யட்சன்
##~##

லோகுவைப் பார்த்ததும், கைலாசத்தின் கையில் இருந்த பூவாளி எகிறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அத்தனை பேரையும் தாண்டி எப்படி மேல வந்த..?'' என்று பதறினார்.

''நான்தான் கூட்டிட்டு வந்தேன்...'' என்று பார்வைக்குள் வந்தான் செந்தில். லோகு, கைலாசத்தின் முன் மண்டியிட்டான்.

''காலைல ஒரு கொலையைப் பண்ணிட்டு நேரா இங்க வர்றேன்.''

கைலாசம் திடுக்கிட்டார்.

''என்னது..?''

''உங்க தலையை நாலு நாளைக்குள்ள கொண்டுவரணும்னு ஆதிமூலம் கண்டிஷனா சொல்லிட்டாரு. அவர் இருந்தா ரெண்டு பக்கமும் தலை விழுந்துட்டே இருக்கும்னு தோணுச்சு. காலைல தூர்தர்ஷன் ரோடுல வாக் போனாரு. கூட இருந்தேன். அவரப் போட்டேன். கூவத்துல உருட்டிவுட்டேன்!''

கைலாசம் நம்ப முடியாமல் பார்த்தார்.

யட்சன்

'இதுக்கு முன்னாலயும் பன்னெண்டு பேரை போட்டுத் தள்ளிருக்கேன். ஆனா, செந்தில் என் கண்ணைத் தொறந்துட்டாரு. எல்லா உண்மை யையும் சொல்லி போலீஸ்ல சரண் டர் ஆவப்போறேன். என்கூட வளர்ந்த பசங்களை நீங்கதான் பெரிய மனசு பண்ணி, உங்க கம்பெனில சேர்த்துக்கணும்.''

''மன்னிப்பு கேக்கும்போதே செஞ்ச குத்தத்துக்கு தீர்ப்பு கிடைச்சுருது. உதவி செய்வோம்...'' என்றான் செந்தில்.

கைலாசத்தின் கண்களில் நம்பிக்கை ஒளிர்ந்தது.

''உன் பேச்சுக்கு மறு பேச்சில்ல...'' என்றார்.

தலைமை இல்லாமல், ஆதிமூலத்தின் ஆட்கள் சிதறிப் போயினர். லோகு, போலீஸில் சரண் அடைந்தான். லோகுவின் நண்பர்கள், கைலாசத்தின் கம்பெனியில் சேர்க்கப்பட்டார்கள்.

தீபா தன் வேலையை உதறினாள். அம்மாவுடன் சென்னைக்குக் குடியேறினாள். செந்திலின் அன்றாட நிகழ்வுகளை நேர்த்தியாகத் திட்டமிடும் பொறுப்பை ஏற் றாள். செந்திலின் புத்திசாலித்தனத்தாலும் விடாமுயற்சியாலும் விரைவிலேயே சென்னையின் முக்கியமான நிறுவனமாக 'கைலாஷ்-செந்தில் பில்டர்ஸ்’ உருவெடுத்தது.

'யட்சன்’ தயாராகி, முதல் காட்சி திரைத்துறையினருக்குப் போட்டுக் காட்டப்பட்டது.  படம் முடிந்ததும், அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

டைரக்டர் ஷங்கர், ஜோசஃபின் கைகளைப் பற்றிக்கொண்டார். ''நல்லாப் பண்ணியிருக்கடா! தேங்க்ஸ்...'' என்றார்.

பிரத்யேகமான திரையரங்கில் படத்தைப் பார்த்து முடித்ததும், ரஜினிகாந்த் பாரியை இழுத்து அணைத்துக்கொண்டார்.

''சூப்பர்... சூப்பர்! முப்பது வருஷத்துக்கு முன்னால இருந்த என்னையே பார்க்கற மாதிரி இருக்கு!''

''இந்த வாழ்க்கையே நீங்க கொடுத்ததுதான்...'' என்று பாரி அவர் பாதங்களைத் தொட்டான்.

''தப்பு... தப்பு... இது கடவுளோட பிச்சை. சந்தோஷமா ஏத்துக்கோ. உழைக்கிறத வுட்டுராதே... சிவாஜி படமோ, கமல் படமோ பாத்தாதான் தூங்குறதுனு வெச்சுக்கோ. அவங்ககிட்ட கத்துக்க ஆயிரம் இருக்கு. இன்னும் பெரிய உயரத்தைத் தொடுவே!''

சூப்பர் ஸ்டார் முன் பாரி நெகிழ்ந்து நின்றான்.

'யட்சன்’ வெளியான முதல் வாரமே தியேட் டர்கள் கூடுதல் பிரின்ட்கள் கேட்டன. இரவோடு இரவாக பாரி, நட்சத்திர அந்தஸ்து பெற்றான். பத்திரிகைகள் மொய்த்தன. தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டனர். யட்சனைத் தொடர்ந்து, 'புத்தன்’ படத்திலும், அவனுக்கு இணையாக கயல்விழியே ஒப்பந்தமானாள்.

பாரி, தேவியின் வீட்டைத் தேடிப் போனான்.

''வா பாரி.! ராக்கெட் மாதிரி மேல போயிட்ட..' என்று சாவித்திரி நிஜமான சந்தோஷத்தோடு வரவேற்றாள்.

''இது எங்க போனாலும் பூமிக்குத் திரும்பி வர்ற ராக்கெட் அக்கா...'' என்றபடி சமையலறை வரை போய் எட்டிப்பார்த்தான்.

''தேவியா? கோயிலுக்குப் போயிருக்கு!''

''அக்கா, நேரடியா விஷயத்துக்கு வரேன். தேவியை மனசார விரும்பறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை.''

சாவித்திரி திகைத்தாள்.

''முட்டாளாடா நீ? சினிமாவுல பயங்கர ஹிட் ஆயிருக்க. அத்தனை பொண்ணுங்களும் உன் போட்டோ போட்ட டி-ஷர்ட்டுக்கு அலை யுதுங்க. இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் இமேஜ் போயிடும்டா.'

''எனக்கு இமேஜ் பத்திலாம் கவலையில்ல... வாழ்க்கைதான் முக்கியம்.''

சாவித்திரியின் கண்கள் கலங்கின. நெற்றியில் குங்குமத்தோடு நுழைந்தாள் தேவி.

''என்னம்மா கண்ல தண்ணி..?''

''ஒன்னைக் கட்டிக்குடுக்கச் சொல்றான் இந்தப் பய...''

தேவி தளர்ந்தாள். அவள் கண்களிலும் நீர் துளிர்த்தது.

''வேணாம் பாரி! நான் பாவம் பண்ணவ. சுதாகர்னு ஒரு பொறுக்கி ஹீரோயின் ஆக்குறேன்னு ஆசை காட்டினான். புதுப் படம் எடுக்கப் போறாங்கனு நம்பி டைரக்டரு, புரொடியூசரு, அவன், இவன்னு ரெண்டு, மூணு பேர்கூட...''

பாரி அவள் வாயைப் பொத்தினான்.

''பழசைலாம் கிளறினா, உன்னைவிடப் பெரிய பாவமெல்லாம் பண்ணவன்தான் நானும். இப்ப இருக்கற வாழ்க்கை, தானாத் தேடி வந்தது. இதுல பழைய பாரியோ, பழைய தேவியோ இல்ல. இந்தப் பாரிக்கு வாழ்க்கை முழுசாகணும்னா, இந்த தேவி கூட இருக்கணும்!''

தேவி தெளிந்தாள். கண்ணீருடன் அவனு டைய கன்னத்தில் முத்தமிட்டாள்.

தீபா, செந்திலிடம் அந்த அழைப்பிதழை மகிழ்ச்சியோடு நீட்டினாள்.

''பாரிக்குக் கல்யாணம். மறக்காம நமக்கு அனுப்பிருக்கான் பாரு...''

''நான் வரலை...'' என்றான் செந்தில் அதைக் கையில் வாங்காமல்.

''இன்னுமா அவனை வெறுக்கற?''

''அவனை நானே தேடிப் போவேன். ஆனா...''

''ஆனா?''

''இப்ப எதுவும் கேக்காத, தீபா...'' என்று செந்தில் தீர்மானமான குரலில் சொன்னான்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism