Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ற்காட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் நண்பன் முகுந்தனைப் பார்க்கச் சென்றிருந்தபோது முகுந்த னின் ஆறு வயது மகள் சொன்னாள், 'சிலுவையில தொங்குற யேசு தாத்தாவைவிட பரிசும் முத்தமும் குடுக்குற கிறிஸ்துமஸ் தாத்தாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்கே பாருங்க... யேசு தாத்தா அப்பாவி ஆட்டுக் குட்டி மாதிரிதான் இருக்காரு. ஆனா, கிறிஸ்து மஸ் தாத்தாவைப் பார்த்தா எனக்கு மான் குட்டி ஞாபகம்தான் வரும்!’ அவள் சொன்னது சரிதான். அவ்வளவு துயரப்பட்ட கடவுளின் கரங்களை வலுப்படுத்த வந்த, எவ்வளவு சந்தோ ஷமான இறைக் கிழவர் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா!

சிறு வயதில், எனக்கு கிறிஸ்துமஸ் தினத்தோடும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களோடும் பெரிய பரிச்சயம் இல்லை. அக்கா சர்ச்சுக்கு போய்விட்டு வந்து ஒரு கேக் துண்டை நீட்டுவாள். பல் துலக்காமல், குளிக்காமல் அதை அப்படியே சாப்பிடுவேன். அப்போது அக்கா ஒரு வேத வசனத்தை சொல்லி, தலையில் ஒரு கொட்டும் வைப்பாள். அதோடு கிறிஸ்துமஸ் தினத்தின் மீதிருந்த வசீகரம் வடிந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கல்லூரிக்கு வந்த பிறகுதான் அந்த நாளின் பிரமாண்டமும் பேருண்மைகளும் நண்பர்களால் எனக்குள் விரியத்தொடங்கியது. எத்தனை நண்பர்கள், எத்தனை தேவாலயங்கள், எத்தனை மெழுகுவத்திகள், எவ்வளவு ஜெபம், எவ்வளவு காதல், எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு சண்டைகள். அன்றைய நாளில் என்னைத் தேடிவந்து கைக்குலுக்கி வாழ்த்துச் சொல்கிற எத்தனையோ கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் முகமூடி பொதிந்த சித்திரம், நிறைய நாட்களுக்கு அடி நெஞ்சில் ஆழமாகப் போட்டுவைத்த கூழாங்கற்களாக உருண்டுகொண்டு கிடக்கும்.

மறக்கவே நினைக்கிறேன்

'தங்க மீன்கள்’ படப்பிடிப்புக்காக மாதக்கணக்காக நாகர்கோவிலில் தங்கியிருந்தபோது அண்ணன் ஸ்டாலின் ஃபெலிக்ஸ் மார்த்தாண்டத்துக்கு அருகில் உள்ள தன் கிராமத்துக்கு ஒரு கிறிஸ்துமஸ் தினத்துக்கு அழைத்துப் போயிருந்தார். அங்கு எல்லாருடைய வீட்டிலும் ஒரு நட்சத்திரம், ஒரு குடில், ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா என்று மொத்த ஊரையும் பார்த்தபோது, பால் குடிக்கும் கன்னுக்குட்டியின் மூக்கைத் தொட்டுவிட்ட ஒரு குழந்தையின் குறுகுறுப்பு ஓடியது எனக்குள். சுற்றுவட்டார மக்கள் அனைவரும் அந்த இரவில் தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக கிறிஸ்துமஸ் குடில் பார்க்கப்போகிறார்கள். எல்லா ஊர்களிலும் தெருவெங்கிலும் ஆடியபடி நிற்கும் எத்தனையோ கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஓடிவந்து கட்டியணைத்து எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்கிறார்கள். கூடவே சேர்ந்து நடனமாடுகிறார்கள்.

ஸ்டாலின் ஃபெலிக்ஸ் அண்ணனின் தலைமுடியை ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா அண்ணனுக்குத் தெரியாமல் வந்து கலைத்துவிட்டு, தன் முகமூடியைப் பிடித்துக்கொண்டு ஓடினார். ஓடுகிற கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சும்மா நின்ற அண்ணனிடம் கேட்டேன்.

''எதுக்குண்ணே அந்த கிறிஸ்துமஸ் தாத்தா உங்க முடியைக் கலைச்சிட்டு ஓடுறார்?''

''ஒருவேளை அந்த கிறிஸ்துமஸ் தாத்தா என்கூட நல்லாப் பழகிய பள்ளித் தோழனாகவோ, கல்லூரித் தோழனாகவோ  இருக்கலாம். அதான் அப்படிவந்து விளையாடிவிட்டுப் போறார்!’

''நீங்க போய் யார்னு பாக்கலையா?''

''ஐயையோ... பார்க்கக் கூடாது. இன்னைக்கு இங்கே இருக்கிற எந்த கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடியைத் தூக்கிப் பார்த்தாலும் இந்த ராத்திரி பொய்யாகிடும். ஒரு வேளை அந்த கிறிஸ்துமஸ் தாத்தா என் நண்பனா இல்லாம, எனக்குப் பிடிக்காத, நான் வெறுக்கிற ஒரு ஆளா இருந்துட்டா...''

''இருந்துட்டா?''

அண்ணன் சொன்ன அந்த 'இருந்துட்டா’ என்ற வார்த்தையில்தான் என் பல கிறிஸ்துமஸ் இரவுகள் வேக வேகமாக முட்டிக்கொண்டு உருண்டு புரண்டன. அதில் எனக்கு மட்டும் பிரத்யேகமாக தன் முகமூடியைக் கழட்டிக் காட்டிய ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகம் டிசம்பர் மாத குளிராகப் புத்திக்குள் ஊடுருவியது.  

அந்த நொடியிலேயே கசியத் தொடங்கியது ஒரு காதலின் துயரம்!

தீபாவளிக்கு முந்தைய இரவா... புஷ்பலதா ஞாபகம். பொங்கலுக்கு முந்தைய இரவா... அதுராஜிக்கு. ரம்ஜானுக்கு முந்தைய இரவா... நிச்சயம்பாத்தி மாவின் ஞாபகம் வந்துவிடும். கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவென்றால் சொல்லவே வேண் டாம்... அன்று முழுக்க ஜோவின் ஞாபகம்தான். ஆனால், ஞாபகம் ஞாபகமாகவே இருந்து யாருக்கும் தெரியாமல் மூச்சுக் காற்றாக மாறி, நுரையீரலுக்குள் போய் தங்கிவிட்டால் பரவா யில்லை. அது ஒரு இளையராஜா பாடலாக மாறி கண்ணுக்குத் தெரிவதைப் போல காற் றில் மிதக்கும்போதுதான் பிரச்னை தொடங்கு கிறது. அப்படித்தான் ஒரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் என் வாழ்க்கையைப் பெரிய போர்க்களமாக்கிவிட்டு, ஒரு வருஷ மாகக் காணாமல்போன ஜோவைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றியது. ஜோ-வைப் பார்க்க வேண்டுமென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வரை போய் வர வேண்டும். அங்குதான் இருந்தது ஜோ-வினுடைய கிராமம். துணைக்கு நண்பனையும் அழைத்தேன்.

மறக்கவே நினைக்கிறேன்

''என்னன்னு தெரியலடா... உடனே பாக்கணும் போல இருக்கு. இன்னைக்குக் கண்டிப்பா சர்ச்சுக்கு வருவா. ஒரு ஓரமா நின்னு கூட்டத்தோடு கூட்டமாப் பார்த்துட்டு வந்துரலாம்... வாடா!''

''எவ்வளவோ பிரச்னை நடந்துருக்கு. இப்போ அவ எப்படி இருக்காளோ... என்ன ஆச்சோ? நல்ல நாளும் பொழுதுமா அவங்கக்கிட்ட போய் மாட்டிக்கணுமா? சிக்குனா, நம்ம தலை தான் அவனுங்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் பார்த்துக்கோ..!''

நான் தனியாகவே கிளம்பிவிட்டேன். பிறகு, வேறு வழியில்லாமல் பின்னாடியே ஓடிவந்து சேர்ந்துகொண்டான் நண்பன். வந்த வன் சும்மா வரவில்லை. இரண்டு கத்திகளை கைவசம் எடுத்துவந்திருந்தான்.

''இது எதுக்குடா?''

''டேய் பண்டிகை ராத்திரி போறோம். எல்லாப் பயலும் போதையிலதான் இருப்பானுங்க. ஒரு பாதுகாப்புக்கு இருக்கட்டும். வெச் சுக்கோ...'' என்று, அவன் இடுப்பில் ஒன்றும் என் இடுப்பில் ஒன்றும் செருகிவைத்தான். இப்போது புத்திக்குள்ளும் தைரியமாக ஒரு கத்தி பளபளக்க, நடு இரவில் நாங்கள் அந்த ஊரில் போய் இறங்கினோம். ''மச்சான் பார்த்தவுடனே கௌம்பிடணும்... அங்கே நின்னு டூயட் பாடணும்னு அடம்பிடிச்சே, என் இடுப்புல இருக்கிற கத்தி உனக்குத்தான்.'' என்று தேவாலயத் தின் வழியை சரியாகக் கண்டுபிடித்துக் கூட்டிப் போனான்.

அந்தச் சின்ன ஊருக்கு அது பெரிய தேவாலயம்தான். தேவாலயம் முழுவதும், 'மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்... ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்...’தான் கேட்டுக்கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் தேவாலயத்துக்கு வந்துகொண்டே இருந்தார்கள். தேவாலயத்தின் பிரதான வாசலில், கிறிஸ்துமஸ் தாத்தா எல்லாருக்கும் பரிசுகளைக் கொடுத்தபடியும் வாழ்த்துகளை சொன்னபடியும் மக்களைப் பரிவோடு தேவாலயத்துக்குள் அனுப்பிக்கொண்டிருந்தார். நாங்கள் அவருக்கு எதிரே உள்ள இன்னொரு வாசலில், அப்பாவி தேவ பிள்ளைகளைப் போல நின்றுகொண்டிருந்தோம். எங்களைக் கடந்து குழந்தைகள், பெண்கள் என எல்லாரும் பலூன்களைப் பறக்கவிட்டபடி போய்க்கொண்டிருக்க, கத்தியோடு நிற்கும் எங்கள் உடல் அப்படி நடுங்கியது. நாங்கள் அதைக் குளிருக்கு நடுங்குவதாக நம்பி தொடர்ந்து நடுங்கவிட்டோம்.

நேரம் செல்லச் செல்ல அந்த ஊரில் எல்லாரையுமே பார்த்துவிட்ட மாதிரி இருந்தது. ஆனால், ஜோ மட்டும் கண்ணில் அகப்படவில்லை. ஒரு விடிவெள்ளியைப் போல ஒருமுறை தூரத்தில் அவள் தெரிந்தால்போதும். பார்த்துவிட்டு நாங் கள் கிளம்பிவிடுவோம். ஆனால், அவள் தெரிய வில்லை. 'மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்... ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்’

மிகச் சரியாக 12 மணிக்கு அந்த தேவாலயத்துக் குள் பாலகன் யேசு பிறந்துவிட்டார். மக்களின் பிரார்த்தனைக் குரல் வலுக்கக் கேட்டது. அந்த நேரத்தில்தான் யாரோ எங்களை அழைப்பதும் எங்களுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தால், கிறிஸ்துமஸ் தாத்தா.

''மகிழ்ச்சியின் குழந்தைகளே... உங்களை ரட்சிக்கவே, இதோ பரலோகத்தில் இருந்து பாலகன் அவதரித்திருக் கிறார். வாருங்கள்... எல்லாரும் அவரை  மகிழ்ச்சியுடன் வரவேற்போம். மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்... ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்'' என்று சாக்லேட்டுகளை அள்ளி, கைகளில் திணித்தார். நண்பன் அவருக்குக் கைக்குலுக்கி, 'ஹேப்பி கிறிஸ்துமஸ்’ சொன்னான். அவர்  சிரித்தார்.

''ஏன் இப்படி வெளியே நிற்கிறீர்கள்? வாருங்கள், வந்து எல்லோருக்குமான பிரார்த்தனையில் கலந்துகொள்ளுங்கள்!'' எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஏற்கெனவே பழக்கப்பட்டவரைப் போல தேவாலயத்துக்குள் அழைத்தார். அந்த நேரத்தில் அவரிடமிருந்து  தப்பிப்பதற்காக, 'நாங்கள் ஒரு நண்பருக்காகக் காத்திருக்கிறோம். அவர் வந்ததும் வருகிறோம்’ என்று சொல்லித் தப்பிக்க முயன்றோம். ஆனால், தாத்தா எங்களை விட்டபாடில்லை. ''எல்லாரும் உள்ளேதான் இருக்கிறார்கள். நீங்கள் தேடுகிற, நான் தேடுகிற நண்பராய் கர்த்தர் உள்ளேதான் இருக்கிறார்... வாருங்கள்'' என்றபடி என் கைகளை இன்னும் அழுத்தினார் தாத்தா. அந்த அழுத்தம்  நெருக்கமான ஒருவர் வாஞ்சையோடு தரும் அழுத்தத்தைப் போலிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.

மறக்கவே நினைக்கிறேன்

''மாப்ள நீ போ... அப்படியே உள்ளே ஒரு ரவுண்ட் பாத்துட்டு, உடனே வெளியே வந்துரு. நான் வெளியே வெயிட் பண்றேன்'' என்று நண்பன் கண்ஜாடை காட்ட, நான் கிறிஸ்துமஸ் தாத்தாவோடு தேவாலயத்துக்குள் நுழைந்தேன். உண்மையாகவே உள்ளே பாலகன் யேசு பிறந்த தைப் போலிருந்தது மக்களின் பரவசம்.  அந்தப் பரவசத்தைப் பார்க்கும்போது, இடுப்பில் இருந்த கத்தி இதயத்துக்கு இடம் மாறியதைப் போல் இருந்தது எனக்கு.  கிடைத்த கொஞ்ச நேரத்தில் எல்லாத் திசைகளிலும் ஜோ-வைத் தேடினேன். என் பின்னாடி இருந்த கிறிஸ்துமஸ் தாத்தா நான் யாரையோ தேடுகிறேன் என்பதைப்புரிந்து கொண்டவரைப் போல என்னை அழைத்து, உள்ளே ஒரு திசையை நோக்கி கைக்காட்டிப் பார்க்கச் சொன்னார்.

அந்தத் திசையில் பாலகனாகப் படுத்திருக்கும் யேசுவுக்கு முன் முழங்காலிட்டு முழு மாதக் கர்ப்பிணியாக ஒரு பெண் கண்ணீர் சிந்தி  ஜெபித்துக்கொண்டு இருந்தாள். கிறிஸ்துமஸ் தாத்தா என்னை உற்றுப் பார்த்தார். நான் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தேன். அவள்... நான் தேடிவந்தஜோ!

கண்களை மூடியபடி ஓர் உக்கிரமான 'விடுதலையின்’ ஜெபத்தில் இருந்தாள்.

''மாரி எப்படி இருக்க?'' என்று கிறிஸ்துமஸ் தாத்தா அப்போது தன் முகமூடியைக் கழட்டினார். எனக்கு அவரை ஏற்கெனவே தெரியும். அவர் ஜோ-வின் தாய் மாமா. முன்பே என்னோடு பேசியிருக்கிறார். ஒருமுறை தேநீர்கூட அருந்தியிருக்கிறார். ஜோவும் நானும் பிரியும்போது அவர்தான் சாட்சியாக இருந்தார். ஜோ-வை இதே சர்ச்சில்வைத்துத் திருமணம் செய்துகொண்டவரும் அவரேதான். தலையைக்குனிந்து கொண்டு நின்றேன். என் கைகளைப் பிடித்துக் குலுக்கி அழுத்தமாக 'ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்றார். கண்ணீர் முட்ட நானும் 'ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்றேன். சின்னச் சிரிப்போடு முகமூடியை மாட்டிக்கொண்டு எதுவும் சொல்லாமல் கிறிஸ்துமஸ் தாத்தாவாக விலகிப் போனார்.

அந்த முகம், அந்தச் சிரிப்பு, அந்த வாழ்த்து, அந்த ஆசீர்வாதம், அந்த ஜெபம், அந்த இரக்கம், அந்தக் காதல் என எல்லாமே, இதயத்துக்கு அருகிலே பதுங்கியிருந்த கத்தியை ஒரு நொடியில் இதயத்துக்குள்ளாகவே பாய்ச்சிவிட்டது. அப்படியே அங்கிருந்து சத்தம் இல்லாமல்  வெளியேறிவிட்டேன்.

வெளியே காற்றில் தெளிவாகக் கேட்டது, ஜோ எப்போதோ என்னிடம் சொன்ன வார்த்தைகள்...

'நான் எப்போது மண்டியிட்டு ஜெபித்தாலும், அது உனக்கு மட்டுமாகத்தான் இருக்கும் மாரி!’

- இன்னும் மறக்கலாம்...