Published:Updated:

நான் இப்ப நிருபர்!

- வஸந்த்மன்மோகன் சிங்கின் பலம்... பலவீனம்..! பட்டியலிடுகிறார் ப.சிதம்பரம்

நான் இப்ப நிருபர்!

- வஸந்த்மன்மோகன் சிங்கின் பலம்... பலவீனம்..! பட்டியலிடுகிறார் ப.சிதம்பரம்

Published:Updated:
நான் இப்ப நிருபர்!

 'நீங்க இப்போ நிருபர். எந்தப் பிரபலத்தை பேட்டியெடுக்க ஆசை!’- இயக்குநர் வஸந்திடம் கேட்டோம்...

''என் சாய்ஸ், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான். 'சிதம்பரம் பட்ஜெட்’னு இன்னிக்கு உலகமே இவர் பட்ஜெட்டைப் புகழ்ந்துட்டு இருக்கு. அவ்வளவு திறமை வாய்ந்த நம் நிதியமைச்சரை நான் பேட்டி எடுக்கணும்!'' என்றார் வஸந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாஸ்திரி பவன் எதிரில் இருக்கும் தன் வீட்டு ஹாலில்  பச்சை நிற சோபாவில் வீற்றிருந்தார் ப.சிதம்பரம். பின்னால், காலைத் தூக்கி நடனமாடும் சிதம்பரம் நடராஜர் சிலை... பக்கவாட்டில் தஞ்சாவூர் கிருஷ்ணர் ஓவியம்... எதிரே ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியுமாக நிற்கும் மெட்டல் ஓவியம் என்று ஹால் முழுக்க ஒரே கலை வாசனை. மாடி வராந்தாவில் மாலையுடன் இருந்த பெரிய ராஜீவ் போட்டோதான், அது அரசியல்வாதி ஒருவரின் வீடு என்பதை உறுதிசெய்தது.

##~##

வரவேற்புப் படலங்கள் முடிந்து ஆபீஸ் செல்வதற்காக கையில் பிரீஃப்கேஸுடன் மகன் கார்த்தி, கூடவே மெடிக்கல் காலேஜுக்கு ரெடியாக... மருமகள் ஸ்ரீநிதி. ''கோர்ட்டு நேரமாச்சு'' என நளினி சிதம்பரமும் படி இறங்க... பேட்டி ஆரம்பமானது.

''நீங்க ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் படிச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கே என்ன படிச்சீங்க? உங்க சின்ன வயசுப் படிப்பெல்லாம் எங்கே?''

''என் படிப்பு ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பிச்சது. என் சொந்த ஊரான கண்டனூர்ல சித்தாலாட்சி பள்ளிக் கூடம்னு பேரு... மூணு மாசம்தான் அங்கே படிச்சேன். அப்புறம் சென்னையில் பள்ளிப் படிப்பு. லயோலாவில் பி.யூ.சி. முடிச்சதுமே பிரசிடென்ஸியில் பி.எஸ்சி., புள்ளி விவரவியல். அப்புறம் இரண்டு வருஷம் சட்டக் கல்லூரிப் படிப்பு. அப்புறம்தான் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் இரண்டு வருஷம் பிசினஸ் படிப்பு!''

''நீங்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்னு சொல்றாங்க. உங்க குடும்பத்தைப் பத்திச் சொல்லுங் களேன்?''

''செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரோட பேரன் நான். என் அம்மாவோட அப்பா தான் அவர். எனக்கு ரெண்டு அண்ணன்கள், ஒரு தங்கச்சி. 'இலக்கிய சிந்தனை’ அமைப்போட அறங்காவலரா இருக்கிறாரே ப.லட்சுமணன்னு... அவர் ஒரு சகோதரர். இன்னொருத்தர் மூணு வருஷம் முன்னே இறந்துட்டார். என்னைத் தவிர, வேற யாரும் அரசியலுக்கு வரலை. எல்லோருமே பிசினஸ்தான்!''

நான் இப்ப நிருபர்!

''உங்கள் திருமணம் காதல் திருமணம்னு சொல்றாங்க. எங்கே சந்திச்சீங்க உங்க மனைவியை..?''

''அவங்களை நான் சந்திச்சது சட்டக் கல்லூரியில். எனக்கு ஒரு வருஷம் அவங்க ஜூனியர். பிடிச்சிருந்தது... கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இருபத்தெட்டு வருஷமாச்சு அது நடந்து... கடந்த ஜனவரியில் என் பையன் கார்த்தி-ஸ்ரீநிதி கலப்புத் திருமணம் நடந்தது. என் விருப்பம் என்னன்னா இந்தக் காதல் என்ற விஷயம் இல்லாமல்கூட கலப்புத் திருமணங்கள் நிறைய நடக்கணும் நம்ம நாட்டுல.''

''சாதிகளை ஒழிக்க இந்த மாதிரி திருமணங்களால்தான் முடியும். ஆனா, குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கிறப்போ முதல்ல சாதியைத்தான் கேட்கிறாங்க. இப்படி ஸ்கூல்லயே சாதியைக் கேட்டா சாதி எப்படி ஒழியும்?''

''சாதியை இப்போதைக்கு ஒழிக்க முடியாது வஸந்த். சாதியை ஒழிக்கணும்னா காலேஜ், வேலைவாய்ப்பு மாதிரியான இடங்களில் ஒதுக்கீடு முறையை முதல்ல ஒழிக்கணும். ஆனா, இன்னிக்குச் சமுதாயத்தில் ஒதுக்கீடு ரொம்பத் தேவை. அது, தவிர்க்க முடியாதது!''

''ஏன் சார் இதையே பொருளாதாரரீதியா முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள்னு பிரிச்சு ஒதுக்கீடு பண்ணலாமே?''

''இந்தியச் சமுதாயத்தின் வரலாறு தெரியாதவங்க பேசற பேச்சு இது. இதெல்லாம் வெறும் கவர்ச்சிகரமான வாதம்தானே ஒழிய, இந்தியாவைப் பொறுத்தமட்டில் சாதிதான் வர்க்கம்... வர்க்கம்தான் சாதி! நாம விரும்பி  னாலும் விரும்பாவிட்டாலும் உண்மை அதுதான். ஆனா, இது மாறணும்னுதான் நானும் விரும்பறேன்!''

''நாட்டுக்கே நீங்க பட்ஜெட் போடறீங்க. உங்க வீட்ல யாரு சார் பட்ஜெட் போடறது?''

''உண்மையைச் சொன்னா, எங்க வீட்ல யாருமே பட்ஜெட் போடறதில்லை. எங்க குடும்பம் பிசினஸ் சம்பந்தப்பட்டது. பல்வேறு வருமானம். அதனால் செலவுகளுக்கு யாரும் எப்பவும் கணக்குப் பார்த்தது இல்லை. சிக்கனமாச் செலவழிக்கணும்கிற எண்ணம் மட்டும் மனசுல இருக்கும். அவ்வளவுதான். என் வாழ்க்கையில் நான்  ரெண்டு, மூணு வருஷம் வேணும்னா வீட்டுக்காக பட்ஜெட் போட்டிருப்பேன். அதுவும்கூட நான் காதல் கல்யாணம் செஞ்சுட்டு என் மனைவியோட தனிக்குடித்தனம் இருந்தப்போ. அப்போ தி.மு.க. கவுன்சிலரா இருந்த நல்லதம்பியோட ஷெனாய் நகர் வீட்டு மாடியிலதான் குடியிருந்தோம். மாசம் ஆயிரம் ரூபா மட்டும் என் வீட்டுல இருந்து வாங்கி, அதுக்குள்ளே கணக்குப் பண்ணிச் செலவழிப்பேன். வீட்டு வாடகை 400 ரூபா... வீட்ல வேலை செய்றவங்களுக்கு 100 ரூபா... பெட்ரோலுக்கு 100 ரூபா... பாக்கி 400 ரூபா, எங்க ரெண்டு பேரோட சாப்பாட்டு செலவுக்குன்னு துண்டு விழாத பட்ஜெட் அது!''

நான் இப்ப நிருபர்!

''ஒரு வக்கீலான உங்க அரசியல் பிரவேசம் எப்போ, எப்படி நடந்தது?''

''நான் அரசியல்ல அடியெடுத்துவெச்சது இந்திய அரசியலே பரபரப்பா இருந்த நேரத்தில்! காங்கிரஸ் ரெண்டாப் பிளவுபட்டு இ.காங்கிரஸ் உருவாகியிருந்த நேரம் அது. நம்ம சி.எஸ்-தான் அகில இந்திய இடைக்காலத் தலைவரா இருந்தார். அவரோட எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் மூலமா நானும் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தேன். ஏற்கெனவே பேச்சில் எனக்கு ஆர்வம் இருந்ததால், காங்கிரஸ் கூட்டங்கள் நடக்கிற இடங்களுக்கு எல்லாம் போய் நின்னு கேட்பேன்.

தமிழ்நாட்டிலயும் காமராஜர் தலைமையிலே ஒரு கட்சியும் சி.எஸ்., பக்தவத்சலம் தலைமையில் இன்னொரு கட்சியுமா காங்கிரஸ் பிரிஞ்சு ரொம்பப் பரபரப்பா இருந்த பீரியட் அது. இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிறைய மீட்டிங் போடுவோம். இப்படித்தான் ஆரம்பிச்சது என் அரசியல் வாழ்க்கை. அப்புறம் நான் மாநகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர், தலைவர்னு ஆரம்பிச்சு மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொதுச் செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைச் செயலாளர்னு மெள்ள வளர்ந்து, தொழில் துறை அமைச்சராகி இன்னிக்கு நிதி அமைச்சர்னு வளர்ந்திருக்கேன். கட்சியில் சேர்ந்து அது ஆச்சு இருபத்தியெட்டு வருஷம்!''

''நிதி நிறுவனங்கள் திவாலாகிறதும் மோசடி பண்றதும் இன்னிக்கு ரொம்பச் சர்வசாதாரண மாகிட்டு வருது. வாழ்க்கைபூரா கஷ்டப்பட்டுச் சேமிச்ச பணத்தை ஒரே நாள்ல நிதி நிறுவனங்கள் இப்படி விழுங்குறதைத் தடுக்க என்ன பாதுகாப்பு இருக்கு?''

''இப்போ நான் கேக்கிறேன்... அதிக வட்டி வேணும்னு ரிஸ்க் எடுக்கிறது யாரு? பொது மக்கள்தானே? கையில் இருக்கிற பணத்தை அப்படியே பேங்க்கில் போட்டுட்டு அது தர்ற நியாயமான வட்டியை வாங்கிட்டு இருக்கிற ஜாக்கிரதை மனுஷங்களும் இருக்காங்க. கொஞ்சம் தைரியமானவங்க ஃபிக்சட் டெபா சிட், யூனிட் டிரஸ்ட்னு போறாங்க. இன்னும் தைரியமானவங்க கொஞ் சம் அதிக வட்டி எதிர்பார்த்து சுந்த ரம் ஃபைனான்ஸ், சோழ மண்டலம்னு நல்ல பேரோட இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்ல போடுறாங்க. சிலர்தான் ரொம்பப் பேராசைப்பட்டு எக்கச்சக்கமா வட்டி தர்றாங்கன்னு பேர் தெரியாத நிறுவனங்கள்ல எல்லாம் முதலீடு பண்றாங்க. அதுக்கும் மேல ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கிறவங்க சினிமாவுக்குக் கடன் தர்றாங்க. எவ்வளவு அதிகமா வட்டி எதிர்பார்க்கிறாங்களோ... அந்த அளவுக்கு ரிஸ்க்கும் இருக்கும். இது ஒரு எளிமையான பாடம். இதுகூடவா மக்களுக்குத் தெரியாது?''

''பட்ஜெட்டெல்லாம் முடிஞ்ச பிறகு திடீர்னு பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறுது. ஏன் சார் அப்படி? சமீபத்தில் தி.மு.க. மாநாட்டுலகூட பெட்ரோலியப் பொருட்களை விலையேற்றுவதைத் தவிர்த்துவிட்டு, வேறு நிதி ஆதாரங்களைப் பரிசீலிக்கும்படி கேட்டிருக்காங்களே?''

''முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கங்க... பெட்ரோலியத் துறைக்கு என்று எப்போதுமே தனி வரவு, செலவுக் கணக்கு உண்டு. எப்படி ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, கச்சா இரும்பை வாங்கி சுத்தப்படுத்தி விற்று லாபம் சம்பாதிக்கிறதோ... அதேபோல் இது இண்டியன் ஆயில் கார்ப்பரேஷனோட தனி வியாபாரம். அது நாட்டின் வரவு, செலவு பட்ஜெட்டோடு சேராது.

பெட்ரோலியப் பொருட்கள்ல, பெட்ரோலை மட்டுமே அதன் ஒரிஜினல் விலையைவிட அதிகமாக விற்று, அந்த லாபத்தில் மற்ற பெட்ரோலியப் பொருட்களை அதன் ஒரிஜினல் விலையைவிடக் குறைவாக விற்போம். அதில் விழுகிற துண்டு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு 30 கோடி ரூபா. அதாவது இன்னிக்கு நீங்க ஒரு கேஸ் சிலிண்டரின் விலையில் 70 ரூபாயைக் கழிச்சுட்டுத்தான் பணம் தர்றீங்க... அந்த 70 ரூபாயை உங்களுக்காக அரசு தருது. அதே மாதிரி ஒரு லிட்டர் டீசல் வாங்க ஒரு ரூபா 79 காசு, மண்ணெண்ணெய்க்கு ஏழு ரூபா அரசு தருது. என்ஆச்சர்யம் என்னன்னா, 'பெட்ரோலியப் பொருட்கள் விலையை அதிகப்படுத்த வேண்டாம்’னு தி.மு.க. அரசு என்னைக் கேட்பதுதான். காரணம், அவங்க கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மத்திய பெட்ரோலிய அமைச்சர். பெட்ரோல் விலையைக் குறைப் பதற்கு மாற்றுவழியை பெட்ரோலியத் துறை அமைச்சர்தான் சொல்ல வேண்டும். அவர்கள் தரும் எந்த மாற்று நிதி ஆதாரங்களையும் நான் பரிசீலிக்க ரெடி!''

நான் இப்ப நிருபர்!

''காங்கிரஸ் கட்சியில் நரசிம்மராவ் தலைமையில் நீங்க அமைச்சரா இருந்ததுக்கும், இப்போ ஐக்கிய முன்னணியில் அமைச்சரா இருக்கிறதுக்கும் வித்தியாசங்களை ஃபீல் பண்றீங்களா?''

''நிச்சயம் பெரிய வித்தியாசம். நரசிம்மராவ் காலத்தில், அது ஒரு கட்சி அரசு. அதில் யார் மேலிடம், நம்ம இடம் எதுன்னு தெளிவான ரூட் இருந்தது. அதில் பிரதமரும் காங்கிரஸ் கட்சித் தலைவரும்தான் உச்சத்தில் இருப்பார்கள். அரசுரீதியாகப் பிரதமர் என்ன முடிவு எடுத்தாலும், அதுதான் அரசியல்ரீதியான முடிவும். ஆனால், இப்போது அப்படி இல்லை. இதில் 13 கட்சிகளின் கூட்டாட்சி. அரசுரீதியாகப் பிரதமர் ஒரு முடிவு எடுக்கும்போது சரிப்பட்டு வரவில்லை எனில், 'முடியாது’ என்று நான் வெளியில் வந்துவிடலாம். அதேபோல அன்னிக்குக் கட்சித் தலைவர், பிரதமர்னு சில மேல்மட்டத் தலைவர்கள்கிட்டே பேசி சட்டுனு ஒரு முடிவு எடுக்க முடிந்தது. ஆனா, இன்னிக்கு நம்ம கருத்தை பிரதமர்கிட்டே மட்டும் பேசி முடிவு பண்ணிட முடியாது. அதை வெற்றி பெறச் செய்ய, நிறைய வாதப் பிரதிவாதங்கள் செய்ய வேண்டியிருக்கு. ஏன்னா, 13 கட்சிகள், 13 கொள்கைகள்! ஆனா, எனக்கொண்ணும் இதுவரை பெரிய தடைனு வந்தது இல்லை. ஒரு வேளை, பெரிய தடையா வந்திருந்தா, நான் இதில் இருந்திருக்கவே மட்டேன்!''

''உங்களைக் கவர்ந்த நிதியமைச்சர் யார்?''

''சந்தேகம் இல்லாம டாக்டர் மன்மோகன் சிங்தான். மத்த நிதியமைச்சர்கள் எல்லாம் தங்களுக்குனு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கிட்டு அதுக்குள்ளேயே நடை போட்டப்போ, மன்மோகன் சிங், 'என் பாதையே வேற’னு காட்டினவர்!''

''அவர் அரசியல்வாதியா இல்லாம இருந்ததுதான் அதுக்குக் காரணமா?''

''அவர் அரசியல்வாதி இல்லேங்கறது அவருக்கு ஒருவகையில் பலம்... ஒரு வகையில் பலவீனம். அவர் ஒரு பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விவரிச்சா, விஷயம் தெரிஞ்ச ஒரு நிபுணர் சொல்றார்னு எல்லாருமே மறுப்பு சொல்லாம எடுத்துப்பாங்க. அது அவரோட பலம். ஆனா, தான் சொல்ற திட்டங்கள் எல்லாமே உடனே நிறைவேறும்னு அவர் நம்பறது அவரோட பலவீனம். இன்னிக்கு இருக்கற ஆட்சி முறையில் இந்தத் திட்டங்களுக்கு எத்தனையோ எதிர்ப்புகள் வரும். அதை எத்தனையோ சக்திகள் கலைக்க வரும். அதை எல்லாம் எதிர்நோக்கி சாம, தான, பேத, தண்ட முறைகளை எல்லாம் கையாண்டுதான் அதை நிறைவேத்தணும். அரசியல் தொடர்பு இல்லாத வெறும் பொருளாதார நிபுணர் என்பதால், இதெல்லாம் அவருக்குப் பழக்கம் இல்லை... இது அவர் பலவீனம்!''

''உங்க மகன் பத்தி..?''

''ஒரே மகன். கேம்பிரிட்ஜ்ல சட்டம் படிச்சான். ஆனா, வக்கீலாக அவனுக்கு இஷ்டமில்லை. இப்போ எங்க குடும்பத்துக்குச் சொந்தமான டெக்ஸ்டைல், எஸ்டேட் பிசினஸ் பார்த்துக்கிறான். போன எலெக்ஷன் சமயம் நாங்க பரபரப்ப இருந்தப்போ, கார்த்தி என்கிட்ட ஒரு விஷயம் சொல்ல விரும்பினான்...

என்னன்னு கேட்டேன்.. 'பேர் ஸ்ரீநிதி’னு சொன்னான். 'இப்போ எலெக்ஷன் டயம். நிதானமாப் பேசலாம்’னு சொல்லிட்டேன். அப்புறம் ஜூலையில் பட்ஜெட் ஆரம்பிச்சப்போ அம்மாவும் பையனும் டெல்லிக்கு வந்திருந்தாங்க. திரும்ப ஞாபகப்படுத்தினாங்க. 'அடுத்த தரம் ஊருக்கு வர்றப்போ அந்தப் பெண்ணை நேர்ல பார்த்து பேசறேன்’னேன்.

ஸ்ரீநிதியை அதுக்கு முன்னமே எனக்கு நல்லாத் தெரியும். அந்தப் பெண்ணோட டான்ஸ் புரொகிராமுக்குக்கூட நான் போயிருக்கேன். சென்னை வந்திருந்தப்போ ஸ்ரீநிதியைக் கூப்பிட்டுப் பேசினேன். கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்.

நான் செட்டிநாட்டுப் பரம்பரைப்படி வளர்ந்தவன். அப்பா முன்னால் உட்காரக்கூட மாட்டேன். பட், காலம் ரொம்ப மாறிடுச்சே. இன்னிக்கு என் பையன் எனக்கு நல்ல ஃப்ரெண்டா இருக்கான். வீட்ல எனக்கு இன்னொரு ஃப்ரெண்ட்... என் மருமகள் ஸ்ரீநிதி!'' - பூரிப்பாகச் சிரிக்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தொகுப்பு: லோகநாயகி

படங்கள்: கே.ராஜசேகரன்