Published:Updated:

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)
மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

ச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான 'பிளேயின் இட் மை வே' புத்தக அறிமுகத்தின் மூன்றாவது பாகம் இது. சர்ச்சைகள் பலவற்றுடன் இந்த  பக்கங்கள் அமைந்திருக்கின்றன. டிராவிட் டிக்ளேர் செய்தது, கிரேக் சேப்பல் மீதான காட்டம், ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டு என்று அனல் பறக்கும் பகுதிகள் இவை...

2003 உலகக்கோப்பைக்கு இந்திய அணி போவதற்கு முன் நியூசிலாந்து தொடரில் விளையாடியது. அங்கே விளையாடிய இரண்டு டெஸ்ட்களிலும் தோல்வி என்பது ஒருபுறம் என்றால், ஒரு போட்டியில் மூன்றே நாட்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். அடுத்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்குள் அணி ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு அரிதிலும் அரிய சாதனை புரிந்தார். ஒரே நாளில் இரண்டு இன்னிங்சிலும் பேட் மற்றும் பந்து வீசுகிற பெருமை அவருக்கு எதிரணியும் 94 ரன்களில் சுருட்டப்பட்டதால் ஏற்பட்டது. 2-5 என்று ஒருநாள் போட்டியையும் இந்திய அணி இழந்தது.
 

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

மூன்று காயங்கள், மூன்றாவது இடத்தில் ஆடச்சொன்ன கங்குலி: உலகக்கோப்பைக்கு தயாரான காலத்தில் கணுக்காலில் காயம், விரலில் பெரிய காயம், கூடவே பின்னந்தொடையில் பிடிப்பு என்று சச்சினுக்கு எக்கச்சக்க சோதனைகள். கணுக்கால் காயம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், காலின் பெரும்பாலான மேற்பகுதி சதை கட்டை கழட்டும் போது கூடவே ஒட்டிக்கொண்டு வருகிற அளவுக்கு ஆழமாக இருந்தது. பயிற்சி தருணங்களில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமலே தவிர்த்த சச்சினை மூன்றாவது வீரராக களமிறக்க அணியில் பெரும்பான்மையானோர் மற்றும் கங்குலி விரும்பினார்கள். சச்சின், அணி என்ன சொன்னாலும் தயார் என்றாலும் தனியாக சந்தித்த ஜான் ரைட் இந்த திட்டம் ஓகேவா என்று நேராக சொல்ல சொன்னதும், "காயங்கள் இருந்தாலும் முதலில் ஆடி அடித்து துவைக்கவே விருப்பம்" என்று சச்சின் சொல்ல கங்குலியை அதை ஏற்க வைத்தார் ஜான் ரைட்.


ஆஸ்திரேலியா அணியுடன் உலகக்கோப்பையில் லீக் ஆட்டத்தில் படுதோல்வி அடையவே வீரர்கள் மீது கடுமையான விமர்சனமும், வீடுகள் மீது தாக்குதலும் நடக்க சச்சின் அமைதி காக்கச்சொல்லி அறிக்கை விடுகிற அளவுக்கு போனது. குட்டி குட்டி அணிகளை அடித்த பின்பு இங்கிலாந்து காத்துக்கொண்டு இருந்தது. காடிக் இந்திய அணியை உசுப்பேற்றும் சங்கதிகளை சொல்லிக்கொண்டு இருந்தார். அதைப்படித்த இந்திய வீரர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். சச்சினுக்கு செய்தித்தாளை விளையாடும் காலங்களில் படிக்கும் பழக்கம் இல்லாததால் விஷயம் தெரியாது. காடிக் ஷர்ட் பந்தை வீசியதும் சிக்சருக்கு தள்ளினார் சச்சின். அடுத்த பந்து புல்லாக வரவே அதையும் பவுண்டரிக்கு தள்ளினார். பிளின்ட்டாப் பிரமாதமாக பந்து வீசி அணியின் ஸ்கோரை குறைத்தாலும் நெஹ்ரா பயங்கரமாக பந்து வீசி வெற்றியை உறுதி செய்தார். அடுத்த போட்டி பாகிஸ்தான் அணியுடன்.

ஒரு கோப்பை ஐஸ்க்ரீம், ஓயாத வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான போட்டி தான் இந்திய ரசிகர்களுக்கு இறுதிப்போட்டி. இந்த போட்டியில் வென்ற பிறகு இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றாலும் அவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். 273 ரன்கள் அடித்த பிறகு ஒரு டீம் மீட்டிங் வைக்கலாமா என்று கங்குலி கேட்டார். சச்சின், "என்ன செய்ய வேண்டும் என்று எல்லாருக்கும் தெரியும். வேண்டாம்" என்றார்.

யாருடனும் பேசாமல், எதுவும் உண்ணாமல், "நடுவர்கள் களத்துக்குள் நுழைந்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு காதுகளில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒரு கப்பில் நிறைய ஐஸ்க்ரீம், ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சுவைத்து சாப்பிட்டுவிட்டு ஐஸ்க்ரீம் சுவை நாக்கின் நுனியில் இருக்க ஆடக்கிளம்பினார் சச்சின்.

சேவாக் எப்பொழுதும் ஆடத்துவங்கையில் அன்று மட்டும் சச்சின் ஆரம்பித்து வைத்தார். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் பறந்தன. இரண்டாவது ஓவர் அக்தர் வீச, நிறைய வைட்கள் வீசப்பட்ட அந்த ஓவரில் சிக்சர், பவுண்டரி என்று தூள் பறந்தது. வக்கார் பந்து வீச வந்ததும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் தொடர்ந்து உற்சாகமாக பேசிக்கொண்டே ஆடி அடித்து கலக்கினார்கள். பிடிப்பு ஏற்பட்ட அதீத வலி தர சச்சின் சதமடிக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஆடவந்த யுவராஜ் மற்றும் டிராவிட் கப்பலை கரை சேர்த்தார்கள்.
 

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

கண்ணீர் போக்க மழையே கருணை காட்டு- கடவுளை வேண்டிக்கொண்ட சச்சின்: பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட பிடிப்பு சரியாக வேண்டும் என்று எடுத்துக்கொண்ட பானங்கள் மற்றும் ஜூஸில் கலந்து குடித்த உப்பு எல்லாம் வயிற்றை கலக்கி சச்சினை இலங்கையுடனான போட்டியில் சோதித்தது. ஆனாலும், வயிறு வலியோடு 97 ரன்கள் அடித்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அடித்து ஆடலாம் என்று முயன்று சச்சின் கேட்ச் ஆனார். நடுவில் மழை பெய்தபோது சச்சின் 97. தென் ஆப்பிரிக்க தொடரில் மழை பெய்து ஆட்டம் ரத்தானது போல ஆகவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார். ஆனாலும், அணி தோற்றது. தங்கத்தால் ஆன பேட் அவருக்கு பரிசளிக்கப்பட்டது பற்றிய உணர்வே இல்லாத அளவுக்கு தோல்வி அவரை பிடுங்கித்தின்றது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்து ஆடப்போன தொடரில் தொடர்ந்து சச்சின் சொதப்பிக்கொண்டே இருந்தார். எம்சிஜி மைதானத்தில் நடந்த போட்டியிலாவது சச்சின் அடித்து ஆடுவார் என்று அஞ்சலி அமைதியாக பார்க்க வந்திருந்தார். பந்து எட்ஜ் ஆகி கில்கிறிஸ்ட் கைக்குப் போவதை தானே பார்த்து அவுட்டானார். அடுத்த இன்னிங்சில் கங்குலியை முன்னரே களமிறங்க சொல்லி கேட்டுக்கொண்டதால் ஓரளவிற்கு ஆடினார் சச்சின். அடுத்த போட்டி ஸ்டீவ் வாக்கின் இறுதிப்போட்டி!

சீறிப்பாய்ந்த சிட்னி டெஸ்ட்: சிட்னியில் நடந்த அந்த போட்டியில் பந்து வீச்சாளர்களை தாக்கி ஆடுவதை விடுத்து, சச்சினை இயல்பான ஆட்டத்தை அண்ணன் அஜித் ஆடச்சொன்னார். கவர் டிரைவ் ஆட முயன்றே பெரும்பாலும் அதற்கு முந்தைய போட்டிகளில் அவுட்டாகி இருந்தபடியால் ஒரே ஒரு ஷாட் கூட ஆடிய பத்து மணிநேரத்தில் அடிக்காமல் கட்டுப்பாடாக சச்சின் ஆடினார். அவரை ஆஸ்திரேலியா அணியினர் ஜோக்குகள் சொல்லி வெறுப்பேற்றினாலும் அமைதியாக சச்சின் ஆடினார். அந்த இன்னிங்சின் போது முதல் நாள் மாலை ஒரு மலேசிய உணவகத்துக்கு சென்று நூடுல்ஸ், சிக்கன் மற்றும் சில டிஷ்கள் ஆர்டர் செய்தார். அன்று அவுட்டாகாமல் 73 ரன்கள் வரவே அடுத்த இரண்டு நாட்களும் அஞ்சலியுடன் அதே டேபிளில் அதே இடத்தில் அதே ஆர்டர்களை செய்து சாப்பிட்டார் சச்சின். அதற்கு பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "உங்களை மீடியாக்கள் இனி அவ்வளவு தான்" என்று எழுதினார்கள் தெரியுமா என்று கேட்கப்பட்ட போது, "அது எதையும் நான் படிப்பதில்லை" என்ற சச்சின், அவர் 241 அடித்த பின்பு புகழ்ந்து எழுதியதையும் படிக்கவில்லை. இரண்டுமே ஒன்றுதான் என்பதே தன்னுடைய பாணி என்கிறார்.

அடுத்த இன்னிங்சில் டிராவிட் மற்றும் சச்சின் ஆடிக்கொண்டிருந்த போது டிக்ளேர் செய்யலாமா என்று கங்குலி கேட்டு அனுப்ப, "துணைக்கேப்டன் டிராவிட் தான் சொல்லவேண்டும்" என்று சொல்ல தான் டிராவிட் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபடியால் பொறுமையாக செய்துகொள்ளலாம் என்று சொன்னார். போட்டி இறுதியில் டிராவில் முடிந்தது.

இன்சமாமுக்கு வலை விரித்துப் பிடித்த சச்சின்: பாகிஸ்தான் தொடரில் இன்சமாம் உல் ஹக் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை தலைக்கு மேலே தூக்கி அடித்து சிறப்பாக ஆடுவார் என்பதால் இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்னர் முரளி கார்த்திக்கிடம் சொல்லி மெதுவாக பந்து வீசச்சொல்லி போட்டிக்கு முன்னரே சொல்லிவிட்டார். இன்சமாமுக்கு நேராக லாங்ஆனில் நின்று கொள்வது, அவர் ஆட ஆரம்பித்ததும் சைட்ஸ்க்ரீன் நோக்கி நகர்ந்து கொள்வது என்றும் திட்டம் தீட்டப்பட்டது. இன்சமாம் அதை கவனிக்காமல் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

ஏன் இப்படி செய்தாய் டிராவிட்?: முல்தான் டெஸ்ட் போட்டியில் சேவாக் 300 ரன்களை கடந்த பிறகு சச்சின் 150 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தார். ரமேஷ் பவார் சச்சினிடம் வந்து ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்கப்பாருங்கள் என்று இரண்டாவது நாளின் ஆட்டத்தில் இறுதி செஷனின் ஆரம்ப அரைமணிநேரத்துக்கு பின்னர் சொன்னார். விலகி பல்வேறு இடங்களில் நிற்கும் பாகிஸ்தான் அணியின் முன் அவ்வளவுதான் அடிக்க முடியும் என்பது சச்சினின் வாதமாக இருந்தது. "எப்படியும் பாகிஸ்தானுக்கு 15 ஓவர்கள் தந்துவிடலாம்" என்று முடிவு செய்துகொண்டு அவர் ஆடினார். யுவராஜ் அவுட்டாகி விட, சச்சின் இரட்டை சதமடிக்க 6 ரன்கள் மட்டுமே தேவை என்கிற சூழலில் அடுத்து பார்த்தீவ் களம் புகுந்தார். ரமேஷ் பவார் தகவல் சொல்லிவிட்டு போனபிறகு சச்சினுக்கு ஒரே ஒரு பந்து கூட ஆட கிடைக்கவில்லை. அப்போது கங்குலிக்கு பதிலாக மாற்று கேப்டனாக இருந்த டிராவிட் டிக்ளேர் செய்தார். உள்ளே அறைக்கு போனதும் ஜான் ரைட் மற்றும் கங்குலி தாங்கள் அந்த முடிவில் பங்கேற்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார்கள். சஞ்சய் மஞ்சரேக்கர் அருமையான முடிவு அது என்று சச்சினிடம் சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவர். டிராவிட், சச்சின் அறைக்கு வந்து அணியின் நலனுக்காகவே அவ்வாறு செய்ததாக சொன்னபோது, "ஒரே ஒரு ஓவர் தானே எனக்கு தேவைப்பட்டிருக்கும். நாம் முன்னரே திட்டமிட்டபடி தேநீர் இடைவேளைக்கு பின்னர் வெகு சீக்கிரமே அவர்களை ஆடவைத்திருக்கலாம். இது ஒன்றும் நான்காவது நாளில்லையே ?" என்று கேட்டார்.

நான்காவது நாள் சிட்னியில் மாலையில் சதத்தை நோக்கி டிராவிட் நகர்ந்தபோது கங்குலி மூன்று முறை தகவல் அனுப்பியும் தொடர்ந்து டிராவிட் ஆடியதை சச்சின் அப்போது நினைவுபடுத்தினார். "இத்தோடு இதை முடித்துக்கொள்வோம். இது நம் உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே சமயம் கொஞ்ச நேரம் என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்" என்று மட்டும் சொன்னார்.

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

படவா யுவராஜ்: நான்கு வருடம் கழித்து மொகாலியில் கம்பீர் மற்றும் யுவராஜ் இரண்டு பேரும் சதமடிக்க வாய்ப்பு இருந்த போது தோனி டிக்ளேர் செய்ய எண்ணிய போது சச்சின் தடுத்து அவர்கள் ஆடட்டும் என்று அனுமதித்தார். ஆனால், இருவரும் சதமடிக்கவில்லை, "படவா! உன்னை உதைக்கப்போறேன். சான்ஸ் வாங்கிக்கொடுத்தும் 86 இல் ரன் அவுட் ஆகிட்டு வர்றியா நீ?" என்று யுவராஜை கடிந்து கொண்டார்.

முல்தான் போட்டியில் மொயின்கானிடம் சவால் விட்டு அப்படியே அவரின் விக்கெட்டை சச்சின் "சிக்ஸர் அடிக்கிறேன் பார்" என்று அவர் சவால்விட்டும் தூக்கியிருக்கிறார்.

முட்டியில் திடீரென்று வலி ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் வான்கடேவில் டிராவிட்டுடன் இணைந்து ஆடி வெற்றிபெற உறுதி புரிந்தார். அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முரளி கார்த்திக் அதற்கு பிறகு பந்து வீச இந்திய அணிக்கு தேர்வாகவேயில்லை.

முறிந்த முட்டி, முடிந்துவிடுமா கிரிக்கெட் வாழ்க்கை?:

முட்டியில் அறுவை சிகிச்சை செய்த பின்னர், சச்சின் ஐந்து மாதங்கள் வரை மட்டையை பிடிக்க முடியாது என்ற பொழுது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா இறைவனே என்று உள்ளுக்குள் புழுங்கியபடி பிளாஸ்டிக் மட்டையை கொண்டு வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த பந்தை அடித்து ஏக்கம் பொங்க காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து இலங்கை அணியுடனான போட்டியில் அடித்த முதல் இரு ரன்களையும் இரண்டு பவுண்டரிகளாக துவங்கிய போது மீண்டும் ஆடவாய்ப்பு கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னார் சச்சின். 93 ரன்கள் அடித்திருந்தார். அடுத்த டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் சாதனையை சச்சின் கடந்தார். அப்பொழுது பெரும்பாலும் வெற்றியை சத்தம் போட்டுக் கொண்டாடாத சச்சின் அதை செய்தார்.

மீண்டும் காயம் ஏற்பட்டு தோள்பட்டை காயத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டுவந்த பின்னர் 141 ரன்களை அடித்ததோடு காயம் பட்டு மீண்டவன் என்பதால் அவரிடம் தட்டிவிட்டு ரன் போவார்கள் என்று கணித்து ஒரு ரன் அவுட் எடுத்து தருகிறேன் என்று சொல்லி டாமியன் மார்ட்டினை அதேபோல அவுட்டாக்கவும் செய்தார்.
 

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

சே சேப்பல் : உலகக்கோப்பை வந்தது. சச்சினை மெதுவாக மற்றும் கீழாகவே பந்து வரப்போகும் மேற்கிந்திய தீவுகளில் மிடில் ஆர்டரில் இறங்கச்சொல்லி அணி கேட்டுக்கொண்டது. ஆனால், பந்துகள் எகிறி வந்தன. இரண்டுமுறை இன்சைட் எட்ஜ் ஆகி கேட்ச் மற்றும் போல்ட் ஆகி அணியின் தோல்விக்கு தானும் காரணமானார் சச்சின். சச்சின் மற்றும் இதர வீரர்களின் அர்ப்பணிப்பை கிரேக் சேப்பல் மற்றவர்களை போல மீடியா முன்னால் கேள்விக்கேட்க ஆரம்பித்தார். எண்டுல்கர் என்று இதழ்கள் தலைப்பு கொடுத்தன. வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஓபனிங் செய்ய வேண்டும் என்று சேப்பல் ஒருமுறை சொன்ன போது "அதை நான் ஆரம்பகாலத்தில் செய்து தோற்றுப்போனேன்" என்று அவர் மறுக்க "முப்பத்தி இரண்டு வயதுக்கு பின்னர் அணிக்குள் வருவது சுலபமில்லை" என்று அவருக்கு சேப்பல் எச்சரிக்கை தந்தார்.

கிரேக் சேப்பல் எல்லா மூத்த வீரர்களையும் மொத்தமாக பேக் செய்ய வாரியத்திடம் பேசியதோடு நில்லாமல் உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்னர் வீட்டுக்கு வந்து அணித்தலைவர் பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "வெற்றி பெற்றால் மீடியா முன்னர் தான் தோன்றுவதும், தோற்றுப்போனால் வீரர்களை அவமானப்படுத்துவதும் என்று செயல்பட்ட அவர் ரிங் மாஸ்டர் போலவே விளங்கினார், என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள் அவை" என்பது சச்சினின் குமுறல்.

கிரேக் சேப்பலின் சகோதரர் இயான் சேப்பல் சச்சினை சீக்கிரம் ஓய்வு பெறுக என்று நக்கலடித்து எழுதியதை இந்திய இதழ் ஒன்று தலைப்பு செய்தியாக்கியதை குறிப்பிட்டு இதே போல ஒரு இந்தியர் ஆஸ்திரேலிய வீரர் பற்றி எழுதினால் ஆஸ்திரேலிய இதழ்கள் வெளியிடுமா? என்று கேட்கிறார். கிரேக் சேப்பல் பற்றி வெகு காட்டமாக இயான் சேப்பலிடம் பேசியதோடு, "என் ஆட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை இயான்! எதையும் மாற்றிக்கொண்டும் நான் ஆடவில்லை. அப்படியே இருக்கிறேன்" என்று எகிறியபோது இயான் ஒருமாதிரி ஆகிப்போனாராம்.

நள்ளிரவில் வந்த ரகசிய அழைப்பு: அந்த உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் விவியன் ரிச்சர்ட்ஸ் நள்ளிரவில் சச்சினை அழைத்து, "சச்சின், நீங்கள் இன்னமும் வெகுகாலம் ஆடுவீர்கள். இன்னமும் கிரிக்கெட் உங்களிடம் பாக்கி இருக்கிறது. சோர்ந்து விடாதீர்கள்" என்று உற்சாகப்படுத்தியது திருப்புமுனையாக அமைந்தது. சைமன் டாஃபெல் இங்கிலாந்தில் சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டார். அவர் அதற்கு முன்னர் தன் கால்களை சில இன்ச் நகர்த்தி ஆடிய போது உங்களிடம் எதோ வித்தியாசமாக காண்கிறேன் என்று கச்சிதமாக சொல்கிற அளவுக்கு கூர்மையாக கவனிக்கிற திறன் கொண்டவராக இருந்தார் என்று பதிகிறார்.

ஜாகீர் அந்த தொடரில் பேட் செய்ய வந்தபோது யாரோ இங்கிலாந்து வீரர் ஜெல்லி பீன்ஸ்களை சிதறி இருக்கிறார். அதை வீசிவிட்டு மீண்டும் ஜாகீர் ஆடவந்த போதும் அவை மீண்டும் விழுந்து கிடந்தன. கெவின் பீட்டர்சனிடம் கத்திவிட்டு விறுவிறுப்பாக அந்த போட்டியில் பந்து வீசிய ஜாகீர்கான் இந்திய அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்கள் கைப்பற்றி வித்திட்டார்.

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

நிறவெறியைத் தூண்டவில்லை ஹர்பஜன்-சாட்சியான சச்சின்: மெல்பர்னில் நடந்த முதல் போட்டியில் சரியாக ஆடாமல் தோற்றாலும் அடுத்த போட்டிக்கு அணி தயாரானது. சைமண்ட்ஸ் மற்றும் ரிக்கி பாண்ட்டிங் தெளிவாக அவுட் ஆனபோதும் அந்த விக்கெட்களை நடுவர்கள் கொடுக்கவில்லை. அதிலும் சைமண்ட்ஸ் பேட்டில் பந்து பட்ட சத்தம் பார்வையாளர்கள் வரை கேட்டும் பக்னர் பாடம் செய்த மிருகம் போல நின்று கொண்டிருந்தார். இந்தியா ஆடியபோது ஹர்பஜன் அரைசதம் கடந்த பின்பு தொடர்ந்து சைமண்ட்ஸ் வம்புக்கு இழுத்தார். ஹர்பஜன் சைமண்ட்ஸ் தாயை இழுத்து திட்டுவதை ரொம்ப நேரம் கடுப்பேற்றிய பின்னர் செய்திருக்கிறார். சைமண்ட்சை குரங்கு என்று ஹர்பஜன் திட்டியதாக புகார் கொடுக்கப்பட்டது. அவருக்கு தடை விதிக்கப்பட்டதும் உடனிருந்த சச்சின் உட்பட அனைவரும் ஒட்டுமொத்த தொடரையே புறக்கணிப்பது என்று முடிவு செய்தார்கள். மீண்டும் அப்பீல் செய்து ஹர்பஜன் மீது தவறில்லை என்று சச்சினின் சாட்சியம் முடிவு செய்ய வைத்தது. நிறவெறியை தூண்டும் வகையில் ஹர்பஜன் பேசவில்லை என்பது சச்சினின் வாக்குமூலம். பந்து மட்டையை விட்டு வெகு தூரம் விலகியிருந்தும் டிராவிடுக்கு ஒரு அவுட் என்று பக்னரிடம் மற்றபடி நேர்மையானவர் என்று கருதப்பட்ட கில்கிறிஸ்ட் கேட்டார். "ஆடும் போது பந்து மட்டையில் பட்டு கேட்ச் ஆனால் போவது மட்டும்தான் நேர்மையா?" என்று சச்சின் கேள்வி கேட்கிறார். தோனிக்கு தவறான எல்பிடபிள்யூ வேறு பக்னர் கொடுத்தார். தரையில் தட்டி பிடித்த பந்துக்கு கேட்ச் வேறு கொடுத்து காமெடி செய்தார் இன்னொரு நடுவர் பென்சன். அணி தோற்றது.

பெர்த் போட்டி WACA எனும் சீறிவரும் களத்தில் நடைபெற்றது. டிராவிட், சச்சின் அரைசதம் அடிக்க இஷாந்த் ஓயாமல் பந்து வீசி விக்கெட்கள் கழற்ற அணி வென்றது. இறுதி டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் ஆடுவதற்கு முன்னர் ஷார்ட் பிட்ச் த்ரோக்களை கேரி சச்சினுக்கு வீச அதைக்கொண்டு பயிற்சி செய்தார். அதே போல பிரட் லீயை எதிர்கொள்ள ஃபுல்லாக, வேகமாக பந்து வீசச்சொல்லியும் பிசி செய்தார். 153 ரன்களை சச்சின் அடித்தார். போட்டி டிரா ஆனது.

புலியை பிடித்து முடித்துவிட்டே போவோம்: காமன்வெல்த் வங்கி தொடரான அதில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவோடு இணைந்து கொண்டது. 159 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்ட பின்னர் இந்தியா ஆடவந்த போது, "நான் இன்று நன்றாக உணர்கிறேன். உங்களுக்கு வேகமாக பந்து வீசப்போகிறேன்" என்று லீ, சச்சினிடம் சொன்னார். முழு வேகத்தில் வீசப்பட்ட பந்தை நேராக பவுண்டரிக்கு STRAIGHT DRIVE இல் சச்சின் அடித்தார். ஐந்தாவது பந்தையும் அதே வீரியத்தோடு அடித்து விளாசினார். அடுத்த போட்டியில் இலங்கையை வீழ்த்திய பின்னர் மூன்று இறுதிப்போட்டிகளில் பங்குகொள்ள தயாரானபோது பாண்டிங் இப்படி பேட்டி கொடுத்தார், "இரண்டே இரண்டு இறுதிப்போட்டிகள் தான் நடக்கும்!"

239 ரன்களை உத்தப்பா, ரோஹித், டோனி ஆகியோருடன் இணைந்து ஆடி சேஸ் செய்த சச்சின் தன்னை நோக்கி அதிபயங்கர வேகத்தில் ஹெல்மெட்டில் படுமாறு வந்த பந்தை லீ வீசியதும் அவரிடம் நகைச்சுவையாக, "எனக்கு ஏதேனும் ஆனால் என் மகன் அர்ஜூனுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்" என்றாராம். லீ, அர்ஜூன் இருவரும் நண்பர்கள்.

வயிறு தொடை சேருமிடத்தில் வலி உயிரை எடுக்க தோனி, சச்சினை ஓய்வெடுக்க சொன்னார். மூன்றாவது இறுதிப்போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என்பது அவரின் பார்வை இல்லை. "புலியை வேட்டையாடுவது என்று வந்துவிட்டால் அது வெளியே வந்திருக்கும் பொழுதே கொன்றுவிட வேண்டும்" என்றுவிட்டு களம் புகுந்தார் சச்சின். 91 ரன்கள் அடித்து அணியின் 258 ஸ்கோருக்கு வழிவகுத்தார். பிரவீன் குமார், ஹர்பஜன் அழகாக பந்துவீசி விக்கெட்டுகள் அள்ள அணி ரிக்கி சொன்னது போலவே இரண்டாவது இறுதிப்போட்டியோடு வேலைகளை முடித்தது. வயிறும், தொடையும் சேரும் இடத்தில் வலி பின்ன GILMORE’S GROIN என்கிற சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. மூன்று வாரங்கள் பிள்ளைகளை கட்டிப்பிடிக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டாலும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டும் என்று மட்டுமே மனதில் ஓடியது.

அந்த தொடரோடு ஓய்வு என்று சொன்ன கங்குலி மொஹாலி போட்டியில் சதமடித்தார். கங்குலி எப்பொழுதெல்லாம் டென்சனாக இருந்தாரோ அப்பொழுது எல்லாம் சச்சின் வங்க மொழியில் எதையாவது பிதற்றி அவரை சிரிக்க வைப்பதை செய்வாராம். அந்த கங்குலி சதமடித்த மொகாலி போட்டியை 320 ரன்கள் வித்தியாசத்தில் அணி வென்றது. டெல்லி போட்டியில் கம்பீர், லக்ஷ்மண் இரட்டை சதமடிக்க போட்டி டிரா ஆனது. அந்தப் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டு கும்ப்ளே பதினொரு தையல்கள் போட்டுக்கொண்டதும் "நூறு சதவிகிதம் தரமுடியாத நான் அணியில் இருக்ககூடாது" என்று சொல்லி ஓய்வு பெற்றார். இறுதிப் போட்டியைக் காண கும்ப்ளே வரவேண்டும் என்று சச்சின் உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டனர். சச்சின் இறுதி டெஸ்டில் கொஞ்சம் அதிர்ஷ்டத்தோடு சதமடிக்க 8-1 என்று பீல்டிங்கை ஆஸ்திரேலிய அணிக்கு செட் செய்ய அறிவுரை வழங்கி விக்கெட்டுகள் கைப்பற்ற வழிவகுத்து தந்திருக்கிறார் சச்சின். கேரி கும்ப்ளே மற்றும் கங்குலிக்கு பிரிவு விழாவை சிறப்பாக செய்த அந்நாளில் அஞ்சலியின் 40வது பிறந்தநாள் என்றாலும் அன்போடு சகாக்களை அனுப்பி வைத்தார்.

மூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்! (சச்சின் சுயசரிதை பாகம் -3)

ஐ.பி.எல். அனுபவங்கள்: ஐ.பி.எல். ஆரம்பித்தபோது அது ஹிட்டாகும் என்று தெரிந்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் இப்படி பரவும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அதன் தரமும் இத்தனை உச்சமாக இருக்கும் என்று நம்பவில்லை என்றும் ஒத்துக்கொள்கிறார். வாஸ்துவுக்காக எதிரணி வீரர்களின் அறையில் எல்லா பொருள்களும் குறிப்பிட்ட மாதிரி இருத்தல், நம்பிக்கையால் தங்கள் பாத்ரூமை எதிரணி பயன்படுத்த விடாமல் தடுக்க, ’பாத்ரூம் அவுட் ஆப் ஆர்டர்’ என்று எழுதி ஏமாற்றலை மீறியும் அதைப் பயன்படுத்தியது என்று எக்கச்சக்க வேடிக்கைகளை பகிர்ந்து கொள்கிறார். இந்திய இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்கள் அறிவுரை வழங்க இதுவொரு களம் என்கிற அதேசமயம் ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்கு மட்டுமே இதிலிருந்து ஆட்களை எடுப்பது உசிதம் என்றும், ரஞ்சி, துலீப், இரானி போட்டிகளில் இருந்தே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான ஆட்களை எடுக்க வேண்டும் என்பது சச்சினின் பார்வை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட இறுதிப்போட்டியில் கையில் பதினொரு தையல்களோடு களம் புகுந்து நன்றாக ஆரம்பத்தில் ஆடியும் தோற்றுப்போனதை வருத்தத்தோடு பதிவு செய்வதோடு பொல்லார்டை தாமதமாக களமிறக்கியது தன்னுடைய தவறே என்று ஒத்துக்கொள்கிறார். 2013 ஏப்ரல் ஐ.பி.எல்-லின் போது கையில் நீர் கோர்த்துக் கொண்டதோடு, குதிகாலிலும் காயம் ஏற்பட இறுதி ஐ.பி.எல் போட்டியில் சிக்சர் அடித்த சந்தோசம் மற்றும் அணி கோப்பை வெல்வதை பார்த்துக்கொண்டு ஓய்வு பெற்று வெளியேறினார்.

டெஸ்டில் முதலிடம்: மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த டெஸ்ட் போட்டியில் சென்னையில் 387 ரன்கள் துரத்தி எடுக்க வேண்டிய சூழலில் சேவாக் அடித்து ஆரம்பித்து வைக்க, சச்சின் ஒருபுறம் சிறப்பாக ஆடினார். இன்னொரு பக்கம் யுவராஜ் மான்டி பனேசர் பந்தை சற்றே தூக்கி அடிக்க முயல, "சென்னையில் இப்படித்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தூக்கி அடித்து தோல்வியை சுவைத்தேன். பொறுமை" என்று சொல்லி ஆடவைத்து இருவரும் சேர்ந்து வெற்றியை பெற்று மும்பை தாக்குதலில் இறந்த சகோதரர்களுக்கு சமர்ப்பணம் செய்தார். நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் 163 ரன்களை அடித்திருந்த நிலையில் வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டு சச்சின் ஆடமுடியாமல் போனது. அப்படியே retired hurt ஆகி வெளியேறிய அவரிடம், "நீங்கள் ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்திருக்கலாமே பாஜி?" என்று கேட்க, "பந்தையே பார்க்க முடியவில்லை, என்ன செய்யட்டும். இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்" என்று சச்சின் சொல்ல, "இன்று அடித்து, இன்னொருமுறை அடித்தால் இரண்டு இரட்டை சதங்கள் சேர்ந்திருக்கும்" என்றுவிட்டு சேவாக் நடையை கட்டினார். நியூசிலாந்து தொடரில் பத்தரை மணிநேரம் கேரி கிறிஸ்டன் ஊக்கத்தோடு போராடி ஆடி டிரா செய்ய வைத்த கம்பீரை புகழ்வதோடு, ஜாகீர்கான் ஒரு கேட்ச் அவர் பக்கம் வந்ததும், "யாரும் வரக்கூடாது. என் கேட்ச் அது" என்றுவிட்டு பந்தை பிடிக்கப்போக காற்று வேகமாக வீசி பந்தை ஒரு பதினைந்து அடி தள்ளிக்கொண்டு போய்விட்டதாம். "பந்து அகப்பட்டுச்சா ஜாக்?" என்று கிண்டலடித்தார்களாம்.

அமிதாப் பச்சனுடன் விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த போது சிறுவனான அர்ஜூன் சாப்பிட்டுவிட்டு அமிதாபின் உடையில் சாப்பிட்ட கையை துடைத்தபோது அவர் பெருந்தன்மையாக எதுவும் சொல்லவில்லையாம். இருபது வருடங்கள் கிரிக்கெட்டில் தொட்ட நாளன்று அஞ்சலி தனி ஜெட்டில் ஏறிவந்து சச்சினை தோனி முன் சந்தித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

760 ரன்களை அடித்துவிட்டு இந்திய அணியை டிரா நோக்கி இலங்கை நகர்த்திய போது சச்சின் போராடிக்கொண்டிருக்க, "இப்படி ஆடி சதமடிக்க வேண்டுமா? முடிவு வரப்போவதில்லையே சச்சின். ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாமா" என்று சங்ககாரா கேட்க, பொறுமையாக 7-2 என்று செட் செய்யப்பட்ட பீல்டிங்கில் சிறப்பாக ஆடி சதமடித்த பின்னர், "இப்பொழுது என்ன செய்யலாம்? ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாமா?" என்று சச்சின் திருப்பிக் கேட்டார். இதே போல ஒரு தருணம், ஒருநாள் போட்டியில் 96 ரன்களோடு சச்சின் எதிர்முனையில் இருந்தபோது தினேஷ் கார்த்திக்கின் மீது அழுத்தம் உண்டாக்கி சேஸ் செய்ய விடாமல் தடுக்கப் பார்க்க, "நீ அடித்து ஜெயிக்க வை! சதம் கிடக்கிறது!" என்று சொல்ல அப்படியே செய்து வெற்றியை பெற்றுத் தந்தார் தினேஷ். சேவாக் சதமடிக்க கூடாது என்று நோபாலை ரண்டீவ் வீசிய கதையையும் இணைத்து சச்சின் பதிவு செய்கிறார்.

இலங்கையுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் சேவாக் 293 ரன்கள் அடித்து கலக்க, 99 ரன்களில் பாய்ந்து ஏஞ்சலோ மாத்தீவ்சை ரன் அவுட்டாக்கிய பின்னர், இருபது வருடங்களுக்கு பிறகும் இந்த வயதான மனிதன் பீல்டிங் செய்வேன் என்று சச்சின் ஜோக்கடித்தார். அந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு டெஸ்ட் முதலிடம் மற்றும் சச்சினுக்கு இருபதாண்டு காலத்தின் மறக்க முடியாத பரிசு இரண்டையும் இணைத்து தந்தது.

தொடரும்...

- பூ.கொ.சரவணன்

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு குடித்த சச்சின்! (சுயசரிதை பாகம்-2)

சைக்கிள் கேட்டு கதவில் தலையைவிட்ட சச்சின்! (சுயசரிதை பாகம்-1)
 

அடுத்த கட்டுரைக்கு