Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

 சென்னை-தூத்துக்குடி இடையே ஒவ்வொரு நாளும் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், மாலையில் புறப்பட்டு இரவு முழுதும் பயணித்து மறுநாள் காலையில் மறுமுனையைச் சேர்கிறது. சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் இந்தப் பயணம் கிட்டத்தட்ட 12 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அவசரமாகத் தொழில்முறை பயணம் செய்யவேண்டி இருந்தால், விமானத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாதுகாப்புச் சோதனை, காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு நேர விரயங்களைச் சகித்துக்கொண்டால், சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடியை அடையலாம். நிற்க.

வீராணம் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக வாங்கப்பட்ட இரும்புக் குழாய்களைப் (சென்னை புறநகர்வாசிகள் பார்த்திருப்பீர்கள்) போன்ற அளவிலுள்ள பேழை ஒன்றில் தாம்பரத்தில் ஏறி அமர்ந்துகொண்டால், அரைமணி நேரத்துக்குள் தூத்துக்குடி சென்று 'ஆழ்வார் நைட் கிளப்’பில் பரோட்டா சாப்பிட முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை-தூத்துக்குடி என்பதை, சான் ஃப்ரான்சிஸ்கோ-லாஸ் ஏஞ்சலஸ் என்று மாற்றிக்கொள்ளுங்கள். 'Hyperloop’ என்ற தொழில்நுட்பம் மூலம் இதைச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் இலான் மஸ்க்.

Hyperloop தொழில்நுட்பத்தின் மாடல் கலக்கல். பெரிய குழாய் ஒன்றுக்குள், சிறியதொரு குழாய் வேக்வம் க்ளீனர் போல உறிஞ்சி செலுத்தப்படுகிறது. சாலைகளைப் போலவோ, ரயில் தண்டவாளங்களைப் போலவோ அதிக செலவு எடுக்காது என்று சொல்கிறார் இலான்.

அறிவிழி

ஆமாம்... யார் இந்த இலான்? பிரமாண்ட ஐடியாக்களை எளிமைப்படுத்திச் செயல்படுத்துவதில் இலானுக்கு வலுவான அனுபவம் உண்டு. தென்னாப்பிரிக்காவில் பிறந்த இலான், 90-களில் அமெரிக்காவுக்கு வந்து தொழில்முனைவராக மாறினார். 90-களின் கடைசியில் அவர் தொடங்கிய x.com வலைத்தளம்தான் பின்னர் 'Paypal’ ஆக உருவெடுத்து, சில வருடங்களிலேயே ஈபே நிறுவனத்துக்கு பில்லியன்களில் விற்கப்பட, இலான் தொடர்ந்து பிரமாண்ட ஐடியாக்களை செயலாக்குவதை தொடர்கிறார். மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்கும் Paypal நிறுவனம், இன்றைய நாளில் பிரமிக்கப்படும் கார் நிறுவனம். அவரது SpaceX நிறுவனமோ, ராக்கெட்டுகளையும், மற்ற கிரகங்களில் மனித இனம் வாழ்வதற்கு தேவைப்படும் உபகரணங்களையும் தயாரிக்கிறது. இலான் கொண்டுவந்திருக்கும் புராஜெக்ட் என்பதால், Hyperloop பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. தனது மற்ற தொழில்முனைவுகள் போலவே இதையும் நிகழ்த்திக்காட்டுவாரா இலான் என்பதை அடுத்த வருடத்தில் பார்த்துவிடலாம். Hyperloop பற்றிய விக்கி உரலி en.wikipedia.org/wiki/Hyperloop

பிரமாண்ட சிந்தனைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, நம் அனைவருக்கும் அடிக்கடி நடக்கும் பிரச்னைக்கான தீர்வு ஒன்றைப் பார்க்கலாம்.

மது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டிருக்கும் அலைபேசி சாதனங்களுக்குச் சற்றும் பிடிக்காதது, ஈரப்பதம். ஐஃபோன் போன்றவை லேசான ஈரப்பதத்துக்கே ஜுரம் பிடித்துக்கொண்டு தொல்லை கொடுக்கும். இதற்கு நம்பிக்கையான தீர்வு ஒன்றை பயனீட்டாளர் சமூகம் கண்டுபிடித்திருக்கிறது.

இதற்கான தீர்வு, ரொம்பவே சிம்பிள். 'ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்ட அலைபேசி சாதனத்தை அரிசியில் மூடிவைத்து சில நாட்களுக்குப் பின்னர் எடுத்தால், ஈரப்பதம் முழுதும் சரியாகி அலைபேசி இயங்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்’ என்கிறார்கள். அரிசி மிக வலிமையான ஈரமுறிஞ்சி என்பதே இதற்குக் காரணம். யூ-டியூபில் Rice wet phone' என்ற பதத்தைத் தேடிப் பாருங்கள். மேற்படி பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்தவர்களின் நேரடி அனுபவங்களைப் பார்க்கலாம்.

சாதாரண அலைபேசிகளைவிட, ஸ்மார்ட் அலைபேசி சாதனங்கள் இந்த மாதத்தில் இருந்து அதிகம் விற்கத் தொடங்கி இருக்கிறது. ஸ்மார்ட் அலைபேசிகள் பயனுள்ளவைதான். ஆனால், அவற்றுக்கு பேட்டரி சக்தி அதிகம் தேவைப்படுவதால், தொடர்ந்து சார்ஜ் செய்துகொண்டிருக்க வேண்டும். பேட்டரி சார்ஜ் தேவையைக் குறைக்க சில டிப்ஸ்:

அறிவிழி

அலைபேசியின் திரை ஒளிர்வை குறைத்துவிடுங்கள்.

அறிவிழி

Bluetooth, GPS, WiFi போன்றவற்றை பயன்படுத்தாத நேரங்களில் அணைத்துவிடுங்கள்.

அறிவிழி

 அலைபேசி சிக்னல் கிடைக்காத இடங்களில் Airplane Mode'-க்கு மாறிவிடுங்கள்.

அறிவிழி

அலைபேசியில் இயங்கும் மென்பொருட்களை எப்போதும் அப்டேட் செய்து வைத்திருங்கள்!

நம் சமூகத்தில் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. ஆடி மாதத்தில் அதிகாலையில் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா’வில் தொடங்கி, நாள் முழுவதும் தொடர்ந்து இரைச்சலை சகித்தபடியேதான் வாழ்கிறோம். வயதாவதன் காரணமாகக் குறையும் கேட்கும் திறன், இந்த இரைச்சல்களாலும் பாதிக்கப்படுகிறது. இதைப் பரிசோதித்து தெரிந்துகொள்ள 'Audiologists’ எனப்படும் நிபுணர்கள் இருக்கிறார்கள். சத்தத்தின் அதிர்வெண்களைக் கூட்டியும், குறைத்தும் கேட்கும் திறன் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெளிவாக அளந்து சொல்லிவிடுவார்கள். Audiologistகளிடம் செல்ல இயலாதவர்களுக்கு ஓர் எளிய வழி இருக்கிறது. உங்களது கேட்கும் திறன் எந்த வயதில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த யூ-டியூப் வீடியோவைப் பாருங்கள்...  www.youtube.com/watch?v=VxcbppCX6Rk

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism