Published:Updated:

சூப்பர் கார்களில் இலவச சவாரி!

Vikatan Correspondent
சூப்பர் கார்களில் இலவச சவாரி!
சூப்பர் கார்களில் இலவச சவாரி!

‘மாப்பிள்ள... லைஃப்ல ஒரு தடவையாவது பென்ட்லி, ஃபெராரி, லம்போகினி கார்ல போயிறணும்டா’ என்று சபதம் எடுத்திருக்கும் மிடில் கிளாஸ் மச்சானா நீங்கள்? அப்படியென்றால், எப்படியாவது துபாய் ஃப்ளைட் டிக்கெட்டுக்கு மட்டும் பணம் ரெடி பண்ணினால் போதும்.

‘வாவ்!’ என்று வாயைப் பிளப்பதற்குள், விஷயத்திற்கு வருவோம்!

சூப்பர் கார்களில் இலவச சவாரி!

துபாயில் வரும் நவம்பர் முதல் டிசம்பர் வரை மிகப் பெரிய அளவில் ஒரு மோட்டார் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஆட்டோ ஷோவுக்கு சுற்றுலாவாசிகளை வர வைப்பதற்காக, துபாய் மோட்டார் ஃபெஸ்டிவல் டீம்தான் இந்த சூப்பர் கார் டாக்ஸியை ஏற்பாடு செய்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் வார இறுதி நாட்களான 21-22, 28-29 மற்றும் டிசம்பர் 5 - 6 வரை மட்டுமே இந்த சூப்பர் கார் டாக்ஸி சேவை உண்டு. மால்கள், தியேட்டர்கள், துபாயின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள், முக்கியமாக... விமான நிலையம் போன்ற இடங்களில் லம்போகினி, ஃபெராரி, பென்ட்லி, பென்ஸ் லிமோஸின், ரோல்ஸ்ராய்ஸ், ஆஸ்ட்டன் மார்ட்டின், போர்ஷே போன்ற சூப்பர் கார்களை டாக்ஸி சேவைக்கெனப் பறக்க விட்டிருக்கிறார்கள்.

சூப்பர் கார்களில் இலவச சவாரி!

‘சாதா டாக்ஸிக்கே கி.மீ.க்கு 12 ரூபாய் பில் வருது; சூப்பர் காருக்கு எப்படியோ?’ என்று யோசிக்கவே வேண்டாம் தோழர்களே! துபாய் விமான நிலையத்தில் இறங்கி, மோட்டார் ஷோவுக்கான டிக்கெட்டைக் காண்பித்து, உங்களுக்குப் பிடித்த ரோல்ஸ்ராய்ஸிலோ, லம்போகினியிலோ ஏறிப் பறக்க வேண்டியதுதான். 0-100 கி.மீ. தூரத்தை வெறும் 3.3 விநாடிகளில் ஜிவ்வெனக் கடக்க வேண்டுமென்றால், ஃபெராரியில் ஏறிக்கொள்வது பெஸ்ட்!

சூப்பர் கார்களில் இலவச சவாரி!

‘துபாய் மோட்டார் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியின் டைரக்டர் ஜின் ச்வென் ஆங், ‘‘சுற்றுலாவாசிகளின் கனவை இந்த சூப்பர் கார் டாக்ஸிக்கள் நிச்சயம் நனவாக்கும்! கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் சூப்பர் கார்கள் டாக்ஸிகளுக்கென்று தயாராக நிற்கின்றன! சுற்றுலாவாசிகளால் துபாய் மோட்டார் ஷோ திணற வேண்டும் என்பதற்காகவே இந்த சூப்பர் ஐடியா!’’ என்று காலரைத் தூக்கி விட்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.

'அண்ணனுக்கு துபாய்க்கு ஒரு டிக்கெட் பார்சேல்!'

- தமிழ்