Published:Updated:

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்

Published:Updated:
ஆட்டோகிராஃப்

ஷங்கர்

''இன்னிக்கு நான் இப்படி இருக்கேன்னா... அதற்குக் காரணம் ஒரு ஆட்டோகிராஃப்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஜீன்ஸ்’ பட டைரக்டர் கேஷ§வலாக காட்டன் பேன்ட் - ஷர்ட்டில் இருந்தார். கொஞ்சம் ஜலதோஷத்தோடு, ரொம்பச் சந்தோஷமாகப் பேசுகிறார் ஷங்கர்!

ஹோம்வொர்க் பண்ணுவதில் 'பெரிய ஆளு’ எனக் கேள்விப்பட்டது உண்டு. தன் பழைய டைரிகளைப் புரட்டியபடி, அவர் பேசும்போது அது புரிகிறது.

##~##

'' 'ஆட்டோகிராஃப்’னு நான் ஒரு நாடகம் நடிச்சேன். அதுல என் பேர் ஹிட்ச்காக். உதவி டைரக்டர் வேஷம். ஒரு சினிமா ஹீரோவோட இரட்டை வாழ்க்கை பற்றிய நாடகம். அந்த நாடகம் பார்க்க வந்த டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'சினிமாவுக்கு வர்றியா?’னு என்னைக் கூப்பிட்டார். நான் சினிமாவுக்குள்ள வந்த கதை இதுதான். அதனால, ஆட்டோகிராஃப்னா மனசுக்குள்ளே மரியாதை வந்துடும்!

'மூன்று முடிச்சு’ படம் மறக்கவே முடியாது. ரஜினியை ஸ்க்ரீன்ல பார்க்கிறப்போ, அவ்வளவு பிடிச்சது. அந்த மேனரிஸம்... டயலாக் பேசற ஸ்டைல்... கேர்லஸ் பார்வை... விறுவிறுனு ஒரு லெட்டர் எழுதினேன் ரஜினிக்கு. கொஞ்ச நாள்ல ஒரு பதில் கடிதம். உள்ளே... ரஜினி சிகரெட் பிடிக்கிற ஒரு போட்டோ, அவர் கையெழுத்தோட வந்தது. ரொம்ப நாள் வெச்சிருந்தேன். அப்போ அது பெரிய ஸ்டேட்டஸ் விஷயம்!

முதல் காதலியோட லெட்டர்... என்கிட்டே இருக்கிற அபூர்வமான ஆட்டோகிராஃப் அது மட்டும்தான். அந்தக் கையெழுத்து. அதுல இருக்கிற இன்னொசென்ஸ். அது பேசற காதல். அந்த

ஆட்டோகிராஃப்

ஞாபகங்கள்...

'ஓர் விநாடியில்
நாமெடுத்த
முத்தப் படத்தை
ஓராயிரம் முறை
ரீப்ளே செய்ததில்
தேய்ந்துவிட்டது,
என் நினைவு ஃபிலிம்.
இன்னுமொரு பிரதி
எடுக்க அனுமதிப்பாயா
என்னவளே?’
னு அந்த வேகத்துல நான் எழுதின கவிதை.

ஏன்னு தெரியாம எடுத்துவைத்த பக்கத்து வீட்டுக் குட்டிப் பொண்ணோட பச்சை கலர் ஹேர் க்ளிப்னு... எடுத்துப் பார்க்கவும் நினைச்சுப் பார்க்கவும் நிறைய ஆட்டோகிராஃப்ஸ் இன்னும் இருக்கு!

சாதாரணமா இருந்த என்னை சரியான இடத்துக்கு நகர்த்தினதுல மூணு பேருக்கு முக்கியப் பங்கு உண்டு. பாலகுமாரன்... நான் முழிச்சுக்கிட்டது, இவர் எழுத்தை வாசிக்க ஆரம்பிச்ச பிறகுதான். எடுத்துக்கிடுற விஷயத்துலயும் அதை எழுதுற விதத்துலயும் என்னை அசத்தின ஆளு!

சுஜாதா... என் ரசனைக்குத் தீனி போட்டவர். பெரிய பெரிய விஷயங்களைச் சின்னச் சின்ன ஃபார்முலாக்கள்ல என்னுள்ளே திணிச்சதில்... இவர் பேனா பிடிக்கத் தெரிஞ்ச சயின்டிஸ்ட்!

ஜெயகாந்தன்... என் பார்வையை விசாலப்படுத்திய மனிதர். எனக்குள்ளே ஆழம் இறங்கிப் பார்க்கவும், என் உலகத்தை விலகி நின்னு வேடிக்கை பார்க்கவும் கத்துக்கொடுத்த வாத்தியார்!

ஆக மொத்தம் மூணு ஹீரோஸ் எனக்கு!

எதிர்பாராத செகண்ட்ல ஒரு குழந்தை 'திடுக்’னு முத்தம் கொடுக்கிற மாதிரி சில விஷயங்கள் நடக்கும்.

சேலத்தில் ஒரு ரிக்ஷாக்காரர் நிறுத்தினார். 'ஏம்ப்பா, வசனம் நீ எழுதுவியா..? வேற யாராவது எழுதுவாங்களா?’னு கேட்டார். 'அது சூழ்நிலையைப் பொறுத்தது. நீங்க எதைச் சொல்றீங்க?’னு கேட்டேன். 'அதான், 'இந்தியன்’ல 'புத்திக்குத் தெரியுது. மனசுக்குத் தெரியலையே’னு வரும்ல... அதை எழுதினது யாரு? 'நான்தாங்க’னு சொல்ல, என் கையைப் பிடிச்சுக்கிட்டு 'நான் சிகரெட் பிடிப்பேன் தம்பி. புத்திக்குத் தெரியுது தப்புன்னு... ஆனா, மனசுக்குத் தெரியலியே’னு எமோஷனலா ஏதேதோ பேசிட்டு, 'நல்லா இரு தம்பி’னு சொல்லிட்டுப் போனார். அந்த நிமிஷம் எனக்கிருந்த சந்தோஷத்தை, வேற எதுவாலயும் ஈடு பண்ண முடியாதுனு இப்பவும் தோணுது.

வயசுல நான் ரொம்ப ஜாலியான பையன். ஒரு ஜாயின்ட்ல நான் இருந்தேன்னா, அங்கே ஏதாவது காமெடி பண்ணிட்டே இருப்பேன். ஒரு சமோசா, டீ, சிகரெட்னு பொழுது போவும். திடீர்னு ஒரு நாள் எல்லாரும் என்னை விட்டுட்டு வேலை, படிப்பு, பிசினஸ்னு விலகிப் போயிட்டாங்க. திரும்பிப் பார்த்தா, யாருமே இல்லை. அப்புறம்தான் மெள்ள நான் என்னைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். அந்த வயசை எல்லாரும் கடந்துதான் வரணும். இளைஞர்களைப் பார்த்து நான் சொல்ல விரும்பற ஒரே விஷயம் இதுதான்... மெயின்ரோட்ல போறப்போ, பக்கத்துல அழகான தோட்டம் இருக்கும். கலர் கலரா பூ பார்க்கலாம். ஊஞ்சல், சறுக்குமரம்னு விளையாட, ஜாலியா இருக்கும். சந்தோஷமா ஆடுங்க. ஆனா, அதுல தொலைஞ்சு போயிடாதீங்க. மனசு தோட்டத்துல இருந்தாலும், புத்தி மெயின்ரோட்டுல இருக்கணும். ஊர் போய்ச் சேரணும். நமக்கு அதுதான் முக்கியம்.

'ஊர்வசி’ பாட்டு, என்னோட டீன்-ஏஜ் பஸ் பயணங்களின் பாதிப்பு... 'சிக்குபுக்கு ரயிலே’ல வந்த கிராஃபிக்ஸ், ஒரு சின்ன டேஸ்ட்... 'காதலன்’ல அப்பாவும் பையனும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தது என்னோட ஏக்கம்... 'இந்தியன்’ தாத்தா, என் கோபம். இதெல்லாம் உங்களால ரசிக்கப்பட்டபோது ஒண்ணு புரியுது... நமக்குள்ளே இருக்கிற விஷயத்தைச் சரியா செதுக்கி கலர் குடுத்தோம்னா, அது நிச்சயம் ரீச் ஆவும், அதை விட்டுட்டு அலைஞ்சோம்னா, அது சரிவராது.

சின்ன வயசுல ஒரு மாறுவேடப் போட்டி. எம்.ஆர்.ராதா கெட்டப்ல, ஒரு பிச்சைக்காரனா நான் நடிக்கிறதா ஐடியா.

அதுக்காக நான் என்ன செஞ்சேன் தெரியுமா? கொஞ்சம் புளி, கொஞ்சம் வாழைப்பழம், ரெண்டையும் பிசைஞ்சு, மேக்கப்புக்கு ரெடி பண்ணினேன். அடுத்த வீட்ல இருபத்தெட்டு டொக்கோட ஒரு சொம்பு இருக்கும். அதை ஒரு நாள் ஓசி கேட்டு வாங்கினேன். ஹாஸ்பிட்டல்ல யூஸ் பண்ண மாவுக் கட்டை அறுத்துக் குப்பையில போடுவாங்க. அதை அசிங்கம் பார்க்காமப் பொறுக்கிட்டு வந்தேன். கிழிஞ்சு கிடந்த பழைய டிரஸ்ஸை எடுத்து போட்டுக்கிட்டேன். ஒரு சோப்பு டப்பா பிரைஸுக்கு இவ்வளவு கஷ்டம். நான் இப்பவும் அப்படித்தான். ஒரே வித்தியாசம்.. அப்போ சோப்பு டப்பா பிரைஸ்... இப்போ கோடி ரூபா படம்!

நினைச்ச மாதிரியே விஷயங்கள் அமையறது அபூர்வம். குறிப்பா காதல், வேலை, வீடுன்னு விரும்பினபடியே வாழ்க்கை கிடைக்கிறது ஒரு யுத்தம்தான். இடைப்பட்ட காலம் அவஸ்தை, ரணம்தான். ஆனா, அதை நோக்கி நம்மை நாமே நகர்த்தறது பெரிய சந்தோஷம். எப்பவுமே 'அதா வரும்’னு வெயிட் பண்றது சரிவராது. வெற்றியை மட்டும் விரட்டித்தான் பிடிக்கணும்!''

பாலகுமாரன்

''உடைஞ்சு நொறுங்கி நிக்கற ஒவ்வொருத்தன் பிடரி மயிரையும் உலுக்கி ஒண்ணு சொல்வேன். 'ஏண்டா திகைச்சு நிக்கற..? இப்ப என்ன ஆச்சு. என்னைப் பார். நான் ஃபெயிலியர்டா. எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணலை. பண்ணாத தப்பு இல்லை. அந்த வயசுலயே அடல்ட்ரி. ஜெயில்ல இருந்திருக்கேன் தெரியுமா? மேலு காலெல்லாம் சிரங்கா இருக்கும். மோருஞ்சாதம் தவிர வேறு எதுவும் தெரியாது. என் பேரே 'மக்குப் பாப்பா’தான். நான் வரலியாடா? நாலு பேர் பார்க்கிற இடத்துக்கு என்னாலயே வர முடியுதுன்னா, ஏன் உன்னால முடியாது? ச்சீ... வா!''

ஆட்டோகிராஃப்

ஏ.ஆர்.ரஹ்மான்

''நீங்க பெரிய கிரியேட்டரா இருக்கலாம், கடுமையா உழைப்பவரா இருக்கலாம். ஆனா, அதை வெளியே கொண்டுவர ஒரு நேரம்... சந்தர்ப்பம் வேணும். அதுக்கு ஒரு சக்தி பின்னணியில் இருக்குனு நம்பறேன். ஒரு படம் ஓடினா ஓஹோனு கொண்டாடறதும்... ஒரு படம் விழுந்தா 'அவ்ளோதான்’னு விமர்சிக்கறதும் நாம பண்ற விஷயங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும், எல்லாமே எப்போதோ நிச்சயிக்கப்பட்ட விஷயங்கள்னு நினைப்பேன். இறையருள்தான் நம்மை இயக்குகிறது. எனக்குத் தெரிந்த விஷயம் மியூஸிக். ஒரு ரயில் கூவல் சொல்லாத சோகம்... மழைச் சாரல் சொல்லாத சந்தோஷம்னெல்லாம் ஏதாவது இருக்கா என்ன? என்னோட சக மனிதனுக்கு அதைக் கம்யூனிகேட் பண்ண முடியுது. நம்ம வேலையை நாம் பார்ப்போம் எப்பவும். அது போதும்!''

பாரதிராஜா

''வாழ்ந்துரு! - இந்த ஒரே வார்த்தைதான் நான் சொல்ல விரும்பறேன். உன் கோப்பை உனக்குத்தான். ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காத... பட்டாம்பூச்சி போல பற. மெழுகுவத்தி மாதிரி உருகு. ஒரு நதி மாதிரி காடு, மலை, நிலம்னு கரை புரண்டு நுங்கும் நுரையுமா ஓடு. எங்கேயும் யாருக்காவும் நிக்காத. நின்னா தேங்கிடுவ. உன் ரசனை, உன் விருப்பம், உன் முடிவு... எதையும்  விட்டுராத. ஆடுறவரை ஆடு. சாவு சந்தோஷமா இருக்கணும். கடைசி நிமிஷம் தொண்டைக் குழி விக்குறப்போ, எதுக்காவது ஏங்குனா... உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமப் போயிடும். அர்த்தம் கொடுத்துரு, அதுக்காக... வாழ்ந்துரு!''

ஆட்டோகிராஃப்

பிரகாஷ்ராஜ்

'' 'நான் போற பாதை எனக்குத் தெரியும். அதைப் புல் மூடி மறைச்சிருக்கு. நட்சத்திரங்களின் மொழியில் அதை நான் கண்டுபிடிப்பேன். காற்று என் பக்கமிருக்கிறது. பூக்களின் வாசனை என் வழியைச் சொல்கிறது. நான் போக வேண்டிய இடம் எதுனு எனக்குத் தெரியாது. ஆனால், அந்த இடத்துக்கு நான் வருவேன் என்பது தெரியும்’.

- தாகூரோட இந்தக் கவிதை எனக்குப் பிடிச்ச விஷயம். நான் என்னை இப்படித்தான் சொல்லிக்குவேன்.  எப்பவுமே 'முயற்சி’ங்றது தெரிஞ்ச வெளிச்சத்துல இருந்து தெரியாத இருட்டுக்குள்ள குதிக்கிற சங்கதிதான்.

சும்மா இருக்கிறதுக்கு நடக்கலாம். முடிஞ்சா பறக்கலாம். பறவைகளெல்லாம் றெக்கை முளைச்ச மனுஷங்கனு புரிஞ்சுக்கலாம். நாமும் பறவையாக முயற்சிக்கலாம்!''

சித்ரா

''எந்த நல்ல பிரார்த்தனையும் வீண் போறதில்லை. இதோ, அதுக்கு நானே ஒரு உதாரணம்! ஒரு பறவையா இருக்கப் பிரியப்படறவ நான். இப்போ, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம்னு பாடுறதுக்காகப் பறந்துட்டே இருக்கிற வாழ்க்கை எனக்கு...

நான் வாழ்க்கையை மெட்டீரியலா பார்க்கிறது இல்லை. அது ஃபீலிங்ஸ். நாம ஒருத்தருக்கொருத்தர் கேரக்டர்ல, டேஸ்ட்ல, ஐடியாஸ்ல எவ்வளவோ வித்தியாசப்படுவோம். அதுக்காக யாரையும் காயப்படுத்துறதோ, விட்டு விலகறதோ நல்லது இல்லைனு நினைப்பேன். 'ஒரு சிலை என்பது பாறையிலேருந்து தேவையானதை செதுக்கிறது மட்டுமில்லை; தேவையில்லாததை ஒதுக்குறதுலயும்தான் இருக்கு’னு சொல்வாங்க. நமக்கு சிலைதான் முக்கியம். இந்த சூட்சுமம்தான் சிற்பம்... வாழ்க்கை எல்லாமே!''

ஆட்டோகிராஃப்

தேவா

'' 'செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கு’னு சொல்வாங்க. என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட ஒரே விஷயம் இதுதாங்க. அடுத்த மனுஷனை மதிக்கணும். அவரையும் நம்மோட ஒருத்தரா நேசிக்கணும். இங்க பெரியவங்க, சின்னவங்கனு யாரும் இல்லை. எல்லாப் பெரியவங்களுக்கும் ஒரு 'நேத்து’ இருக்கும். அதுபோல சின்னவங்களுக்கும் ஒரு 'நாளை’ இருக்கும். எனக்கு டீ தர்றான் ஒரு பையன். அது அவர் வேலை. அவர் எங்க வீட்டுக்கு வந்தா நான்தான் அவருக்கு டீ எடுத்துட்டு வந்து தருவேன். தரணும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் மனுஷங்க மகான்களாவறது பெரிய விஷயம் இல்லை; மனுஷங்களாவே இருக்க முடிஞ்சா... அதுதாங்க சந்தோஷம்!''

வைரமுத்து

''ஆட்டோகிராஃப் என்பது அடையாளம். திருவள்ளுவனின் கையப்பத்தை நான் அறியேன். திருக்குறள்தான் அவர் எனக்குத் தந்த ஆட்டோகிராஃப்.

ஆட்டோகிராஃப், எழுத்தில் எடுக்கப்படுகிற ஒருவரின் புகைப்படம். அதற்கு வேறு வடிவங்களும் உண்டு.

பிறை என்பது
நிலாவின் சுருக்கொப்பம்.
விதை என்பது
மரத்தின் ஆட்டோகிராஃப்.
மலர் என்பது
அழகின் ஆட்டோகிராஃப்.
தாஜ்மகால் என்பது
ஷாஜகானின் நிமிர்ந்து நிற்கிற
ஆட்டோகிராஃப்.

காதலியின் கற்றைக் குழலில் ஒரு முடி எடுத்து பாதுகாப்பான் காதலன். ஒரு காதலியின் மிக நீண்ட ஆட்டோகிராஃப் அதுதான்.

இந்த உலகம் மறதியில் மட்டுமே அதிகமாக ஆர்வம் காட்டுகிறது. இந்த பூமிக்கு யாருமே முக்கியம் இல்லை என்பதே முக்கியமான உண்மை. சமூகத்துக்கு எவை நன்மையோ, அவை மட்டுமே நிற்கும். நான் நினைவுகூரத்தக்க நன்மைகளை நோக்கி நாம் நடக்க வேண்டுமென விரும்புகிறேன்!''

ஆட்டோகிராஃப்

உன்னி கிருஷ்ணன்

''கணக்குப் போட்டுக் காய் நகர்த்துற விஷயம் இல்லை வாழ்க்கை. உணர்வுபூர்வமா வாழ்க்கையை அணுகுவது எனக்குப் பிடிக்கும். அதிகபட்ச சந்தோஷத்தைக் கண்ணீராத் தான் காட்ட முடியும். மிகப் பெரிய துக்கம் சிரிப்பாத்தான் வெளிப்படும். எதுக்கும் நாம ஆரம்பம் இல்லை... முடிவும் இல்லை. In between சில விஷயங்கள் செய்றோம். அவ்வ ளவுதான். வாழ்க்கை எப்பவும் மியூஸிக் போல் இருக்கட்டும்!''

- ரா.கண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism