##~##

லிபெருக்கிகளில் மறுபடி மறுபடி ஒலித்த பாடல் வரிகள். மீண்டும் மீண்டும்  அதே நடன அசைவுகள். அந்தத் தோப்பில் இருந்த பறவைகள் சலித்துப் பறந்தன.

பேக்கப் ஆனதும், ஜோசஃப் பாரியை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டான்ஸ்கூட நல்லா வருது உனக்கு!'

'சாருக்கு இங்கிலீஷ் கத்துக்கொடுக்க ஒருத்தங்க, டான்ஸ் சொல்லிக்கொடுக்க ஒருத்தங்கன்னு லேடீஸ் போட்டி போடறாங்களே! அப்றம் என்ன?' என்று இணை இயக்குநர் குணா கண்ணடித்தான்.

'உங்களைத்தான் சொல்றாரு, புரியுதா?' என்று பாரி சொன்னதும், கயல்விழியும் தேவியும், குணாவை அடிப்பதற்குத் துரத்தினார்கள். பாரி அந்தக் காட்சியை சந்தோஷமாக ரசித்தான்.

'க்ளைமாக்ஸ் ஃபைட் மட்டும்தான் பாக்கி. அது முடிஞ்சதுன்னா, பூசணிக்கா உடைச்சிடலாம்..' என்றான் ஜோசஃப் நிறைவுடன்.

கதவைத் திறந்தது, செந்திலின் அம்மா. தீபாவின் முகத்தில் உற்சாகத்தைப் பார்த்ததும், குழம்பினாள்.

'அம்மா.. செந்திலைப் பார்த்தேன். பத்திரமா இருக்காரு. ஒரு சின்ன ஆக்சிடென்ட்... அதான் நம்மகூட அவரால பேச முடியலை.'

செந்திலின் அம்மாவுக்கு மூக்கு விடைத்தது.

யட்சன்

'உன்னைப் பார்க்க முடியுது... பேச முடியுது. ஆனா, பெத்த அம்மா, அப்பாகிட்ட பேசணும்னு அவனுக்குத் தோணல இல்ல?'

'என்னை மாதிரி உங்களைத் தூக்கிட்டுப் போக முடியாதே!’ என்று எப்படிச் சொல்வது?

'சீக்கிரமே பேசுவாரும்மா. அவர் நல்லாருக்காருன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.' என்று சொல்லிவிட்டு தீபா திரும்பி நடந்தாள். செந்திலின் அம்மா கண்களை மூடி, கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

கைலாசம், செந்திலிடம் அந்தச் செய்தித்தாளைப் பிரித்துக் காட்டினார். மூன்றாவது பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

'குற்றம் சாட்டப்பட்ட செந்தில் போரூர் கொலைகளைச் செய்யவில்லை என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். உண்மையான குற்றவாளி சரண் அடைந்துள்ளதால், செந்தில் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கைவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.’

செந்தில், கைலாசத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரே வாரத்தில், ரியல் எஸ்டேட் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓர் அலுவலகத்தை செந்திலுக்காக ஒதுக்கினார் கைலாசம்.

'ஆபீஸ் அருமையா இருக்கு. ஒரு நியாயமான லாயரும், ஒரு நாணயமான கேஷியரும் நமக்குத் தேவை.'

'ஏற்பாடு பண்றேன்!'

மாலையில் தேவியுடன் தோப்பில் நடந்தபோது, 'இந்த ஹீரோவைப் பத்தி, அந்த ஹீரோயினைப் பத்தினு ஆயிரம் கிசுகிசுவை நம்பினவன் நான். இப்ப, என்னைப் பத்தியே கிசுகிசு வருதாமே!' என்று சிரித்தான் பாரி.

'அதப்பத்திலாம் கவலைப்படாத பாரி. இங்க தொழில்முறையா வேற வேற ஆளுங்களைக் கட்டிப்பிடிச்சு, காதலிச்சிட்டே இருக்க வேண்டியதுதான். நம்மளப் பத்திகூட கிசுகிசு வந்திருக்கு... தெரியுமா?'

'இந்தப் படம் ரிலீஸ் ஆனதும், அந்தக் கிசுகிசுவை மட்டும் உண்மையாக்கலாம்னு நெனைக்கறேன்' என்றான் பாரி, சற்றே ரகசியக் குரலில்.

கைலாசம் செந்திலின் முன் ஒரு ஃபைலை வைத்தார்.

'ஊட்டில ஒரு லாட்ஜ் விலைக்கு வருது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருத்தர் டீலை முடிச்சிக் கொடுக்கச் சொல்றாரு. மூணு கோடி நமக்கு நிக்கும்..'

'இடத்தைப் பார்க்கணும்... டாகுமென்ட்ஸை செக் பண்ணணும்... ஓனர்கிட்ட பேசணும்.' என்றான் செந்தில்.

'நாளைக்கே போலாம்' என்றார் கைலாசம்.

லோகு தன் சகாக்களைக் கூட்டியிருந்தான்.

'எங்க அண்ணனைக் கொன்னவன் ஊட்டிக்குப் போறான்னு தகவல் வந்திருக்கு. அங்க வெச்சு, அவன் கதையை முடிக்கிறேன்!'

'எப்பண்ணே புறப்படணும்..?'

'தலைவரு அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்காரே! நீங்க வந்தா அவருக்கு சந்தேகம் வந்துரும். தனியாப் போறேன். கேட்டா, நான் ஷூட்டிங் போயிருக்கறதா சொல்லிருங்க.'

அவர்கள் தலை அசைத்தார்கள்.

ட்டி.

பேருந்து நிலையத்துக்குப் பின்னால் சரியும் சாலையில் இருந்தது அந்த லாட்ஜ். உடன் வந்த வழக்கறிஞர் பத்திரங்களைச் சரிபார்த்து, தன் ஆமோதிப்பைத் தெரிவித்தார். செந்தில் அதன் அறைகளைத் திறந்து பார்த்தான்.

'நான் இருந்த திருவல்லிக்கேணி மேன்ஷனைவிட நல்லாத்தான் இருக்கு. கொஞ்சம் ரிப்பேர் பண்ணா சூப்பராய்டும்!' என்று செந்தில் அதை ஒரு நியாயமான விலைக்குப் பேசி முடித்தான். வேலை முடிந்ததும், நிறைவாக இருந்தது.

'அண்ணே சென்னைல அடைஞ்சே கெடந்தேனா... காலாற ஒரு வாக் போகணும் போல இருக்கு.'

'பசங்களக் கூட்டிட்டுப் போ...' என்றார் கைலாசம்.

'இல்லண்ணே... டிரைவர் மட்டும் போறும்.'

காரை ஊட்டியின் வளைவுகளில் செலுத்தச் சொல்லி ஓர் இடம் வந்ததும் நிறுத்தச் சொன்னான். டிரைவரை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மரங்களுக்கு இடையே புகுந்து சரிவில் இறங்கினான்.

கன்னி கழியாத அந்தச் சரிவில், ஆறாள் உயரத்துக்கு வளர்ந்திருந்த யூகலிப்டஸ் மரங்கள் குளிர் காற்றில் சலசலத்தன. மார்புக்குக் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு, இலைச் சருகுகளைப் படபடவென்று மிதித்து நடந்தான்.

அவனைப் பார்வையிலேயே வைத்தபடி மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து ஒளிந்து லோகு மரண அமைதியுடன் பின்தொடர்ந்தான்!  

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism