##~##

செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால், எதையுமே செய்யத் தோன்றவில்லை. ஒரு பக்கம் எந்த வேலையும் முடிக்கப்படாமல் கிடக்கிறதே என்று எரிச்சலாகவருகிறது. இன் னொரு பக்கம் இவ்வளவு வேலைகளைச்சேர்த்து வைத்துக்கொண்டு, எதைச் செய்வது என்று தெரியாமல் 'தேமே’ என்று உட்கார்ந்து இருக்கிறோமே என்று நம் மீதே நமக்கு கோபம்வருகிறது!

நம்மில் பலருக்கும்... ஏன் அனைவருக்குமே  இந்த அனுபவம் இருக்கலாம். ஒரு வேலையைச் செய்ய உட்காரும்போது இன்னொரு வேலையின் மிச்சம் நம்மைத் துரத்தும். அதைச் செய்து முடிப்பதற்குள், முடிக்கப்படாத இன்னொரு வேலை தொடர்பாகத் தொலைபேசி அலறும். அதற்குப் பதில் சொல்லி ஓரளவு சரிசெய்துவிட்டுத் திரும்பும்போது, எந்த வேலையைச் செய்யத் தொடங்கினோமோ, அது அப்படியே கிடக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'போங்கடா... நீங்களும் உங்க வேலையும்’ என்று ஒரு டீ அடிக்கக்  கிளம்பும்போது, காலையிலிருந்து ஒரு வேலைகூட முடியவில்லையே எனும் நெருக்கடி மண்டைக்குள் மணிஅடிக்கும். மூளைக்குள் சிந்தனை நெரிசலானதுபோல, 'அந்த வேலை, இந்த வேலை’ என மாறி மாறி ஹாரன் அடிக்கும். கணினி  ஸ்க்ரீன், செல்போன் பீப் என நாம் பதிந்திருந்த 'ரிமைண்டர்’கள் குத்தீட்டிகளாக நம்மைக் குத்தும். இந்த சிந்தனை அலைக்கழிப்பிலேயே எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு மண்டைக்குள் ஹாரன் சத்தம் அதிகமாகும். 'சில நொடிகளேனும் சாந்தி நிலவட்டும்’ என்று கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்வோம். மனசு கொஞ்சம் அமைதியான பிறகு வேலையைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்து, கண்களை சற்றே மூடும்போது கேபின் கதவைத் தட்டி எட்டிப்பார்க்கும் ஒருவர், 'என்ன பாஸ்... உட்கார்ந்துக்கிட்டே தூக்கமா?’ என்று கிண்டலடிப்பார். வெறுப்புடன் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தால், பசி வயிற்றைக் கிள்ளும். மதிய சாப்பாடு நேரம்!  தொடங்கிய வேலை, தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. முழுதாக நான்கு மணி நேரத்தை, 'என்ன செய்யலாம்’ என்ற குழப்பத்திலேயே கழிந்திருக்கிறோம் என்று உணரும்போது, மண்டைக்குள் இன்னும் உஷ்ணம் ஏறும்!

பாஸ்வேர்டு்

கொடுமையிலும் கொடுமையாக எந்த வேலையைச் செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கும்போது, அநியாயத்துக்கு ஃபார்வர்டு எஸ்.எம்.எஸ்-களாக வரும். யாரோ ஒருவர் சும்மா னாச்சுக்கும் மொபைலில் அழைப்பார். முக்கியமான டாக்குமென்ட் காணாமல் போகும். அனைத்துத் தடைகளும் கங்கணம் கட்டிக்கொண்டு வரிசையில் நின்று நம்மைக் கும்மியெடுக்கும்.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், சொந்தமாக நிறுவனம் வைத்திருப்பவர்கள், நான்கு பேரை வைத்துக் கொண்டு குறுந்தொழில் செய்பவர்கள் என எல்லாருக்குமே இப்படியான நெருக்கடிகள் தோன்றவே செய்யும்.

என்ன தவறு... ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? பொறுப்பாகத்தானே இருக்கிறோம், கடுமையாக உழைக்கிறோம், வேலைகளை முடிப்பதற்காக அதிக நேரம் செலவிடுகிறோம், நினைவூட்டல்களை செல்போன், டைரி என எல்லாவற்றிலும் குறித்துவைத்துக்கொள்கிறோம். அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு வேலை தேங்குகிறது? நேர நிர்வாகத்தை திட்டமிட்டுச் செய்தாலும் ஏன் இந்த இழுபறி?

உண்மையில், இன்றைக்கு நம்மைச் சுற்றி இருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள், ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யவிடா மல் நம் கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டே இருக்கின்றன. தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, 'பீப்... பீப்...’ என்று செல்போன் முனங்கினால், அதை எடுத்துப் பார்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் வேலை ஓடாது. வேலையை விட்டுவிட்டு போனை எடுத்துப் பார்த்தால், ஆடித் தள்ளுபடி சம்பந்தமான விளம்பரமாக இருக்கும்.

பாஸ்வேர்டு்

அதே சமயம், எதற்குமே நேரம் கிடைக்கா மல் பரிதவிக்கிற நாம், பல சமயங்களில் ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை, 'அதான் நேரம் இருக்கே’ என்று நாள் முழுக்க இழுத்தடிப்போம். காரணம் இல்லாமல் ஒரு வேலையை செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.  'சின்ன வேலைதானே... அப் புறம் பார்த்துக்கலாம்’ என்று நாம்  தள்ளிப் போட்ட வேலைகள் தான், எந்தப் பெரிய வேலையையும் பார்க்கவிடாமல் நம்மைப் பழிதீர்க்கின்றன.

'நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த அந்த வேலை, இதோ இப்ப இன்னும் அரை மணி நேரத்துக்குள் முடித்தே ஆக வேண்டும்’ என்ற இக்கட்டில் கொண்டு வந்து நம்மை நிறுத்தும். மிகமிக முக்கியமான வேலை யைச் செய்ய வேண்டிய அவசிய மான சமயத்தில், செருப்புக்குள் சிக்கிக்கொண்ட கல் போல அந்தக் குட்டி வேலை நம்மைப் படுத்தி எடுக்கும். விளைவு, முக்கியமான வேலையை தள்ளிப்போட வேண் டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்வோம்!

இப்படியே பத்து குட்டிக் குட்டி வேலைகள் தேங்கிக்கொண்டே போனால், அவற்றைவிட பெரிய மன உளைச்சல் வேறு எதுவும் இல்லை. ஒரு பக்கம், அந்த வேலை முடிக்கப்படாததால் ஏற்படும் பின் விளைவுகள், அபராதத்  தண்டங்கள்... மறுபக்கம் 'இன்னும் இது மாதிரி நிறைய வேலை கிடக்கே...’ என்று எரிச்சல்.

பாஸ்வேர்டு்

100 பந்துகளுக்கு 70 ரன்கள் தேவைப்படும்போது டொக் வைத்து விளையாடிவிட்டு, கடைசி ஓவரில் 20 ரன்களை அரக்கப் பறக்க சாத்தும் டோனியின் ஸ்டைல்... பெரும்பாலான இந்தியர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சாம்பிள். (அதனால்தான் நம்மவர்கள் டோனியைக் கொண்டாடுகிறார்களோ!) நேரம் இருக்கும்போது மிகவும் அலட்சியமா கவும் நேரம் குறைவாக இருக்கும் போது விரக்தி கலந்த விறுவிறுப்பு டனும் காரியம் சாதித்தே பழகி விட்டோம் நாம்.  

கட்ட வேண்டிய மின் கட்டணத்தைச் செலுத்தாததால்,  மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தகவல் கிடைக்கும் சமயம்தான், சின்ன வேலையை முடிக்காததன் பெரும் விளைவை அனுபவிப் போம்.  சின்னச் சின்ன வேலைகளை அவ்வப் போதே முடிப்பதுதான் சரியானது. இல்லை என்றால், தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அது பெரிய வேலையாக உருமாறிக்கொண்டே இருக்கும்.

சின்னக் கடன், சின்ன உடல் பிரச்னை, சின்ன உறவுச் சிக்கல், சின்ன அலுவல் என நாம் தினந்தோறும் எதையாவது தள்ளிப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சின்னக் கடன், வட்டியோடு பெரிய தொகையாகி நிற்கிறது. சின்ன உடல் பிரச்னை, பெரிய நோயாகிவிடுகிறது. சின்ன அலுவல், உங்களுக்கு மெமோ வழங்கும் அளவுக்கு பூதாகாரமாகி நிற்கிறது.வேலையோ, பொறுப்போ அதில் சின்னது, பெரியது என்று எதுவும் கிடையாது. தள்ளிப்போடாமல் செய்யும் வேலை, சின்ன வேலை. தள்ளிப்போட்டால், அது பெரிய வேலை. அவ்வளவே!

ஒவ்வொரு வேலையையும் நாமே  செய்யவேண்டும் என்ற வளரும் நிலையில் இருக்கிறபோது, பல வேலைகளை தள்ளிப்போடுவது தவிர்க்க முடியாதது.  ஆனால், அலட்சியத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் காரணமின்றி எந்த வேலையைத் தள்ளிப்போட்டாலும், அது நாளையோ, நாளை மறுநாளோ... நம் கழுத்தில் கத்தி வைக்கத் தவறாது!

முடிக்கப்படாத வேலைகளை ஒரு பட்டியல் போட்டுக் குறித்துக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது, முடிக்கப்படாமல் இருக்கும் அந்த வேலைகளை ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டே வாருங்கள். ஒவ்வொரு வேலைமுடியும்போதும், உங்கள் தன்னம்பிக்கையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதை நீங்கள் உணர்வீர்கள்.  

இப்போது சொல்லுங்கள்... இன்று எந்த சின்ன வேலையை நீங்கள் முடிக்கவிருக்கிறீர்கள்?

- ஸ்டாண்ட் பை...