Published:Updated:

உலக செஸ் போட்டி: 3வது சுற்றில் ஆனந்த் அதிரடி வெற்றி!

Vikatan Correspondent
உலக செஸ் போட்டி: 3வது சுற்றில் ஆனந்த் அதிரடி வெற்றி!
உலக செஸ் போட்டி: 3வது சுற்றில் ஆனந்த் அதிரடி வெற்றி!
உலக செஸ் போட்டி: 3வது சுற்றில் ஆனந்த் அதிரடி வெற்றி!

சோச்சி: உலக செஸ் போட்டியில் 3வது சுற்றில் இந்தியாவின் ஆனந்த் வெற்றி பெற்று கார்ல்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்- இந்தியாவின் முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது.

12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். முதல் சுற்றில் டிரா செய்த ஆனந்த், 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 3வது சுற்று நேற்று நடந்தது. வெள்ளை நிறக் காய்களுடன் களம் கண்ட ஆனந்த், ராணிக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார்.

11வது நகர்தலில் இருவரும் ஒரு பிஷப்பை விட்டுக்கொடுத்தனர். 18 முதல் 20வது நகர்த்தலுக்குள் இருவரும் குதிரைகளை காவு வாங்கிக் கொண்டனர். 24வது நகர்த்தலுக்கு பிறகு ஆனந்தின் கை ஓங்கியது. ஆனந்தின் அதிவேக ஆட்டம் கார்ல்சனை திணறடித்தது என்றே சொல்லாம். ஆனால் ஆனந்த் தனது ராஜாவையும், யானையையும் கோட்டை கட்டாதது சிறிது கவலை அளிப்பதாக இருந்தது. 25வது நகர்த்தலில் ராஜாவையும், யானையையும் இடமாற்றியதன் மூலம் கோட்டை கட்டி நிம்மதி அளித்தார்.

28வது நகர்த்தலில் கார்ல்சன் தனது பிஷப்பை தவறாக ஆடியதால் மேலும் சிக்கலுக்குள்ளானார். இதைத் தொடர்ந்து 32வது நகர்தலில் ஒரு யானையை ஆனந்தின் பிஷப்புக்கு கட்டாயம் தர வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் கார்ல்சன் ஒரு நிமிடம் 44 விநாடிகளில் எட்டு நகர்த்தல்களை ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனந்துக்கு 29 நிமிடங்கள் எஞ்சியிருந்தன. 34வது நகர்த்தலின் போது ஆட்டத்தில் தனக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தாலும், நேரம் இல்லாததாலும் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதன் மூலம் 2வது சுற்றில் அடைந்த தோல்விக்கு ஆனந்த் பதிலடி கொடுத்து விட்டார். நீண்ட நேரம் நடக்கும் கிளாசிக்கல் முறையில் கார்ல்சனை, ஆனந்த் ஜெயிப்பது 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன், ஆனந்திடம் ஒன்றில் கூட தோற்காமல் கோப்பையை வசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இருவரும் 1.5- 1.5 என்ற புள்ளி வீதம் சமநிலை வகிக்கிறார்கள். ஆனந்த் இன்றைய 4வது சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறார்.