Published:Updated:

ஆறாம் திணை - 45

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 45

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியையும் மாசுபடுத்திய

பின்னர், ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும், இந்தப் பணத்தைத் தின்ன முடியாது என்று’  -செவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்தச் செய்திதான், இப்போது உலக மக்கள் அனைவ ருமே உணர வேண்டிய உண்மை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆறாம் திணை’ தொடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'நீங்க சொல்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்தை என்னால் திருத்தி விட முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன செய்துவிட  முடியும்?’  அப்படி எல்லாம் நினைத்து மலைத்துவிடாமல், நிறையப் பேர் சத்தமே இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் நண்பர்களே! சிலர் தத்தம் வேலையோடு; சிலர் இதனையே வேலையாக!

நம் தமிழகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் செல்வம், 'கிரியேட்’ ஜெயராமன் போல சுற்றுச் சூழல் போராளிகளை நாம் அறிவோம். அதுபோல இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

ஆறாம் திணை - 45

ஒரு நள்ளிரவில், போபால் யூனியன் கார்பைடு ஆலை விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலும் இருமலுமாகத் தன் மூன்று குழந்தைகளையும், வாயில் நுரை தள்ளும் கண வரையும் இழுத்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஏராளமான கும்பலுடன் மருத்துவமனைக்கு

ஆறாம் திணை - 45

ஓடியவர் சம்பாதேவி சுக்லா. ஐந்தே ஆண்டுகளில் கணவரை சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு மகன்களை விநோதமான நோய்களுக்கும் பறிகொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தத் துயரத்தை வெறுமனே கண்ணீருடன் அவர் கழிக்கவில்லை. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக் கொழுந்துகள்’ என்ற முழக்கத்துடன் தன்னைப் போலவே அந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இழந்த பத்தா யிரத்துக்கும் மேலான நபர்களுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு களாகப் போராடிவரும் சம்பாதேவி, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போராளி.

இன்றைக்கும் வட இந்திய மலைகளில் கொஞ்சம் நெடு மரங்களையும் அடர்ந்த காடுகளையும் பார்க்க முடிகிறது என்றால், சிப்கோ என்ற அமைப்பின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் அது. உத்தரகாண்ட் பகுதியில் அரசாங்கமும் தனியாரும் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்துவந்த நிலையை 100 பெண்கள் காந்திய வழியில் போராடி மாற்றி அமைத்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த அமைப்புதான் சிப்கோ. 1974-ல் அவர்கள் மரங்க ளைக் கட்டி அணைத்து  நடத்திய போராட்டத்துக்குப் பின்னர்தான் மலைகளில் மரம் வெட்டுவதற்கு இந்தியாவில் கடுமையான சட்டம் பிறந்தது.

மழை, பஞ்சம், பூச்சிகளுக்கு ஈடுகொடுத்து நிற்கும் சுமார் 900 வகை பாரம்பரிய விதைகளை கிராமம் கிராமமாகச் சென்று தனி ஆளாகச் சேகரித்தவர் உத்தரகாண் டின் விஜய் சர்தாரி. விதைகளைக் காக் கும் போராட்டத்தில் அவர் ஆற்றும் பணிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, 'கிராமத் துக்கு பஸ்ல போவேன். விதைகளைக் கேட்டு வாங்கிக்குவேன். கடைசி பஸ் கிளம்பிடுச்சுன்னா, அவங்க வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிக்குவேன். எனக்கு எதுக்குப் பணம்?’ என்று கேட்ட விஜய், இன்னும் சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.

ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் ஹெக்டேர் நிலத்தைப் பூச்சிக்கொல்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முறை மூலம் செப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற வேளாண் விஞ்ஞானி மற்றும் விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த முனைப்பு.  இவர்களின் முயற்சியை ஐ.நா. சபை அங்கீகரித்து மற்ற நாடுகளை ஆந்திராவை எட்டிப்பார்க்கச் சொல்லி யுள்ளது. அந்த இரு தனி நபர்கள்விதைத்த விதை... இன்று மொத்த ஆந்திராவும் பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை நோக்கி நகர்கிறது!

மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய போராட்டத்தைக் கையிலெடுத்து இன்று வரை மரபணு உணவுப் பயிரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,போராடும் ஆஷா அமைப்பின் கவிதா குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்வேறு சிறுதானிய வகைகளை மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ண பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட் ஓட்டிக்கொண்டு, 'என் பலத்துக்குக் காரணம் தெரியுமா... பாரம்பரிய விதை களைக்கொண்டு நான் செய்யும் நச்சிலா இயற்கை விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்தோணிசாமி, காப்புரிமைக்கும் விதையுரிமைக்குமாக பல ஆண்டுகளாகப் போராடிவரும் நவதானியா அமைப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உணவுப் பொருளுக்கு என முதன்முதலாக அங்காடிவைத்து விழிப்பு உணர்வு செய்துவரும் நெல்லை கோமதி நாயகம்...  இப்படி எத்தனையோ பேர் நமக்கான அடையாளங்கள்.

கால் நூற்றாண்டு படிப்பு முடித்து பெற்ற வேலை, உயர் பதவிகளைத் தூக்கி எறிந்து களமிறங்கிப் பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்களைப் போல முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூழல் நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்கை செயலாற்றிட முடியும்!

'அம்மா.. நான் சாப்பாட்டை வீணாக்காம சாப்பிட்டுட்டேன்... பாருங்க’ என தட்டைக் காண்பிக்கும் உங்கள் குழந்தை, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்தே எடுத்துட்டுப் போயிடலாமே?’ எனும் வீட்டுத் தலைவி, 'நான் ஒரு ஆள் போறதுக்கு எதுக்கு தனி கார்? கார் பூலிங் பண்ணிக்கலாமே!’ எனச் சொல்லும் தம்பி, 'பிளாஸ்டிக் பை வேண்டாம்... வீட்டுல இருந்தே பை கொண்டாந்து இருக்கேன்’ எனக் கடையில் சொல்லும் அக்கா, 'வாரம் ரெண்டு தடவையாவது எங்க வீட்ல வரகரிசி பொங்கல்; திணை உப்புமா; சோளப் பணியாரம் செய்வோம். உங்க வீட்லக்கா?’ எனத் திண்ணையில் பேசும் அம்மா, 'அம்மா... அம்மா... கிச்சன் குப்பையைப் போட்டு நான் வளர்த்த கத்தரிச் செடி பூ விட்டுருக்கு பாரு’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் குழந்தை... இவர்கள் எல்லோருமே சூழல் போராளிகள்தான்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism