யட்சன்
##~##

பாரியின் எளிமையான திருமணம், ஊடகங்களுக்குச் சூடான செய்தி ஆயிற்று. அத்தனை பிரபல நட்சத்திரங்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். மூன்று நாள் அந்தமானில் தேன்நிலவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரும்பியதும், 'புத்தன்’ பட பூஜை. தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளில், பாரி - கயல்விழி.

மைசூரில் 'புத்தனி’ன் முதல்கட்டப் படப்பிடிப்பு. பாரியை எங்கே பார்த்தாலும், ரசிகர்கள் மொய்த்தார்கள். அவனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அலைமோதினார்கள்.

பாரி அன்றைய படப்பிடிப்பு முடிந்து, அறைக்குத் திரும்பினான்; தேவியிடம் போனில் பேசினான்; அயர்ந்து படுத்தான். திடீரென்று கதவு படபடவென்று தட்டப்பட்டது. யாரென்று புரியாமல் திறந்தான்; திகைத்தான்.

கலவர முகத்துடன் கயல்விழி! சட்டென்று அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். அழ ஆரம்பித்தாள்.

'பாரி, மன்னிச்சிரு.. இந்தப் படத்துல இனிமே நடிக்க முடியாது.. எங்கயாவது ஓடிப் போயிடப்போறேன்.'

'கயல்.. என்னாச்சு?'

'எங்கம்மான்னு சொல்வேனே... அது  உண்மையில அம்மா இல்ல! எடுத்து வளர்த்த சித்தி. இப்ப, அவங்க தம்பியும் வந்து ஒட்டிக்கிட்டாரு. அவங்க என்னை வெறும் ஏ.டி.எம். மெஷினாத்தான் பாக்கறாங்க. அடிமையா நடத்த றாங்க. அடிக்கிறாங்க. பாம்பேல இருந்து வந்திருக்காருல்ல, டான்ஸ் மாஸ்டர்... இந்திப் படத்துல சான்ஸ் வாங்கித் தருவாருன்னு, அவரை நைட் என் ரூமுக்கு வரச் சொல்லிருக்காங்க. இவங்களுக்காக எத்தனை பேரோட படுக்கறது பாரி? செத்துடலாம் போல இருக்கு.'

யட்சன்

'நீ இங்கேயே இரு...' என்று பாரி விருட்டென்று வெளியேறினான்.

பாரியைப் பார்த்ததும், கயல்விழியின் சித்தி 'வாங்க தம்பி...' என்று குழைந்தாள். 'என்ன சாப்பிடறீங்க? ஜூஸ் சொல்லவா..?'

அறையில் விஸ்கி வாசம். அவளும், மாமன் என்று சொல்லிக்கொண்டவனும் அவசரமாக பாட்டில்களை சோஃபாவுக்குப் பின்னால் தள்ளினார்கள்.

'தாஸ்.. சேட்டுகிட்ட வர வேணாம்னு சொல்லிரு.. பாப்பா ரூமுக்கு போன் போட்டு தம்பி வந்திருக்காருன்னு சொல்லு...' என்று முதலிரவு அறைக்குள் மகளை அனுப்புவது போல் சித்தி வெட்கப்பட்டாள்.

'சரி...' என்று எழுந்த மாமன்காரனை, பாரி தோளில் அழுத்தி உட்கார்த்தினான். பழைய பாரி அவனுள் தலைதூக்கினான்.  

'ஏய், பொண்ணை வச்சி வியாபாரமா பண்றீங்க... பொளந்துருவேன்.'

திடுக்கிட்டார்கள். மாமன் முதலில் சுதாரித்தான்.

'நீ யார்ரா அதைக் கேக்க?'

கேள்வியை முடிக்கும் முன் அவன் கன்னத் தில் பாரியின் புறங்கை பாய்ந்தது. மாமன் உருண்டான். பாரி அவனை மடக்கி முழங் காலுக்குக் கீழ் அழுத்திக்கொண்டு, அங்கிருந்த பாட்டிலை உடைத்து, அதன் கூர்முனையை அவன் கழுத்தில் பொருத்தினான்.

'சங்கறுத்துருவேன். இன்னொரு தடவை கயல் இருக்கற ஏரியால உங்களைப் பார்த்தேன்... ஆட்டம் க்ளோஸ்.'

'என்னப்பா இப்படிலாம் மிரட்டற..?' என்று குறுக்கில் பாய்ந்த சித்தியையும் தள்ளினான்.

அவன் கண்களில் சீற்றம்.

'ஒன்னையுந்தான். வெட்டிக் கூறுபோட்டுக் கொளுத்திருவேன்.. ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னாடி என் தொழிலே அதான்டி!''

அவன் குரலில் வெறி. அவர்கள் முகங்களில் கிலி. அறையை விட்டு வெளியேறும் முன் நின்றான். திரும்பினான்.

'போலீஸ்கிட்டப் போவியா... போ. எங்க போனாலும் எதையும் ஆட்ட முடியாதுடா வெண்ணை. மினிஸ்டரு, மீடியா, மாஸுனு எல்லாம் என் பக்கம்தான்.' என்று உறுமினான்.

காலையில், படப்பிடிப்பு தொடங்க ஏற் பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பாரியுடன் சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தாள் கயல்விழி.

''நீ மட்டும் அவசரப்பட்டுக் கல்யாணம் பண் ணிக்காம இருந்திருந்தா, உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்...'' என்றாள் ஆதங்கத்துடன்.

''இப்ப என்ன கெட்டுப்போச்சு? அத்தனைப் படத்திலயும் சொல்லிக்கோ...'' என்று சிரித்தான் பாரி. சித்தியும் மாமாவும் பெட்டிகளோடு எதிர்ப்பட்டார்கள்.  

''அவங்க அக்காவுக்கு ஹார்ட்அட்டாக்னு யூனிட்ல சொல்லிட்டுக் கிளம்பறாங்க. புரொடி யூசர்கிட்ட ரெண்டு லட்சம் வாங்கிக் குடுத் தேன்...' என்றாள் கயல்விழி.

''எதுக்கு?''

''திரும்பி வராம இருக்கறதுக்கு...''

பாரி எழுந்தான். மாமன் தோளில் கை போட்டு, கார் வரை நடந்தான்.

'மறுபடியும் கயலைத் தொந்தரவு பண்ணா, எப்ப, எங்க, யார் உங்களை வெட்டிப் போடு வாங்கன்னு தெரியாது...' என்று அடிக்குரலில் மிரட்டினான்.

சித்தி வன்மம் பொங்க, 'நல்லா இரு தம்பி.' என்றாள்.

குறுகியகாலத் தயாரிப்பான 'புத்தன்’  நான்கே மாதங்களில் வெளியானது. இன்னொரு சூப்பர் ஹிட்!

பாரி தன் தேவைகளைக் குறுக்கி, பெற்ற ஊதியத்தில் பெரும்பகுதியைக்கொண்டு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென ஓர் அறக்கட்டளை தொடங்கினான். சாவித்திரி, சந்தோஷமாக அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டாள்.

ண்ணா மேம்பாலத்தில் காரைச் செலுத்தியபடி வெளியே பார்த்தான், செந்தில்.

'புத்தன்’ 50-வது நாளை அறிவிக்கும் சுவரொட் டிகள்.

''ஜெயிச்சிட்டே இருக்கான்ல? அவனை நான் சந்திக்க வேண்டிய நேரம் வந்தாச்சு தீபா...' என்றான் இறுக்கமான முகத்துடன்.

  - தடதடக்கும்...