Published:Updated:

“வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!”

மறுபடியும் மகேந்திரன்...

“வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!”

மறுபடியும் மகேந்திரன்...

Published:Updated:
“வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!”
##~##

ந்த முறை இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், லெனின் என்று பெரும் படையுடன் வருகிறார் இயக்குநர் மகேந்திரன். அவரது அடுத்த படமாக 'சாசனம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. செட்டிநாட்டு வாழ்வை செல்லுலாய்டில் சித்திரிக்கப்போகிற முதல் படமாக இது அமையக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜா அண்ணாமலைபுரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கிற வீட்டில், மகேந்திரன்.

''ஒவ்வொரு பொழுதும் விடியறது... ஒரு புதுப் புத்தகம் விரியற மாதிரி. என் பொழுது முடியறதுக்குள்ள அதை எவ்வளவு தூரம் படிக்க முடியுமோ... அதை முடிச்சிடணும்னு நினைக்கிறேன்.

சினிமா, நான் திட்டமிட்டு வந்த விஷயம் இல்லை. இது எனக்கு விதிக்கப்பட்டது. Life is like a snooker game. நாம நினைக்கிறது ஒண்ணு, நடக்கிறது ஒண்ணு. ஆனா, அந்த சர்ப்ரைஸ் அல்லது ஷாக்தானே வாழ்க்கையோட சுவாரஸ்யமே!''

''அந்த ஞாபகங்கள் இன்னும் இருக்குதா..?''

''மறக்க முடியுமா என்ன..? 'முள்ளும் மலரும்’ என் முதல் படம். அப்புறம் 'உதிரிப்பூக்கள்’, 'பூட்டாத பூட்டுக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'ஜானி’... இப்படி ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சு செய்தேன். இயற்கையின் அழகை நானும் எடுத்துக்காட்டினேன். என்னைப் பாதிச்ச சின்னச் சின்ன விஷயங்களைத் தொடுத்தது மட்டும்தான் நான் செய்த வேலை. அந்த வயசுல எனக்குக் கிடைக்காத பெற்றோர் பாசம் Parental Loveதான் என்னோட உதிரிப்பூக்களுக்கு ஆதாரம். நாம எல்லோருமே அன்புக்கு ஏங்கும் குழந்தைகள்தானே!''

''சினிமால நீங்க என்னவெல்லாம் சொல்ல ஆசைப்பட்டீங்க..?''

'' 'ஜானி’ படத்துல 'நீ அநாதை இல்லை. அன்பு காட்ட ஆள் இல்லாதவன்தான் அநாதை!’னு ஒரு டயலாக் உண்டு. அதை நான் நம்பறேன். அன்பைத் தவிர, வேறு எந்த செய்திகளும் என்னிடம் இல்லை. அன்பைத் தவிர, வேறு எதுவும் செய்திகளே இல்லை. என் படங்கள் எல்லாவற்றிலும் அன்புதான் பிரதானமாக இருந்தது.''

“வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!”

''சந்தோஷம் தர்ற விஷயங்கள்னு எதைச் சொல்வீங்க?''

''சினிமாங்கிற மீடியத்தை நான் பயன்படுத்திக்கிட்ட விதம்தான் என்னோட சந்தோஷம். அட்டகாசமான வில்லனா இருந்த ரஜினியை, நான் சரியாப் பயன்படுத்தின ரெண்டு படங்கள், சரத்பாபு மாதிரி ஒரு சாஃப்ட் ஹீரோ, அஞ்சு - சுஹாசினினு நான் கண்டெடுத்த சின்னப் பெண்கள். அசோக்குமார், பாலுமகேந்திரா ஆகிய நல்ல கேமராமேன்கள்னு, தமிழ் சினிமாவில் என் பங்களிப்பும் கொஞ்சம் கொஞ்சம் உண்டுங்கிறது சந்தோஷம். ஏதோ சில விஷயங்களுக்கு அட்லீஸ்ட் நாம ஒரு ஆரம்பமா இருந்தாப் போதும்... மற்றதெல்லாம் தானா நடக்கும்.''

''சக்ஸஸ்ஃபுல் டைரக்டரா இருந்த நீங்க, மெள்ள விலகிப்போனதற்கு என்ன காரணம்?''

''நேரடியாவே கேளுங்க. எனக்கும் நிறையப் பேர்போல மது அருந்தும் பழக்கம் உண்டு. அது என்னோட பெர்சனல் விஷயம்னு நான் நினைச்சேன். அப்படி இல்லேனு பிறகு புரிஞ்சது. என்னைப் பற்றி குடிகாரன் அது இதுனு நிறையப் பரப்பினாங்க. அதில் பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. திட்டமிட்டுச் சில பேர் அதைச் செய்தாங்க. அதன் மூலம் அவங்க எதைச் சாதிக்க விரும்பினாங்கன்னு தெரியலை. அவங்கள்லாம் இப்போ என்ன ஆனாங்கன்னும் தெரியலை. இப்பவும் சொல்றேன்... யாரும் யாருடைய உணவையோ, உணர்வையோ பறிக்க முடியாது... எனக்கு யார் மீதும் வருத்தம் கிடையாது. எது குறித்தும் புகார் கிடையாது.''

''உங்க பார்வையில் இன்னிக்குத் தமிழ் சினிமா எப்படி இருக்கு?''

''டெக்னிக்கல் எக்ஸலென்ஸ்தான் நிறைய. மணிரத்னம், ஷங்கர் மாதிரி சில டைரக்டர்கள் இதுல கில்லாடியா இருக்காங்க. மேற்கத்தியத் தாக்கங்கள் நிறைய இருக்குது. இன்றைய தமிழ் சினிமா, இந்தியா முழுக்க பிசினஸ் ஆவுது. நல்ல விஷயம்தான். ஆனா, நேஷனல் தரத்துக்குப் படமெடுப்பதற்கும் நேஷனல் மார்க்கெட்டுக்குப் படமெடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பெரும்பாலும் மார்க்கெட்டுக்குப் பண்ற படங்கள்தான் இப்போ வருது. இருந்தாலும், ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு. சமுத்திரக்கரையில ஊத்துத் தோண்டினா நல்ல தண்ணி கிடைக்கிற அதிசயம் மாதிரி, அப்பப்போ நல்ல படங்கள் வரும். அந்த மாதிரி தாகம்கொண்ட இளைஞர்கள் சினிமாவுக்கு வரணும்.''

“வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!”

''திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு என்ன தோணுது..?''

''நிறைவா இருக்கு. நான் ஒரு வழிப்போக்கன் மாதிரிதான் உணர்கிறேன். தட்டுத் தடுமாறி பாதை தெரியாமல் நடந்தேன். திடீர்னு பிரகாசமான வெளிச்சங்கள்... சோலைகள்... வழியில் வந்தன. அப்புறம் மலைப்பாதை. நடக்கச் சிரமமா இருந்தாலும், மேலே... உயரே... உச்சிக்கு என்னைச் சுமந்த பாதைகள். அது மாதிரிதான் என் பாதையில் ஒரு பாலைவனம் எதிர்ப்பட்டதும்!

இப்பவும் நடந்துட்டிருக்கேன்... பாலைவனத்துலயும் சோலைகள் வரும். வழிப்போக்கனுக்கு எல்லாமே ஒண்ணுதான்!''

''இப்போ நீங்க எடுக்கப்போகிற 'சாசனம்’ எதைப் பற்றியது?''

''செட்டிநாட்டுக் கலாசாரம் பற்றியது. வேற்றுக் கிரகங்களில் மனிதன் இருக்கிறானா என்பதை விஞ்ஞானம் விசாரிக்கிற இந்த நேரத்தில் உன் பக்கத்திலேயே நீ கவலைப்படுவதற்கு மனுஷங்க இன்னும் இருக்காங்கங்கிறதுதான் கதை. அதுவும் அன்பைப் பற்றித்தான் பேசப்போகுது அதைத் தவிர, வேற எதுவும் எனக்குத் தெரியாது.''

''சினிமா தவிர உங்க வாழ்க்கையில்..?''

''ம்ஹும்... சொல்லப்போனா வாழ்க்கையே ஒரு சினிமாதான். ஆனா இது One time Projection. இதுல மட்டும் செகண்ட் ஷோ கிடையாது. அப்படிப் பார்க்கையில, நாம எல்லாமே சினிமாக்காரங்கதான்!''

''எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென விருப்பம்?''

''அது அவசியம் இல்லைனு தோணுது. ஒரு நல்ல சிற்பம் செதுக்குறவன், அதன் கீழே தன் பெயரை எழுத வேண்டியது இல்லை. பின்னால வர்றவங்க பார்க்க, சிற்பம் மட்டும் இருந்தாப் போதும். காத்துல எழுதின பாட்டு மாதிரி கரைஞ்சுபோயிடணும்னு ஆசைப்படறேன்!''

- ரா.கண்ணன்

படங்கள்: கே.ராஜசேகரன்,'ஸ்டில்ஸ்’ ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism