யட்சன்
##~##

பாரி, தன் சிறிய காரை, நுங்கம்பாககத்தின் முக்கியச் சாலையில் இருந்த அந்தக் கட்டடத்துக் குள் நிறுத்தினான். நான்காவது மாடியில் இருந்தது இயக்குநர் விஷ்ணுவர்தனின் அலுவலகம். சதுரக் கண்ணாடி, தாடி... பொங்கும் உற்சாகத் துடன் கைகுலுக்கி உள்ளே அழைத்துப்போனார் இயக்குநர்.  

''யட்சன், புத்தன்... ரெண்டுமே சூப்பர். உங் களை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு ஆசை...' என்றார்.

'காத்திட்டிருக்கேன் சார். உங்க படங்கள்ல யூத்ஃபுலா ஒரு கிக் இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.'' என் றான் பாரி.

'ஒரு கேள்வி கேக்கலாமா?'

'ஷூட்...'

'அதெப்படி சார் அஜித் சார் படத்தோட தலைப்பைச் சொல்லா மலே 15  மாசத்தை ஓட்டினீங்க?'

விஷ்ணுவர்தன் 'ஹே... ஹே... ஹே...’ என்று உரக்கச் சிரித்தார்.

20 நிமிடங்கள் கழித்து, நிறைந்த மனதுடன் பாரி வெளியே வந்தபோது, தொலைபேசி அழைத்தது. பேசினான். அவன் நெற்றி சுருங்கியது.

'நிச்சயமா வர்றேன்.' என்றான்.

யட்சன்

முன் இரவு.

திருவல்லிக்கேணியில் நிழல் படிந்த சந்து முனையில் காரை நிறுத்தினான் பாரி.

'இந்த சந்துலயா இருந்த?' என்றபடி இறங்கி னாள் தேவி.

'அந்த மேன்ஷன்ல..' என்று காட்டும்போதே, பாரிக்கு உற்சாகம் பீறிட்டது.

மேன்ஷன் வாசலில் கூடியிருந்த இளைஞர் களிடம் பாரி நட்புடன் கைகுலுக்கி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது, தீபா எதிர்கொண்டாள்.  

'ஹலோ பாரி...' என்றாள். தேவியுடன் நிமிடத்தில் நட்பாகி, கை கோத்துக்கொண்டாள்.

'மாடிக்குப் போலாமா?'

மொட்டை மாடியில், காற்று அள்ளிப்போனது. தேய்ந்த நிலா. கலையும் மேகங்கள்.

செந்தில் காத்திருந்தான். பாரியைப் பார்த்த தும், நெருங்கிக் கட்டிப்பிடித்தான்.

'இந்த மொட்டைமாடி எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். அதான் இங்க மீட் பண்ணலாம்னு சொன்னேன்...' என்றான்.

'பழைய ஞாபகத்தை எல்லாம் கிளறுது...' என்றான் பாரி. எங்கோ அம்மன் கோயிலில் திருவிழா; வேட்டுச் சத்தம்.

'அவங்க பேசட்டும்...'' என்று தேவியை தீபா அழைத்துப் போனாள்.

'முதல்ல என்னை மன்னிச்சிருங்க.. உங்க இடத்துல நான் இருக்கேன்..' என்று பாரி பணிவான குரலில் சொன்னான்.

'நம்ம வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது எந்த யட்சன் விளையாட்டோ! ஆனா, ரெண்டு பேரும் வீணாயிடல...' இருவரும் மொட்டை மாடிச் சுவரில் அமர்ந்தனர்.

'எனக்கு நடந்ததெல்லாம் தீபா மூலமா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு...'

'சொல்றேன், பாரி...'

செந்தில், தனக்கு நேர்ந்ததை எல்லாம் சொல்லி முடித்தான்.

'ஒவ்வொரு கட்டத்துலயும் தீபாதான் எனக்கு தைரியம் கொடுத்தா. ஒருவழியா, எங்க அப்பாவும் அம்மாவும் இப்ப சமாதானம் ஆயிட்டாங்க.'

'எதைச் செஞ்சாலும் நூறு சதவிகித ஈடுபாட்டோட செஞ்சா, அதுல ஜெயிக்கலாம்னு நம்ப ரெண்டு பேர் வாழ்க்கையும் சொல்லுது' என்றான் பாரி நிறைவுடன்.

'உங்க அடுத்த புராஜெக்ட் என்ன செந்தில்?'

'இந்த மேன்ஷனை வாங்கிட்டோம் பாரி. சென்னையைத் தேடி வர்ற இளைஞர்களுக்கு இது வேடந்தாங்கலா இருக்கணும். சல்லிசு வாடகையில இங்கே தங்கி, அவங்க கனவை நிறைவேத்திக்க வசதி பண்ணித் தரணும்.'

'மத்தவங்க கனவு இருக்கட்டும், உங்க கனவு?'

'சினிமாவை மறக்க முடியல... அதைப் பத்தி பேசத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.. ரியல் எஸ்டேட்ல ஓரளவுக்கு சாதிச்சாச்சு. இப்ப தமிழ்ல சின்னப் படங்கள்லாம் ஜெயிக்குது. நல்ல கதைஅம்சத்தோட ஒரு படம் எடுக்கணும்னு ஆசை. என் படத்துல நடிப்பீங்களா பாரி..?'

'பணம் வாங்காம நடிக்கிறேன். ஆனா, ஒரு கண்டிஷன்.'

'என்ன?'

'நீங்களும் அந்தப் படத்துல நடிக்கணும்.'

செந்தில், கண்களைச் சுருக்கிக்கொண்டு பாரி யைப் பார்த்தான்.

'டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணலாம். இந்த மேன்ஷன்ல ஆரம்பிச்ச நம்ம கதையே இருக்கே?'

செந்திலின் கண்களில் நம்பிக்கை துளிர்த்தது.

'டைரக்ஷன்?''

''இந்த சப்ஜெக்ட்டை விஷ்ணுவர்தன் ரொம்ப நல்லா ஹேண்டில் பண்ணுவார்னு தோணுது!'

பாரி, கலகலவெனச் சிரித்தான்.

'ஏன் சிரிக்கிறீங்க?'

'இன்னிக்கு காலைலதான் நாங்க மீட் பண் ணோம்.. மறுக்க மாட்டாரு.'

விஷயத்தைச் சொன்னதும், தீபாவுக்கும் தேவிக்கும் அத்தனை சந்தோஷம்.

'படத்துக்கு ஸ்க்ரிப்ட் யாரை எழுதச் சொல்ல லாம் பாரி?'

'ரெண்டு பேர் கதையாச்சே. சுபா கரெக்டா இருக்கும். என்ன, 'பிஸி... பிஸி’னு கொஞ்சம் அலட்டிக்குவாங்க. வெளியூருக்குத் தூக்கிட்டுப் போய் கையோட கதையை முடிச்சிட்டு வந்துரணும்.'

'இந்தப் பட பூஜையா, உங்க கல்யாணமா, எது முதல்ல?' என்று உரிமையுடன் கேட்டாள் தேவி.

'ரெண்டையும் ஒண்ணா வெச்சிக்கிட்டாப் போச்சு' என்றான் செந்தில்.

'ஆனா ஒண்ணு. பூஜைக்கு பஸ்ல போனாலும் போ. கார்ல ஏறிடாத...' என்று தீபா சொன்னதும்..

அனைவரும் பொங்கிச் சிரித்தார்கள்.

பின்னணியில் வாணவேடிக்கை; சிதறும் வண்ணப் பூக்களாக இருள் வானில் வெளிச்சம்.                

               - முற்றும் -