Published:Updated:

பாப்பா கை சூப்புனா என்னவாம்?!

Vikatan Correspondent
பாப்பா கை சூப்புனா என்னவாம்?!
பாப்பா கை சூப்புனா என்னவாம்?!
பாப்பா கை சூப்புனா என்னவாம்?!

ய்யய்யே...இந்த பாப்பா எப்ப பாத்தாலும் கை சூப்புதே...இன்னும் கொஞ்சம் நாள்ல பல்லு முளைக்கும்போது அது உதடுக்கு வெளிய தூக்குனா மாதிரி முளைக்கப் போகுது பாருங்க’’ என  உங்கள் செல்லக் குழந்தையைப் பார்த்து யாராவது சொன்னால் பயம் வருகிறதா உங்களுக்கு? வரணுமே !

ஒவ்வொரு முறை விரலை இழுத்து இழுத்து விட்டாலும், திரும்ப திரும்ப வாயில் செருகிக் கொண்டு சில்மிஷம் செய்யும் உங்கள் குழந்தையின் கை சூப்பும் பழக்கத்துக்கு என்னதான் தீர்வு? என கன்னத்தில் கை வைக்கும் பெற்றோருக்கான தீர்வை சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீலட்சுமி.

‘சில குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் போது அதை முழுக்கவும் ரசித்து மனதில் பதிந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் பால் குடிக்கும் நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் அதே கதகதப்பை எதிர்ப்பார்த்து விரல் சூப்புவதை  பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை கை சூப்பும் சமயங்களில் விரலை எடுத்துவிட்டு குழந்தையின் மனதை வேறு விளையாட்டில் திசை திருப்பலாம்.அதாவது குழந்தைக்கு பொம்மையை கொடுத்தோ அல்லது அதற்கு விளையாட்டு காட்டியோ அதன் கவனத்தை திசை திருப்பி விரல் சூப்புவதை மறக்க வைக்கலாம்.

சில குழந்தைகள் இரண்டு விரல்கள் மூன்று விரல்களை கூட வாயில் வைத்துக் கொண்டு சூப்புவார்கள். அதற்கு பெரும்பாலானோர் செய்கிற தவறு விரலுக்கு பதிலாக நிப்பிள்களை கொடுப்பது தான். தரமற்ற பிளாஸ்டிக்கினால் செய்த நிப்பிள்கள் குழந்தைக்கு கெடுதலையே ஏற்படுத்தும். கூடுமானவரை குழந்தையின் சிந்தனையை திசை திருப்பி விரலை வாயில் வைக்காமல் இருக்க செய்வதுதான் இதற்கு சரியான தீர்வு.

பாப்பா கை சூப்புனா என்னவாம்?!

அதையும் மீறி தூங்கும் போது கை சூப்பினால் என்ன செய்யலாம் என அடுத்த கேள்வி எழும். தூங்கும் போது குழந்தையின் விரல்களை மென்மையான சுத்தமான துணியால் தடிமனாக சுற்றி வைப்பது அல்லது பெரிய பொம்மைகளை கையில் கொடுத்து தூங்க வைப்பது...அதுவும் இல்லையென்றால் போர்வையால் போர்த்தும் போது கையை மட்டும் வேறு ஒரு போர்வையால் போர்த்தி குழந்தையின் விரல் வாயில் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது என செய்தால் குழந்தைக்கு தாய்க்கு நிகரான கதகதப்பு கிடைக்கும். இதனால் இந்த பழக்கத்தை கைவிட வாய்ப்பிருக்கிறது.

ஒருசிலர் குழந்தையின் விரலில் வேப்பிலை அரைத்து வைப்பது இன்னும் சில கசப்பான பொருட்களை விரலில் தடவுவது என சிலவற்றை மேற்கொள்வர். ஒரு வேளை நாம் குழந்தையின் விரலில் தடவும் பொருள் சுத்தமில்லாத பட்சத்தில் அது குழந்தைக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்த கூடும். கூடுமான வரை தாயின் தொடர் கண்காணிப்பு இருந்தால் போதும் இந்த பழக்கத்தை எளிதில் தடுத்து நிறுத்தலாம்’’என்கிறார் அழுத்தமாக!

-பொன்.விமலா