Published:Updated:

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

வாசகர் கேள்விகள்

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

வாசகர் கேள்விகள்

Published:Updated:
விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

எம்.ராமன், நாகப்பட்டினம்.

''சினிமாவில் புகழ்ச்சிதான் முதல் முகம். மேடையில் சம்பந்தப்பட்டவங்களே கூச்சப்படுற அளவுக்குப் புகழ்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொது இடத்தில் புகழ்வதை நான் குறை சொல்ல மாட்டேன். அழகுனுதான் சொல்வேன். பாராட்டுதல்தான் திறமையான ஆளுங்களுக்கு அடுத்தடுத்த முயற்சிகளுக்கான ஏணிப் படி. பாராட்டுறது சினிமாவோட நின்னுடக் கூடாது. வெற்றிகரமான வக்கீல், தன்மையான டாக்டர், ரசனையான ஓவியர்னு எல்லாரையும் தேடிப் பிடிச்சுப் பாராட்டணும். அதே சமயம் பாராட்டு புகழ்ச்சி ஆகும் இடத்தில்தான் சிக்கல். புகழ்ச்சியைத் தலைக்கு ஏத்திக்கிட்டா, அதுதலைக் கனம். எனக்கு முதல்ல பேசவே வராது. வந்தாதானே, அடுத்தவங்களைப் புகழ்ந்து பேச முடியும். நான் ஊர்விட்டு ஊர் அலையிற ஆள். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அசிஸ்டென்ட்டுகள் என் கிட்ட வேலை பார்க்குறாங்க. அதனால எல்லாருக் கும் புரியிற மாதிரி, இங்கிலீஷ்லதான் பேசுவேன். ரெண்டு வருஷம் மும்பையில் இங்கிலீஷ் மட்டுமே பேசிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்ததும் மைக்கொடுக் கிறப்ப எனக்கு உடம்பெல்லாம் உதறிடும்.இதனாலேயே பேசுறதைத் தவிர்த்திடுவேன். இப்படியே ஒதுங்கி ஒதுங்கி பேச்சுக் கலை எனக்கு வராமலேயே போயிருச்சு!''

##~##

த.மலர், சென்னை-88.  

''உங்க அசிஸ்டென்ட்டுகள் பல பேர் லவ் மேரேஜ் பண்ணினவங்க... எப்படி நடக்குது இந்த மேஜிக்?''

 ''இன்னைக்கு வரை எனக்கும் அது புரியாத விஷயம்தான். ஜீவா, மேப்ஸ், பாலசுப்ரமணியெம், துவாரகநாத், பூங்குன்றன், மாதங்கி, வின்சென்ட்னு பல பேர் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. என்கிட்ட வந்தா வேலை கத்துக்கிறாங்களோ இல்லையோ, காதலிக்கக் கத்துக்கிறாங்க. அவங்க என்கிட்ட விஷயத்தைச் சொல்லும்போது, எனக்கு ஆச்சர் யமா இருக்கும். ராத்திரி பகல் பார்க்காம, தூக்கம் இல்லாம எல்லாரும் சேர்ந்து வேலை பார்த்துட்டு இருப்போம். இதில் எங்கே நேரம் கிடைச்சு, காதலிக்கிறாங்கனு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியலை. இத்தனைக்கும் என்னோடது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அப்போலாம் நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவிலேயே இல்லை. எனக்கு வீட்ல பார்த்த பொண்ணு பேர் என்னன்னு கேட்டேன். 'சீதா’னு சொன்னாங்க. நான் ஸ்ரீராம்... இந்த ஒரு பொருத்தம் போதும்னு சொல்லிச் சம்மதிச்சுட்டேன். நானும் சரி, என் அசிஸ்டென்ட்டுகளும் சரி.. எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். அது போதுமே!''  

சக்தி சம்பத், வாணவன்மகாதேவி.  

 ''ஸ்க்ரீனில் வர்ற ஸ்டார்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். அதைத் தாண்டி ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருப்பவர்களுக்கு ரசிகர்களை உருவாக்கியதில் உங்களுக்கும் மணி ரத்னத்துக்கும் பங்கு உண்டுதானே?''

 ''இந்த டிரெண்டை ஆரம்பிச்சுவெச்சது பாரதிராஜா. நடிகர், நடிகர்களைக் காட்டுற துக்கு முன்னாடியே டைட்டில் கார்டில் கைதட்டல் வாங்கி புது அத்தியாயத்தை எழுதியவர். அவர் தான் ஒளிப்பதிவாளர் நிவாஸை ஸ்டார் ஆக்கி னார். மகேந்திரன் சார், ஒளிப்பதிவாளர்அசோக் குமாருக்குக் கைதட்டல் வாங்கிக்கொடுத்தார். அப்போதான் மக்களுக்குத் திறமையான ஒளிப் பதிவு, புதுமையான இயக்கம் பத்தி ஆர்வமும் புரிதலும் வந்துச்சு.  அதை அடுத்த  எல்லைக்கு நானும் மணியும் கொண்டுபோயிருப்போம். அவ் வளவுதான். லெனின் சார், விஜயன் சாருக்கு அடுத்து இப்போ எடிட்டிங் ஆண்டனினு சொன்னா, நல்லாத் தெரிஞ்சிருக்கு. அந்த அளவுக்குத் திறமைக்கு இங்கே மரியாதை கொடுக்கிறாங்க. வேற எந்த மாநிலத்திலும் இல்லாத தனித்தன்மை இது!''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

அருணா மணிவண்ணன், கோயம்புத்தூர்.

''மணிரத்னம் + கமல் + பி.சி.ஸ்ரீராம்= 'நாயகன்,’ கமல் + பி.சி.ஸ்ரீராம் = 'குருதிப்புனல்’, பரதன் + கமல் + பி.சி.ஸ்ரீராம் = 'தேவர் மகன்’...

இந்த மூன்று படங்களில் உங்களுக்கு மிகப் பிடித்த படம் எது? ஏன்?''

 '' 'தேவர்மகன்’தான். ஏன்னா 'நாயகன்’, 'குருதிப்புனல்’ மாதிரியான கதைகளை நான் ஆங்கிலப் படத் தில் பார்த்திருக்கேன். ஆனா, 'தேவர்மகன்’ கதை நடக்கிற ஏரியா எனக்குப் பரிச்சயமே இல்லாதது. நான் சிட்டி பாய். எனக்கு நகரப் பழக்கவழக்கம் மட்டும் தான் தெரியும். ஒரு கிராமம், சாதி அமைப்பு, அவங்க கலாசாரம் எதுவுமே எனக்குத் தெரியாது.கதையைக் கேட்டதும் அதன் எந்தப் பின்னணியும் தெரியாம, நானே ஊர் ஊரா அலைஞ்சு சில கிராம லொகேஷன் களைக் குறிச்சிவெச்சிருந்தேன். அதெல்லாம் வழக்க மான எந்தக் கிராமத்துக் கதைக்கும் பொருந்திப்போகும் லொகேஷன்கள். கிட்டத்தட்ட ஷூட்டிங் கிளம்பவேண் டியதுதான். அப்போ ஒரு நாள் சங்கிலி முருகன்கிட்ட படம் சம்பந்தமாப் பேசிட்டு இருந்தேன். அப்போ அவர் சுபாஷ்னு ஒருத்தரை அறிமுகப்படுத்தினார். அவர்தான் கிராமங்களோட சாதி அமைப்பு,பங்காளி களுக்குள்ள நடக்கும் அதிகாரச் சண்டைகள், கலா சார பந்தங்கள்னு பல விஷயங்களைப் பத்திச் சொன் னார். அப்போதான் எவ்வளவு தப்பான லொகேஷன்களை நான் தேர்ந்தெடுத்திருக்கேனு புரிஞ்சுது. அப்புறம் கதைக்கேத்த மாதிரி லொகேஷன்களைத் தேடிப் பிடிச்சோம். நடிகர்களின் நடிப்பு, லொகேஷன், படப்பிடிப்பு அனுபவங்கள்னு 'தேவர் மகன்’ படத் தில் வேலை பார்த்தது இன்னைக்கு வரைக்கும் எனக்குப் பெருமையான விஷயம்!''

சு.மணியரசன், திருச்சி-9

''ஒரு நல்ல ஒளிப்பதிவுக்கு தரமான ஒளிப்பதிவு சாதனங்கள் தேவையா... அல்லது திறமையான ஒளிப்பதிவாளர் போதுமா?''

 ''என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் ஒளிப்பதிவில் சாதனங்களின் பங்கு ஒரு சதவிகிதம்தான். அந்தச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துறோம்கிற வியூகம்தான் ஒரு கேமராமேனின் திறமை. ஒரு படத்தின் கதை, அதன் சூழல், அதற்கான மனநிலை, அதை எப்படி திரையில் கொண்டுவர்றோம்... இதெல்லாம் ஒரு ஒளிப்பதிவாளனின் அனுபவத்தில் இருந்துதானே வரும். வில்லும் அம்பும் எவ்வளவு நவீனமா இருந்தாலும், இலக்கை அடைவதில் எய்பவனின் குறிதானே முக்கியம்!''

கி.மனோகரன், பொள்ளாச்சி.

 ''ரொம்ப ஆச்சர்யமா 'தேவர்மகன்’ல நடிச்சதுக்காக சிவாஜிக்கு தேசிய விருது கொடுத்தாங்க. அந்தப் படப்பிடிப்பில் சிவாஜியுடனான உங்கள் அனுபவம்..?''

''ஸ்க்ரிப்ட் பேப்பர்ல சாதாரணமா இருக்கிற ஒரு வார்த்தை, படப்பிடிப்பில் கிளாப் அடிச்சதும் சிவாஜி சார் சொல்றப்போ அட்டகாசமான எக்ஸ்பிரஷன் சேர்ந்து அற்புதமான பன்ச்சா மாறிடும். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஸ்பாட்ல சிவாஜி சாருக்குப் போட்டியா கமலும் பிரமாதமா ஸ்கோர் பண்ணுவார். மத்தநடிகர் கள் சிவாஜி சார் மேல இருக்கிற மரியாதை கார ணமா அவரோட நடிக்கும்போது பம்மிப் பம்மி நடிச்சாங்க. அவரை எதிர்த்துப் பேச வேண் டிய கதாபாத்திரங்கள்கூட கையைக் கட்டிக் கிட்டு பவ்யமா நடிச்சாங்க. பஞ்சாயத்து நடக்கிற காட்சிகள்ல நாசர் கூட கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சார். கேமரா ஃப்ரேம்ல முதல் ஆளா அந்தக் காட்சிகளைப் பார்த்த எனக்கு என்னமோ தப்பா இருக்குனு தோனிட்டே இருந்தது. உடனே சிவாஜி சார் கிட்ட சொல்லிட்டேன். 'எல்லாரும் உங்கமுன் னாடி ரொம்ப மரியாதையா நடிக்கிறாங்க. அது சிவாஜிக்குக் கிடைக்குற மரியாதை. ஆனா, பெரிய தேவர் கேரக்டருக்கு அது தேவை இல்லை. இந்த மரியாதை படத்தையே பாழாக்கிரும்’னு சொன்னேன். ரெண்டு நிமி ஷம் கண்மூடி யோசிச்சார் சிவாஜி சார். மத்த வங்க நடிச்சதை மனசுல அசைபோட்டுப் பார்த் திருப்பார்னு நினைக்கிறேன். 'தம்பி சொல் றது கரெக்ட்டு... ஏயப்பா... எல்லாரும் அந்தந்த கேரக்டர் மாதிரி நடிங்கப்பா... ரீ டேக் போகலாம்’னு சொல்லிட்டார். அந்த டெடி கேஷன்தான் சிவாஜி.

படப்பிடிப்பு முழுக்கவே நான் அவரை ஃப்ரேம் வழியா அணுஅணுவா பிரமிச்சு ரசிச்சுப் பார்த்தேன். தன்மானம் உள்ள மனி தன் ஒரு வார்த்தையைத் தாங்க மாட்டான்னு சொல்வாங்களே.. அதை சிவாஜி நடிப்புல பார்த்தேன். பஞ்சாயத்துக் காட்சியில சிவாஜி யைப் பார்த்து, 'என்னை உம்ம மீசை மசு ருன்னு நினைச்சீகளா... நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க’னு நாசர் ஒரு வசனம் பேசுவார். உடனே சிவாஜி சார் சட்டுனு கோபப்பட்டு உக்காந்திருந்த சேரை விசிறி எறிஞ்சுட்டு, விடுவிடுனு நடந்து கார்ல ஏறிப் போகணும். இதுதான் சீன். நாசர் வசனம் சொன்னதும் குபுக்னு கோபப்பட்டு, கோபத்துல நாலு அதட்டுப் போட்டுட்டு வந்த சிவாஜி சார், திறந்திருந்த கார் கதவை படார்னு அறைஞ்சு சாத்திட்டு, நடக்க ஆரம்பிச்சிட்டார். அவ்ளோ கோபத்துல இருக்கிற ஒரு மனுஷன் அந்த நேரம் அப்படித்தான் நடந்துக்குவான்னு பின்னாடி சொன்னார். அவர் கணிச்ச மாதிரியே அந்தக் காட்சி ஆடியன்ஸ்கிட்ட பெரிய தாக்கத்தை உண்டாக்குச்சு. சிம்பிளா சொல்லணும்னா, சிவாஜி... சிவாஜிதான்!''

ம.ராஜா, தேனி.

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

''உங்க தாடியின் ரகசியம் என்ன?''

''ரகசியம்லாம் ஒண்ணும் இல்லை. தாடி வளர ஆரம்பிச்சப்ப ஏதோ ஃபீலிங்ல அப்படியே விட்டுட்டேன். சோக சிக்னலா? காதல் தோல்வியா? சாமிக்கு வளர்க்குறியானு ஆளாளுக்கு ஒவ்வொரு காரணத்தை அடுக்கினாங்க.சொந் தக்காரங்க நிறையப் பேர், 'ஏன்  இப்படி இருக்க. உடனே ஷேவ் பண்ணு’னு திட்டித் தீர்த்தாங்க. அவங்கள்லாம் எதிர்த்ததாலேயே தாடியை வெச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அடர்த்தியா வளர்ந்த பிறகு கண், காது, மூக்கு மாதிரி தாடியும் என் முகத்தில் ஒரு அங்கம் ஆகிருச்சு. இடையில் ரெண்டு மூணு தடவை ஷேவ் பண்ணேன். ஆனா, என் முகத்தைப் பார்க்க எனக்கே பிடிக்கலை. அதான் அப்படியே விட்டுட்டேன்!''

கே.எஸ்.மைதீன், திண்டுக்கல்.

 ''மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தது இல்லை. அவர்  இயக்கிய முதல் கன்னடப் படமும் தோல்வி. இந்த நிலையில்'மௌன ராகம்’ படத்தில் அவருடன் நீங்கள் பணிபுரிய எப்படி ஒப்புக்கொண்டீர்கள்!''  

''ஆமாம்... பெரிய ரிஸ்க்தான். 'மௌன ராகம்’ படம் மணிக்கு 'டு ஆர் டை’ நிலைமை. ஒருவேளை அந்தப் படம் ஃபெய்லியர் ஆகியிருந்தா, மணியோட ஃபிலிம் கேரியர் முடிவுக்கு வந்திருக்கும். அதனால, அந்தப் படத்தை குறைஞ்ச பட்ஜெட்ல ரொம்ப சீக்கிரமே ஷூட் பண்ணி முடிக்கணும்னு மணி பிளான் பண்ணார். அப்படி திட்டமிட்ட மாதிரி லோ பட்ஜெட்ல படத்தை எடுத்து முடிச்சு ரிலீஸ் பண்ணா, படம் கொஞ்ச நாள் ஓடினாலும்  தப்பிச்சுரும். ஆனா, அந்த பட்ஜெட் கட்டாயத்துக்காக ஒளிப்பதிவு ரிச்னெஸ்ல எந்தக் குறையும் இருக்கக் கூடாதுன்னு என்கிட்ட சொன்னார். அப்போதைய டிரெண்ட்ல இருந்து இந்தப் படத்தின் ஒளிப்பதிவு வேற லெவலைத் தொடணும்னு எதிர்பார்த்தார். அந்தச் சவால் எனக்குப் பிடிச்சிருந்தது. அதான் சந்தோஷமா சரி சொன்னேன். ரெண்டு பேருமே ரொம்பத் தீவிரமா வேலை பார்த்த படம் அது. ரொம்ப அழகான ராகம்ல!''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

 '' 'அபூர்வ சகோதர்கள்’ படத்தில் 'அப்பு’ கமலின் குள்ள ரகசியம் என்ன? இப்போதாவது சொல்லுங்களேன்!''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

 ''விக்ரம், அஜித், விஜய், சூர்யா... இவர்கள்  பெர்ஃபார்மன்ஸை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

 '' 'ரோஜா’-வுக்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மானுடன் விளம்பரங்களில் பணிபுரிந்தவர் நீங்கள். அப்போது ரஹ்மான் எப்படி?''  

- லைட்ஸ் ஆஃப்

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.