##~##

நான் படிச்ச பள்ளிக்கூடத்துல  இருந்த பணக்கார வீட்டுப் பையன்களில் அவனும் ஒருவன். பரம்பரைப் பணக்காரன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஹாஸ்டலுக்குப் பிள்ளைகளைப் பார்க்க அவன் குடும்பமே காரில் வரும்.

காரின் முன் சீட்டில் தேங்காய்ப் பூ துண்டு போட்டு, நண்பனின் அப்பா மாதம் ஒருமுறையாவது மகனைப் பார்க்க வருவார். அவரின் கையிலோ, கழுத்திலோ வடம் வடமான  தங்கச் சங்கிலி இருக்காது. ஆனால், முகத்தில் இருக்கும் தேஜஸ், பார்த்தவுடனேயே 'பணக்காரர்’ என்று சொல்லவைக்கும்.  

சேலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அவன் ஊருக்கு, பத்தாம் வகுப்பு படிக்கும்போது நண்பர்களுடன் சென்று, இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறோம்.

கடல் மாதிரி வீடு, தோப்பு, வயக்காடு என்று பெரிய செல்வந்தக் குடும்பம். 'எங்க சின்னைய்யாகூடப் படிக்கிற புள்ளைங்க’ என்று சொல்லிச் சொல்லி, எங்களை அப்படிக் கவனித்துக்கொண்டார்கள் அந்த வீட்டின் வேலையாட்கள். அந்த வீட்டின் பிரமாண்டமும் தாராளமும் உபசரிப்பும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, வீட்டுக்குள் இருந்த ஏதோ ஒரு துறுதுறுப்பு ஏனோ தொலைந்துபோனது போல ஓர் உணர்வு.

பாஸ்வேர்டு்

போன மாதம் ஒரு வேலையாக சேலம் சென்றுவிட்டுத் திரும்பும்போது நண்பனின் வீட்டு வழியாகத்தான் வண்டி வந்தது. வெளியே எட்டிப்பார்த்தபோது, எட்டு அறைகள் வைத்துக் கட்டப்பட்டு பங்களா போல் இருந்த வீடு, அந்த இடத்தில் இருந்ததற்கான சுவடே இல்லாமல், இடித்து நொறுக்கி அகற்றப்பட்டதற்கான அடையாளங்களும், 'இந்த இடம் இவருக்குச் சொந்தமானது’ என்ற புதிய போர்டும் மட்டுமே இருந்தன.

பள்ளிக்கூடத் தோழர்கள் சிலரிடம் பேசி நண்பனின் அலைபேசி எண்ணைப் பிடித்துப் பேசினேன். 'ஒண்ணும் மிச்சம் இல்லடா.. எல்லாத்தையும் குடுத்தாச்சு. நான் இப்போ கத்தார்ல இருக்கேன். அப்பா-அம்மா கிராமத்துல இருக்கிற பழைய வீட்டுல தங்கியிருக்காங்க!’ என்று விரக்தி தோய்ந்த குரலில் சொன்னான்  நண்பன்.

வியாபாரத்திலும் விவசாயத்திலும் 'ஓஹோ’வென்றிருந்த குடும்பம், விவசாயம் பொய்த்ததால் ஏற்பட்ட தாக்கத்தால்  தடுமாறிப்போனது. 'விட்டதை, வியாபாரத்தில் பிடிக்கலாம்’ என்று நம்பிக்கையில் அடுத்தடுத்து கடன்கள் வாங்கி முன்பின் தெரியாத முரட்டு வியாபாரங்கள் பண்ண முயற்சித்து, கடைசியில் தலைக்கு மேல் வெள்ளம் போய்... ஒரு நாளில் எல்லாம் முடிந்து போயிற்று.

'என்னடா இப்படிச் சொல்ற..? கடன் ஏறும்போதே, கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே!’

'இருந்திருக்கலாம்தான். இருக்கிறதுல எதையாவது வித்துக் கடனை எல்லாம் ஒழிச்சுப்புட்டு, இடையில சரிபண்ணியிருக்கலாம். ஆனா, சொத்துபத்தை வித்தா சொந்தக்காரங்க மத்தியில அசிங்கமாப் பேசுவாங்கன்னு அப்பா, அப்படியே இழுத்துட்டே வந்துட்டாரு. வருமானம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா, வட்டி எல்லாத்தையும் தின்னுடுச்சுடா’ என்று அவன் சொல்லச் சொல்ல, அத்தனை பெரிய சாம்ராஜ்யம் சரிந்த  அதிர்ச்சி என்னை மொத்தமாகத் தாக்கியது!

கல்லாப்பெட்டியில் முதலாளியாக அமர்ந்திருந்த நண்பன், இப்போது கத்தாரில் ஏதோ வேலை செய்து காலம் தள்ளுகிறான். அவன் அனுப்புகிற பணத்தில்தான் அவன் குடும்பம், அம்மா, அப்பா என அனைவரும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

'என்னை விடு மாப்ள... நான் ஏதோ இந்தப் பக்கம் வந்துட்டேன். அங்க என் அப்பாவை நினைச்சாத்தான் மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ராஜா மாதிரி வாழ்ந்த இடத்தைவிட்டு அதே ஊர்ல ஒரு ஓட்டு வீட்டுல ஒண்டிக்கெடக்காரு. ரெண்டு வயலை வித்துப்புட்டு ஒழுங்கா வேலையைப் பார்த்திருந்தா, அத்தனையும் மிஞ்சியிருக்கும்டா... இப்ப எந்தக் கௌரவம் வந்து எங்களுக்கு சோறு போடுது சொல்லு?’ நண்பனின் குரலில் ஆற்றாமையும் கோபமும் தெரிந்தது.

'அதெல்லாம் பார்த்துக்கலாம்... சரி பண்ணிக்கலாம்’ என்று கடன் பற்றி நிறைய நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோம். வெள்ளம் முட்டி வரை ஏறுகிறபோதே முடிவெடுக்காமல் விட்டேத்தியாக இருந்துவிடுகிறோம். அதுவே திடீரென ஒருநாள் மொத்தமாக மூழ்கடித்துவிடுகிறது.

வியாபாரம் அல்லது பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கிறது என்று அடுத்தவருக்குத் தெரிந்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்பதால், அதைக் கடன் வாங்கிச் சரிக்கட்ட முனைகின்ற பலர், அந்தக் கடனாலேயே மூழ்கிப்போன கதைகள் நிறைய உண்டு.

'எங்க தாத்தா 100 ஏக்கர் நிலம் வெச்சிருந்தாராம்’ என்று நாம் சந்திக்கும் பத்து பேரில் ஒருவர், தன் குடும்பத்தின் கடந்தகாலம் பற்றி பேசுகிறார். ஆனால், அவர் பேரன் ஏன் பிழைப்பு தேடி சென்னைக்கு வர நேர்ந்தது? ஊரில் 'பெரிய வீடு’ என்ற பெயரில் மொட்டைக் கோபுரம் போல நிற்கும் உளுத்துப்போன கட்டடங்கள், யாருடைய கடன் வாழ்க்கையைச் சொல்கின்றன?

ன்னொரு பக்கம், இப்போது கடன் கிடைப்பது எளிதாகி இருப்பதால், நம்முடைய நிறையக் கனவுகள் நிறைவேயிருக்கின்றன என்பதும் உண்மைதான். கடந்த காலங்களைவிட இப்போதுதான் கடன் நம்முடனே பயணிக்கிறது. தினந்தோறும் யாராவது தொலைபேசியில், 'கடன் வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். கடன்... இன்று காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது. ஆனால், எல்லாரும் அவசியத் தேவைகளுக்கு மட்டும்தான் கடன் வாங்குகிறோமா?

8,500 ரூபாய் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடன் தனக்குப் பிடித்த 85,000 ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிவந்து வாசலில் நிறுத்தினான் என் தோழன். அவனுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்கூட அவன் வாழ்க்கையில் பெரிதாகச் சாதித்தது போல்தான் இருந்தது.

எதிர் வீட்டு அங்கிள், 'ஏண்டா பெருமைக்கு இப்படி எருமை ஓட்றீங்க?’ என்று கேட்டபோது கடுப்பாக இருந்தது. '5,500 ரூபாயை பைக்கின் மாதத் தவணைக்குக் கட்டிவிட்டு, மாசச் செலவுக்கு கடன் வாங்கித் தடுமாறணுமா?’ என்று அந்த அங்கிள் கேட்டபோது, அவர் பொறாமையில் பேசுவதாகவே பட்டது. எம்.ஜி.ஆர்., நகரில் எல்லா நண்பர்களும் பைக்கில் ஆளுக்கொரு ரவுண்ட் போய்... அங்கிளை சபித்தோம். ஆனால், அங்கிள் என்ன நினைத்துச் சொன்னாரோ தெரியவில்லை... நண்பனால் பைக்கின் மாதத் தவணையை ஒழுங்காகச் செலுத்த முடியவில்லை. 'நீங்க கண்ணு வெச்சுதான் இப்படி ஆகிப்போச்சு’ என்று அங்கிளிடம் ஒருநாள் நேராகவே சொல்லிவிட்டான் நண்பன். 'கடன் வாங்குங்கடா தப்பில்லை. கணக்குப் போட்டு பார்த்து, பிளான் பண்ணி வாங்குங்க. இன்னும் ஆறு மாசம் காசு சேர்த்து வாங்கியிருந்தா, இவ்வளவு சிரமம் இல்லைல்ல’ என்று ஆறுதல் சொன்னார் அங்கிள்.

நிதி ஆலோசகர் நாகப்பன், 'கடனிலயே லாபமான கடன் இருக்கு’ என்று அருமையான ஒரு விஷயம் சொன்னார். அதாவது, நாம் வாங்கும் கடனை வைத்து சொத்தை உருவாக்கிக்கொண்டாலோ, வாங்கிய கடனின் வட்டியைவிட அதிகமாகச் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டாலோ அது லாபமான கடன். ஆனால், ஆடம்பரச் செலவுக்கும் பணக்கார அந்தஸ்துக்கும் வாங்கும் கடன்... ஆபத்தான கடன்!

இன்றைய தேதியில் சரியான திட்டமிடலுடன் கடன் வாங்கினால், அதைவிடப் புத்திசாலித்தனம் வேறு இல்லை. எல்லாருக்கும் கடன் கொடுக்கும் வங்கிகளில் தொடங்கி பலருக்கும் சம்பளம் கொடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை கடனில்தான் வளர்கின்றன. ஆனால், நாம் வாங்கும் கடன், நம்மை ஆளாக்குகிறதா அல்லது அழிக்கிறதா என்பதை கணித்துத் திட்டமிடுவது நமது பொறுப்பு.

எல்லாரும் கார் வைத்திருக்கிறார்கள் என்று நாமும் ஒரு காரை வாங்கி, அதற்கு கடன் கட்ட இரவு  பகலாக வேலை பார்த்து நிம்மதி இழந்து,  தெரிந்தவர்களிடம் அவசரக் கடன் வாங்கி இ.எம்.ஐ. கட்டி நொந்துபோவதைவிட... திட்டம் போட்டுப் பொறுமையாக சில லட்சங்களைச் சேர்த்து கையைக் கடிக்காத அளவுக்கு இ.எம்.ஐ. கட்டி சந்தோஷமாக கார் ஓட்டலாம். இல்லையென்றால், கடனில் வாங்கிய காருக்கு கடன் கட்ட புதிய கடன் வாங்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து குட்டியாக ஒரு மொபட் வாங்கி அதற்கு தார்ப்பாய் ஆடை அணிந்து பாதுகாத்துப் பராமரித்து அழகு பார்த்த நாட்களின் திருப்தி, ஒரே நாளில் கிடைக்கும் கடனால் வாங்கும் காரை ஓட்டும்போது வரவே வராது.

பாஸ்வேர்டு்

'காரில் போய்க்கொண்டிருந்த நான், பைக்கில் போனால், நாலு பேர் என்ன நினைப்பார்கள்’ என்று தவிக்கிற மனசு, 'நிலைமை இப்படியே போனால், நடந்துபோக வேண்டி வருமே’ என்று ஏன் நினைக்க மறுக்கிறது? கடன் நம்மைத் தின்ன ஆரம்பித்துவிட்டது என்பது தெரிந்தவுடனேயே எதையாவது ஒன்றை விற்றுக் கடனை அடைத்துவிட்டு வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டிருந்தால், கத்தாரில் இருந்து தொலைபேசியில் அழும் நண்பனின் கனவுகள் காயப்பட்டு இருக்காது.

எம்.ஜி.ஆர்., நகரில் 'என்றென்றும் புன்னகை’ பாடிக்கொண்டே நண்பனின் புதுவண்டியில் ரவுண்ட் அடித்த நாங்களும் அவன் அதை அடிமாட்டு விலைக்கு விற்றபோது சும்மாகூடப் போய் நின்றதோடு சரி.

இன்றையப் பொருளாதார சமன்பாட்டுக்கும் உயர்வுக்கும் 'கடன்’ ஒரு கச்சிதமான ஆயுதம். ஆனால், இந்தக் கடன் அன்பின் பெயரில் தரப்படுவது இல்லை என்ற வர்த்தக மனோநிலையை புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். 'பிள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டக் காசு இல்லை’ என்று கேட்பவர்களில் எத்தனைப் பேருக்குக் கடன் கிடைக்கிறது? 'அம்மாவுக்கு முடியலை’ என்று அழுதுகொண்டே சொல்பவரிடம், 'பரவாயில்லை... அடுத்த மாசம் கடனைக் கொடு போதும்’ என்று எத்தனைப் பேர் சொல்லிவிடுவார்கள்? தனி மனிதர்களும் சரி, நிறுவனங்களும் சரி... சம்பாத்தியம், சொத்து, இத்யாதி இத்யாதி என ஏகப்பட்ட விஷயங்களைப் பார்த்துதான் கடன் கொடுக்கிறார்கள். 'இவன் பணம் கட்டாமல் போனால், அதை மீட்க இவனிடம் என்ன இருக்கிறது’ என்று கணக்குப் பார்த்துதான் கடன் தரப்படுகிறது. அதேபோல் கடன் வாங்குபவர்களும், 'எவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் திருப்பிக்கட்ட முடியும்’ என்று கணக்குப் போட்டுத்தான் கடன் வாங்க வேண்டும்.

கௌரவப் போர்வை போர்த்திக்கொள்ள கடன் வாங்கினால், அது நம் நிம்மதிக்கு நாமே கொள்ளி வைக்கும் வேலை.

'அவசரச் செலவுக்குன்னு பர்ஸுக்குள்ள 100 ரூபாயை ஒளிச்சு வை. அவசரம் வந்தா மட்டும் எடுக்கிறதுக்குனு பேங்க்ல கொஞ்சம் பணத்தை போட்டு வை’ என்று சொல்லும் எதிர்வீட்டு அங்கிள் பழைய பாணி ஆள் போலத் தெரிந்தாலும், அவர் சந்தோஷமாகவே இருக்கிறார். அதே சமயம் கடன் வாங்குவது கௌரவக் குறைச்சல் என்ற காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு அது மிகச் சரியான வாய்ப்பு.

லாபக் கடன் வாங்கி, திட்டம் போட்டு திரும்பக் கட்டி உயர்வது இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 'கடனே வாங்கமாட்டேன்’ என்று இன்றைய தேதியில் சபதம் எடுத்துக்கொள்வது அவ்வளவு சாத்தியமும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை. ஆனால், நாம் பெறவிருப்பது லாபக் கடனா, நட்டக் கடனா என்பதுதான் நாம் போட வேண்டிய வாழ்க்கைக் கணக்கு!

- ஸ்டாண்ட் பை...