Published:Updated:

மூங்கில் மூச்சு!

சுகா, படங்கள் : எல்.ராஜேந்திரன்

 ##~##
ஷா
ஃப்டர் பள்ளியில் படிக்கும்போது பத்தாம் வகுப்பு வரைக்கும் அரை டிராயர்தான். வெள்ளை அரைக்கை சட்டையும் நீல கலர் டிராயரும்தான் யூனிஃபார்ம். உருவத்தில் கொஞ்சம் பெரிதாகத் தெரியும் (அல்லது அப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்) பையன்கள், வீட்டில் இருந்து வரும்போது வேட்டியோ, சாரமோ உடுத்தி வருவார்கள், உள்ளுக்குள் யூனிஃபார்ம் டிராயர் போட்டு இருப்பார்கள். நிற்க. திருநெல்வேலிக்காரர்கள் கைலி, லுங்கி என்று சொல்வது இல்லை. சாரம் என்றுதான் சொல்லுவார்கள். இலங்கைக்காரர்களுக்கும் சாரம்தான். ஷாஃப்டர் பள்ளிக்கு அருகில் உள்ள முனிசிபல் பார்க்தான் இந்தப் பெரிய சைஸ் மாணவர்கள் உடை மாற்றும் இடம். பள்ளி முடிந்த பிறகு அங்கு சென்று, ஸ்டைலாக வேட்டியோ, சாரமோ உடுத்தி பெரிய மனுஷனாக வீட்டுக் குத் திரும்புவார்கள். முனிசிபல் பார்க்கில் அமர்ந்த நிலையில் புத்தகம் படித்துக்கொண்டு இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலை, இந்த மேற்படிக் கூத்துகளுக்கு மௌன சாட்சி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மூங்கில் மூச்சு!

எங்கள் வீடுகளில் இதுபோன்ற படுக்காளித்தனத்துக்கு அனுமதி இல்லை. 'எல, தடிமாடு மாதிரி இருக்கற பயலுவ சாரம் கட்டலாம். நீங்க இன்னும் பால் குடி மறக்காத பிள்ளையளால்லதான இருக்கிய!’ உண்மைதான். நானும் நண்பன் குஞ்சுவும் சின்னப் பையன்களாகவே அப்போது காட்சியளித்ததால், அரை டிராயரிலேயேதான் பள்ளிக்குச் சென்று வந்தோம். சாரம் உடுத்தும் பையன்களைப் பார்த்து 'எங்களுக்கும் காலம் வரும்ல’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வோம்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிந்தவுடன், டிராயருக்கு விடை கொடுத்து சாரத்துக்கு மாறிவிடுவது என்ற முடிவை ஏழாம் கிளாஸிலேயே எடுத்துவிட்டோம். பத்தாம் வகுப்பு கடைசிப் பரீட்சை முடிந்த அன்று, எங்கள் வாழ்க்கையின் அடுத்த கூட்டத்துக்கு நாங்களாகவே நகர்ந்து சென்று சாரம் உடுத்தி மகிழ்ந்தோம். எங்காவது கிளம்புவதாக இருந்தால், 'வீட்டுக்குப் போயி சட்டைய மாத்திட்டு வந்திருதேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக, 'வீட்டுக்குப் போயி சாரத்த மாத்திட்டு வந்திருதேன்’ என்போம். சாரம் கட்ட ஆரம்பித்த புதிதில், ஒரு நாளைக்கு நான்கைந்து சாரம் எல்லாம் மாற்றி இருக்கிறோம்.

பார்வதி தியேட்டரில் 'மேரி அதாலத்’ பார்க்கக் கிளம்பும்போது, 'இப்பல்லாம் நாம பெரிய மனுசனாயாச்சு. சாரம் கட்டிட்டுப் போனாதான் மரியாதை’ என்று குஞ்சு சொல்லிவிட்டான். தியேட்டருக்குச் செல்லும் வழியில் வடிவு முடுக்குத் தெருவில் எங்களைவிட உயரமாக இருந்த சாரத்தினால், கால் தடுக்கிக் குப்புற விழுந்ததில் எனக்கு மேல் உதட்டில் அடிபட்டு வீங்கிவிட்டது. 'அதெல்லாம் பளகப் பளகச் சரியாயிரும்’ என்று சமாதானம் சொன்ன குஞ்சுவுக்கு, முன் பல் பாதி உடைந்தேவிட்டது.

வழக்கத்துக்கு மாறாக தரை டிக்கெட் எடுத்தான் குஞ்சு. 'எல, எப்பவும்போல சோஃபா எடுக்க வேண்டியதுதானே?’ என்று கேட்டேன். 'கோட்டிக்காரப் பயலெ, சாரம் கட்டிட்டுத் தரைக்குத்தான்ல போகணும். அப்பத்தானெ சோஃபால உக்கார்ந்திருக்கிற பொம்பளப் பிள்ளங்கள்லாம் நம்மளப் பாப்பாங்க’ என்று விளக்கம் சொன்னான்.

அப்போதெல்லாம் விதம்விதமாக சாரம் கட்டுபவர்களை ஏக்கத்துடன் பார்ப்போம். டி.ராஜேந்தரின் 'வசந்த அழைப்புகள்’ படத்தில் நடிகர் ரவீந்தர் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வண்ணத்தில் சாரம் உடுத்தி வருவார். அந்தப் படத்தில் வேறு எதுவுமே எங்கள் மனதைக் கவரவில்லை. ரவீந்தரின் டிசைன் டிசனான சாரங்கள் அவர் மீது கடுமையான கோபத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தின.

ஒரு மாலையில் குஞ்சு வீட்டுத் தட்டட்டியில் (மொட்டை மாடி) மல்லாக்கப் படுத்தபடி எங்களின் எதிர்காலத் திட்டத்தைப்பற்றிப் பேசிக்கொண்டோம். 'பெரிய ஆளாகி நெறைய ரூவா சம்பாதிச்சு, சாரமா எடுக்கணும்ல. கொறஞ்சது நூறு சாரமாது சேக்கணும்!’

எங்களின் கிளாஸ்மேட் சரவணன் ஒருநாள் புத்தம்புது பாலியெஸ்டர் சாரம் கட்டிக்கொண்டு வந்துவிட்டான். வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தோம். 'என்னலெ? பேய் முளி முளிக்கியெ?’ என சரவணன் கேட்டதற்குப் பதிலே சொல்லாமல், பெருமூச்சுவிட்டபடி அவனது சாரத்தைத் தொட்டுப் பார்த்தோம். 'எங்கெ மக்கா எடுத்தே?’ நாங்கள் கேட்டதைப் பொருட்படுத்தாமல் சரவணன் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தான். 'புது சாரம். அதுவும் பாலீஸ்டர். அயன் பண்ணி வேற கட்டியிருக்கான். அப்பொறம் நம்மள அவன் எப்படில மதிப்பான்?’ அடக்க முடியாத கோபத்துடன் கம்மிய குரலில் குஞ்சு சொன்னான்.

ஏதோ அந்த வயதுக்குரிய ஆர்வக்கோளாறில் நாங்கள் இப்படி சாரம் உடுத்திக்கொண்டு திரிந்ததை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் இருந்த எங்கள் இருவர் வீட்டுப் பெரியவர்களும், ஒரு கட்டத்துக்கு மேல் சாரத்துக்குத் தடை விதித்துவிட்டனர். நாங்கள் சாரத்தில் இருந்து வேட்டிக்கு மாறினோம். சாரம் போல தைக்கப்படாமல் இரண்டு பிரிவாக இருக்கும் வேட்டி, எங்களை அநியாயத் துக்குக் கஷ்டப்படுத்தியது. அதுவும் வேட்டி கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுபோல அபாயகரமான செயல் வேறு எதுவும் இல்லை. வேட்டி கட்டிக்கொண்டு அநாயாசமாக சைக்கிள் ஓட்டுபவர்களை ஏதோ மரணக் கிணறு மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீரர்களைப் பார்ப்பதுபோல் பார்ப்போம்.

மூங்கில் மூச்சு!

ஒருமுறை நாமும்தான் முயன்று பார்ப்போமே என்று வேட்டியுடன்நானும் குஞ்சுவும் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். உடன் கூச்ச சுபாவியான மற்றொரு நண்பன் ராமசுப்ரமணியமும் சேர்ந்துகொண்டான். ஸ்ரீபுரம் பஸ்ஸ்டாப் அருகே ராமசுப்ரமணியத்தின் சைக்கிளும் குஞ்சுவின் சைக்கிளும் இடித்துக்கொள்ள, இருவருமே சரிந்து ரோட்டில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்த பதற்றத்தில் ஒழுங்காக இருந்த வேட்டியை அவிழ்த்து நான் கட்டிக்கொண்டு இருந்தேன். கீழே விழுந்துகிடந்த ராமசுப்ரமணியத்தின் முகத்தை அவனது வேட்டி மூடி இருந்தது. எதுவுமே நடக்காத மாதிரி குஞ்சு நிதானமாக தனது வேட்டியை அவிழ்த்து உதறி, பப்பரப்பே எனக் கட்டிக்கொண்டு இருந்தான். ஜன நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் தான் அவமானப்பட்டதைவிடவும் குஞ்சுவின் இந்த கூச்சநாச்சம் இல்லாத செயல், ராமசுப்ரமணியன் எங்கள் நட்பை விலக்கிக்கொள்ளக் காரணமாக அமைந்துவிட்டது.

இப்படியாக வேட்டி நீண்ட காலம் எங்களுக்குக் கட்டுப்படாமல் அலைக்கழித்துக்கொண்டு இருந்தது. லாலா சத்திர முக்கில் வைத்து எங்கள் இருவரையும் வேட்டியில் பார்த்த கணேசண்ணன், 'ஏ, என்னடே? ரெண்டு பேரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி மாதிரி எங்கே கௌம்பிட்டியெ?’ என்று ஒருநாள் சத்தமாகச் சிரித்தபடி கேட்டுவிட்டான். அன்றைக்கே வேட்டியைச் சாரம்போல குறுக்கே இணைத்துத் தைத்துவிட்டோம். பிறகு, கொஞ்ச நாட்களுக்குத் தைரியமாக அதை உடுத்திக்கொண்டு அலைந்தோம். காலப்போக்கில் வேட்டி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியது. விசேஷ நாட்களில் நெல்லையப்பர் கோயிலுக்குப் போகும்போது மட்டும் அல்லாமல், மற்ற நாட்களிலும் இயல்பாக வேட்டி உடுத்தத் தொடங்கினோம்.

சென்னைக்கு வந்த பிறகு கொஞ்ச நாட்கள் வேட்டியை வெளியே எடுக்காமல் பீரோவிலேயே வைத்திருந்தேன். 'சினிமாவில் இருந்துகொண்டு வேட்டி கட்டுவதாவது?’ என்ற எனது தயக்கத்தைப் போக்கியவர் அறிவுமதி அண்ணன். அண்ணன் அடிக்கடி வேட்டி கட்டிக்கொண்டு வருவார். அதுவும் பொது நிகழ்ச்சிகளுக்கு அவர் வேட்டியில் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், அண்ணன் தந்த தைரியத்தில் நானும் சென்னையில் வேட்டி உடுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வந்தது. 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களுக்கு வேட்டி என்றால் கொள்ளைப் பிரியம். வேட்டி கட்டியிருப்பவர்களைச் சந்தோஷமாகப் பார்ப்பார். நான் வேட்டியுடன் சென்றுவிட்டால் 'என்னடா? வேட்டில வந்துட்டே?’ - குரலிலேயே மகிழ்ச்சி பொங்கும். அவரைப் பொறுத்தவரை வேட்டியுடன் ஒரு மனிதன் அவரைப் பார்க்கச் சென்றுவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு 50 மார்க் போட்டுவிடுவார். அவருக்கும் வேட்டி கட்ட வேண்டும் என்று ஆசைதான். ஆனால், அவரது டிரேட் மார்க் தொப்பி அணிந்துகொண்டு வேட்டி கட்டினால் அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால், வேட்டி கட்டிக்கொள்ளும் எங்களை உற்சாகப்படுத்துவார்.

மூங்கில் மூச்சு!

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சம்பவம் இது. 'சதிலீலாவதி’ படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. பரபரப்பாக நாங்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தோம். ஹோட்டல் மேலாளர் மெதுவாக வந்து 'நாயர்’ ராமன் சாரைக் காண்பித்து, எங்களிடம் ஒரு கட்டளையைப் பிறப்பித்தார். எங்கள் குழுவில் 'நாயர்’ ராமன் சார் எப்போதும் வேட்டியில் இருப்பார். வேட்டி அணிந்தபடி ஹோட்டலுக்குள் யாரும் நுழையக் கூடாதாம். இப்படி அந்த மேலாளர் சொன்னதுதான் தாமதம். கடுமையான கோபத்துடன் நாங்கள் சண்டையிட ஆரம்பித்தோம். எங்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு 'நாயர்’ ராமன் சார் அந்த மேலாளரிடம் சொன்னார், 'ஸாரி சார். பசங்க கொஞ்சம் கோபமா பேசிட்டாங்க. ஒங்க எடத்துல ஒங்க ரூல்ஸ மதிக்கறதுதான் முறை’ என்று சொல்லியபடியே வேட்டியை அவிழ்த்து மடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலாளர் உச்சகட்ட அதிர்ச்சியில் ஓடியே போனார். அதற்குப் பிறகு, அந்த ஹோட்டலில் ஷூட்டிங் நடந்த மற்ற நாட்களிலும் 'நாயர்’ ராமன் வேட்டியிலேயேதான் வலம் வந்தார்.

வீட்டில் இருக்கும்போதும், சாலிகிராமத்துக்குள் நடமாடும்போதும் முன்பு எல்லாம் சாய வேட்டிகள் உடுத்திக்கொண்டு இருந்தேன். சாய வேட்டி என்றால், காவி வேட்டி அல்ல. மங்கிய பச்சை மற்றும் சாம்பல் வண்ண வேட்டிகள். சமீபகாலமாக அவற்றை உடுத்துவது இல்லை. காரணம், எப்போது, எங்கே போனாலும் நேரம் காலமே இல்லாமல், என்னைப் பார்த்து, 'சாமி சரணம்’ என்று வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். சாலிகிராமத்தில் உள்ள காய்கனி அங்காடியில் ஒருமுறை நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இப்படி 'சாமி சரணம்’ என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதிர்ச்சியில் கையில் இருந்த பப்பாளிப் பழத்தைக் கீழே போட்டுவிட்டேன்.

என்னவோ உடையே இல்லாமல் பார்த்தது போல 'என்ன சார்? வேட்டி கட்டியிருக்கீங்க?’ என்று ஆச்சர்யமுடன் கேட்கப்படும் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். தமிழ் தமிழ் என்று முழங்கும் நண்பர்களும் இப்படிக் கேட்பதுதான் வேதனையான ஒன்று. கேட்டால் 'உடைக்கும், மொழிக்கும் சம்பந்தம் இல்லை’ என்பார்கள். 'அப்புறம் வேறு எதற்கும் மொழிக்கும்தான் சம்பந்தம்?’ என்று கேட்பேன். சிரித்து மழுப்புவார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே அடிக்கடி வேட்டி உடுத்துகிறார்கள். மற்ற நடிகர்களும் உடுத்துகிறார்கள்தான். சினிமாவில். சமீபத்தில், ஒரு பழைய கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைப் பார்த்தேன். தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அந்தக் கால நடிகர்கள் அனைவரும் குழுமி இருக்கும் புகைப்படம் அது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், முத்துராமன் என அனைவருமே வேட்டி சட்டையில் இயல் பாக இருந்தார்கள். இப்போது இயக்கும் திரைப் படக் கலைஞர்களில் வேட்டி உடுத்துபவர்களாக சட்டென்று நினைவுக்கு வருபவர்கள், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி மற்றும் இளையராஜா அவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வேட்டி கட்டுவது என்பது என்னவோ, பழைய காலத்து ஆட்களின் பழக்கம் என்பதுபோல் கருதப்படுகிறது. 'எங்க கௌதமுக்கு வேட்டியே கட்டத் தெரியாது. அவன் மேரேஜுக்குக்கூட கட்டலேன்னா பாத்துக்குங்களேன்!’- பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

மூங்கில் மூச்சு!

'உடைந்த மலர்களிலிருந்து
வெளியேறும் வண்ணத்துப்பூச்சிகள்
உணவுக்கு என்ன செய்யும்’
என்று அழகு தமிழில் கவிதைகள் எழுதும் நண்பர் கவிஞர் பழநிபாரதியின் திருமணத்தன்று கணபதி ஸ்தபதிதான் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார். தன் துணைவியின் கழுத்தில் அதைக் கட்டும்போது பழநிபாரதி பேன்ட் சட்டையில்தான் இருந்தார்.

சென்ற வாரம் குஞ்சு சென்னைக்கு வந்திருந்தான். அரை டிராயர் போடும் வயதில் வேட்டி கட்டிக்கொள்ள ஆசைப்பட்டு நாங்கள் செய்த கோமாளித்தனங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தான். 'ச்சை. சின்னப் பிள்ளைல என்னென்ன கோட்டிக்காரத்தனம்லாம் பண்ணியிருக்கோம், பாத்தியா?’ வெட்கமும் சிரிப்புமாகப் படுத்து இருந்தபடி சொன்ன குஞ்சு அரை டிராயர் போட்டிருந்தான். நானும்தான்!

- சுவாசிப்போம்...