Published:Updated:

சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு!

விகடன் விமர்சனக்குழு
சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு!
சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு!
சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு!

சென்னை: மாநகரப் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நள்ளிரவில் 5 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதனால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு மாநகர  பேருந்து 15எப் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டது. இரவு நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பேருந்தில் கோயம்பேட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் விஜயலட்சுமி (38) என்பவரும் பயணம்  செய்துள்ளார்.

சேத்துப்பட்டு அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பெண் வழக்கறிஞரிடம், வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்து இடுப்பை கிள்ளியதாக தெரிகிறது. உடனே அந்த வாலிபரை கண்டித்த விஜயலட்சுமி, கண்டக்டரிடம் முறையிட்டுள்ளார். பேருந்தை நிறுத்துமாறும் கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த வாலிபரின்  சில்மிஷம் தொடர்ந்ததால் ஆவேசம் அடைந்த விஜயலட்சுமி, செருப்பை காட்டி கண்டித்துள்ளார். சக பயணிகளிடம் அவர் முறையிட்டுள்ளார். இதனால் அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கி ஓட முயன்றார். பயணிகள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

சேத்துப்பட்டு பாலம் அருகே பேருந்து மெதுவாக சென்றபோது அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். பேருந்தை நிறுத்தி இருந்தால் அந்த வாலிபரை பிடித்திருக்கலாம். கண்டக்டர் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அவர் தப்பி விட்டார் என்று விஜயலட்சுமி ஆவேசம் அடைந்துள்ளார். இதுபற்றி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார் விஜயலட்சுமி. அதற்குள் பேருந்து கோயம்பேடு வந்து விட்டது. இதனால் கோயம்பேடு காவல் நிலையத்தில் கண்டக்டர் அசோக் மீதும் விஜயலட்சுமி புகார் செய்துள்ளார்.

இதை தொடர்ந்தும் டிரைவர், கண்டக்டரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கண்டக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று காவல்நிலைய வாசலிலேயே விஜயலட்சுமி அமர்ந்து விட்டார்.

இதனிடையே, டிரைவர், கண்டக்டரை காவல்துறையினர் விசாரிப்பதை அறிந்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி விட்டு காவல் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது, காவல்துறையினருடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இந்த களேபரத்தில் கண்டக்டர் பிரபுவுக்கு அடி விழுந்துள்ளது. இதனால் டிரைவர்கள் ஆவேசம் அடைந்து ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தினர். எந்த பேருந்தும் கோயம்பேடு உள்ளே செல்ல முடியவில்லை. வெளியேயும் வர முடியவில்லை. கோயம்பேடு 100 அடி ரோடு, பூந்தமல்லி ரோடு, திருமங்கலம் ரோடு பகுதிகளில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் எந்த பேருந்தும் நகரவில்லை. இதனால் வெளியூர், செல்லும் பயணிகளும் போக முடியாமல் தவித்தனர். உள்ளூர் பயணிகள் நடந்தே வீடுகளுக்கு சென்றனர்.

இரவு 10.30 மணியில் இருந்து அதிகாலை வரை பல மணி நேரம் போக்குவரத்து முடங்கி ஸ்தம்பித்தது. உடனே காவல்துறை இணை ஆணையர்கள் சண்முகவேல், தினகரன், மகேஷ்குமார், போக்குவரத்து துணை ஆணையர் பன்னீர்செல்வம், மனோகரன் ஆகியோர் டிரைவர்- கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகர போக்குவரத்து கழக மேலாளர் பத்மநாபனை அழைத்து வந்து டிரைவர் - கண்டக்டர்களை சமாதானம் செய்ய வைத்தனர்.

அப்போது, ஈவ்டீசிங் செய்த வாலிபரை கைது செய்வதாகவும், டிரைவர் - கண்டக்டரை விட்டு விடுவதாகவும் காவல்துறையினர் வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்தே அதிகாலை 3 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது. நள்ளிரவு சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.