Published:Updated:

ஆறாம் திணை - 49

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

ஆறாம் திணை - 49

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

'பாமர, நடுத்தர மக்களின் குழந்தைகளில் சரிபாதியினர் சாப்பாட்டை மறுக்கும் அதே சமயத்தில், நொறுக்குத் தீனிகளை சந்தோஷமாக சுவைப்பவராகவும் இருக்கிறார்கள். அதிலும் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர் பட்டாளத்திடம் மொறுமொறுவென உள்ள நொறுவலுக்கு ஏக வரவேற்பு’ என்கிறது உணவியலின் உளவியல் முடிவுகள்.

'கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய். ரொம்பக் கொஞ்சமாக உப்பு. அப்புறம் உருளைக்கிழங்கு... அவ்வளவுதான்!’ என வீட்டில் பாட்டி வடை சுடும் பதத்தில் தாங்கள் நொறுக்குத் தீனிகளைத் தயாரிப்பதாக இணையதளங்களில் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், தங்கள் நொறுவைகளின் உண்மையான தயாரிப்பு முறைகளை எந்த நிறுவனமும் வெளியில் சொல்வது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலான தின்பண்டங்கள் தயாரிக்கப்படும் ‘Extrusion Technology’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதிக சூட்டில் தானியங்களைப் பொரித்தெடுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான், பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பு தொடங்குகிறது. உணவை வேகவைத்துப் பொரித்து எடுக்க Extruder எந்திரத்தின் சிறு துளை ஒன்றின் மூலம் செலுத்தப்படும் தானியங்களின் மாவு, 200 டிகிரிக்கு மேலான சூட்டில் பொரித்துத் தள்ளப்படுகிறது. பொரித்த பண்டத்தில் விதவிதமான மசாலாக்கள், உப்புகள், சுவையூட்டிகள், மணமூட்டிகள், நீர்ச் சத்து ஏறிவிடாமல் காக்கும் ரசாயனங்கள், உணவைக் கெட்டுவிடாமல் காக்கும் வேதி உப்புகள் ஆகியவை தெளிக்கப்படுகின்றன. ஆனால், இந்த Excipients சமாசாரங்கள், தின்பண்ட பாக்கெட் உறையில், ‘Approved Food Chemical Ingredients’   என்ற பெயரில் ஒளிந்திருக்கும்.

ஆறாம் திணை - 49

இப்படி அதிக சூட்டில் Extrude  செய்யப்படும் உணவுகளின் புரதங்களில் ஏற்படும் மாற்றங்கள்குறித்து உணவியலாளர்கள் இடையே அதிக அளவில் விவாதங்கள் நடப்பது உண்டு. ஒரு தானியத்தில் பொதிந்திருக்கும் கார்போஹைட்ரேட், புரதத் துணுக்குகள், சில நேரங்களில் கொஞ்சம் கொழுப்பு ஆகியவற்றோடு தாவரங்கள் தன் வாழ்நாளெல்லாம் தவமாய் தவமிருந்து சேகரித்துவைத்திருக்கும் கனிமங்களும் தாவர மருத்துவக்கூறுகளும், அப்படி ஒரு சூட்டில் என்ன ஆகும் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

மேலோட்டமான ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சந்தைக் காப்புரிமைச் சார்ந்த ஆய்வுகள், 'அதிக சூடு தயாரிப்பு முறைகள் எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவது இல்லை’ எனச் சொல்வது இப்போதைய உணவுச் சட்டங்களுக்குப் போதுமானது. ஆனால், அவை உடல் இயக்கத்தில், உறுப்புகள் வளர்ச்சியில் உண்டாக்கும் அபாயங்களுக்கு அளவே இல்லை!

'சிற்றுண்டி’ என்பது, இன்று நேற்று நம்மிடையே வந்தவை அல்ல; உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழர் உணவு நூலில் தீம்புழல் தாரம், அடை, தீஞ்சேறு, அரிசி மாவில் தேனும் வெல்லமும் சேர்த்துச் செய்யப்படும் உக்களி மற்றும் உக்காரி, குழைவாக வேகவைத்த பாசிப் பயறு, வெல்லம் சேர்த்து செய்யப்படும் கும்மாயம், மோதகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் சொல்லிய சீடைகுறித்த செய்திகளைப் படிக்கும்போது, 'அப்பவே நாம அப்படி’ என்று பெருமிதம்கொள்ளவைக்கிறது.

மாதம் ஒரு நாள் ஷாப்பிங் செல்வதுபோல, சிகையலங்காரம் செய்ய பார்லர் செல்வது போல, சுவை ப்ளஸ் ஆரோக்கியமான தின்பண்டங்கள் செய்ய ஓரிரு மணி நேரம் ஒதுக்குங் கள். நீங்கள் வாணலியைப் பிடிக்க, உங்கள் கணவர் அரிசி மாவைப் பிசைய, உங்கள் வீட்டுச் செல்லம், 'ம்மா... வாழை இலைக்குள்ள நான்தான் மாவை வைப்பேன்’ என 'இலைக் கொழுக்கட்டை’ செய்யும் திருவிழா உங்கள் வீட்டு அடுப்பங்கறையில் அடிக்கடி நிகழட்டும். சுவையான தின்பண்டத்துடன் நிறையப் பக்கபலன்களும் விளையும்!

சரி... அது என்ன 'இலைக் கொழுக்கட்டை?’

பாரம்பர்ய பச்சரிசியின் மாவோடு, வெல்லம், வறுத்த பாசிப் பயறு, துண்டுத் தேங்காய், ஏலப் பொடி சேர்த்துப் பிசைந்து கொழுக்கட்டை செய்தால், அது 'இனிப்புக் கொழுக்கட்டை.’ அதே மாவை, பனை ஓலை அல்லது வாழை இலையில் உள்ளே வைத்து வேகவிட்டால் அது 'இலைக் கொழுக்கட்டை.’ பச்சரிசி, துருவிய தேங்காய், பலாச்சுளை சேர்த்து அரைத்து அதே இலையில் சுருட்டி வேகவைத்தால், 'பலாப்பழ இலைக் கொழுக்கட்டை.’ சிவப்பு பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து கொதிக்கும் நீரில் வேகவைத்து எடுத்தால், சத்தான 'நீர்க் கொழுக்கட்டை’ தயார்.

'பிள்ளைக்கு என்ன கொடுத்தாலும் உடம்பு பிடிக்க மாட்டேங்குதே!’ என்று கவலைப்படும் தாய்மார்களே, உங்கள் குழந்தை கொழு கொழுஎன புஷ்டி பூச, இலைக் கொழுக்கட்டைக்கு இணையான இனிப்பு மருந்து கிடையாது.

சரி, தினமும் இலைக் கொழுக்கட்டையாகக் கொடுத்தாலும் குழந்தைக்குப் போரடிக்குமே! அதையே பால் கொழுக்கட்டையாக மாற்றிக்கொடுங்கள். இட்லி அரிசியை ஊறவைத்து மொறுமொறுவென அரைத்து,  நல்லெண்ணெய்யில் வதக்கி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொதிக்கும் தண்ணீரில் கொட்டி வேகவைக்க வேண்டும். வெந்ததும் அளவாக வெல்லம், ஏலப் பொடி, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். இந்தப் 'பால் கொழுக்கட்டை’யைப் பிடிக்காதோர் இன்னும் இந்தப் புவியில் பிறக்கவில்லை.

இலைக் கொழுக்கட்டையோ, பால் கொழுக்கட்டையோ பல நாட்களுக்கு இருக்காதுதான். ஆனால், அதைச் சாப்பிடும் நாம், பல்லாண்டுகள்  ஆரோக்கியமாக இருப்போம். ரெடி-டு-ஈட் மார்க்கெட் உணவுகள் ரொம்ப நாள் கெட்டுப் போகாதுதான். ஆனால், அதற்கு அடிமைப்பட்டால், எந்த நேரம், எந்த உறுப்பு கோளாறு செய்யும் என்று யாருக்கும் தெரியாது.

எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம், நாம்?

          - பரிமாறுவேன்...