##~##

20 வருடங்களுக்கு முன்பு சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த பலருக்கும், 'எப்படியும் பிழைச்சுக்கலாம்டா’ என்ற நம்பிக்கையைத் தந்தது விற்பனைப் பிரதி நிதி வேலை. (இன்றைக்கு 'கால் சென்டர்’கள் அந்த அந்தஸ்தை எடுத்துக்கொண்டன.) வேலைவாய்ப்புச் செய்திகளைத் தாங்கி நிற்கும் சஞ்சிகைகளைப் புரட்டினால் விற்பனைப் பிரதிநிதி வேலைகுறித்த தகவல்களே கொட்டிக்கிடக்கும். 'குறைந்தபட்சம் 10 ஆயிரம்... கடுமையாகஉழைத்தால் 30 ஆயிரம்.... சராசரியாக 15 ஆயிரம்’ என்று நம்பிக்கைதரும் அந்த விளம்பரங்கள்தான் சென்னைக்கு வரும் அறிமுக நாயகர்களுக்கு ஆறுதல் டானிக்!

'15 ஆயிரம் ரூபாய் சம்பளம்!’ என்று வட்டம் போட்டு, அதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் போட்டு, 'இனி, எந்தப் பிரச்னையும் இல்லை. பண்றோம்... பின்றோம்’ என்று கண்ணாடி முன் தம்ஸ்அப் காட்டி, நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வந்துகொண்டிருந்தேன். ரூம் வாடகை 1,000, சாப்பாட்டுக்கு 1,000, இதர செலவுகள் 1,000, அவசரச் செலவுகள் 1,000... ஆக 4 ஆயிரம் ரூபாய் செலவு போக, கையில் 11 ஆயிரம் நிற் கும். வீட்டுக்கு 6 ஆயிரம்  அனுப்பிவிட்டால், மீதம் 5 ஆயிரம் ரூபாயை அப்படியே சேமிக்க வேண்டும். கனவுக் கணக்கு சந்தோ ஷத்தையும் உற்சாகத்தையும் அதிக மாக்க, உற்சாகத் திமிறலுடன் தேர் வாளர் அறைக்குள் செல்வோம்.

பாஸ்வேர்டு் - 19

உடல் முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியுடன் 'குட்மார்னிங் சார்’ சொல்லிவிட்டு அட்டென்ஷனில் நின்றால், எந்தக் கேள்வியும் கேட்காமல் பேச ஆரம்பிப்பார்கள்.

'இங்கே பேஸிக் சாலரி 1,500 ரூபாய். பயணப் படி 1,500 ரூபாய். மத்தபடி நீங்க விக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் 20 பெர்சன்ட் கமிஷன். ஒழுங்கா சின்சியரா வேலை பார்த்தா, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சுளுவா சம்பாதிக் கலாம்!’ என்று நிபந்தனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார் தேர்வாளர். 'மாசம் பொறந்தா 15 ஆயிரம் டான்னு வரும்’ என்று போட்டுவைத்திருந்த கனவுக் கணக்கு எல்லாம், ஒரே நொடியில் பணால். ஆனால், நம் மன ஓட்டத்தைக் கண்டுகொள்ளாமல் தேர்வாளரோ, 'காலைல 9 மணிக்கு எல்லாம் ஆபீஸுக்கு வந்துடணும். பொருள்லாம் இங்கே இருந்துதான் எடுத்துட்டுப் போகணும். ராத்திரி 8 மணிக்குள்ள திரும்ப வந்துடணும். கியாரன்டிக்கு உங்க சர்ட் டிஃபிகேட்ஸ் இங்கே குடுத்துரணும்’ என்று மேலும் பல ஷரத்துகளை விதித்துக்கொண்டே இருந்தார்.

'ஊருக்கு 6 ஆயிரம்... பேங்க்ல 5 ஆயிரம்’ கனவுகளில் யாரோ கத்திவைத்துக் குத்துவது போல இருக்கும். ஆனால், வேறு வழி இல்லையே... 'அதான் சின்சியரா வேலை பார்த்தா 15 ஆயிரம் கிடைக்கும்னு சொல்றாங்களே... தூக்குடா பேக்கை’ என்று துணி விற்றுத் திரிந்த அந்த நாட்கள்தான், மனிதர்களைப் படிக்கவும் சமூகத் தைப் பற்றிய தெளிவும் பெற எனக்கு உதவிய நாட்கள்!

வியர்வை வாடை தெரியாமல் இருக்க கர்ச் சீப்புக்குள் பவுடர் வைத்துக்கொண்டது, தின மும் சாக்ஸ் துவைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்து, நேர்க்கோடுகள் வைத்த சட்டை அணிந்து, 'இன்னைக்குத் தூள் கிளப்பு றோம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, துள்ளித் திரிந்த நாட்கள். நிறைய நிராகரிப்புகளையும் எதிர்பாராத பாச உறவு களையும், கழிவிரக்கம் மனதைக் குடைந்தாலும் முகம் முழுக்கப் புன்னகையைத் தேக்கித் திரிந்த நாட்கள்.

பாஸ்வேர்டு் - 19

நானும் நண்பன் ரவீந்திரனும் ஏரியா பிரித்துக்கொள்வோம். இன்றுபோல அன்று, 'விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை’ என்று ஃப்ளாட் வாசல்களில் போர்டுகள் தொங்காது. கே.கே. நகர் தான் எங்களின் பிரதான இலக்கு. அரசாங்கக் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் மிடில் கிளாஸ் ஏரியா. ஒரு டஜன் வீடுகள் போனால், ஒரு வீட்டிலாவது, 'எங்கே துணியைக் காட்டுங்க பார்ப்போம்... நல்லா இருந்தா வாங்கிக்கிறேன்’ என்று யாராவது ஒரு குடும்பத் தலைவி சொல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்த ஒருவரைக் கண்டுபிடிப்பதே அதிர்ஷ்ட தேவதை அன்று அளிக்கும் வரம்!

சென்னையின் பிரதான கடைகள் அனைத்தும் ஆடித் தள்ளுபடியில் அடித்து வெளுக்கிற நாட்களில், யாரோ ஒருவர் கொண்டுவரும் துணியை வாங்கிக்கொள்ள யாருக்கு மனசுவரும். இருந்தாலும் ஒரு அக்கா, 'நல்லாத்தான் இருக்கு... ஆனா, உழைக்குமா?’ என்று சந்தேகம் கேட்கும். 'சூப்பரா இருக்கும்க்கா... நீங்க கடைக்குப்போனா இது மாதிரி நின்னு நிதானமா செலெக்ட் பண்ணிப் பார்க்க முடியாது’ என்று சமாதானப்படுத்திய பிறகு, எதிர் வீட்டுக்காரம்மாவையும் துணைக்கு அழைப்பார்கள். சில நிமிடங்களிலேயே ஐந்தாறு பேர் சேர்ந்துவிடுவார்கள்.

வீட்டுக்காரருக்கு ஆச்சர்யப் பரிசு, கல்யாண நாளுக்கு பேன்ட் பிட் என்று தங்கள் கணவன்மார்களுக்கு அந்த அக்காக்கள் துணி எடுக்கும் விதமே அழகு. 'இந்தா இருக்காரு பாரு... அவர்தான் என் வீட்டுக்காரரு. அவருக்கு எடுப்பா இருக்குற மாதிரி நீயே ரெண்டு டிரெஸ் காட்டு’ என்று நடுக்கூடத்தில் தொங்கும் குடும்ப போட்டோவை ஒரு அக்கா காட்டுவார். 'மஞ்சள் கலரும், கிரே கலரும் சூப்பரா இருக்கும்’ என்று எடுத்துக் கொடுத்தால், 'இந்த ரெண்டு கலருமே அவங்ககிட்ட இருக்குப்பா’ என்பார்கள்.  

சளைக்காமல் எனக்குத் தெரிந்த எல்லா விற் பனை உத்திகளையும் பயன்படுத்திக்கொண்டு  இருக்கும்போது யாராவது ஒருவர், 'இந்தத் துணி எல்லாம் ஒரு தடவை துவைச்சா, கலர் மங்கிரும்... இல்லைனா, பிரிபிரியா வந்துரும்’ என்று போகிறபோக்கில் கமென்ட் அடித்து ஒட்டு மொத்த வியாபாரத்தையும் காலி பண்ணிவிடு வார். விலையைக் குறைத்துக் கேட்பவர்களுக்கு விளக்கம் சொல்லி, 'நல்லாப் பேசுறப்பா நீ’ என்று சொல்பவர்களுக்கு நன்றி சொல்லி, சந்தேகத்தோடு விசாரிப்பவர்களுக்கு கம்பெனியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து எட்டு பீஸ் விற்றுவிட்டு வெளியே வரும்போது, உலகத் தையே வென்றெடுத்ததைப் போல இருக்கும். ரவீந்திரனுக்கு, '8 பீஸஸ் சோல்டு’ என்று பேஜரில் செய்தி அனுப்பிக் கடுப்பேற்றுவேன். 'கம் டு மீனா மெஸ்’ என்று அவன் பதில் அனுப்புவான்.

15 ரூபாய்க்கு ஆம்லெட்டோடு சாப்பாட்டை முடித்தவுடன் தூக் கம் கண்ணைக் கட்டும். சாயந்தரம் இன்னொரு ஃப்ளாட்டில் பைக் பார்க்கிங் பக்கம் நின்று, இரண்டு பேருமாகச் சேர்ந்து ஐந்தாறு பீஸ் விற்றுவிடுவோம். 8 மணிவாக்கில் காய்ந்து கருவாடாக கம்பெனிக்கு போய் சேரும்போது, 'பத்து பீஸ்கூட விக்க முடியலைன்னா, என்னத்துக்கு வேலை பார்க்கிறீங்க?’ என்று திட்டு விழும்.

18 கிலோ பையைத் இரண்டு தோள்களிலும் மாறி மாறிச் சுமந்ததில் பட்டை பட்டையாக வீங்கிஇருக்கும். காலையில் இருந்து பட்ட பாட்டுக்கும், கிடைத்த திட்டுக்கும் வாழ்க்கையே சூன்யம் அடைந்ததுபோல இருக்கும். 'இந்த வேலை எல்லாம் செட் ஆவாதுடா. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்குப் போலாம்’ என ரவீந் திரன் சில நாள் மனம் வெறுத்துப் பேசுவான். ஒரு துணிகூட விற்க முடியாத நாட்களில், 'பேசாம ஊருக்குப்போய் மாடு மேய்க்கலாம்டா’ என்று விரக்தியாகப் பேசிக்கொள்வதும் உண்டு. ஆனால், மறுநாள் விடிந்ததும் மீண்டும் உற்சாகம் பற்றிக்கொள்ளும். டீ குடிக்கச் சென்ற இடத்தில் நாலு பீஸ் விற்று காசு பார்க்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கனவுக்கு உயிர் வரும். கே.கே.நகரின் அகண்ட சாலைகளில் நம்பிக்கையோடு நடப்போம். ஆனால், அதற்கு மேல் மாலை வரை எந்த விற்பனையும் நடைபெறாவிட்டால், உற்சாகம் உடைந்து போகும்.

பாஸ்வேர்டு் - 19

'ஆம்பளைங்க துணியை பொம்பளைங்ககிட்ட போய் விக்க நிக்கிறீங்களே... அறிவிருக்காடா உங்களுக்கு?’ என்று உரிமையோடு எங்கள் மேனேஜர் திட்டுவார். ஆனால், எனக்கென்னவோ 'பெண்களுக்குத் துணி எடுக்க ஆண்கள் அலுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு, பெண்கள் அலுப்பது இல்லை’ என்றே தோன்றும். கே.கே. நகர் குவார்ட்டர்ஸ் அக்காக்கள், தன் கணவ னுக்குத் துணி தேர்வு செய்வதில் அழகான காதல் இழையோடுவதை நான் கவனித்து இருக்கிறேன். இருந்தாலும் மேனேஜர் சொன்னதற்காக, அடுத்த நாள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துக்குள் நுழைவோம். கிலுகிலுப்பை பொம்மையில் இருந்து மிக்ஸி விற்கும் ஆட்கள் வரை விற்பனைப் பிரதிநிதிகளின் உலகமே அங்குதான் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும். 'போதும்டா சாமி... இங்கே ஒண்ணும் பண்ண முடியாது’ என்று பேக் அடிப்போம். தோள் சுமையோடு மனச் சுமையும் ஏறினா லும், 'நமக்கென்று யார் இருக்கி றார்கள் இந்த ஊரில்’ என்று நினைத்த எங்களுக்கு, நிறைய உறவுகளையும் நேசத்தையும் அந்த விற்பனைப் பிரதிநிதி வேலைதான் அறிமுகம் செய்தது.

படீரென்று கதவைச் சாத்திவிட்டுப்போன பலருக்கு மத்தியில், 'ஒரு நிமிஷம் இருப்பா... இந்த காபியைக் குடிச்சுட்டு போ’ என்று அன்பு பாராட்டிய அக்காக்களும் இருக் கவே செய்தார்கள். 'பையை இறக்கி வை. முதல்ல தண்ணி குடி’ என்று சொன்ன பாட்டிகள் உறவுகள் ஆனார்கள். வியர்வை வழிய சோர்ந்துபோய் நின்றபோது, 'எந்தப் பக்கம் போறீங்க... வாங்க வண்டில ஏறிக்குங்க’ என்று தானாக லிஃப்ட் கொடுத்த அண்ணன்களை அறிமுகப்படுத்தியது அந்த வேலைதான். நிறைய குடியிருப்புகளின் செக்யூரிட்டிகள், நலம் விசாரித்து நண்பர்கள் ஆனார்கள். 'எங்கப்பா... ரொம்ப நாளா ஆளையே காணோம்?’ என்று அன்புடன் விசாரிக்கும் தாத்தாக்கள் கிடைத்தார்கள். 'எத்தனை நாளைக்குடா பேக்கைத் தூக்கிட்டே திரிவீங்க... பேங்க்ல டெம்ப்ரவரி வேலைக்குச் சொல்லிவிடவா’ என்று நேசம் காட்டிய உறவுகள் கிடைத்தார்கள்.

ரம்ஜானுக்கு வீட்டுக்கு வரச்சொன்ன டீக்கடை பாய், கல்யாணத்துக்கு பத்திரிகை வைத்த அரசு ஊழியர் என்று நெகிழவைத்த மனிதர்களோடு புழங்குவதற்கு வாய்ப்பளித்தது அந்த வேலை.

சமீபத்தில் பெரிய மால் ஒன்றின் வாசலில் ஓர் இளைஞர், குட்டித் தலையணை சைஸில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் என்னை அணுகினார். 'ஒரு தடவை பாருங்க சார். பிடிச்சிருந்தா வாங்கிக் கங்க..’ என்று வழிமறித்தார். வேண்டாம்என்ற போதும், அவர் விடவில்லை. 'என்ன படிச்சி ருக்கீங்க?’ என்று கேட்டேன். 'எம்.பி.ஏ.,’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. நான் எதற்காக சென்னைக்கு வந்தேனோ, அந்தப் படிப்பை முடித்த ஓர் இளைஞர், 'சார்..சார்...’ என்று போவோர், வருவோரிடம் எல்லாம் கெஞ்சிக்கொண்டிருந்தார். என் கனவுப் படிப்பை 76 சதவிகித மார்க்குடன் முடித்த அந்த இளைஞர், யாராவது ஒருவரிடம் ஒரு புத்தகத்தை விற்கப் போராடிக்கொண்டு இருந்தார். ஒரு பக்கம் துக்கம் மனதை அடைத்தாலும், என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன். அந்தப் புத்தகம் விற்குமோ, இல்லையோ... நிறைய மனிதர்களை யும் அனுபவங்களையும் அந்த வேலை அவருக்குக் கற்றுத்தரும். 'இந்த ஊரில் நான் தோற்றுப்போக மாட்டேன்’ என்ற நம்பிக் கையைத் தரும். மனிதர்களின் மீதான உறவுப் பிணைப்பைக் கொடுக்கும்.

இன்று எல்லா ஃப்ளாட்டுகளின் வாசலிலும் 'விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை’ என்று போர்டு இருந்தாலும், அவனு டைய களைத்த முகத்தைப் பார்த்து, 'சாப்ட்டியா தம்பி?’ என்று யாராவது ஒருவர் கேட் காமலா போய்விடுவார். 'நாங்க இருக்கோம்’ என்று யாராவது இவரைப் போன்ற இளைஞர்களுக்குத் தோள் கொடுக்காமலா போய்விடு வார்கள்? இன்றும் இந்தப் பூமிப் பரப்பெங்கும் கொட்டிக்கொண்டே இருக்கும் மனிதமும்... அன்பும்... அந்த இளைஞர்களைக் கைவிடாது!

- ஸ்டாண்ட் பை...