Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ந்த வருடத்தின் முதல் குற்றாலச் சாரல் எங்கள் ஊர் கூரையில் தெறிக்கும்போது, நான் நடுவீட்டில் மஞ்சள் காமாலையோடு படுத்திருந்தேன். 'கண்ட நேரத்துல கண்டதைச் சாப்பிட்டு உடம்பைச் சக்கையாக்கிட்டு வந்தா, நாம என்ன கறிக்கஞ்சியா ஆக்கிப் போட முடியும்? கண்ட கஷாயத் தைத்தான் காய்ச்சி வாய்ல ஊத்த முடியும். எம் புள்ள இத்தன நாளும் தின்ன சோறும் சரியில்லை... சுத்துன ஊரும் சரியில்லை...’ என்று அம்மா, அவள் இதுவரையிலும் காணாத ஒரு நகரத்தின் மீது சாபமிட்டுக்கொண் டிருந்தபோது, சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் நினைவிலாடின.    

கொட்டிக்கிடந்த அத்தனை நட்சத்திரங்களையும் யாரோ அள்ளிக்கொண்டுபோய்விட்ட சென்னைப் பெருநகரத்தின் நள்ளிரவு அது. சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று சென்னைக்கு வந்துவிட்டு, எங்கே போவது? யாரைப் பார்ப்பது? என, எதுவும் புரியாமல் சாப்பிட காசு இல்லாமலும் தங்கு வதற்கு இடம் இல்லாமலும், அங்கே இங்கே என்று சென்னை முழுக்க  கால் போனபோக்கில் அலைந்து திரிந்து, கடைசியாக சாஸ்திரி பவன் அருகே தஞ்சம் அடைந்தேன். அங்கு இருந்த ஒரு பெட்ரோல் பங்குக்கு அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டி யில் ஏறி, 'இனி நடப்பது நடக்கட்டும் என்று’ போர்வையைப் போர்த்திக் கொண்டு, ஒரு நல்ல உறக்கத்துக்கு விடாப்பிடியாக முயற்சித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு கம்பு என் பின் மண்டையில் வலிக்காத மாதிரி தட்டி எழுப்புவது தெரிந்தது. போலீஸ் என்று நினைத்துக்கொண்டு நடுங்கிய உட லோடு போர்வையை விலக்கிப் பார்த்தால், அது அந்த பெட்ரோல் நிலையத்தின் வாட்ச்மேன். நல்ல உயரம், நல்ல கறுப்பு, நல்ல மீசை. ஆனால், வயதும் உடலும் கொஞ்சம் தளர்ந்து இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டால், எப்படியும் அவருக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். 'எல யாருல இது... இங்ஙன ஒறங் கிட்டு. தம்பி எந்தி எந்தி... இங்குனலாம் படுக்கக் கூடாது. வேற எங்கியாவது போய் படு... ஓடு’ என்று விரட்டினார். அவரின் பேச்சில் கேட்ட, 'எல, எல எந்தி’ வார்த்தைகள் என்னுள்ளிருந்த அச்சத்தை அகற்றி சந்தோஷத்தை மலரச் செய்தது. அந்த சந்தோஷத்தை இன்னும் அதிகப்படுத்த நானும் சுத்தத் திருநெல்வேலி தமிழிலே பதில் சொன்னேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறக்கவே நினைக்கிறேன்

''இல்ல அண்ணாச்சி... வண்டி சும்மாதான கெடக்கு. அதான் ஏறிப் படுத்தேன்!''

''என்னது, வண்டி சும்மாக் கெடக்கா? எந்த ஊருடே நீயி!''

''தின்னவேலி!''

''அது நீ 'வண்டி சும்மாதான கெடக்கு’னு சொல்லும்போதே தெரிஞ்சிடுச்சுடே... அங்க எந்த ஊருன்னு சொல்லு!''

''சிருவண்டம் பக்கம் அண்ணாச்சி!''

''சிருவண்டம் பக்கமா? பாருடே கூத்த... எனக்கு ஆத்தூர்தாண்டே. ஆமா, பார்த்தா படிச்ச புள்ள மாதிரி இருக்க... ஏண்டே இங்க வந்து படுத்துக் கெடக்க? யார்டே நீயி?'' என்ற கேள்வியை நல்லவேளை அண்ணாச்சி கேட்டார். இந்த சென்னையில் இந்தக் கேள்வியை யாராவது கேட்க மாட்டார்களா? எல்லாவற்றையும் சொல்லி அவர்களின் சுண்டு விரலையாவது சிக்கெனப் பிடித்துக்கொள்ள மாட்டோமா? என தவித்துக்கிடந்ததால், அண்ணாச்சியிடம் எல்லாவற்றையும் படபடவெனச் சொல்லிவிட்டேன். கதை போலக் கேட்டவர் சொன்னார்....

''என்னடே இப்படி வந்துருக்க? சரி சரி...  இவ்வளவு பெரிய சினிமாவுல நீ ஒருத்தன் போறதுக்கா ஒரு வழி வாய்க்கா இல்லாமப் போய்டும். வாடே பாத்துக்கலாம். இங்க படுக்காத... பங்குல நான் மட்டும்தான் இருக்கேன். அங்க வந்து படுத்துக்கோ. மத்தத காலையில பேசிக்கலாம்!'' என்று, என் தோளில் அவர் கையைப் போட்டு அழைத்துக்கொண்டு போகும்போது அவரைப் பற்றிக் கேட்டேன்.

''எம் பேர் இருட்டுநாட்டு பெருமாள்டே. நம்ம ஆத்தூர் இருக்குல்லா, அது பக்கத் துல வீரநாயக்கந்தட்டுதான் சொந்த ஊரு. சொல்ல ஒரு ஊரு இருக்கு, ஊரு வெச்ச பேரு இருக்கு, அவ்வளவுதான். அங்கே வேற யாருமில்ல. பொறந்த ஊர்ல யாருமில்லனா, அங்க வாழ்றது பெரிய பாவம்லா! அதான் இங்க வந்து கஞ்சிக்காக காவக் காத்துக்கிட்டு கிடக்கேன்''

''அது என்ன அண்ணாச்சி இருட்டுநாட்டு பெருமாள்?''

''அதுவா?  நான் இங்க எல்லாருக்கிட்டயும் பெருமாள்னு மட்டும்தான் சொல்லுவேன். சரி நீ நம்ம ஊர்க்காரன். உனக்கு அந்தப் பேரு தெரியுமேனுதான் முழுப்பேரும் சொன்னேன். அது எங்க சாஸ்தா பேருடே. ஏரலு சேர்மன் சாமி இருக்குல்லா, அதுக்குப் பின்னாடி அப்ப டியே நடந்து போனா, ஆத்தங்கரையோரம் கறுப்பா ஒரு ஊச்சிக் கல்லு கிடக்கும். அதான் இருட்டுநாட்டு பெருமாள் சாமி. இருட்டா இருக்கிற நாட்டுக்கு ஒளி கொடுக்கிற தெய்வம்னு அர்த்தம். ஆனா, பாவம் ஒவ்வொரு பங்குனி உத்திரத்துக்கும் அவரை இருட்டுக்குள்ள போய் தேடிப் பிடிக்கிறதுதான் பெரும்பாடு!''

மொத்த சென்னையுமே சட்டென்று ஏரல் என்கிற சிறு ஊராக மாறிவிட்டதைப் போல எனக்கு அத்தனை நெருக்கமாகிவிட்டார் பெரு மாள் அண்ணாச்சி. அடுத்த நாள் அந்த பெட் ரோல் பங்க் உரிமையாளரிடம் என்னைப் பற்றிச் சொல்லி, எனக்கு வேலையும் நான் அங்கேயே தங்குவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.

'பங்க்ல ராத்திரி ஒண்ணும் பெருசா வேலை இருக்காது. சும்மா ரெண்டு மணி வரைக்கும்இருந் துட்டு, அப்புறம் தூங்கிடு. காலையில சினிமாவில சேர்றதுக்கு ஆள் பாக்கப் போ. என்னா?’ என்று சொல்லி என் சினிமா ஆசையையும் கருகவிடா மல் பார்த்துக்கொண்டார். அதுமட்டுமல்ல; 'ஏல... நீ இங்க எம்.ஜீ.ஆரு கல்லறையைப் பார்த் துருக்கியா?’ என்று முதன்முதலில் என்னைமெரி னாவுக்குக் கூட்டிப்போனது, 'தம்பி இந்த ஊர் சாப்பாட்ட  எப்போதும் பசிக்கு மட்டும் சாப் பிடு. ருசிக்குச் சாப்பிடாத... என்னா? அம்புட்டும் விஷம். அது யானையை பூனையா மாத்தும், பூனையை யானையா மாத்திடும்’ என்று தின மும் ஒவ்வொரு ரோட்டுக் கடைகளுக்காகக் கூட்டிக்கொண்டுபோனது, 'ஆமா... சினிமா சினிமானு சொல்லிட்டு படம் பாக்கவே நீ போக மாட்டேங்கியே. வா இன்னைக்குப் போவலாம்’ சென்னையில் என் முதல் படமான 'சண்டக் கோழி’யைப் பார்க்கவைத்தது... இவை எல்லாமே பெருமாள் அண்ணாச்சிமூலம்தான் சாத்தியமா னது. இன்னும் சொல்லப் போனால், அந்த நாட்களில் என்னைவிட எனக்கு சினிமாவாய்ப்பு களை அதிகமாகவும் ஆர்வமாகவும் தேடியது பெருமாள் அண்ணாச்சிதான்.

மறக்கவே நினைக்கிறேன்

''தம்பி இந்த உதட்டால 'இம்ப்டிர்ர்ர்ர்ரு’ அப்படின்னு சத்தம் கொடுப்பாரே... அவரு நம்ம பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போட வந்தாருடே. அவர்கிட்ட ஒன்னப் பத்திச் சொல் லிருக்கேன். நாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்லி யிருக்காரு!''

''யார் அண்ணாச்சி? வெண்ணிற ஆடை மூர்த்தியா?''

''ஆ.... அவரேதான் நீ போய் பாருடே'' என்று சொன்னார். நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டு எதுவும் சொல்லாமல், 'சரி’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவைத்தேன். இன்னொரு நாள் எங்கேயோ ஒரு கடையில் சினிமா அலுவ லகங்களில் இருக்கும் வெரைட்டி புக்கை வாங் கிக்கொண்டு வந்து நீட்டி, 'தம்பி இதுல எல்லா சினிமாக்காரங்க நம்பரும் இருக்காம். நாம ஒவ் வொருத்தருக்கா போன் பண்ணி வேலை கேட் கலாம் என்னா?’ என்று என் கையைப் பிடித்து எஸ்.டீ.டி. பூத்துக்கு அழைத்துச் சென்றார்.

முதலில் பிரகாஷ்ராஜ் நம்பர். நான் சொல்லச் சொல்ல அவர்தான் எண்களை அமுக்கினார். எதிர்முனையில் யாரோ போனை எடுத்ததும், இவர் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் பேசிய வசனத்தை அப்படியே அவரிடம் பேசினார். எதிர்முனையில் இருப்பவர் என்ன பேசினாரோ தெரியவில்லை, 'தம்பி இந்த பிரகாஷ்ராஜ் குரல் சினிமாவுலதாம்டே கேட்க நல்லா இருக்கு. போன்ல நல்லாவே இல்ல... என்ன பேசுறார்னே புரியல’ என்று போனை வைத்துவிட்டார். 'அது அவரா இருக்காது அண்ணாச்சி... அவரோட மேனேஜர் யாராவது இருக்கும்’ என்று நான் சொன்னதை அவர் நம்பியதாகத் தெரியவில்லை. அப்புறம் வரிசையாக ஷங்கர், சேரன், பாலா, செல்வராகவன், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி என இயக்குநர்கள் மட்டுமல்லாமல் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என நடிகர்கள் நம்பரையும் ஒற்றியெடுத்தார். சில அழைப்புகளை யாரோ எடுத்து என்னவோ பேசினார்கள் என்றால், நிறைய எண்களில் ரிங் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நிறைய நேரம் காத்திருந்து, இறுதியில் ரொம்பவே அலுத்துப்போய்விட்டார் அண்ணாச்சி. விரக்தியின் விளிம்பில் ஒரு வெற்றுப் பார்வையுடன் என்னை ஏறிட்டார். நான் எதுவும் சொல்லாமல் சின்னதாகச் சிரித் தேன். நான் அப்படிச் சிரித்தால் அண்ணாச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிச் சிரிக்கும்போது எல்லாம், 'அப்படியே எங்கப்பன் கூனக் குப்ப னோட பல் வரிசைடே உனக்கு’ என்பார். இப்படி எப்போதும் என்னுடனே எனக்காக இருந்த அண்ணாச்சி திடீரென்று ஒருநாள்காணாமல் போய்விட்டால் எப்படி இருக்கும்?

பெருமாள் அண்ணாச்சி யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ போனது, என் னைத் தவிர அங்கு யாருக்குமே அதிர்ச்சியாக இல்லை. அவரைத் தெரிந்த நிறையப் பேரிடம் தேடிப்போய் விசாரித்தேன். 'அவரு இப்படி தாம்பா திடீர்னு காணாமப் போய்டுவாரு. அப் புறம் அவராவே வந்து நின்னுகிட்டு வேலை எதுவும் தர்றீயாம்பாரு... பெரிய நாடோடி ராஜா மாதிரி’ என்று சாதாரணமாகச் சொன்னார்கள். அப்படி என்றேனும் ஒருநாள் அண்ணாச்சி கண்டிப்பாகத் திரும்பி வருவார் என்று காத்திருந்த நாட்களில் எல்லாம் வராத அண்ணாச்சி, இரண்டு வருடங்கள் கழித்து மெரினா கடற்கரை யில் திடுக்கென கண் முன் நின்றார். ஒருகூட்டத் தோடு போயிருந்த நான் முதலில் அவரைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்காது. ஏனெனில், என் கைகளைப் பிடித்து இழுத்து நிறுத்தியது ஒரு பலூன் வியாபாரி!

''ஏடே மாரி... என்னியத் தெரியுதா? நாந்தாண்டே இருட்டுநாட்டு பெருமாள் அண்ணாச்சி!''

''அண்ணாச்சி... நீங்களா? எப்படி இருக்கீங்க, எங்க போனீங்க? என்னாச்சி?''

''அதுவா..! எனக்கு அப்படித்தான்டே எங்கே யாவது போகணும்னு தோணும். உடனே போய் டுவேன். அன்னைக்கு ராத்திரி ராமர், சீதையை தீக்குள்ள இறங்கச் சொல்ற மாதிரி பொல்லாத கனவு வந்து பாடா படுத்திட்டு. அதான் உடனே கிளம்பி ராமேஸ்வரம் போயிட்டேன். இப்போ தான் இங்க வந்து பத்து நாளாச்சு. எங்கேயும் வேலை கிடைக்கலை. தங்குறதுக்கு இடமும் இல்ல. அதான் பத்து பலூன் வாங்கி கைல வெச்சுக்கிட்டு இங்கே பலூன்காரனா படுத்துக் கெடக்கேன்!''

''ஏன் அண்ணாச்சி இப்படி? ஊருக்குப் போக வேண்டியதுதானே!''

மறக்கவே நினைக்கிறேன்

''அங்கெல்லாம் போவ முடியாதுடே... வேணும்னா உன்கூட வர்றேன். இங்க அடி வாங்க முடியலை. அர்த்தராத்தியில வந்து பலூன் வித்த காச எவன் எவனோ கேக்கான். நான் பலூன் விக்கிறதுக்கு வெச்சில்ல... சும்மா வெச்சிருகேனு சொன்னா நம்ப மாட்டேங்கானுவ. பத்து பலூனைக் கையில வெச்சுக்கிட்டு கடலப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கலாம்னு இருந்தா, என்னன்னமோ சொல்லி, போறவன் வர்றவ னெல்லாம் மிதிக்கிறானுவ... சரி எங்கேயாவது போவலாம்னா... எங்கே போகணும்னு தோண மாட்டேங்குது.  அது எப்போ தோணுதோ, அப் போதான் அங்க நான் போக முடியும். இப்போ இந்த நொடி வலிக்கிற உடம்பு உன் கூட வரச் சொல்லுது... கூட்டிட்டுப் போடே...'' என்றார் கண்களில் ஈரம் மினுங்க!

''சரி அண்ணாச்சி... நீங்க இங்கயே இருங்க. நான் ஒரு குடும்பத்தோட வந்துருக்கேன்.அவங்க கிட்ட கேட்டுட்டு உங்களை வந்து கூட்டிட்டுப் போறேன்'' என்று சொல்லி கூட்டத்தோடு கூட் டமாகப் புகுந்து வந்தவன்தான், அண்ணாச்சி யிடம் திரும்பிப் போகவே இல்லை. மறுநாள் சென்றேன். அண்ணாச்சி அங்கு இல்லை. அடுத்த நாள், அதற்கடுத்த நாள்... ம்ஹூம்... அண்ணாச்சி இல்லவே இல்லை!

நான் வருவேன் என்று எத்தனை நாள் கடலைப் பார்த்தபடியும் பலூனைப் பறக்கவிட்டபடியும் அண்ணாச்சி காத்திருந்தாரோ, காத்திருந்துகாத்தி ருந்து கடைசியில் என்ன ஆனாரோ, எங்கு போனாரோ?  

நினைத்துப் பார்த்தாலே கடலுக்குள் இருந்து கரை ஏறிய அலையன்று 'பொளேர்’ என்று முகத்தில் அறைவது போலிருக்கிறது. ஆனாலும், நல்லவேளை 'சித்தாளாகப் போனாலும் முதல்ல சினிமாவுக்குள்ள போயிடணும்’ என்று அன் றைக்கு ஒரு சினிமா தயாரிப்பாளர் வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்து, நாய்க் கூண்டுக்கு அருகில் சங்கிலியிடாத நாயாக வாழ்ந்த நான், அங்கு அண்ணாச்சியை அழைத்துக்கொண்டு போய் கிழட்டு நாயாக்காமல் தப்பிக்கவிட்டதில் எனக்கு நிறைவான நிம்மதிதான்!

- இன்னும் மறக்கலாம்...