்தார். கலைந்த கூந்தல். திருத்தாத தாடி. குட்கா வாசம் வீசும் பேச்சு.
'சார், போரூர் கேஸ்ல சரண்டர் ஆக வந்திருக்கேன்!'
தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த செந்திலை, கைலாசம் கட்டிப்பிடித்தார்.
'உன் பிளான் வொர்க்அவுட் ஆயிடுச்சு! அத்தனை குடிசைங்களும் காலி ஆயிடுச்சு.'
'அப்ப நான் போலாமா?'
கைலாசம் அவன் தோளில் அன்புடன் கை வைத்தார்.
'செந்திலு, நீ சினிமால என்ன சம்பாதிச்சு இருப்பியோ, அதே அளவுக்குச் சம்பாதிக்க வழி பண்ணித் தரேன். கூடவே இருந்துரு!'
'ப்ச்...'
'அடிதடிலாம் வுட்டுட்டு, ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றேன். நீ கூட இருந்து பிசினஸைக் கவனிச்சிக்கிறியா?'
'போலீஸ் வேடிக்கை பாக்குமா?'

'போலீஸும் ரவுடியும் சும்மா பேருக்குத்தான் மொறைச்சிக்கும். மத்தபடி ஒருத்தருக்கொருத்தர் வேண்டப்பட்டவங்கதான். நாங்க போலீஸுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கோம். போலீஸும் எங்களுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கு. நம்பு... உம்மேல இருக்கற கேஸ் டிராப் ஆயிடும்.'
'எப்படி?'
'நம்ம பையன் ஒருத்தன் சரண்டர் ஆயிட் டான்.'
'ஐயோ, எனக்காக யாரோ ஒருத்தன் எதுக்கு மாட்டிக்கணும்?'
'பார்றா... உடனே யாருக்காகவோ மல்லுக்கட்றத! அவனையும் வெளில எடுத்துருவோம். தொழில்ல இதெல்லாம் சகஜம்பா.'
'ஆனா, துப்பாக்கில என் கைரேகை இருந்ததே?'
'அதெல்லாம் அவன் வாக்குமூலத்துல பார்த் துப்பான்.'
செந்திலின் கண்களில் முதல்முறையாக நம்பிக்கை துளிர்த்தது.
துரை அரசன் பென்சிலை உருட்டிக்கொண்டே தனக்கு எதிரில் நின்றவன் பேசியதைக் கேட்டார்.
'சார் நாகு மேல எனக்கு தீராப் பகை. அவனைப் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்டேன். போரூருக்கு அவனைக் கூட்டிட்டு வர்றதா, பூமணி சொன்னான். போற வழில ஒருத்தன் காரைத் தவறவிட்டுட்டதா லிஃப்ட் கேட்டான். அவன்ட்ட காசு அடிக்கலாமேனு ஏத்திக்கிட்டோம். துப்பாக்கியைக் காட்டி, கழுத்துல இருக்கற செயின், பர்ஸ் எல்லாம் புடுங்கினோம். பார்ட்டி டப்னு துப்பாக்கியை எங்கிட்டேர்ந்து புடுங்கிட்டான். ஆனா வெத்து ஜபுரு. சுடுற தெகிரியம்லாம் இல்ல. அதையும் புடுங்கினு, அவன அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டோம். போன இடத்துல பிரச்னை ஆயிருச்சி. கொலை பண்ணிட்டு எஸ்கேப் ஆவற சமயத்துல, கார் கல்லுல மோதித் தூக்கிருச்சி. பர்ஸையும் துப்பாக்கியையும் போட்டுட்டு ஓடிட்டேன். அஞ்சாறு நாள் தலைமறைவா சுத்துனேன். தாக்குப்புடிக்க முடில... அதான் வந்துட் டேன்.'
துரை அரசன் அவனை வெறுப் புடன் பார்த்தார்.
'யாருக்காகடா தலை குடுக்கற..?'
'சத்தியமா நான்தான் சார் கன்விக்ட்டு.'
'கன்விக்ட்டா? ம்ஹ்ம்... எல்லாம் மேல் இடத்துல ஆள் வெச்சிருக்கீங்க...' என்று முணுமுணுத்துக்கொண்டே, துரை அரசன் அந்தக் காகிதத்தை அவன் பக்கம் திருப்பினார்.
'வாக்குமூலத்துல கையெழுத்துப் போடு...'
தீபா அலுவலகம் முடிந்து, நடைப் பிணமாக சாலையோரம் வந்து கொண்டிருந்தபோது, அருகில் ஒரு வேன் வந்து நின்றது. அதன் கதவு திறந்த வேகத்திலேயே, உள்ளிருந்து கைகள் நீண்டன. அவளை உள்ளே இழுத்துப்போட்டன. நடந்தது புரியாமல் தீபா திகைக்க, வேன் வேகம் எடுத்தது.
செந்தில் அந்த வாழ்க்கைக்குப் பழகிவிட்டான். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி. இணையதளம், செய்தி சேனல்கள். மற்றபடி, ரியல் எஸ்டேட் பற்றிய புத்தகங்கள், செய்திகள், குறிப்புகள், விதிமுறைகள். அவற்றில் விரைவிலேயே நிபுணத்துவம் பெற்றுவிட்டான்.
'செந்தில்ணா... ஒன்னப் பாக்க யாரோ வந்திருக்காங்க.'
செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, செந்தில் எழுந்தான். கைலாசத்தைத் தவிர, வேறு யார் தேடி வரப்போகிறார்கள்?
அறையிலிருந்து வெளிப்பட்டவன் அப்படியே திகைத்து நின்றுவிட்டான். அங்கே ஈரமான விழிகளுடன் காத்திருந்தவள்... தீபா!
- தடதடக்கும்...