Published:Updated:

நானும் விகடனும்!

தமிழருவி மணியன், படங்கள் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

நெறி சார்ந்த பண்புகளுடன் தன் பிள்ளைகள் வாழ்க்கை வீதியில் வலம் வர வேண்டும் என்ற பெரு விருப்புடன் செதுக்கிச் செதுக்கி வளர்த்த என் தந்தை... ஆனந்த விகடன், கல்கி ஆகிய நாளிதழ்களை மட்டுமே வாரந்தோறும் வீட்டுக்குள் வரவழைத்து எங்களை வாசிக்கச் செய்தார். அதனால், பள்ளிப் பருவந்தொட்டு இன்று வரை ஆனந்த விகடனுக்கும் எனக்கும் உள்ள உறவு இடையறாமல் தொடர்கிறது. 'வாசக ஞானத்தால் வருமோ சுகம்?’ என்றார் தாயுமானவர். எனக்கு விகடனை வாசிப்பதால் கடந்த 40 ஆண்டுகளாகச் சுகம் வளர்ந்துகொண்டே வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நானும் விகடனும்!

'தமிழ்த் திரையுலகின்  சிசிலி பி டெம்லி என்று புகழப்பட்ட, அமரர் எஸ்.எஸ்.வாசனால், அடிமை இந்தியாவில் தொடங்கப்பட்ட இதழ் ஆனந்த விகடன். அன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சனம் செய்ய விகடன் தயங்கியது இல்லை என்பது அதனுடைய தனிச் சிறப்பு. வாசன், அடிப்படையில் ஒரு  தேசியவாதி. காந்திய நெறிகளைக் காதலித்தவர். அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட விகடனும் 'தேசத்தைக் காத்தல் செய்’ என்ற பாரதியின் புதிய ஆத்திசூடியை அடி நாள் தொட்டுப் பின்பற்றி வருகிறது.

வாசகர்களின் தரத்துக்குத் தன்னை இறக்கிக்கொள்வது லாபகரமான வணிகத்துக்கு எளிதான வழி. தான் விரும்பும் மேலான தரத்துக்கு வாசகர்களை உயர்த்த முயல்வது இன்றளவும் ஆபத்தான ஒரு விஷச் சோதனை முயற்சி. வாழ்வே வணிக மயமாகிவிட்ட சூழலில், தரம் குறையாமல் ஒரு வெகுஜன இதழை வெற்றிகரமாக நடத்துவதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதாகிவிட்டன. வாசகர்கள் பலதரப்பட்டவர்கள். வெவ்வேறான ருசியில் நாட்டம் உள்ளவர்கள். அனைவரின் ருசி அறிந்து விருந்து படைக்கும் தேர்ந்த சமையற் கலைஞனைப்போல் ஓர் இதழின் ஆசிரியர் குழு செயல்பட்டாக வேண்டும். வாசகர்கள்தான் இதழை இயங்கச் செய்யும் இதயம். அதனால், அவர்களுடைய ரசனைகளோடு சமரசம்கொள்வது தவிர்க்க இயலாது. அதே நேரத்தில், மண்ணைக் குழந்தை விரும்பி உண்கிறது என்பதற்காக, அந்த மண்ணைக் தருவதற்கு எந்தத் தாயும் உடன்பட மாட்டாள். கம்பி மேல் நடக்கும் காரியம்தான் பத்திரிகைப் பணி. சிலவற்றில் சமரசம்கொண்டும், அடிப்படை இதழியல் அறத்தில் இருந்து விலகி விடாமலும் விகடன் சாதுர்யமாக வலம் வருவதை என் 40 ஆண்டு வாசக அனுபவத்தில் எளிதாக இனம் காண முடிகிறது.

அமரர் வாசன் அவர்களுடைய ஆளுகையில் விகடன் ஒவ்வொரு தமிழரின் வீட்டு வரவேற்பு அறையிலும் மரியாதைக்கு உரிய இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. எல்லா இதழ்களிலும் நகைச்சுவைத் துணுக்குகள் இடம் பெற்றாலும், விகடனில் வெளி வந்தவை மட்டுமே என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவைபோன்று இயல்பாகவும், தரமாகவும் அமைந்தன. வாசகரின் இலக்கிய ருசியை வளர்த்தெடுக்க பி.ஸ்ரீ.ஆச்சார்யாவின் கம்பன் கவிநயம் குறித்த கட்டுரைகளும், உ.வே.சா-வின் வாழ்க்கை வரலாற்றை அவரைக்கொண்டே எழுதவைத்த 'என் சரித்திரம்’ என்ற அமரத்துவம் வாய்ந்த தொடரும், வாசனால் வெளியிடப் பட்டதை நான் பின்னாளில் படித்து என் இலக்கிய அறிவை விரிவு செய்திருக்கிறேன்.

நான் இன்றளவும் நெஞ்சில்வைத்துப் போற்றும் படைப்புலக வேந்தர் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் முதன்முதலாக விகடன் மூலமே எனக்கு அறிமுகம். 'சரஸ்வதி’யில் எழுதிக் கொண்டு இருந்த ஜெயகாந்தனுக்கு விரிந்த வாசகர் வட்டத்தை விகடன்தான் உருவாக்கிக் கொடுத்தது. அவருடைய படைப்புகளில் பெரும் புகழைப் பெற்ற முத்திரைக் கதைகள் அனைத்தும் விகடனில்தான் அரங்கேறின. உயர் மட்ட வாசகர்களின் உள்ளங்களில் ஜெயகாந்தன் கம்பீரமாக அமர்வதற்கு நாற்காலி போட்டது ஆனந்த விகடன்தான் என்பதை யார் மறுக்க முடியும்?

நானும் விகடனும்!

பிரம்மோபதேசம், ரிஷிமூலம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்று விகடனில் ஜெயகாந்தன் எழுதியபோது, நான் அடைந்த வாசக அனுபவத்தை எழுத்தில் வழங்க இயலாது. ஜெயகாந்தனின் முதல் நாவல் என்று பெருமைக்குரிய 'பாரிசுக்குப் போ’ விகடனில்தான் பிரசவமானது. கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம், அரசியல் என்று சமூகத்தின் சகல ருசிகளுக்கும் விகடனின் சங்கப் பலகை விரிந்து கொடுத்தது. விகடனில் வெளிவந்த தலையங்கங்கள் தனிக் கவனம் பெற்றன. மணியம், கோபுலு போன்ற தெய்வ அருள் பெற்ற ஓவியர்கள் தாங்கள் தீட்டிய ஒவ்வொரு படத்துக்கும் சாகா வரம் தந்த சித்தர்கள். அவை அனைத்தும் காலப் பெட்டகத்தில் பொதிந்துகிடக்கும் பொக்கிஷங்கள்.

அமரர் வாசனுக்குப் பின்பு ஆசிரியர் பொறுப்பேற்ற பாலசுப்பிரமணியன், தந்தை தடம் பதித்த பாதையில் சுவடு மாறாமல் விகடனின் பயணம் தொடர்வதற்கு வழி வகுத்தார். அரசியல் போதைக்கு ஆட்பட்டுவிட்ட தமிழரிடையே தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் வளர வேண்டும் என்பதற்காக விகடன் தலையங்கம், கார்ட்டூன் மூலம் தன் கருத்தை அச்சம் இன்றி அச்சில் ஏற்றும் காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியில், விகடனில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு ஆசிரியர் பாலன் சிறைவாசம் பெற நேர்ந்தது. பாலனின் ஆளுகையில்தான் விகடன் என்ற ஆல விருட்சம், ஜூனியர் விகடன் என்ற விழுதூன்றியது. இன்று எண்ணற்ற விழுதுகளுடன் கிளை பரப்பி நிற்கும் விகடன் குழுமம், தமிழக அச்சு ஊடகவுலகில் தலை நிமிர்ந்து தனியரசு நடத்தி வருகிறது. ஆயிரம் கிளைகள் இருந்தாலும், பல நூறு விழுதுகள் மண்ணில் இருந்தாலும், விதையாக விழுந்து விருட்சமாக எழுந்த ஆலமரம்தானே முதல் மூலம். விகடன் குழுமத்தின் முதல் மூலம் ஆனந்த விகடன்.

அதற்கு இன்று 85 வயது. முதிர்ச்சியில் வந்து விழும் சுருக்கங்கள் இல்லாமல், இன்று புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போல் மேனி மெருகு குலையாமல் விகடன் நம் கைகளில் தவழ்ந்து நெஞ்சில் ஆனந்தம் கூட்டுகிறது.

நம் சமகாலப் படைப்பாளிகளில் தனித்துவம் மிக்க நாஞ்சில் நாடனை சமூக நலன் சார்ந்த கட்டுரைகளை எழுதச் செய்து அவருக்கு விரிந்த வாசகர் தளத்தை அமைத்துக் கொடுத்தது. ந.முத்துக்குமார், யுகபாரதி முதல் என் மனம் கவர்ந்த கவியுலகப் போராளி அறிவுமதி வரை எழுதச்

நானும் விகடனும்!

செய்து புதுக் கவிதைப் பூக்களின் வாசம் வீச வழிவகுத்துத் தருகிறது. மாற்றுத் திறனாளிகள் முதற்கொண்டு திருநங்கையர் வரை சமூகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. என்னைப் போன்ற இனமான வாசகர்களின் அறிவுப் பசிக்கும், சமூகச் சார்புக்கும் ஒவ்வோர் இதழிலும் 20 பக்கங்களாவது விருந்து படைக்கும் விகடனை வரவேற்க வாரந்தோறும் என் விழிகள் வெள்ளிக் கிழமையின் வருகைக்காக ஏங்குகின்றன என்பது நிஜம்!

நான் 40 ஆண்டுகளாக விகடனை வாசிப்பதற்காக, விகடன் எனக்கு நன்றி பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் எழுதிய 'ஊருக்கு நல்லது சொல்வேன்’ மூலம் உலகுக்கு என்னை அழுத்தமாக அறிமுகப்படுத்திய விகடனுக்கு, என் இறுதி மூச்சை இழக்கும் தருணம் வந்து சேரும் வரை நான் நன்றி சொல்லியாக வேண்டும். இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும், விகடன் கன்னித் தமிழ் போல் கட்டுக்குலையாமல் இளமையாகவே இருக்கும்!''