யட்சன்

செந்திலைப் பார்த்த தீபா, இரண்டே எட்டில் அவனை அடைந்தாள்.

''இருக்கியா... செத்தியானு ஒரு போன்கூடப் பண்ண மாட்டியா?' என்று கேட்ட படி, 'சுளீர்... சுளீர்...’ என்று அவன் கன்னங்களில் அறைந்தாள். அடித்த அதே கையால்

##~##
இழுத்து அணைத்தாள். தோளில் முகம் புதைத்து விம்மினாள். செந்தில், மெள்ளத் தனது கைகளை அவள் முதுகில் வைத்து அணைத்தான். ஒருவருக்குள் மற்றவர் கரைவதுபோல் இருவருடைய உடல்களும் நெருக்கமாக அழுத்திக்கொண்டன.

''என்னைத் தூக்கிட்டு வரச் சொல்லியிருக்கே? என்னடா ஆச்சு உனக்கு?'' என்று தீபா குமுறினாள்.

செந்தில் அவளைச் சற்றே விலக்கி நகர்த்தி, முகம் பார்த்து, மீண்டும் இழுத்து அணைத்துக்கொண்டான்.

''விவரமா சொல்றேன்... வா...'' - அவளை அணைத்தபடியே தனது அறைக்குள் அழைத்துச் சென்றான்.

ணவு இடைவேளையில் அந்தப் பரந்த தென்னந்தோப்புக்குள் பாரி நடந்தான். பசுமையும் ஆரோக்கியமான காற்றும் கிறங்கடித்தன. இளம் பெண் கூந்தலைச் சிலுப்பு வதுபோல, தென்னை ஓலைகள் சிலுப்பிக்கொண்டு சிணுங்கின. பாரி, ஒரு சிறு பாறையில் அமர்ந்தான். மனம் அலைபாய்ந்தது. 'எங்கோ குப்பைத் தொட்டியில் வீசப் பட்டுத் துவங்கிய வாழ்க்கை, இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதே..! யார் வேலை இது?’

கண்களை மூடினால், தீபா கண் முன் வந்து நின்றாள். 'அந்தப் பெண் செந்திலை எவ்வளவு ஆழமாக நேசித்திருந்தால், ஊர்விட்டு ஊர், இரவு என்றுகூடப் பாராமல் தன்னைத் தேடி வந்திருப்பாள். அவளுக்கு செந்தில் கிடைக்க வேண்டும்!’

திடீரென்று மருதாணி வாசத்துடன், தளிர் விரல்கள் பின்புறமிருந்து அவன் கண்களைப் பொத்தின.

பாரி திடுக்கிடலுடன், ''கயல்... என்ன விளையாட்டு இது?'' என்று கேட்டதும், சட்டென்று அந்த விரல்கள் பிரிந்து விலகின.

''ஓ..! ஒரு வாரத்துக்குள்ள கயல்விழிகூட அவ்வளவு நெருக்கமாயிட்டியா?''

பாரி திரும்பினான்.

யட்சன்

''ஏய் தேவி... நீயா?''

''ஏன்... ஏமாத்தமா இருக்கா?''

''ச்சீ... லூஸு... கயல்கூடத்தான தினம் நடிச் சிட்டு இருக்கேன். அதான் அவளோனு நினைச் சுட்டேன். வா... வா... இப்படி உட்காரு!''

தேவி எதிரில் அமர்ந்தாள். கருநீல ஜீன்ஸும், வான் நீல டாப்ஸும் அவளுக்கு மெருகூட்டின.

''நீயும் கயலும் சேர்ந்துதான் ஹோம்வொர்க்லாம் பண்றீங்களாம்..?'' என்று முகத்தைச் சாய்த்து ஓரக் கண்ணால் பார்த்துக் கேட்டாள்.

''உண்மையைச் சொல்லணும்னா, உன்னைப்பத்திதான் இப்ப நெனைச் சேன்.''

''அய்... நம்பறேன்...''

''சத்தியமா தேவி... நாளைல இருந்து பாட்டு எடுக்கப்போறாங்களே... தேவி வந்தா, நாலு ஸ்டெப் கத்துக்கலாமேனு நினைச்சேன்.''

''தனியாவா... கயலோடயா?''

''கண்ல பாரு பொறாமைய...'' என்று சிறு கல்லை எடுத்து சிரித்தபடி அவள் மீது வீசினான் பாரி. தேவியுடன் பேசியபோது, இறுக்கம் உதிர்ந் தது. பல நாள் பழகியது போன்ற இயல்பு வந்தது.

''ஃபைட்டுனா சமாளிச்சுடுவேன்... டான்ஸ்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. சாவுக்குக்கூட ஆடினது இல்ல. இன்னிக்கு இங்லீஷ் கிளாஸைக் கட் பண்ணிடறேன். உடம்பை எப்படி வளைக்கணும்னு சொல்லித்தர்றியா?''

''நான் வளைச்சபடி வளையறதுக்கு ஹீரோ ரெடியா?''

பாரி வாய்விட்டுச் சிரித்தான்.

தீபா உள்ளங்கைகளில் முகத்தை ஊன்றி, செந்திலையே வெறித்தாள்.

''எப்பவுமே யாரையாவது சார்ந்தே இருந்துட்டேன் தீபா. நல்லவனா இருந்தா மட்டும் பத்தாது, வல்லவனாவும் இருக்கணும்னு புரிஞ்சுக்கிறதுக்குத்தான் போரூர்ல பாரிக்குப் பதிலா நான் போய் மாட்டிக்கிட்டேன்னு இப்பத் தோணுது.''

''இவங்களைப் போல, பாரி அடிதடிக்கெல்லாம் போறவன் மாதிரி தெரியலை செந்தில். அவனைத் தீர்த்துக்கட்ட யார் பிளான் பண்ணியிருப்பாங்க?'' என்றாள் தீபா.

'இவங்கள்லயும் நல்லவங்க இருக்காங்க தீபா. ஆனா, புலி வாலைப் பிடிச்சிட்டாங்க.''

'டேய்... இந்த க்ரூப்ல சேர்ந்துட்டியா என்ன?''

''நாகு செத்ததுக்கு நான்தான் காரணம். ஆனா, எனக்காகத் தலை யைக் கொடுக்க ஒருத்தனை அனுப்பி இருக்காங்க. இவங்களுக்கு நான் விசுவாசமா இருக்க வேண்டாமா தீபா? அடிதடியை நம்பாம, ஒரு நியாயமான வாழ்க்கையை இவங்க ளாலயும் வாழ முடியும். இவங்களை வெச்சு ரியல் எஸ்டேட் பிசினஸ்ல சாதிச்சுக் காட்டறேன் பார்.'

தீபா கண்களில் நீருடன் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

''நாம கை கோத்துட்டு பீச்ல நடந்தோமே... உன் மடில படுத்துக் கதை கேட்டேனே... அந்த சுகத்தை மனசுக்குள்ளயே எத்தனை தடவை மறுபடி மறுபடி வாழ்ந்து பார்த்துட்டு இருக்கேன் தெரியுமா செந்தில்..? அதெல்லாம் இனிமே கெடைக் காதாடா?''

''சட்டப்பூர்வமா, சுத்தமான மனுஷனா நான் வெளிய வர்ற வரைக்கும் பொறுத்துக்கோ தீபா!''

தீபா கண்ணீருடன் சிரித்தாள்.

லோகு தன் நண்பர்களிடம் ரகசியக் குரலில் சொன்னான்:

''கைலாசம் ஆளு ஒருத்தன் செந்திலுக்குப் பதிலா போலீஸ்ல சரண்டர் ஆயிருக்கான். எங்க அண்ணனைக் கொன்ன செந்தில் எப்படியும் வெளிய வருவான். உஷாரா இருந்து அவனை மடக்கணும்... என் கையால அவன் சாகணும்!''

- தடதடக்கும்...