Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

''என் திரைப்படங்களில் ஒரு படத்தின் ஃபிலிம்ரோல்கூட இப்போது என்னிடம் இல்லை!'' - ஒரு சினிமாமேடையில் இயக்குநர் பாலுமகேந்திரா சார் சொல்லி வருந்திய அடுத்த வாரம், நான் 'கற்றது தமிழ்’ படத்தின் ஃபிலிம்ரோல் பெட்டியைத் தேடி, கார்மேகம் தாத்தாவைப் பார்க்கப் போயிருந்தேன்.

தமிழ் சினிமாவுக்கு என்ன வயசோ அவ்வளவு வயசு இருக்கும் கார்மேகம் தாத்தாவுக்கு. இன்னும் திருநெல்வேலி நெல்லை லாட்ஜில் உள்ள ஒரு சின்ன அறையில் சுருள் சுருளாக சிதறிக்கிடக்கும் ஃபிலிம் ரோல்களோடும், துருப்பிடித்த தகரப் பெட்டிகளோடும், 'கண்ணன் என் காதலன்’ காலத்துக் கசங்கிய சுவரொட்டிகளுடனும், வழுக்கைத் தலையோடும், ஓட்டைகளும் அழுக் கும் நிறைந்த பனியனோடும் கார்மேகம் தாத்தா வீற்றிருந்தார். நான் சென்றபோது, உடல் நடுங்க ஒவ்வொரு பெட்டியையும் உடைத்து ரீல் தனியாகவும், அந்தத் தகர டப்பாவைத் தனியாகவும் பிரித்து அத்தனையையும் எடைக்குப் போட்டுக்கொண்டிருந்த அந்தத் துயரம், எந்த சினிமா ரசிகனும் நேரில் பார்க்கக் கூடாத காட்சி.

' 'கற்றது தமிழ்’னா சூப்பர் குட் சௌத்ரி சாரோட பையன் தாடியோட நடிச்சானே... அந்தப் படம்தானே தம்பி?’ என்று தாத்தா கேட்டது, எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ஆனால், அப்படியே உள்ளே அடுக்கியிருந்த எல்லாப் பெட்டிகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, 'ஆனா, அந்தப் பெட்டி நம்மகிட்ட வரலியே தம்பி’ என்று சொன்னது எனக்குப் பெரும் ஏமாற்றம். 'கவலைப்படாதீங்க தம்பி... இது எல்லாத்தையும் கொண்டுபோய் எடைக்குப் போட்டுட்டு நாளைக்கு மதுரைக்குப் போவேன். அங்க இருந்தாலும் இருக்கும். இல்லேன்னா, சேலத்துல கண்டிப்பா இருக்கும். இருந்தா, நானே வாங்கிட்டு வந்து தர்றேன்!' என்று சொல்லிவிட்டு வேக வேகமாக எடை போடச் சென்றுவிட்டார்.

மறக்கவே நினைக்கிறேன்

' 'கேப்டன் பிரபாகரன்’ல எத்தனை... நாலா இருக்கு? ஒண்ணை மட்டும் எடுத்துவெச்சிட்டு மூணை உடைச்சிரு. அப்புறம் அது என்ன படம்... ராசா மகனா, செந்தமிழ்ச் செல்வனா..? எதுவா இருந்தாலும் உடைச்சிரு. இந்தா... இந்தப் பக்கம் இருக்கு பாரு நிறைய சாமி படம். அத்தனையும் பிரிச்சு எடுத்துப் போட்ரு’ என்று, தாத்தா இரண்டு வாலிபர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் ஒவ்வொரு பெட்டியையும் உடைத்து தகர டப்பாவைத் திறந்து ஒரு மனிதனின் குடலை உருவுவதைப் போல டப்பாவிலிருந்து ரீலை உருவி எடுத்தபோது, தாத்தா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு வேலை பார்த்தபோது, அம்மா அப்பாவைப் பிரிந்து செல்கிற சிறு குழந்தையின் கைவிரல் நடுக்கம் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

''எதுக்கு தாத்தா, இப்படி எல்லா ரீலையும் எடைக்குப் போடுறிய? என்னை மாதிரி யாராவது தேடி வந்தாங்கன்னா... என்ன பண்ணுவீங்க?'

'வந்தா எனக்கென்ன! அவனுவ வருவானுவனு எத்தனையோ வருஷமா... அத்தனை ரீலையும் நெஞ்சுக்கூட்ல போட்டுக்கிட்டு இவ்வளவு நாளா இருமிட்டு இருந்தது போதும். லாட்ஜ்காரன், ரூமைக் காலி பண்ணச் சொல்லிட்டான். 'வீட்டுக்கு ரீலோட வந்த... உன் குடல உருவிடுவேன்’னு பெத்தப் புள்ள சொல்லிட்டுப் போய்ட்டான். அப்புறம் என்னத்துக்கு இதை வெச்சுக்கிட்டு இருக்கணும். எல்லாத்தையும் எடைக்குப் போட் டுட்டு எங்கேயாவது சாமியாராப் போயிட லாம்னு தோணுது!'

'இது அவ்வளத்தையும் எடைக்குப் போட்டா எவ்வளவு கிடைக்கும்?'

'என்ன பெருசா கிடைக்கும்... ஒரு கேனுக்கு 30 ரூபா. ஏழு கேனு... ஒரு பெட்டிக்கு 210 ரூபா கிடைக்கும். அது போக, அந்த கேனோட தகரம் கிலோ 50 ரூபா போகும். அவ்வளவுதான். அழுத்திச் சொன்னா, ரொம்ப ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா. போன வாரம் 'பெருமாள்’னு ஒரு புதுப் படம்... சுந்தர்.சி நடிச்சது. 60,000 ரூபா-க்கு வாங்கி, 1,700 ரூபாக்கு எடைக்கு வித்தேன்.' என்று சொல்லி முடிக்கும்போது  கார்மேகம் தாத்தாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

அங்கு நின்றுகொண்டு அவர் அழுவதை எந்தச் சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நான் என்ன ஒற்றை ஊமை மஞ்ச னத்தி மரமா? 'கற்றது தமிழ்’ பெட்டி கிடைச்சா கண்டிப்பா வாங்கிக் கொடுங்க தாத்தா’ என்று கையிலிருந்த 2,000 ரூபாயை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு வேகமாகத் திரும்பி வந்த நொடியிலிருந்து, மண்டைக்குள் சிக்குண்டு சுழலத் தொடங்கியது பால்யத்தின் ஃபிலிம் சுருள்கள்.

ஒருகாலத்தில், அந்த அழுக்கேறிய துருப்பிடித்து சிதறிக்கிடக்கும் தகர டப்பாவுக்குள் இருக்கும் ஃபிலிம் சுருள்களில் வெறுமனே ஒளிபிம்பங்கள் மட்டுமா இருந்தது? எவ்வளவு கனவு, எவ்வளவு ஆசை, எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு வியப்பு, எவ்வளவு விடுதலை, எவ்வளவு காதல்? எளிய மனிதர்களின் வாழ்க்கையல்லவா அந்த ஒளி வெள்ளத்தில் சுருள் சுருளாக சுற்றிக்கொண்டு இருந்தது? இப்போது வாய் கூசாமல் சிலர் சினிமாவைப் 'பொழுதுபோக்கு’ என்று சொன்னால்,  அருவியை 'நீர்வீழ்ச்சி’ என்று சொன்னால் பதறும் விக்ரமாதித்தனின் நெஞ்சைப் போல, அப்படிப் பதறுகிறது மனசு. சத்தியமாக எங்கள் ஊரில் சினிமா, அன்றைய நாட்களில் கொண்டாட்ட மாக, அரசியலாக, பக்தியாக, காதலாக, கண்ணீராக, நீந்தும் நினைவின் கடலாக இருந்தது. அந்தக் கடலின் நினைவலைகளில் நிறைய பாண்டியன் அண்ணன்கள், 'லூஸுப் பாண்டியன்’களாக நீந்திக்கொண்டிருந்த கதைகளும் உண்டு!

மறக்கவே நினைக்கிறேன்

பாண்டியன் அண்ணன் டி.ராஜேந்தர் ரசிகராக இருந்ததில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர், மலர் அக்காவை ஒருதலையாக ஒருதலைராகத்தில் காதலித்ததுதான் ஊருக்குள் பெரிய வரலாற்றுப் பிரச்னை ஆகிப்போனது. மலர் அக்கா, அப்போதே ஊரில் நர்ஸ் வேலைக் குப் போனவள் என்பதால், பாண்டியன் அண்ணனின் டி.ராஜேந்தர் தாடியும் அவரது சோகமும் அவளுக்கு அவ்வளவு அருவருப்பு. ஆச்சிமுத்தா கோயிலில் வைத்து 'கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...’ என பாண்டியன் அண்ணன் பாடியபோது, செருப்பைக் கழட்டிக் காட்டியவள் மலர் அக்கா. அவள் ஆற்றங்கரைக்கு வந்தபோது, 'நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை...’ என்று பாண்டியன் அண்ணன் அவளைப் பார்த்துக்கொண்டும் ஒருபக்கமாக வாயைக் கோணிக்கொண்டும் பாடியபோது, எதையும் யோசிக்காமல் சப்பென்று அறைந்தேவிட்டாள்.

பாண்டியன் அண்ணனுக்கு, அது பிரச்னை யாகவோ, வருத்தமாகவோ தெரியவில்லை.மலர் அக்காவுக்குத்தான் அது அவமானமாகப் போய் விட்டது. எல்லாரும் கூடிப் பேசி, மலர்அக்காவை அவசர அவசரமாக அம்மன்புரத்தில் உள்ள போலீஸ்காரருக்குத் திருமணம் செய்துவைத்தார் கள். ஆனால், அந்தத் திருமணம், பாண்டியன் அண்ணனின் ராகத்தையோ தாளத்தையோ எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. அவர் தொடர்ந்து தன் தனிமையை, தன் காதலை வானம்பாடி போல தனக்குத்தானே இசைத்துக்கொண்டே தான் அலைந்தார்.

மலர் அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு மொட்டை போடும் வரை, நிறையப் பாடல்களும் நிறையப் பல்லவிகளுமாக ஒரு பாகவதரைப் போல ஊருக்குள் அலைந்த பாண்டியன் அண்ணன், திடீரென்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது எங்களுக்கு ஆச்சர்யமில்லை. மாறாக, 'ஒருதலை ராகம்’ கதாநாயகன் சங்கரைப் போல இருந்த பாண்டியன் அண்ணன் தன்னுடைய திருமணத் தன்று, 'தங்கைக்கோர் கீதம்’ படத்தை திரை கட்டி ஊருக்கு நடுவில் போட்டதுதான் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஆனால், அதையும்விட பெரிய ஆச்சர்யம் எதுவென்றால், கல்யாண மாப்பிள் ளையான பாண்டியன் அண்ணன், முதல் இரவுக்குக்கூடப் போகாமல் ரீல் பெட்டிக்கு அருகிலேயே ஒரு சேரைப் போட்டு மாப்பிள்ளை தோரணையோடு படம் ஓட்டுபவரோடு பேசிக் கொண்டு இருந்ததுதான்.

ஊரே திரைக்கு முன் கூடியிருந்தது. மலர் அக்காவும் அவளுடைய போலீஸ்கார கணவ னோடு வந்திருந்தாள்.

'தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம்... போராட்டம்,
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலர் உன்னை நினைத்து
மலர் தினம் வைப்பேன்...’

- என்று திரையில் ஆனந்த் பாபு வந்து வளைந்து நெளிந்து, டிஸ்கோ டான்ஸ் ஆடியபடி நளினியைப் பார்த்துப் பாடும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பாட்டு முடிந்ததும் நிறுத்திவிட்டு, மறுபடி ரீலை சுற்றி இன்னோரு முறை போட்டார் பாண்டியன் அண்ணன். அப்புறம் மூன்றாவது முறையும் போட்டார். இது ஊரில் வழக்கம்தான் என்பதால், யாரும் எதுவும் சொல்லவில்லை.

மறக்கவே நினைக்கிறேன்

நான்காவது முறை அவர் ரீலை பின்னோக்கிச் சுற்றிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் சில பெருசுகள் எழுந்து அவரைத் திட்டினர். சிலர் 'படத்தை நிறுத்து... திரையைக் கழட்டு’ என்று கூட சத்தம் போட்டார்கள். ஆனால், யார் சொல்வதையும் காதில் வாங்காமல் 5-வது முறை யாக பாண்டியன் அண்ணன் ரீலை பின்னோக்கி சுத்தும்போதுதான் வந்தது கலவரம். எல்லாப் பெருசுகளும் கோபத்தில் எழுந்துவிட்டார்கள். எழுந்தது மட்டுமில்லாமல் போய் திரையைப் பிடுங்கி எறிய, இதுதான் சமயம் என்று மலர் அக்கா தன் போலீஸ்கார மாப்பிள்ளையிடம் அண்ணனின் தாடி ரகசியத்தை லூஸுத்தனமாகப் போட்டு உடைக்க, போலீஸ்காரர் வேகமாகப் போய் அந்தப் பாடலின் ரீலை பிடித்து இழுத்துக் கிழித்து எறிய, 'கல்யாணம் முடிஞ்ச ராத்திரியே அடுத்தவளை நினைச்சிப் பாட்டு போடுறானே... இவன்கூட எம்புள்ள எப்படி வாழுவா?’ என்று பெண் வீட்டுக்காரர்கள் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விட, அந்த இரவே வசனம் புரியாத ஆங்கிலப் படத்தின் விநோதமான இறுதிக் காட்சி போல மாறிவிட்டது.

யார் யாரோ திட்ட, புத்திமதி சொல்ல, அடிக்க என்று இருந்தாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சேதம் அடைந்த மொத்த ரீலுக்கும் உண்டான பணத்துக்குப் பதிலாக தன் கையில் கிடந்த மோதிரத்தைக் கழட்டி ஆபரேட்டரிடம் கொடுத்துவிட்டு, மொத்த ரீலையும் வாங்கி தலையில் வைத்துக்கொண்டு பாண்டியன் அண் ணன் தன் வீட்டைப் பார்த்து கம்பீரமாக நடந்துபோன காட்சி, தத்ரூபமாக கடவுள் வந்துபோன ஒரு கனவைப்போல இன்னும் கலையாமல் எனக்குள் அப்படியே இருக்கிறது. அது மட்டுமா... ரீல் பெட்டியோடு கம்பீரமாக நின்ற பாண்டியன் அண்ணனை, 'லூஸுப் பாண்டிய னாக’ ஊர் பஞ்சாயத்து, ஊரார் முன் நிறுத்தி மன்னிப்பு கேட்கவைத்து, 'இனிமேல் ஊருக்குள் எந்தப் படம் போட்டாலும் அது 'வசந்த மாளிகை’யாகவே இருந்தாலும் சரி, எந்தப் பாட் டையும் யாரும் திருப்பிச் சுத்திப் போடக் கூடாது’ என்று தீர்ப்பு சொன்னது.

பாண்டியன் அண்ணன் இல்லாத நேரத்தில், அவன் அம்மா வீட்டுத் திண்ணையில் வைத்து 'தங்கைக்கோர் கீதம்’ பட ரீலை துண்டுத் துண்டாக வெட்டி, 'நாலணாவுக்கு நாலு’ என்று ஊர் சிறுவர்களுக்கு விற்றுவிட்டு மிச்சமீதியை தெருவில் போட்டு தீ வைத்துக் கொளுத்தியதும், அந்தச் சுருள்கள் அப்படியே சுற்றிச் சுற்றி நெருப்பில் உருகிப் பொசுங்கியதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாண்டியன் அண்ணனின் நீர் தேங்கிய அந்தக் கண்களும், எத்தனை யுகம் கழிந்தாலும் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் நீளமான வரலாற்று சினிமா!

சில நாட்களுக்கு முன் கார்மேகம் தாத்தாவை சமாதானபுரத்தில் வைத்து மறுபடியும் பார்த்தேன். அவசரமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறிக்கொண் டிருந்தவரை விரட்டிப் பிடித்துப் பேசினேன். என்னை அடையாளம் தெரிந்திருந்தது. ஆனால், ஏனோ சோகமாக இருந்தார்.

''தம்பி நான் இன்னும் மதுரைக்குப் போகலப்பா... போன வாரம் என் பையன் போலீஸ்ல மாட் டிக்கிட்டான். அவனை வெளிய எடுக்கத்தான் கோர்ட், வக்கீல்னு அலைஞ்சுட்டு இருக்கேன். எப்படியும் உனக்குப் பெட்டி வாங்கித் தந்திடு றேன்பா?' என்றவரிடம் ''என்ன கேஸ் தாத்தா?' என்று கேட்டேன்.  

தன் முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொண்டு உடைந்த குரலில், 'திருட்டு வி.சி.டி-ப்பா’ என்று சொன்னார்.

- இன்னும் மறக்கலாம்...