Published:Updated:

“ஆஸ்கர் என்பது மாயை!”

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்வாசகர் கேள்விகள்

“ஆஸ்கர் என்பது மாயை!”

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்வாசகர் கேள்விகள்

Published:Updated:
##~##

எம்.திலகன், பட்டுக்கோட்டை.

''ஹாலிவுட், ஈரான், கோலிவுட்... எங்கு தயாராகும் படங்கள் பெஸ்ட்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹாலிவுட் படங்கள் உண்மையில் ஒரு மாயை. அவை பெரும்பாலான மக்களைக் குறிவைத்து எடுக்கப்படும் வணிக சினிமாக்களே தவிர, உணர்வுள்ள சினிமா கிடையாது. ஹாலிவுட்டின் பெரும்பாலான சினிமாக்கள் அமெரிக்க சார்புடையவை. நானும் ஒரு காலத்தில் அந்த ஹாலிவுட் மாயையில் சிக்கிக் கொண்டு இருந்தவன்தான். பலரைப் போல நானும் 'ஆஸ்கர்’ என்று சொன் னாலே பிரமிப்பில் திரிந்தவன்தான். ஆனால், ஆஸ்கர் விருது வென்ற படங் களைப் பார்த்ததும் எனக்கு அந்த விருதுமேல் உள்ள மதிப்பே போய்விட்டது.

'அர்கோ’னு  ஆஸ்கர் ஜெயிச்ச படம் பார்த்தேன். டெக்னிக்கலா நல்ல படம். ஆனா, ஒரு அமெரிக்கக் குடிமகன்தான் அந்தப் படத்தை ரசிக்க முடியும். எனக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். அமெரிக் கக்காரங்க அவங்க நாட்டு சினிமாவுக்குக் கொடுக்கிற விருது ஆஸ்கர். அதுக்கு ஏன் நாம ஆசைப்படணும்? இந்திய அரசாங்கம் வழங்கும் தேசிய விருதுதான் நமக்கு அல்டிமேட்டா இருக்கணும்.

ஆஸ்கர் மாயை விலகியதும் ஈரான், கொரியா, ஃபிரெஞ்ச் சினிமாக்கள் பார்த்துதான் உருக்கமான படைப்பு களைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். எந்த சினிமா ஜிகினாவும் இல்லாம மக்களை, அவங்க வாழ்க்கையை இயல்பாகப் பதிவுசெய்து நம்மைக் கண்கலங்க வைக்கும் சினிமாதான், நிஜத்தில் நல்ல சினிமா. அப்படிப் பார்த்தா இந்திய சினிமாவில் இப்போ வரை ஹாலிவுட்டை காப்பி அடிச்சுதான் பல படங்கள் எடுத் துட்டு இருக்கோம். இருந்தாலும் ஈரானிய சினிமாக்களின் தாக்கத்தில் அது மாதிரி யான முயற்சிகள் தமிழிலும் வேறு சில மொழிகளிலும் ஆரம்பிச்சிருக்கு. ரொம்ப நல்ல விஷயம்.ஆரோக்கியமான முயற்சி!''

“ஆஸ்கர் என்பது மாயை!”

பா.ராஜன், சென்னை-88.

''மணிரத்னத்தை எப்பவாச்சும் திட்டியிருக்கீங்களா... ஏன்?''

''ஓ நிறைய!

செமத்தியாத் திட்டியிருக்கேன். மணி பேச்சுதான் கொஞ்சம் சாஃப்ட்டா இருக்கும். ஆள் ரொம்ப ஸ்பீடா பரபரனு வேலை பார்ப்பார். அதுவும் விடுவிடுனு நடந்துட்டே இருப்பார். டென்னிஸ், வாக்கிங், ஆரோக்கியமான உணவுகள்னு உடம்பை  ஃபிட்டா வெச்சிருப்பார். நான்லாம் சின்னப் பையனா தெருவுல கிரிக்கெட் ஆடினதோட சரி.

ஒரு தடவை கொல்கத்தா பக்கம் சிலிகூர் மலைக்கு லொக்கேஷன் பார்க்கப் போனோம். அப்போ மலை முகடுகள்ல அவர் அவ்வளவு வேகமா நடக்கிறப்ப, அவரை ஃபாலோ பண்ண முடியாம டென்ஷனாகி, பி.பி எகிறி அவரைத் திட்டிவுட்டேன். நான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திட்டுனா, அவர் சிம்பிளா சிரிச்சுட்டே நிக்கிறார்!''

செ.மாதவி, திருவிடந்தை.

''நீங்கள் வேலை பார்த்த இயக்குநர்களில் உங்களுக்கு மிகப் பிடித்த இயக்குநர் யார்?''

''அப்போ... மணிரத்னம். இப்போ... ஷங்கர். இவங்க ரெண்டு பேரும் கதை ரெடி பண்ணும்போதே மனசுக்குள்ள ஃப்ரேம் பை ஃப்ரேம் விஷ§வலா யோசிச்சு நமக்கு இன்புட்ஸ் கொடுத்திருவாங்க. அதை, கதையாசொல்லும்போது கதை மேல நமக்குத் தன்னால ஈடுபாடு வந்திரும். அவங்க என்ன எதிர்பார்க்கிறாங்க... நாமஎன்ன பண்ணணும்னு தெளிவாப் புரிஞ்சிரும். அந்த கேன்வாஸுக்குள் நம்ம சுதந்திரத்தை முழுசா அனுபவிக்க முடியும். 'திருடா திருடா’ படத்தில் 'சந்திரலேகா’ பாடலில் லைட்டிங் மாறிட்டே இருக்கும். மணியோட கற்பனைக்கு நான் கொடுத்த காட்சி அது. 'அலை பாயுதே’ படத்தில் 'பச்சை நிறமே.. பச்சை நிறமே’ பாட்டுக்கு மூணு நிறங்களைவெச்சு விளையாடினதும் அப்படி ஒரு ஐடியாதான்.

ஷங்கர் பத்திப் பேசணும்னா 'ஐ’ பத்தி நிறைய பேசணும். இப்போ வேண்டாம். படத்துல பார்த்துக்கோங்க!''

“ஆஸ்கர் என்பது மாயை!”

ஜெ.திலீபன், சென்னை-12.

'   ''ஒரு சுவாரஸ்யமான ரகசியம் ப்ளீஸ்...''

''மணிரத்னமும் நானும் அப்போ நிறைய படங்கள் பத்திப் பேசுவோம். நிறைய ஒன் லைன் சொல்லிட்டே இருப்பார். எந்த விஷயம் எப்படி மெருகேறி படமா மாறும்னு அவருக்கே  தெரியாது. ஒருநாள் 'அக்னிநட்சத்திரம்’ கதை சொன்னார். 'நல்லா இருக்கு மணி... பண்ணலாம்’னுசொன் னேன். 'நின்னுக்கோரி சரணம்’ பாட்டை மட்டும் ஷூட் பண்ணோம். திடீர்னு என்ன நினைச்சாரோ, 'எனக்கு மனசுக்குள்ள வேற ஒரு கதை ஓடிட்டு இருக்கு. அதை உடனே பண்ணிருவோம்’னுசொல்லிட்டு 'நாயகன்’ படத்தை ஆரம்பிச்சுட்டார்.

'நாயகன்’ முடிச்சு ஹிட் ஆன பிறகு, அந்த பாசிட்டிவ் எனர்ஜியோட  'அக்னி நட்சத்திரம்’ வேலையை ஆரம்பிச்சோம். ஆனா, நான் சின்னதா தயங்கினேன்... 'மணி இந்தக் கதையை இப்போ அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். ரெண்டுவருஷம் முன்னாடி யோசிச்ச கதை. இப்போ டிரெண்ட் மாறி இருக்கு. அதுவும் போக, கதையும் ரொம்ப அட் வான்ஸா இருக்கு.  கொஞ்சம் ஷூட் பண்ணி டெஸ்ட் பண்ணிக்குவ்வோம்’னு சொன்னேன். யோசிச்சு சரி சொல்லிட்டு, கேரக்டர்களை கொஞ்சம் மாத்தினார். டெஸ்ட் ஷூட் முடிஞ்சு ரெண்டு பேருக்கும் திருப்தியான பிறகே, 'அக்னி நட்சத்திரம்’ ஷூட்டிங் கிளம்பினோம்!''

ஜி.கோபாலன், கும்பகோணம்.

''கேமரா வழியே உங்களைக் கவர்ந்த ஹீரோயின் யார்?''

''இப்போ  சினி ஃபீல்டில் ஹீரோ யின்களின் ஆயுள் ரொம்பவே குறைஞ்சிருச்சு. 'அட, இந்தப் பொண்ணு நல்லா இருக்கே’னு யோசிச்சு ரசிக்கிறதுக்குள்ள, ஒண்ணு, ரெண்டு படத்தோட காணாமப் போயிடுறாங்க. இப்போ எனக்குப் பிடிச்சது ஏமி ஜாக்சன். 'மதராசபட்டினம்’ படத்துல அறிமுகமாகும் அந்த ஃப்ரேம்லயே 'ஆஹா’னு பார்க்க வெச்சாங்க. அப்போ அவங்க பேர்கூட எனக்குத் தெரியாது. 'ஐ’ படத்தில் ஏமியை இன்னும் அழகாக் காமிச்சிருக்கோம். எனக்குப் பிடிச்ச இன்னொரு ஹீரோயின், நித்யா மேனன். அவங்களை பேரழகினு சொல்ல முடியாது. ஆனா, அவங்க கண்கள் என் னன்னமோ பேசும். சமீபத்தில் அப்படி ஒரு கண்களோட வேற ஹீரோயினை நான் பார்க்கலை!''

நா.ரெங்கநாதன், திருச்சி-7.

“ஆஸ்கர் என்பது மாயை!”

'' 'சீனி கம்’, 'பா’ படங்களில் அமிதாபுடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?''  

''அமிதாப் நடிப்பு மட்டுமில்லை; அவரோட உழைப்பும் மெய்சிலிர்க்கவைக்கும். 'பா’ படத்துக்காக முதல் நாள் ஹைதராபாத்ல அமிதாபுக்கு ஆறு மணி நேரம் மேக்கப் பண்ணி போட்டோ ஷூட் எடுத்தார் பால்கி. நான் மறுநாள் போனேன். கதைப்படி அமிதாபுக்கு அம்மா வித்யாபாலன். ஆனா, உயரத்தில் அமிதாபைவிட அவங்க உயரம் ரொம்ப கம்மி. அவங்க காம்பினேஷன் காட்சிகள்தான் படத்தில் நிறைய இருக்கும். அதை எப்படி வொர்க்-அவுட் பண்றது? என்ன மாதிரியான லென்ஸ்ல எப்படி ஆங்கிள் வைக்கிறதுனு குழப்பமா இருந்தது. அதை டெஸ்ட் ஷூட் பண்றதுக்காக அமிதாப் சார்கிட்ட, 'இன்னொரு தடவை மேக்கப் டெஸ்ட் எடுக்கலாமா?’னு கேட்டேன். சின்னதாக்கூட சலிப்பு, யோசனை... எதுவுமே இல்லை. உடனே 'ஓ.கே.’ சொல்லி மேக்கப் போட உட்கார்ந்துட்டார். அந்தப் படத்தோட ஷூட்டிங்கை அதிகாலை 6 டு 8, சாயங்காலம் 4 டு 6... இந்த நேரங்கள்ல மட்டும்தான் ஷூட் பண்ணோம். அந்த நேரத்தில் கிடைக்கிற மஞ்சளும் நீலமும் கலந்த சூரிய ஒளிதான் அந்தப் படத்தின் மூடுக்கு செட் ஆகும். நாங்க அப்படி காலைலயும் சாயங்காலமும் ரெண்டு ரெண்டு மணி நேரம் ஷூட்டிங் நடத்த, அமிதாப் தினமும் 12 மணி நேரம் மேக்கப் போடணும். நடுராத்திரியில ஆரம்பிச்சு ஆறு மணி நேரம் மேக்கப் பண்ணி 6 டு 8 ஷூட்டிங்ல கலந்துக்குவார். அப்புறம் மேக்கப் கலைச்சுட்டு ரெண்டு மணி நேரம்ரெஸ்ட். திரும்ப சாயங்காலம் 4 டு 6 ஷூட்டிங்குக்காக ஆறு மணி நேரம் மேக்கப் போடணும்.இப்படி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மேக்கப் ரூம்ல ஆடாம, அசையாம உட்கார்ந்திருக்கணும். இத்தனைக்கும் 'பா’ பண்ணும் போது அமிதாபுக்கு வயசு 67. எல்லாரும் ரிட்டையர்ட்மென்ட் வாங்கிட்டு பேரக் குழந்தைகளோட விளையாடுற வயசுல, ஒரு மனுஷன் இப்படிக் கஷ்டப்படணும்னு என்னஅவசியம்? அந்த அசராத உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அமிதாப்!''

சீ.மணி, திருமெச்சூர்.

 '' 'என்ன ராம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கே... இது நல்லாவே இல்லையே’னு யாராவது உங்க கிட்ட சண்டை போட்டிருக்காங்களா?''

''நிறையக் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கு. ஆனா, ஒரேயடியா 'நல்லா இல்லை’னு யாரும் சொன்னது இல்லை. சமயங்கள்ல அந்தக் காட்சிகளில் உடன்பாடு இல்லாம இருந்திருக்காங்க. 'இந்த சீனுக்கு ஏத்த மூடுல லைட்டிங் இல்லை’னு சண்டை போட்டிருக்காங்க. 'அக்னி நட்சத்திரம்’ படத்தை திட்டமிட்டே வித்தியாசமா ஒளிப்பதிவு பண்ணியிருந்தோம். படம் பார்த்தவங்களில் 90 சதவிகிதம் பேருக்கு அதுபிடிச்சிருந்தது. ஆனா, சிலருக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலை. இப்படிக் குவியும் பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து பாடம் கத்துக்கிறது மட்டும்தான் என் வேலை!''

எஸ்.ரம்யா, சேலம்-3.

''''உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?''

 ''என் மனைவி சீதாதான் எனக்கு எல்லாம். என் முதல் விமர்சகர். உள்ளதை உள்ளபடி சொல்லிருவாங்க. என் மகள் ஸ்வேதாவும் அப்படித்தான். ஆனா, ஒரு விபத்தில் என் பொண்ணு இறந்தது என் குடும்பத்துக்குப் பேரிழப்பு. ஒரு முழு வருஷம் என்னை முடக்கிப் போட்ட துயரம் அது. என் மகள்இல்லாத இந்த ஒவ்வொரு நாளையும் நான் ஏதோ ஒரு இயலாமையோடுதான் கடந்துட்டு இருக்கேன். 'ஸ்வேதா’னா 'வெண்மை’னு அர்த்தம். அவ மறைவுக்குப் பிறகு வெள்ளை உடைகளை நிறைய அணியிறேன். என் மகன் கந்தா.... அவரும் ஒளிப்பதிவு துறையில் ஈடுபடுவதற்கான பயிற்சியில் இருக்கார்!''

- அடுத்த வாரம்...

“ஆஸ்கர் என்பது மாயை!”

 '' இந்தியில் முத்திரைப் பதித்த படங்களைக் கொடுத்தும், தொடர்ந்து ஏன் அங்கே பணிபுரியவில்லை?''

“ஆஸ்கர் என்பது மாயை!”

 '' 'யாவரும் நலம்’ படத்தில் கறுப்பு-வெள்ளை நிறங்களைத்தான் அதிகம் பயன்படுத்தி பயம் உண்டாக் கினீங்க. கறுப்பு-வெள்ளை நிறம் உங்களை எந்த விதத்தில் பாதிக்கும்?''

“ஆஸ்கர் என்பது மாயை!”

 'உங்களுக்குப் பிடித்த டாப்-5 தமிழ்ப் படங்கள் என்ன?''

- லைட்ஸ் ஆஃப்

“ஆஸ்கர் என்பது மாயை!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.