ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

“சினிமாக்காரன்கிட்ட ஏன் எதிர்பார்க்கிறீங்க?”

விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்வாசகர் கேள்விகள்

##~##

ம.சுதன்ராஜ், சென்னை-44.

''இந்தியில் முத்திரைப் பதித்த படங்களைக் கொடுத்தும், தொடர்ந்து ஏன் அங்கே பணிபுரியவில்லை?''

''தெரியாத மொழியில் வேலை பார்க்கிறது எனக்கு அவ்வளவா இஷ்டம் இல்லாத விஷயம். ஆனா, பால்கிகூட அடுத்தடுத்து இந்திப் படம் பண்றதுக்குக் காரணம், அவர் ஒரு தமிழர். என் வொர்க்கிங் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி வேலைகளை அமைச்சுக்குவார். பல வருஷம் முன்னாடி, ஃபேர் அண்ட் லவ்லிக்காக ஒரு விளம்பரப் படம்  எடுத்தோம். அதுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியவர் பால்கி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த தமிழர். அப்புறம் மும்பையில் செட்டிலாகி ஒரு விளம்பரப் படநிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆனார். இருந்தாலும் சினிமாதான் அவருக் குக் கனவு. அப்பப்போ லீவு போட்டுட்டு படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுத உட்காந்துடுவார். 'சீனிகம்’ படத்தின் முதிர்ந்த காதல், 'பா’ படத்தில் அப்பாவை பையனா நடிக்கவெச்சு, பையனை அப்பாவா நடிக்க வைக்கிறதுன்னு பால்கி யோசிக்கிற கதை எல்லாமே பயங்கர சவால் ப்ளஸ் சுவாரஸ்யமா இருக்கும். அவர் அடுத்து அமிதாப், ஷாரூக் கான் ரெண்டு பேரையும் வெச்சு ஒரு படம் இயக்கப்போறார். நான்தான் அந்தப் படத்துக்கு கேமரா மேன். இசை, நம்ம இளையராஜா. 'ஷாரூக் இதுவரை பண்ணாத கேரக்டர். இந்திய சினிமாவுக்கே புது கேரக்டர். சீக்கிரம் ஸ்க்ரிப்ட் அனுப்புறேன். தயார் ஆகிக்கோங்க’னு சொல்லியிருக்கார். ஆர்வமா இருக்கேன்!''

 “சினிமாக்காரன்கிட்ட ஏன் எதிர்பார்க்கிறீங்க?”

அமுல் ராஜகுமாரி, திருவாரூர்.

'' 'இவரோட போட்டோ எடுத்துக்கணும்’னு நீங்க ஆசைப்பட்டு போட்டோ எடுத்துக்கிட்ட வி.ஐ.பி. யார்?''

''சிவாஜி சார். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஆரம்பிச்சபோதே எனக்கு அவரோட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை வந்திருச்சு. ஏன்னா, நான்லாம் அவரோட படங்கள் பார்த்து வளர்ந்தவன். சினிமா மேல ஆசையை வளர்த்தவன். அந்தச் சின்ன வயசு கிரேஸ் அவரோட வொர்க் பண்ணும்போதும் போகலை. ஷூட்டிங் நடக்கும்போது என் கவனம் முழுக்க ஒளிப்பதிவு மேல இருந்ததால், அவர்கூட போட்டோ எடுக்கிறதைப் பத்தி யோசிக்கவே இல்லை. கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சப்ப, எல்லாரும் அவரோட போட்டோ எடுத்துக்கிட்டப்பதான் 'நாமும் எடுத்துக் கலாமே’னு உறைச்சது. கமல், சிவாஜி சார், டைரக்டர் பரதன் சார் மூணு பேரும் நிக்கும்போது ஓடிப்போய் நாலாவது ஆளா நின்னு, படம் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் இதுவரைக்கும் யார் கூடவும் போட்டோ எடுக்கணும்னு தோணலை!''

ஆர்.முருகேசன், திருத்தணி.

 '' 'யாவரும் நலம்’ படத்தில் கறுப்பு-வெள்ளை நிறங்களைத்தான் அதிகம் பயன்படுத்தி பயம் உண்டாக்கினீங்க. கறுப்பு-வெள்ளை நிறம் உங்களை எந்த விதத்தில் பாதிக்கும்?''

'''யாவரும் நலம்’ கதையை கலர்ஃபுல்லா எடுத்திருந்தா, உங்களுக்குப் பயம் வந்திருக்காது. அமானுஷ்ய விஷயங்களின் நிறம் 'கறுப்பு’. தைரியத்தின் நிறம் 'வெள்ளை’. இருட்டுனா, பயம் வந்தி ரும். வெளிச்சம் வந்தா, பயம் போயிரும். அதன் அடிப்படையில்தான் அந்தப் படத்தில் கறுப்பு-வெள்ளையை வெச்சு ஒளிப்பதிவு பண்ணினேன். உண்மையைச் சொன்னா கறுப்பு -வெள்ளையை அதிகமாப் பயன்படுத்தி நான் பண்ணின முதல் படம், 'யாவரும் நலம்’தான். ஏன்னா, கலர் சினிமா வந்த பின்னாடிதான் நான் ஃபீல்டுக்கு வந்தேன். அந்த வகையில் 'யாவரும் நலம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம்!''

கி.மனோகரன், பொள்ளாச்சி.

''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த 'டாப்-5’ படங்களைப் பட்டியலிடுங்கள்?''

 ''அஞ்சுக்குள்ள அடக்க வேணாம். பிடிச்சதெல் லாம் சொல்றேன். கலை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்புனு எல்லா விதத்திலும் அட்வான்ஸா இருந்த 'தில்லானா மோகனாம்பாள்’ பிடிக்கும். பாலசந்த ரோட 'தண்ணீர் தண்ணீர்’, பாலுமகேந்திராவோட 'மூன்றாம் பிறை’, பாரதிராஜாவோட 'வேதம் புதிது’, மகேந்திரனோட 'உதிரிப்பூக்கள்’, ருத்ரய்யாவோட 'அவள் அப்படித்தான்’ ரொம்பப் பிடிக்கும். பாலாவோட 'பரதேசி’, வசந்தபாலனோட 'வெயில்’, 'அங்காடித் தெரு’ என் குட்புக்ஸில் இருக்கும் படங் கள். உலக சினிமாவுக்கு இணையா டெக்னாலஜி யில் மிரட்டின 'எந்திரன்’ படமும் பிடிக்கும்!''

த.மலர், நாகர்கோவில்.

 ''முன்னெல்லாம் சினிமா ஒளிப்பதிவாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போ ரெண்டு படத்துக்கு ஒரு புது ஒளிப்பதிவாளர் அறிமுகம் ஆகிறார். அவங்களை யாருக்கும் ஞாபகம் இருக்கிறது இல்லை. அவங்களாலயும் ஃபீல்டுல நிலைச்சு நிக்க முடியலை. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''இளைஞர்களுக்கும் புதிய திறமையாளர்களுக் கும் புதுசா ஒரு வாசல் திறந்திருக்கு. இது ரொம்ப நல்ல விஷயம். கேமரா டிஜிட்டல்மயமானதோட விளைவு இது. பல வருஷமா கேமரா மேன்கிட்ட அசிஸ்டென்டா இருந்தவங்கதான் அடுத்து கேமரா வைத் தொட முடியும்கிற நிலைமை மாறி, நிறையப் புது ஒளிப்பதிவாளர்கள் வந்திருக்காங்க. புதிய ஐடியாக்கள் சினிமா இண்டஸ்ட்ரிக்கு கிடைக்கஆரம் பிச்சிருக்கு. தொடர்ந்து வேலை பார்த்துட்டு இருக்கும்போதுதான் ஒளிப்பதிவாளருக்கு தெளிவு கிடைக்கும்; அணுகுமுறை மாறும். அதுதான் ஒரு ஒளிப்பதிவாளனைத் தனியாக் காட்டும். டாக்டருக்குப் படிச்சவர் வாழ்க்கை முழுக்க டாக்டராகத்தான் இருக்கணும். அதே மாதிரி ஒரு படம் ஒளிப்பதிவு பண்ணினவர் கடைசி வரைக்கும் ஒளிப்பதிவாளராத்தான் நிலைச்சு நிக்கணும். அது பெரிய போராட்டம்தான். முன்ன மாதிரி ஒரு படம் முடிச்சுட்டு அடுத்த படத்துக்காக ஒரு ஒளிப்பதிவாளர் காத்துட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. டாக்குமென்டரி, ஷார்ட் ஃபிலிம், விளம்பரப் படங்கள்னு நிறைய ஆப்ஷன்கள் வந்துருச்சு. அதில் வேலை பார்த்தா, பாப்புலாரிட்டி கிடைக்காமப் போகலாம். ஆனா, பொருளாதாரத் தேவைக்கும், நம்மை நாமே இம்ப்ரூவ் பண்ணிக்கிறதுக்கும் பயன்படும். மாரத்தான் ஓட்டத்துல எத்தனை பேர் ஓடினாலும் சிலர்தானே எல்லைக்கோட்டை தொடுறாங்க. அப்படித்தான் இதிலும் நடக்கும். யார் திறமையா இருக்காங்களோ, யார் தான் பார்க்கும் வேலையில் பென்ச்மார்க்கைக் கொண்டுவர்றாங்களோ, யார் தனக்குன்னு ஒரு பாணியைக் கொண்டுவர்றாங்களோ அவங்க நிலைச்சு நிப்பாங்க. இது எல்லா ஃபீல்டுக்கும் பொருந்தும்!''

ஆர்.ராஜ்மோகன், பெருந்துறை.

 “சினிமாக்காரன்கிட்ட ஏன் எதிர்பார்க்கிறீங்க?”

''உங்க பொழுதுபோக்கு...''

''நிறையப் புத்தகங்கள் படிப்பேன். ஒவ்வொரு வருஷமும் புத்தகத் திருவிழாவில புத்தகங்கள் வாங்குறது வழக்கம். ரெண்டு வருஷமா அங்கே போக முடியலை. ரெண்டு வருஷமா படிக்கும் பழக்கமும் குறைஞ்சிருச்சு. ஒரு சினிமா முடிச்சுட்டு அடுத்த படம் பண்ற வரைக்கும் மனசு ரொம்ப வெறுமையா இருக் கும். அப்போ புத்தகங்களும் டி.வி.டி-க்களும்தான் ஆன்ம பலம் கொடுக்கும். ஒரு மனுஷனா எல்லா வாழ்க்கையையும் வாழ்ந்திர முடியாது. புத்தகங்களும் டி.வி.டி-க்களும் புது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க, அனுபவிக்க வாய்ப்பு கொடுக்கும். அந்த பலம்தான் ஆறு மாசம் என்னை எனர்ஜியா வெச்சி ருக்க உதவும்.

உண்மையில் எனக்குப் படிக்கப் பிடிக்காது. டென்த் படிக்கிற வரை எல்லா வருஷமும் நான் ஃபெயில் ஸ்டூடன்ட். எப்படி என்னை அடுத் தடுத்த வகுப்புகளுக்கு புரமோட் பண்ணினாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது. ஒருகட்டத்துல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல இருந்து என்னை வெளியே துரத்திவிட்டுட்டாங்க. உண்மையில் படிக்கணும்கிற எண்ணத்தைக் எனக்குக் கொடுத்ததே சினிமாதான். அப்போ ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல சேரணும்கிற வெறி இருந்துச்சு. அதுக்கு ஒரே வழி படிக்கிறதுதான் அப்படிபுத்தகங்கள் படிச்சுதான் விட்ட காலத்தைப் பிடிச்சேன். அப்படிப் படிக்க ஆரம்பிக்கலைனா, இன்னைக்கு இந்த பி.சி. கிடையாது!''

ஆர்.கே.பாலா, சென்னை-97.

''ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் ஆனவர்கள் பலர். ஆனால், கே.வி.ஆனந்த் தவிர வேறு யாருமே வெற்றிகரமான இயக்குநராக உருவாகவில்லையே?''

''ஒளிப்பதிவாளர் டு டைரக்டர் புரமோஷன்ல, ரெண்டு பொறுப்பை தோளில் சுமக்கணும். கரெக்டா பேலன்ஸ் பண்ணணும். அதில்தான் பல ஒளிப்பதிவா ளர்கள் கோட்டை விட்டுடுறாங்க. பாலுமகேந்திரா ஓரளவு சக்சஸ் கொடுத்தாலும் முழுமையான ஹிட் படங்கள் கொடுக்கலை. கே.வி.ஆனந்த் கவிதை மாதிரி கதையும் ஃப்ரேமும் யோசிக்காம கமர்ஷியலா யோசிச்சார். அதை அழகா பிரசன்ட் பண்ணி தன்னை நிரூபிச்சுட்டார். ஒரு சென்டிமென்ட்டை உடைச்சு கே.வி.ஆனந்த் வந்திட்டாரே... இனிமே திரு, ராம்ஜினு எல்லாரும் வருவாங்க!''

தெ.இந்திரஜித், திருத்தணி.

''சமீபத்தில் நீங்க பார்த்து ரசிச்ச ஒளிப்பதிவு எது?''  

'' 'பரதேசி’ படத்தில் செழியன் ரொம்ப நல்லாப் பண்ணியிருந்தார். செழியனோட திறமையைச் சொல்றதுக்கு 'பரதேசி’யில் இடைவேளையில் வரும் ஒரு ஷாட் போதும். என் அசிஸ்டென்ட் இல்லாம சொல்லணும்னா, 'பர்ஃபி’ படத்தில் ரவிவர்மன் ஒரு ஓவியம் மாதிரி ஒளிப்பதிவு பண்ணியிருந்தார். அப்புறம் 'யுத்தம் செய்’ படத்தில் சத்யாவின் ஒளிப்பதிவும் ரசனையா இருந்துச்சு. சமீபத் தில் பார்த்த படங்களில் மத்தபடி எல்லாருடைய ஒளிப்பதிவும் ஒரே மாதிரி தெரியுது. எல்லாரும் ஒரு ஃபார்மெட்டுக்குள்ள சிக்கிட்டாங்களோனு தோணுது. நிறை சொல்லும்போது குறையும் சொல்லணும்ல!''

கே.பாலன், ராமநாதபுரம்.

''நீங்களும் மணிரத்னமும் அளவுக்கு அதிகமா மௌனமா இருக்கிற மாதிரி தெரியுதே... பேசக் கூடாதுங்கிறதை ஒரு டிரெண்ட் ஆக்கிட்டீங்களா?''

''சினிமாக்காரன் ஏன் பேசணும்னு எதிர்பார்க் கிறீங்கனு புரியலை. ஒரு டாக்டரோ, ஒரு விஞ்ஞா னியோ ஏதாவது மேடைப் பேச்சு பேசணும்னு எதிர்பார்ப்பீங்களா? அவங்களோட வேலையும் அதோட ரிசல்ட்டும் நல்லா இருக்கணும்னு மட்டும்தானே எதிர்பார்ப்பீங்க. அப்புறம் ஏன், சினிமாக்காரன் மட்டும் பேசிட்டே இருக்கணும்; கருத்து சொல்லிட்டே இருக்கணும்? சினிமா ஒரு கலை, சினிமாக்காரன் ஒரு கலைஞன். எல்லா வேலையும் மாதிரி சினிமாவும் ஒரு தொழில். சினிமாக்காரங்களும் சராசரி மனுஷங்கதான். சினிமாக்காரங்க ஒவ்வொருத்தரையும் சகலகலா வல்லவனா இருக்கணும்னு எதிர்பார்த்தா, அது உங்க தப்பு. நீங்களா எதிர்பார்த்து ஏமாந்துட்டு, அப்புறம் குறை சொல்றீங்க.

ஒரு மேடைப் பேச்சாளனைக் கூப்பிட்டு ஓவியம் வரையச் சொல்வீங்களா? அது மாதிரிதான் சினிமாக் காரன்கிட்ட கருத்து கேட்கிறதும். ஒரே விஷயம் தான்... படம் நல்லா இருந்தா, பாராட்டுங்க; இல்லைன்னா, திட்டுங்க. சினிமாக்காரங்களுக்கு இந்தச் சமூகத்தில் அந்த அளவுக்கு மட்டும் இடம் கொடுங்க... அதுபோதும்!''

-  நிறைந்தது

 “சினிமாக்காரன்கிட்ட ஏன் எதிர்பார்க்கிறீங்க?”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.