Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

குறிப்பிடத்தக்க சில இண்டஸ்ட்ரி நிகழ்வுகளை முதலில் பார்த்துவிடலாம்.

Groupon நிறுவனத்தை நிறுவி, அதன் செயலி யக்கத் தலைவராகவும் பணியாற்றிய ஆண்ட்ரூ மேசன் சில மாதங்களுக்கு முன்னால் தனது சொந்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் இதேபோல் நடந்தது. வெளியேற்றப்பட்ட ஜாப்ஸ் NeXT என்ற நிறுவனத்தையும், Pixar என்ற நிறுவனத்தையும் நிறுவி, ஆப்பிளையே NeXT நிறுவனத்தை வாங்கவைத்து, மீண்டும் ஆப்பிளைத் தனது கைக்குள் கொண்டுவந்தது டெக் உலக வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிட்ட நிகழ்வு. மேசன் இப்படியெல்லாம் எதுவும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
மெனக்கெடுவதாகத் தெரியவில்லை. சென்ற சில மாதங்களாக மியூஸிக் ஆல்பம் ஒன்றைத் தயாரித்து அதைச் சென்ற வாரம் வெளியிட்டிருக்கிறார். 'வேலை பார்ப்பதில்லை’ (Hardly Working) என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருக்கும் ஆல்பத்தில் இருக்கும் பாடல்கள் இளைய தலைமுறைக்கு தொழில்முனைவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எழுதியதாகச் சொல்கிறார் ஆண்ட்ரூ. சில பாடல்களைக் கேட்டுப் பார்த்தேன். யாரையோ கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு, தானே ஜோக்கராக ஆனதுபோல் இருக்கிறது பல பாடல்கள். பாடல்களைக் கேட்க iTunes கடைக்குச் செல்ல வேண்டிய உரலி

இன்னொரு வெளியேற்றமும் நடந்திருக்கிறது. நடந்திருக்கும் நிறுவனம் Zynga. ஒரு காலத்தில் Farmville, Cityville என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த நிறுவனம், தனது வருமானத்தைக் கிடுகிடுவென அதிகரித்து பொதுச் சந்தைக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் Zynga-வுக்கு இறங்கு முகம்தான். மிக முக்கியக் காரணம், மொபைல் சாதனங்களில் இயங்கும்வண்ணம் தங்களது விளையாட்டுத் தொழில்நுட்பத்தை வேகமாக மாற்ற முடியாததுதான். 10 டாலர் முகமதிப்பில் இருந்த அவர்களது பங்கு, இன்றைய நாளில் இரண்டு டாலர்களில் ஊசலாடிக்கொண்டிருப்பதால் Zynga-வில் முதலீடு செய்தவர்களின் அழுத்தம் காரணமாக, நிறுவனரும் செயலியக்கத் தலைவருமாக இருந்த மார்க் பிங்கஸை விலக்கிவிட்டு, மைக்ரோசாஃப்ட்டில் பணிபுரிந்துவரும் டான் மேட்ரிக்கை Zynga-வை நடத்த அழைத்திருக்கிறார்கள். மைக்ரோசாஃப்ட்டின் Xbox பிரிவை நடத்திவந்த டான் Zynga-வைத் தூக்கி நிறுத்திவிடுவாரா என்பது சில மாதங்களில் தெரியவரும்!

தூக்கிவிடுவதற்காக யாஹூவுக்குள் கொண்டுவரப்பட்ட கூகுளின் மரிசா மேயர், தீவிர ஷாப்பிங் மூடில் இருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் பிரபல வலைப்பதிவுத் தொழில்நுட்பமான Tumblrயை யாஹூ பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது நினைவிருக்கும். சில வாரங்களுக்கு முன்னால் Qwiki நிறுவனத்தை வாங்கிய யாஹூ, இந்த வாரத்தில் Xobni நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள், சிறு வீடியோக்கள், நிலைத்தகவல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, அழகிய வீடியோவாக மாற்றிக்கொள்ள உதவுகிறது Qwiki. உங்கள் இமெயிலின் தகவல்களைத் தொகுத்து வசதியாக்கிக் கொடுக்கிறது Xobni. (இந்தப் பெயர் inbox என்பதைத் தலைகீழாக எழுதியிருப்பது என கூகுள் உதவி இல்லாமல் நீங்களே கண்டுபிடித்திருந்தால் உங்களது அறிவுக்கூர்மை சராசரியைவிட அதிகம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!) இப்படி மானாவாரியாக இருக்கும் பணத்தையெல்லாம் ஏதேதோ நிறுவனங்களை வாங்கப் பயன்படுத்துகிறாரே, இதெல்லாம் யாஹூவைக் காப்பாற்ற உதவுமா என்ற முணுமுணுப்புச் சத்தங்கள் கேட்டாலும், யாஹூவின் முதலீட்டாளர்கள் மரிசாவின் மீது நம்பிக்கை வைத்திருப்பதை யாஹூவின் பங்கு மதிப்பு காட்டுகிறது!

அறிவிழி

ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்ட்இன் போன்ற சமூக ஊடகத் தளங்கள் வருவதற்கு முன்பிருந்தே நாம் பயன்படுத்திவரும் சமூக ஊடகம் ஒன்று உண்டு. அது இமெயில். பல வருடங்களாக நாம் இமெயில் பயன்படுத்தி வந்தாலும் யாரிடம், எப்படி, எவ்வளவு கால இடைவெளியில் தொடர்புகொண்டுவருகிறீர்கள் என்பதைக் கண்டறிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான MIT ஒரு சேவையை வெளியிட்டிருக்கிறது. Immersion என்ற பெயர்கொண்ட இந்த சேவை கூகுளின் ஜிமெயில் பயனீட்டாளர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்களது ஜிமெயில் கணக்கை Immersionயில் இணைத்துக்கொண்டால், அது இமெயில்களின் தகவல்களின் தகவல்களைச் (Metadata) சேகரித்துக்கொண்டு அழகிய வரைபடமாகத் தொடர்புகளைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 3 லட்சம் இமெயில்களைக்கொண்ட எனது ஜிமெயில் முகவரியைக் கொடுத்த ஐந்து நிமிடங்களில், விவரங்களை அலசி, நேர்த்தியாகத் தொகுத்துக்கொடுக்கிறது. இது பாதுகாப்பானதுதானா என்று கேள்வி எழலாம். அவர்களது வலைப்பதிவின்படி உங்களது Metadataவை நீங்கள் அவர்களது தளத்தில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்; வேண்டாம் எனில், அழித்துவிடும்படி கூறலாம். இந்த சேவையின் உரலி immersion.media.mit.edu  

ஜாப்ஸ் பற்றி முதல் பாராவில் சொல்ல மறந்த செய்தி...  அடுத்த மாதம் Jobs திரைப்படம் வருகிறது. 1971-ல் இருந்து 2011 வரை ஜாப்ஸின் 30 வருட கால வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஜாப்ஸாக நடித்திருப்பவர் ஆஷ்டன் குட்சர் (ஆம், டெமி மூரின் 'இளைய’ கணவரான அதே ஆஷ்டன் குட்சரே). ட்விட்டர் உட்பட பல நிறுவனங்களில் தொழில் முதலீடு செய்துவரும் ஆஷ்டன், ஜாப்ஸ் பாத்திரத்தில் நடிப்பது டெக் உலகில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆகஸ்ட் 16 அன்று, முதல் ஷோ இந்தப் படத்தைப் பார்ப்பதென்பது இப்போதைய திட்டம்.

Prism பிரச்னைபற்றி எழுதிய பின்னர், ஃபேஸ்புக்கில் அமெரிக்கா, ஒபாமா என்று வார்த்தைகளைக்கொண்ட நிலைத்தகவல்களை நான் எழுதினால், பலரது கற்பனை றெக்கைவைத்த குதிரையாகப் பறக்கிறது. 'CIA உங்களது நிலைத்தகவலைப் படிக்கிறார்களா எனப் பார்க்கிறீர்களா?’ என்று கரிசனத்துடன் கேட்ட ராம்குமார், ராமச்சந்திரன் போன்ற வாசகர்கள் ஹாலிவுட் படங்கள் அதிகம் பார்க்கிறார்கள் எனச் சந்தேகிக்கிறேன்!  

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism