Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

14 வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம்தான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நினைவு நாளன்று திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். நான் சென்றது, அங்கு நடந்த நினைவுக் கூட்டங்களிலோ, ஆவேச ஊர்வலங்களிலோ பங்கேற்பதற்கு இல்லை. ஒரு கொத்துப் பூவை அள்ளிக்கொண்டுபோய் பாலத்தில் நின்றபடி ஆற்றுக்குள் வீசுவதை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவதற்கும் இல்லை. நான் போனது... வசந்தராஜ் அண்ணனைப் பார்க்க!

யார் இந்த வசந்தராஜ் அண்ணன்?

குமாருடைய அண்ணன். இப்போது குமார் யாரென்ற சந்தேகம் உங்களுக்கு வரும். என்ன சொல்லி உங்களுக்கு நான் குமாரை அறிமுகப்படுத்த? மன்னித்துவிடுங்கள், என்னிடம் வேறு வார்த்தை இல்லை. எப்போதைக்கும் குமார், 'ஒரு துயரம்’ அவ்வளவுதான்!

ன்று வசந்தராஜ் அண்ணனை நான் கே.டி.சி. நகர் அம்மன் கோயிலில்  சந்தித்தபோது, சர்வகட்சிகளும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தன. இருவருடைய கண்களிலும் காலம் கடந்த அந்தக் காட்சியின் கோரம் இன்னும் கசிந்துகொண்டு இருந்ததால், எங்க ளுக்கிடையே சம்பிரதாய பேச்சைத் தொடங்குவதற்கு அந்த நேரத்தில் ஒரு தேநீரின் அவசி யம் இருக்கவில்லை.

முதலில், அவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. கண்களில் கொஞ்சம்  நீர் தேங்கியபடி இருந்தது. பிறகு என்ன நினைத்தாரோ, என் முகத்தில் திடீரென்று யாருடைய முகச்சாயல் அவருக்குத் தெரிந்ததோ தெரியவில்லை; சின்னச் சிரிப்போடு உடைந்த குரலில் ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார். இனி அவர் குரல், அவர் வார்த்தை, அவர் சத்தம், அவர் ஆத்திரம் அப்படியே உங்களுக்குக் கேட்பதாக...

'அப்பா இறந்துட்டாங்க, அக்காவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அம்மா, நான் அப்புறம் தம்பி குமார்... மூணு பேர்தான். நான் அப்போ திருநெல்வேலி ரத்னா தியேட்டர் பக்கத்துல  சார்நிலைக் கருவூலத்துல கிளர்க்கு. என் தம்பி, சதக் ஹப்துல்லா காலேஜ்ல அப்பத்தான் டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருந்தான். அவன், என்னை மாதிரியும் கிடையாது; எங்க அக்காவை மாதிரியும் கிடையாது. தொட்டில கலர் மீனை வாங்கி வளக்கிறது, செடில பூக்கிற பூவை உத் துப்பாக்கிறது, தெருவுல குழந்தைங்க போனா பெரிய தேர் அசைஞ்சு போற மாதிரி அவ்வளவு நேரம் நின்னு வேடிக்கை பாக்கிறது,  அணிலுக்குக்கூட அரிசி வைக்கிறதுனு அவன் வேற டைப்பா இருந்தான். நாம சிரிச்சா சிரிப்பான், காரணமே சொல்லாம நாம அழுதாலும் அழுவான்.

மறக்கவே நினைக்கிறேன்

'ஆத்துக்கு குளிக்கப் போனா இவ்வளவு நேரமா’னு நாம அதட்டி ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லாம, 'இன்னைக்கு ஆத்துல செம தண்ணி, டேம் திறந்து வுட்டுருக்காங்களோ’னு அவன் மறுபடி நம்மகிட்டயே ஒரு கேள்வி கேட்பான். அப்படியே போய் எதையும் கண்டுக்காம வலுக்கட்டாயமா அம்மாவுக்கே தலை சீவி விடுவான். அம்மாகூட சேர்ந்து பழைய பாட்டெல்லாம் அவ்வளவு ராகம் போட்டுப் பாடுவான். சிலநேரம் அவனை உத்துப்பார்க்கக் கவலையா இருக்கும். சில நேரம் அவனைக் கூர்ந்து பார்த்தா, கடவுள் மாதிரி இருக்கும். 'குடும்பத்துல கடைசியாப் பொறக்குற புள்ள ஒண்ணு, கடவுளாப் பொறக்கும்; இல்லன்னா, சாத்தானாப் பொறக்கும். சாத்தானாப் பொறந்த புள்ள அப்பவே தெரிஞ்சிடும். கடவுளாப் பொறந்த புள்ள சாவும்போதுதான், அது கடவுள்னே தெரியும்’னு அக்கா அடிக்கடி சொன்னது அவ்வளவு உண்மை.

அன்னைக்கு நான் வேலைக்குக் கிளம்பும்போது, தொட்டில கிடக்கிற மீன் குஞ்சுகளோடு விளையாடிக்கிட்டு இருந்தான் குமார். 'எழுதியிருக்கிற எக்ஸாம் பாஸ் பண்ணினா, அடுத்த வாரமே அரசு அதிகாரி ஆகப்போறவன் இப்படி இருக்கானே’னு நினைச்சிக்கிட்டு, 'குமாரு அந்த மிக்ஸி ரிப்பேர் ஆகிக்கிடக்கு. அயர்ன் பாக்ஸும் வேலை செய்ய மாட்டேங்குது. வீட்ல சும்மாதான இருக்க... அது ரெண்டையும் இன்னைக்குக் கொண்டுபோய் ரிப்பேர் பார்த்துட்டு வந்துருடே’னு நான்தான் சொல்லிட்டுப் போனேன்.

ஆபீஸுக்குப் போற வழியில பார்த்தேன். ஆத்துப் பாலத்துல மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நிறையக் கொடி தோரணம்லாம் கட்டியிருந்தாங்க. மத்தியானம் ஆபீஸ்ல லஞ்ச் சாப்பிடும்போது, 'ஜங் ஷன்ல பெரிய கலவரம்... திருநெல்வேலியில கலவரம்’னு தாக்கல் சொன்னாங்க. எங்களுக்கு பெரிய அதிர்ச்சி கிடையாது. அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாசமோ அது மாதிரி ஏதாச்சும் அடிக்கடி வரும்கிறதால, அது எங்களுக்கு அன்னிக்கு ஒரு நாள் கவலை மட்டும்தான். ஆபீஸ் முடிஞ்சு திரும்பி வரும்போது ஜங்ஷனே வெறிச்சுக்கிடந்துச்சு. ஆத்துப் பாலத்துல நிறையப் பேர் நின்னுட்டு ஆத்துப்பக்கம் பரபரப்பாப் பார்த்துட்டு இருந்தாங்க. நானும் வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் போய் பார்த்தேன். ரெண்டு மூணு பொணம்... செடிக்குள்ள இருந்து போலீஸ்காரங்க தூக்கிட்டு வந்தாங்க. தூரத்துல நின்னு அதப் பாக்கிறதுக்கே எனக்கு உடம்பு உதறிருச்சு. செத்துப்போன அப்பா ஞாபகம் வர, கண்ணைத் துடைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்!''

மறக்கவே நினைக்கிறேன்

அண்ணன் சொல்லிக்கொண்டிருப்பதும் நான் கேட்டுக்கொண்டிருப்பதும் ஏதோ ஒரு கதை இல்லை என்பதால், வசந்தராஜ் அண்ணனுக்கு இப்போது கண்ணீர் கசியத் தொடங்கியிருந்தது. ஆனால், அன்றைய நாளின் அன்றைய துயரத்திலிருந்து இருந்து தப்பித்து வந்த நானோ, துரத்தி துரத்தி அடித்த போலீஸ்காரர்கள், தடுக்கி விழுந்த பெரியவர்கள், காரணம் தெரியாமல் கதறிய குழந்தைகள், புடவைகளை இழுத்துக்கொண்டு ரத்தம் வடிய ஓடிய பெண்கள், எல்லோரையும் விலக்கிவிட்டுட்டு விரைந்து ஓடிய என் கால்கள், என் கால்களுக்குள் சிக் குண்ட எத்தனையோ மனிதர்கள் என, அந்த நேரத்தில் பிடிபட்ட முகங்களுக்கு இடையில் இன்னும் ஒருமுறைகூட பார்த்திராத குமாரின் முகத்தைத் தேடிப் பிடிக்க முயற்சித்துக்கொண்டு இருந்தேன். வசந்தராஜ் அண்ணன், மறுபடியும் பேசத் தொடங்கும் வரை, குமாரின் முகம் எனக்கு அகப்படவே இல்லை.

'ஏல வசந்த்து... ஊரெல்லாம் கலவரம்னு சொல்றாங்க. நம்ம குமார் மிக்ஸியை ரிப்பேர் பண்ணப் போனவன் இன்னும் வரலியே’னு அம்மா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு குமார் ஞாபகமே வந்துச்சு. ஆனா, எங்கேயாவது நின்னு எதையாவது வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பான்னு நான் அசால்ட்டா இருந்துட்டேன். பய ராத்திரி வரைக்கும் வீட்டுக்கு வரல. ஆனா, அப்பக்கூட எனக்குப் பயம் வரலை. 'ஏதாவது படத்துக்குப் போயிருப்பாம்மா’னு அம்மாகிட்ட சொன்னேன். 'மிக்ஸி, அயன் பாக்ஸோடவா படத்துக்குப் போவான்’னு அம்மா சொன்னதுக்கு அப்புறம்தான் மனசுக்குள்ள சின்ன நடுக்கம் வந்துச்சு.

உடனே வண்டியை எடுத்துக்கிட்டுப் போனா, ஊரே வெறிச்சோடிக் கிடக்கு. யார்கிட்ட போய் விசாரிக்ககூடத் தெரியாம, ராத்திரி 12 மணி வரைக்கும் போய் தெரிஞ்ச இடம் எல்லாம் தேடினேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு அவ்வளவு பயம் வந்துச்சு. பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. ரோட்ல நிக்கிற எந்த போலீஸ்காரன்கிட்டயும் போய்ப் பேசப் பயம். பக்கத்துல போனாலே அடிக்கிற மாதிரி வர்றவன்கிட்ட போய், என்ன விசாரிக்க முடியும்?

நல்லவேளை, அப்பாவோட நண்பர் ஒருத்தர் இன்ஸ்பெக்டரா இருந்தாரு. அவர்கிட்ட போன் பண்ணிக் கதறி அழுதேன். அவர், 'எப்பா கலவரத்துல நிறையப் பேரை போலீஸ் பிடிச்சி வைச்சிருக்காங்க. அங்கே சிக்கினாலும் சிக்கியிருப்பான். நான் விசாரிச்சுச் சொல்றேன்’னாரு. ஆனா, 'என் தம்பி அந்தக் கூட்டத்துக்கே போகலையே’னு சொன்னேன். அப்போதான் அவர் சொன்னார், 'இங்க பாரு வசந்த்து, திருநெல்வேலி ஒண்ணும் காடு இல்ல, உன் தம்பி காணாமப்போறதுக்கு... திருநெல்வேலியில கடலும் இல்ல, அவனை அலை அடிச்சுக்கிட்டுப் போறதுக்கு, கண்ணுக்கு முன்னாடி ஊருக்குள்ள கலவரம் மட்டும்தான் நடந்திருக்கு. அதனால கண்டிப்பா அங்கதான் மாட்டியிருப்பான்’னு சொன்னார்.

ஸ்டேஷன் ஸ்டேஷனாப் போய்த் தேடுனோம்; மண்டபம் மண்டபமாப் போய்த் தேடுனோம்; கடை கடையாப் போய்த் தேடுனோம். ஆனா, ஆத்துக்குள்ள இறங்கித் தேடலை. அஞ்சு வயசுலயே நீச்சல் பழகினவனை எப்படிப் போய் ஆத்துக்குள்ள தேடத் தோணும் சொல்லு? அதனால யார் சொல்லியும் நான் ஆத்துக்குள்ள இறங்கித் தேடலை. ஆனா, அரசாங்கம் தேடுச்சு. ரெண்டு நாளா நான் ஊருக்குள்ள தேட, அரசாங்கம் அமைதியா ஆத்துக்குள்ள இறங்கித் தேடுச்சு. நிறையப் பிணங்களைக் கண்டுபிடிச்சு எடுத்துச்சு. ஆத்துக்குள்ள எவ்வளவு தேடினாலும் காணாமப்போன எல்லாரும் கிடைப்பாங்க. ஆனா, என் தம்பி குமாரு என்னைக்கும் ஆத்துக்குள்ள பிணமாக் கிடைக்க மாட்டான்னு நான் அவ்வளவு நம்பினேன்.'

'இதற்கு மேல் என்ன நடந்தது என்று வசந்தராஜ் அண்ணனிடம் கேட்க வேண்டுமா... என்னால் ஊகிக்க முடியாதா?’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன். ஆனால், வசந்தராஜ் அண்ணன் விடவில்லை. அவர் அத்தனை வருட அழுகையை கோபமாக மாற்ற முடிவுசெய்து, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மேலும் சொன்னார்.

'மருதூர் அணை பக்கத்துல ஒரு எளந்தாரிப் பையன் பாடி ஒதுங்கிருக்குனு சொல்லி, மூணாம் நாள் கூப்பிட்டாங்க. சும்மாப் போனேன்.  என் தம்பி மாதிரி இருந்துச்சு. அந்த அழுகின உடம்பு என் பிறந்த நாள் சட்டையைப் போட்டுருந்துச்சு. அந்தச் சட்டை மட்டும் இல்லேன்னா, 'சத்தியமா அது என் தம்பி கிடையாது’ன்னு சொல்லிட்டு ஓடி வந்திருப்பேன். எதுவும் சொல்லாம அங்கே யே நின்னு அவ்வளவு அழுததால, அந்த உடம்பு என் தம்பினு அரசாங்கத்துக்கும் தெரிஞ்சு போச்சு.

மறக்கவே நினைக்கிறேன்

வீட்டுக்கு வந்து அம்மாகிட்டயும் அக்காகிட்டயும் சொல்லல. சொல்லி கூட்டிப்போய் காமிக்கிறப்போ, ஹாஸ்பிட்டல்ல அந்தச் சட்டையைக்கூட கழட்டிருப்பாங்க. அப்புறம் எப்படி என் அம்மா, அக்கா நம்புவாங்க?  

மறுநாள் அத்தனை பொணத்தையும் அரசாங்கமே அடக்கம் பண்ணிடுச்சு. ஆனா, எங்க அடக்கம் பண்ணாங்கனு எனக்குத் தெரியாது. எங்க அம்மா, அக்காவுக்கு அவன் செத்துட் டான்னுகூட தெரியாது. மறுநாள் பேப்பர்ல 'எந்தந்த உடம்பை எங்கெங்க அடக்கம் பண்ணி ருக்கோம்’னு அரசாங்கமே ஓர் அறிவிப்பு வெளி யிட்டிருந்துச்சு. திருநெல்வேலியில இருந்து கன்னியாகுமரி போற ரோட்ல ரோஸ்மேரி காலேஜுக்கு அந்தப் பக்கம் 'கண்டித்தான்குளம்’னு நாங்க அதுவரை கேள்வியேபடாத ஓர் ஊர்ல கொண்டுபோய் என் தம்பியைப் புதைச்சிருந்தாங்க. அம்மாவையும் அக்காவையும் அங்கே கூட்டிட்டுப் போயி, 'குமாரு இறந்துட்டா’னு அவன் சவக்குழியை ஒரு அண்ணனா நான் காட்டினது, எவ்வளவு பெரிய கொடுமை தெரி யுமா? அதை என்னால ஆயுசுக்கும் மறக்க முடியாது தம்பி.

அந்தக் கூட்டத்துக்குப் போன என் தம்பி கையில, கண்டிப்பா எந்தக் கொடியும் இருந்திருக்காது. அயன் பாக்ஸும் மிக்ஸியும்தான் இருந்தி ருக்கும். அவனை போலீஸ் அடிச்சப்போ, கண்டிப்பா அவன் கோஷம் போட்டுக் கத்தியிருக்கவே மாட்டான். 'என்னை விட்டுருங்க சார்’னு துடிதுடிச்சு அழுதிருப்பான். அப்புறம் ஏன் அவனை அடிச்சாங்கன்னு எனக்கு இன்னும் தெரியல தம்பி.

நீங்களே சொல்லுங்க... அஞ்சு வயசுல ஆத்துக்குள்ள தள்ளிவிட்டு அவனுக்கு நீச்சல் கத்துக்கொடுத்த எங்க அம்மாகிட்ட போய், 'நம்ம குமாரு ஆத்துக்குள்ள இறங்கி ஓடும்போது நீச்சல் தெரியாம செத்துப்போயிட்டானாம்’னு என்னால சொல்ல முடியுமாப்பா? என் மூஞ்சில காறித் துப்பிராது அம்மா' என்று வசந்தராஜ் அண்ணன் கேட்டபோது எந்தப் பிடிமானமும் இல்லாமல் நின்றிருந்த என் உடல் அப்படியே நடுங்கிவிட்டது.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரவில் அதே தாமிரபரணி ஆற்றைப் பார்த்தேன். காலையில் கொட்டிய நினைவு தினப் பூக்களின் வாசமோ, வருடாவருடம் கேட்டுச் சலித்த கோஷங்களின் சலிப்போ இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

எதையும் யோசிக்காமல் இறங்கி அக்கரைக்கும் இக்கரைக்கும் அடித்தேன் நீச்சல். எனக்குத் தெரியும், உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் அது என்னுடைய நீச்சல் அல்ல; அஞ்சு வயசில் ஆற்றுக்குள் இறங்கி அம்மாவால் நீச்சல் பழக்கப்பட்டவனை... ஆற்றுக்குள் விழுந்து செத் தான் என்று சொல்லி  ஓர் அரசாங்கம் கொன்ற 'குமார்’ என்கிற இளைஞனின் பழிவாங்கும் எதிர்நீச்சல் அது!

- இன்னும் மறக்கலாம்...