##~##

போன வாரம் நண்பர் ஒருவரின் ஐந்து வயது மகன் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். தன் மகனின் வகுப்பு நண்பர்களை அவரவர் பெற்றோருடன் அழைத்திருந்தார் நண்பர். வீட்டிலேயே எளிமையான கொண்டாட்டம். வழக்கம்போல் கேக் வெட்டி 'ஹேப்பி பர்த்டே’ பாட்டுக்குப் பிறகு, வழக்கம் இல்லாத சில விஷயங்கள் அரங்கேறின அங்கே.

கேக், பிஸ்கட், டீ, குளிர்பான உபசரிப்புக்குப் பிறகு ரிலாக்ஸ் டைம். ஆனால், மிகவும் அர்த்தமாக அமைந்த ரிலாக்ஸ் டைம். விழாவுக்கு வந்திருந்த அனைத்துப் பிள்ளைகளையும், 'நீங்கள் படித்து முடித்துப் பெரிய ஆளானதும் என்ன செய்யப்போகிறீர்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசச் சொன்னார் நண்பர். ஐந்து வயதுப் பிள்ளைகள் என்ன பேசப்போகிறார்கள் என்ற ஆர்வம் எனக்கு. மற்ற பிள்ளைகளைவிட, தன் பிள்ளை நன்றாகப் பேசிவிட வேண்டுமே என்கிற தவிப்பு மற்ற பெற்றோர்களுக்கு.

''மை நேம் இஸ் ஸ்வஸ்திக்... ஷான் இஸ் மை குட் ஃப்ரெண்ட். ஹி ஹெல்ப் மி இன் ஸ்டடியிங். வி ப்ளே டு கெதர். நான் ஐ.ஏ.எஸ். ஆகி எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவேன். நிறையக் காசு சம்பாதிச்சு, புவர் பீப்பிள்க்குக் கொடுப்பேன்!'' - இது ஸ்வஸ்திக்.

''ஷான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் சிங்கப்பூர்ல இருந்து எனக்கு லயன் வாங்கிட்டு வந்தான். நான் காசு சேர்த்து நிறையப் பேருக்கு ஹெல்ப் பண்ணுவேன்!'' - இது அக்ஷய். இப்படியே இன்னும் நிறையப் பிள்ளைகள் பேசினார்கள்.

பாஸ்வேர்டு் - 14

அனைவரும் பேசி முடித்ததும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஓர் உண்டியலும், தினசரிக் கணக்கு எழுதுவதற்கான ஒரு நோட்டுப் புத்தகமும் பரிசாக வழங்கினார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர். ''நான்தான் கணக்குப் பிள்ளை தாத்தா!'' என்று அவர் தன்னைக் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். நிறைய ஜோக்குகளும் விளையாட்டுகளும் விளையாடிக் காட்டிப் பிள்ளைகளை மகிழ்வித்த அந்தத் தாத்தா, இறுதியில் குழந்தைகளிடம் ஒரு கேள்வி கேட்டார்...

''உன்கிட்ட 20 ரூபா கொடுத்தா என்ன செய்வ?''

''சாக்லேட் வாங்கிச் சாப்பிடுவேன்!''

''பொம்மை வாங்குவேன்!''

''அம்மாகிட்ட கொடுத்துருவேன்!''

''ஜெல்லி வாங்கிச் சாப்பிடுவேன்!''

''சிப்ஸ் வாங்கிக்குவேன்!''

''குட்டிப் பேனா வாங்குவேன்!''

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு கதை சொன்னது. அனைவருக்கும் 'வெரிகுட்’ சொன்ன தாத்தா, ''20 ரூபாய்ல 10 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிட்டு, மிச்ச 10 ரூபாயை உண்டியல்ல போடணும். அதோட தினமும் என்னெல்லாம் செலவு பண்ணீங்கனு அந்த நோட்டுல எழுதணும். அப்பதான் நீங்க நல்ல பிள்ளைங்க!'' என்றார். எல்லாக் குழந்தைகளும் உற்சாகமாகத் தலையாட்டினார்கள். பிள்ளைகளின் மேடை பயத்தைப் போக்கும் வகையில் பேச்சாளர் கள் ஆக்கியதோடு, கணக்காகச் செலவழிக்கும் பழக்கத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த அந்தப் பிறந்தநாள் விழா மிகவும் அழகாக நிறைவடைந்தது.

நண்பரிடம், ''என்னப்பா... என்னென்னமோ வித்தியாசமா டிரை பண்ற?'' என்று கேட்டேன். ''வித்தியாசமால்லாம் இல்லை. தேவையான விஷயம்தானே!'' என்றார் சிரித்துக்கொண்டே.  கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், அத்தனை சின்னப் பிள்ளைகளுக்கும் காசு சேர்க்கணும், கணக்கு எழுதணும் என்று சொல்வது முழுதாகப் புரியுமோ புரியாதோ... ஆனால், மனசுக்குள் சின்னதாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றியது. மேலும், 10 வயதுக்குள் நாம் கற்றுக்கொள்ளும் பழக்கங்களைத்தானே வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்கிறோம் என்று தோன்றியது. கிடைக்கும் காசை எல்லாம் செலவு பண்ணக் கூடாது.  என்ன வரவு வருகிறது... என்ன செலவு செய்கிறோம் என்பதைக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நல்ல பண்பாடு. அதை நம் பிள்ளைகளுக்குச் சின்ன வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் அல்லவா?

பாஸ்வேர்டு் - 14

மிக அதிகம் இல்லை... 20 வருடங்களுக்கு முன்னால்கூட இப்படியான பண்பாடு நம் குடும்பங்களில் இருந்தது. ஆனால், மத்தியதரக் குடும்பங்களின் பொருளாதார நிலை உயர உயர... பிள்ளைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்கூட வரவு-செலவுக் கணக்கு எழுதுவது இல்லை என்பதே இப்போதைய யதார்த்தம். ஏன்?

'தினசரி நெருக்கடியில் கணக்கு எழுதுவதற்கு எல்லாம் ஏது நேரம்? அந்த நேரத்தில் நான் இன்னும் நாலு காசு சம்பாதிச்சுடுவேன். லம்ப்பா ஏதேனும் ஒரு பெரிய தொகை வந்தால், அதை மட்டும் குறித்துவைத்துக்கொள்வோம். மத்தபடி எதுக்குக் கணக்குவழக்கு எல்லாம்?’ என்ற நினைப் பில்தான் இன்றைய இளம் வயது சம்பாத்தியக் காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், திடுக்கென ஓர் அவசரச் செலவு வந்து வங்கிக் கணக்கைப் பார்க்கும்போதுதான், 'அய்யய்யோ... காசெல்லாம் எங்கே போச்சு?’ என்று மனம் படபடக்கும். 'வந்த காசை யாருக்காவது கடன் கொடுத்தோமா? இல்லை... எங்கேயாவது சீட்டு போட்டுவெச்சோமா?’ என்று நினைவலைகளை ஓட்டுவதோடு, வீட்டில் இருக்கும் பாஸ்புக், இரும்புப் பெட்டிகளை எல்லாம் புரட்டித் தேடி ஓய்ந்துபோவோம்.

'இது சரிவராது. இனி, ஒழுங்காக் கணக்கு எழுதணும். இவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச காசு விரலிடுக்குத் தண்ணி கணக்கா நழுவிப்போச்சே. வெட்டிச் செலவாச்சா, தொலைஞ்சுபோச்சானு தெரியாம இனி டென்ஷன் ஆகக் கூடாது!’ என்று முடிவெடுப்போம். உடனடியாக குடுகுடுவென்று ஓடிச் சென்று, ஒரு கணக்கு நோட்டு வாங்கி வந்து முதல் செலவாக, 'கணக்கு நோட்டு வாங்கியது 60 ரூபாய்’ என்று எழுதிவைப்போம். (பொறுப்பா இருக்கிறோமாம்!) சிலர் கணினியில் ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு 'அக்கவுன்ட்ஸ்’ என்று தலைப்பு வைப்பார்கள். சிலர் செலவான கையோடு ஒவ்வொரு செலவையும் குறித்துவைக்க வேண்டும் என்று தங்கள் அலைபேசியில் வரவு-செலவு நிர்வாக அப்ளிகேஷனை நிறுவுவார்கள். ஆனால், எல்லாமே 'ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்’ கணக்குதான். பண நிர்வாகத்தைக் கைக்கொள்ளாததால் 30, 35 வயதுகளில் தலையைப் பிய்த்துக்கொண்டு திரிவதைவிட, நிதி நிர்வாகம், சேமிப்பு, வரவு-செலவுக் கணக்கு போன்ற பொருளாதார மேலாண்மையைச் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நல்லது.

எது தேவை, எது தேவை இல்லை, எந்தச் செலவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும், எந்தச் செலவைத் தள்ளிப் போடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க முடியும், எது சம்பிரதாயச் செலவு என்பதை உணர்ந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நாம் கணக்கு வைத்துக்கொள்ளும் வரவு - செலவுக் கணக்கு உதவும். 'அட... 35 ஆயிரம் சம்பளம். மாசக் கடைசியில் 3,000 ரூபாய் அக்கவுன்ட்ல இருக்கும். அப்போ 32 ஆயிரம் ரூபாய் செலவு ஆயிருக்குனு அர்த்தம். இதுக்கு எதுக்கு தினமும் கணக்கு எழுதிவைக்கணும்?’ என்று சர்வசாதாரணமாகச் சமாதானம் சொல்லிக்கொள்வது எந்தவிதத்திலும் நமக்கும் நம்மை நம்பி இருப்பவர்களுக்கும் பயனளிக்காது. இந்தச் சமாதானமும் சோம்பேறித்தனமும் நம்மோடு நின்றுபோகாது. அது நம் பிள்ளைகளிடமும் தொடரும். மொழி, உடை, குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பண்பாடு என்று நம்பும் நாம், பொருளாதார நிர்வாகம் என்பதையும் உயரிய பண்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தினமும் இரவுச் சாப்பாட்டுக்கு முன் குடும்பமாக உட்கார்ந்து வரவு-செலவுக் கணக்கு பார்க்கும் குடும்பங்கள் இன்றும் பல உண்டு. அவர்கள் பெரும்பாலும் தனி நபர்கள் யாரிடமும் கடன் வாங்கி இருக்க மாட்டார்கள். அவசரச் செலவுக்கு யாரிடமும் போய்க் கடன் கேட்டு நிற்க வேண்டிய நிலை அவர்களுக்கு வராது. மகளுக்கு 50 பவுன் நகையும் மகனுக்கு 1,200 சதுர அடி வீடும் வாங்கிவைத்திருப்பார்கள். நம்மில் பலர் தொலைபேசி, மின்சாரக் கட்டணங்களை நாள் கடத்தி, அதன் தண்டத் தொகையோடு சேர்த்துக் கட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருப்போம். ஆனால், அவர்களோ வங்கிக் கடன், டெலிபோன் பில், மின்சாரக் கட்டணம், சொத்து வரி, வருமான வரி ஆகியவற்றைச் சரியான தேதியில் கட்டிச் சலுகைகளைப் பெறுவார்கள். எதிர் வீட்டுக்காரர் கார் வாங்கினால் நாமும் வாங்க வேண்டும் என்ற 'peer pressure’-க்கு அவர்கள் அடிபணிய மாட்டார்கள்!

'அட... இப்படித் தினம் நுணுக்கி நுணுக்கிக் கணக்கெழுதி, கணக்குப் போட்டு வாழ்ந்து என்னத்தைக் கொண்டுட்டுப் போகப்போறோம். அவங்கள்லாம் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கிறது இல்லை பாஸ்!’ என்று வெளி யில் இருந்துகொண்டு நாம் விமர்சிக்கலாம். ஆனால், அவர்களிடம் இருக்கும் மன அமைதியும் பதற்றம் இல்லா வாழ்வும் நம்மிடம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், நம்மில் பலர் கைக்கு காசு வந்ததுமே செலவு செய்துவிடுகிறோம். ஆனால், அவர்கள் எது வேண்டுமோ, அதற்காக மட்டும் நிறைவாகச் செலவு செய்கிறார்கள்!

பாஸ்வேர்டு் - 14

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜான்டி ரோட்ஸ் பேட்டிங்கில் 10, 15 ரன்கள்தான் எடுப்பார். ஆனால், ஃபீல்டிங்கில் குறைந்தபட்சம் 30 ரன்களையேனும் தடுத்துவிடுவார். நமது சேமிப்பு அப்படிச் சமயோசிதமாக இருக்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்வோம் தெரியுமா? நம்மிடம் இருக்கும் செல்போன் நன்றாகவே இயங்கிக்கொண்டு இருக்கும்போதும், தேவையே இல்லாமல் 10 ஆயிரம் ரூபாய்க்குப் புது செல்போன் வாங்கு வோம். மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரை யில் 10 வாங்க வேண்டிய இடத்தில் ஐந்து போதும் என்று 'புத்திசாலித்தனமாக’ மிச்சப் படுத்துவோம். கணக்குவழக்கு பார்க்கத் தயங்குகிறவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் உடல்/மன ஆரோக்கியத்தை விற்று, இயந் திரங்களை வாங்கிக் குவிப்பவர்களாக இருக் கிறார்கள்.  

இனி வரும் காலங்களில் வருமானமும் செலவும் நிறையவே வரப்போகிறது. அதை நிர்வாகம் செய்யும் திறனை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. அதற்கு முதலில் நாம் தயாராக வேண்டும். அந்தப் பிறந்தநாள் விழாவில் குழந்தைகளுக்குப் பரிசளிக்கப்பட்ட உண்டியலும் வரவு-செலவு நோட்டும் நமக்கு நாமே அளித்துக்கொள்ள வேண்டிய அற்புதமான பரிசுகள்!  

- ஸ்டாண்ட் பை...