Published:Updated:

ஆறாம் திணை - 51

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 51

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

''போஷாக்கா இருந்தாத்தான் புள்ள லட்சணமா இருப்பான். அஞ்சு வயசு வரைக்கும் எல்லாப் புள்ளைங்களும் நல்லா குண்டாதான் இருக்கும். வளர வளர வத்திருவான்’ என்ற பச்சைப் பொய்யைச் சொல்லி 'குட்டிக் குண்டர்’ படையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். விளைவு... 'தேசிய உடற்பருமன் தின அறிக்கை’யில், நகர்ப்புறக் குழந்தைகளின் குண்டாகும் போக்கு வருடத்துக்கு இரண்டு சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக எச்சரித்துள்ளது. அரசின் கோளாறான திட்டம் உண்டாக்கும் Mal nutrition  விளைவால் நாட்டின் குடிமகன்களில் பாதிக்கும் மேலானோர் அரைகுறை உணவு, பட்டினி, சோகை என ஒருபுறம் இருக்க, மறுபுறம் சந்தைக் கலாசார மோகம் உண்டாக்கும் Bad nutrition விளைவால் உடல் பருத்து வருகின்றனர் சொச்சம் பேர்!  

'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு’ என்று எளிமையாகச் சொல்லிச் சென்றது நம் உணவுக் கலாசாரம். ஆனால், இளைத்த உடல் பருக்க, பருத்த உடல் இளைக்க, இன்றைக்கு Functional Foods  எனும் போர்வையில் உணவுச் சந்தையில் பெருகி இருக்கும் உணவுகளைக் கணக்கிட முடியாது. தொப்பையையும் தொடையையும் கிராஃபிக்ஸில் சுருக்கிக் காட்டி வலைவீசும் அந்த விளம்பரங்களின் பிடியில் சோம்பல் பேர்வழிகள், சில காலம் வயிற்றையும், பல காலம் மணிபர்ஸையும் மெலியவைப்பதே நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னக் குழந்தைகள் குண்டாவதற்கு, அதிகமான பால் உணவுகளே மிக முக்கியக் காரணம். பால் என்பது, உணவு அல்ல; மருந்தாக மட்டுமே பயன்படுத்தக்கூடியது. ஆனால், பால் ஒரு வெள்ளை கரன்ஸி எனக் கண்டறிந்த மேற்கத்திய விஞ்ஞானம், அதன் வியாபாரத்தைக் கொழிக்கவைக்க, வழக்கம்போல் விஞ்ஞானிகள் மூலம் தனக்கு வேண்டிய சான்றுகளை மட்டும் அள்ளித் தெளித்தது. 'வெள்ளைக்காரன் சொல்லிவிட்டால் வேதம்’ என்ற நம் பாட்டனின் மூன்றாம் விதிப்படி, பால் அதிகம் பழக்கம் இல்லாத நம் மரபு பாலை உன்னத உணவாக்கிவிட்டது.

ஆறாம் திணை - 51

அதிகப் பால், உடல் எடையை அதிகரிக்கும்; நுரையீரலில் சளியைச் சேர்க்கும் என நம் முன்னோர் சொன்னதை மறந்துபோனோம். போதாக்குறைக்கு, 'பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் வரும் பல்வேறு மாடுகளின் கலப்புப் பாலில் உள்ள புரதம் காரணமாக ஒருவேளை சர்க்கரை வியாதி தருமோ?’ என்ற ஆய்வுகள் இப்போது நம் ஊரிலேயே நடக்கின்றன. 'அதிகமாக பால் சாப்பிட்டால் ரத்த நாளங்களில் கொழுப்பு படியுமோ?’ என்ற கவலையும் முளை விடுகிறது. ஆக, 'இந்தப் பாலைக் குடிக்கலை.. அப்புறம்...’ என்று கடுங்கோபத்துடன் உங்கள் குழந்தையை குச்சிக் கம்பை வைத்து மிரட்ட வேண்டாம். உங்கள் குழந்தை இயல்பிலேயே புத்திசாலிதான். ஆரோக்கியமாக வளரட்டும். 'அப்புறம் உடலுக்கான கால்சியம் சத்துக்கு எங்கே போவது?’ என்று கேட்பவர்களுக்கு, கீரை, மோர் ஆகியவை போதும் என்பேன். பல சமயம் மோரின் கால்சியம் பாலின் கால்சிய அளவைவிட அதிகம். கூடவே லாக்டோபேசிலஸ்... உடலுக்கு நலம் பயக்கும் பல நுண்ணுயிரிகளும் மோரில் கிடைக்கும்.

பால், இனிப்புப் பொருள், கிழங்கு, பட்டை தீட்டிய பச்சரிசி இவற்றை மறக்காமல், தொப்பையை மறைக்க முடியாது. பட்டை தீட்டிய கோதுமை மாவில் செய்த பர்கர் ரொட்டிகள், 'டிரான்ஸ்ஃபேட்’ எனும் கெட்ட கொழுப்பு நிறைந்த பீட்சா, ஃபிங்கர் பிரைஸ் எனும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள், வெள்ளைச் சர்க்கரை, பிராய்லர் கோழி, எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனி ஆகிய பொருட்களை உணவில் தவிர்த்து, தினசரி 45 நிமிட நடைப்பயிற்சியும், 20 நிமிட மூச்சுப் பயிற்சியும் செய்தால், காசு பணம் செலவழிக்காமல், இரைப்பை, குடல் பகுதிகளை அறுத்து நீக்காமல், வயிற்றுக் கொழுப்பை உறிஞ்சி எடுத்துப்போடாமல் உடல் எடையைக் எளிதில் குறைத்துவிடலாம்!

எடை குறைக்க, நார்ச் சத்து மிகுந்த உணவு அவசியம் தேவை. மரக்கறிக்காரர்களுக்கு நார்ச் சத்து நிறைந்த உணவுப் பொருள் கிடைப்பது பெரும்பாலும் கீரையிலும் பழத்துண்டிலும் இருந்துதான். 'கீரையை ஆய்ந்து கிள்ள நேரம் இல்லை; பழத்தைக் கடித்துச் சாப்பிடக் கஷ்டம்’ என்று சாக்குபோக்கு சொல்வோருக்கு, நாளன்றுக்கு 25 கிராம் நார்ப் பொருள் உடலில் சேராவிட்டால், 'உள்ளே-வெளியே’ இரண்டு பக்கமும் கொழுப்பு சேரும் அபாயம் உண்டு. தினசரி காலை, மாலை இரண்டு ஸ்பூன் வெந்தயம் சாப்பிடுவது உடலை மெலிய வைக்கும். வெந்தயத்தின் நார்ப் பொருளும் அதிலுள்ள சப்போனின்களும் ரத்தக் குழாயின் உள்சேரும் கொழுப்பையும் டிரை கிளிசரைடையும் குறைய வைக்கும்.

'பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு வேண்டாம்... வேற என்னதான் சார் காலையில் குடிப்பது?’ என்று கேட்போருக்கு என் பதில், ஆவாரை டீ. நாம் மறந்துபோன அருமையான ஒரு பாரம்பரிய பானம். 'ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?’ என்று முதுமொழி வழக்கத்தில் உண்டு. ரோசாப் பூ, ஆர்க்கிட் பூ போல ஆவாரைக்கு மலர் மார்கெட்டில் மவுசு இல்லை என்றாலும், கூடிய சீக்கிரமே, அதன் சந்தைக்கு பெரும் அடிதடி வரப்போவது உறுதி. ஆரம்பகட்ட சர்க்கரை நோய்க்கு இந்த மலர் தரும் மருத்துவம் பெரும் பலன் அளிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

'ஆவாரை கொன்றை நாவல்
அலைகடல் முத்தங் கோஷ்டம்
மேவிய மருத் தோல்
’ என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால், 'காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்’ என்று பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்ப்போமா?

இனிப்பு நீரான (காவிரி நீர்) சர்க்கரை வியாதிக்கும், உப்பு நீரான (கடல் நீர்) சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்துவரும் நீருக்கும், இந்த ஆவாரை காபி ஓர் அருமருந்து என்பதே அந்தப் பரிபாடல் சொல்லும் உண்மை.

என்ன ஒன்று, பழசுக்கு எப்போதும் பளபளக்கும் விலாசமும் கிடையாது, பகட்டான விளம்பரமும் கிடையாது, பக்குவமாகப் பேசி மயக்கவும் தெரியாது. ஆனால், பல நேரங்களில் பழமை நம்மைப் பாதுகாக்கும் அன்னை மனம் கொண்டது என்பது மட்டும் நிச்சயம்.

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism