Published:Updated:

ஹாய் மதன் கேள்வி-பதில்

சிந்திப்பது குற்றமா?!

##~##
எஸ்.பாரூக், அதிராம்பட்டினம்.

எந்த நாடு முதலில் காகித நாணயம் (Currency) வெளியிட்டது. இதற்கு Currency என்று எப்படிப் பெயர் வந்தது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கி.பி. 650-ல் சீனாவில், மன்னர் யூங்ஹ்யூதான் முதன்முதலில் பேப்பர் கரன்ஸியை வெளியிட்டார். அதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பே 'செக்’ வந்துவிட்டது. அதாவது, பிராமிஸரி நோட்!

கி.மு. 640-ல் விடியா என்கிற (இன்றைய துருக்கி) நாட்டில்தான் முதல் வட்டமான நாணயத்தை அரசு வெளியிட்டது. இன்றைய 'செக்’ முதன்முதலில் கி.பி. 1659-ல் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டது. முதல் கிரெடிட் கார்டு 1950-ல். இப்போது நம்பர்களுக்குப் பக்கத்தில் எவ்வளவு சைபர் போட்டாலும் போதாமல், பேராசை பிடித்து அலைந்துகொண்டு இருக்கிறோம்! (பை தி வே, 'கர்’ என்றால், லத்தீனில் ஓடுவது - Running! பணம் கை மாறி மாறி ஓடிக்கொண்டே இருக்கிறது அல்லவா?!)

இரா.முத்துஅபிசேகம், நாலாட்டின்புதூர்.

'ரீ-மிக்ஸ்’ என்ற பெயரில், பழைய நல்ல பாடல் களைப் படுத்தி எடுக்கிறார்களே... அவர்களால் புதிய பாடல்களைப் பழைய ரேஞ்சுக்கு ரீ-மிக்ஸ் பண்ண முடியுமா?

'புதிய பாடலை பழைய ரேஞ்சுக்கு’ என்றால் என்ன? எனக்குப் புரியவில்லை. ஆனால், ரீ-மிக்ஸுக்கு நான் எதிரி. 'பாசமலர்’ படத்தில் வரும் 'மலர்ந்தும் மலராத’ பாடலை ரீ-மிக்ஸ் செய்தால் என்ன ஆகும்? கோயில்களை இடித்து மாடர்ன் ஆக மாற்றுவது நியாயமா? கிளாஸிக் பாடல்களை ரீ-மிக்ஸ் என்கிற பெயரில் இப்படிக் கையாள்வது, வீட்டில் இருக்கும் நம் பாட்டிக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் மாட்டிவிடுவது போல!

சீனாவில் ஊழல் செய்தவருக்கு மரண தண்டனை என்று ஒரு செய்தி படித்தேன். அப்படி ஒரு நிலையை இந்தியாவில் கொண்டுவர முடியுமா?

நம் நாட்டில் ஊழலைச் செய்பவர்கள் யார்? அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள்தான். ஆகவே, கொண்டுவர முடியாது! அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளச் சொல்கிறீர்களா?!

ஜீ.மாரியப்பன், சின்னமனூர்.

பேசாமல்... மௌனமாக இருப்பது ஒரு தவறாங்க? 'அமுக்கன்’ என என் காதுபடவே பேசுகின்றனரே?

நீங்கள் ஆபத்தானவர். மௌனமாக இருப்பதால், உங்கள் மனசில் என்ன நினைக் கிறீர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மற்றவர்கள் 'டிஸ்டர்ப்’ ஆகிறார்கள். அவர்களுக்குக் கோபம் வருகிறது. உங்கள் காதுபடவே 'அமுக்கன்’ என்று பேசுகிறார்கள் என்றால், காது படாமல் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று யோசித்துப்பாருங்கள். இத்தாலியப் புரட்சியாளர் மாஜினியை அரசாங் கம் கைது செய்தது. அவர்கள் சொன்ன காரணம், 'மாஜினி தோட்டத்தில் (அமுக்கமாக!) சிந்தித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார். என்ன சிந்திக்கிறார்கள் என்பதுபற்றி அரசுக்குத் தெரியாமல் ஓர் இளைஞர் மௌன மாக நடமாடுவது தவறு!’ மாரியப்பன், ஏதாவது பேசிவிடுங்கள்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

துண்டில் உள்ள கரைக்கும் வேட்டியில் உள்ள கரைக்கும் வித்தியாசம் என்ன?

நடந்து போகும்போது, 'ஓ! இவர் இந்தக் கட்சிக்காரரா?!’ என்று வேட்டியின் கரையைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியும். அதுவே, அவர் ஏதாவது வாகனத்தில் போகும்போது எந்தக் கட்சி என்று எப்படிக் கண்டுபிடிப்பது? காலைத் தூக்கிக் காட்டிக்கொண்டே தலைவர் போக முடியாது இல்லையா? ஆகவே, துண்டில் கரை! எனக்கென்னவோ, சிறைச்சாலைகளில்கூட யூனிஃபார்மில் கரையைக் கொண்டுவரலாமோ என்று தோன்றுகிறது. யார் யாரெல்லாம் என்ன கட்சி என்று பார்த்த உடனே தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்!

ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்.

உலகில் மனிதர்கள் மட்டுமே இருந்தால் போதாதா? எதற்காக விலங்குகள், பறவைகள் மற்ற உயிரினங்களை எல்லாம் இறைவன் படைத்தான்?

ஹாய் மதன் கேள்வி-பதில்

தப்புதான். எல்லாவற்றையும் படைத்த பிறகு, மனித இனத்தைப் படைத்ததைச் சொல்கிறேன். பூமியின் வரலாற்றில், மனித இனத்தின் பங்கு 0.0001 மட்டுமே. பெரும்பான்மையான மற்ற உயிரினங்கள், பல கோடி வருஷங்களாக இங்கே இருந்து வருகின்றன. 'நேற்றைக்கு வந்த’ மனிதன் மட்டுமே 90 சதவிகித (மற்ற) உயிரினங் களை இதுவரை அழித்துவிட்டான். மனிதன் அழித்த உயிரினங்களைப்பற்றி தடிமனான, டிக்ஷனரி போன்ற புத்தகங்கள் உண்டு. யார் இவனுக்கு அந்த உரிமையைத் தந்தது? ஒரு படத்தில் வேற்றுக் கிரகவாசி ஒருவர் பூமிக்கு வருவார். எதேச்சையாக ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது சொல்வார், 'பல்லாயிரக்கணக் கான கிரகங்கள் என்கிற குடும்பத்தில் பூமியும் ஓர் உறுப்பினர் என்பது உங்களுக்குத் தெரியாது. ரொம்ப காலமாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். மனிதர்கள் இங்கே பண்ணும் அட்டகாசம் தாங்கவில்லை. மனிதர்களிடம் இருந்து பூமியைக் காப்பாற்ற ஒரே வழி, மனித இனத்தை அழிப்பதுதான் என்று எல்லா கிரகவாசிகளும் முடிவெடுத்தாகிவிட்டது. சில விநாடிகளில் உலக மக்கள் அத்தனை பேரையும் பொசுங்கவைக்கும் சக்தி வாய்ந்த கருவிகள் எங்களிடம் உண்டு. பூமிக்கு நீங்கள் தேவையே இல்லாத ஓர் ஆபத்தான உயிரினம்’ - organism.  மற்ற இனங்களை ஏன் இறைவன் படைத்தானாவது?

ரேவதி ப்ரியன், ஈரோடு-1.

ஊழல் என்பதை எந்த அரசாங்கம் வந்தாலும் ஒழிக்க முடியாது என்பது உண்மைதானே?

ஹாய் மதன் கேள்வி-பதில்

இப்போது ஊழல் செய்யாமல் முதலில் ஓர் அரசை உருவாக்கவே முடியாது என்பதுதான் நிலைமை. ஊழல்தான் அவர்களுக்கு 'ஆக்ஸிஜன்’! அப்படி இருக்க, பிறகு ஊழலை அழித்து, கூடவே தன்னைத்தானே எந்த அரசு அழித்துக்கொள்ளும்? ஆகவே, மக்கள்தான் விஷ்ணு அவதாரம்போல எடுத்து, விடாக்கண்டர்களாக ஊழல் ஆட்சிகளை அழித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் (ஓரளவாவது!) நேர்மையான ஆட்சி வரும் வரை விடக்கூடாது. வேறு வழி இல்லை!

ஆ.சுரேஷ், துறையூர்.

உங்கள் தாடிக்குக் காரணம் காதல் தோல்வியா?

ஒட்ட ஷேவ் பண்ணிக்கொண்டு இருக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டு, சரி... தாடியாவது வைத்துக்கொண்டு பார்க்கலாம் என்று நான் முடிவு கட்டியிருக்கலாம் இல்லையா?!