Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 21

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன் - 21

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

டு இரவில் நாய்கள் குரைத்தால், பேய்கள் வரப்போவதாகச் சொல்லி அண்ணன் அடிக்கடி பயமுறுத்துவான். அதிகாலையில் காகம் கரைந்தால், சொந்தக்காரர்கள் வரப்போவதாகச் சொல்லி அம்மா என்னை மகிழ்விப்பாள். எந்த நேரத்தில், எந்த மரத்திலிருந்து எந்த மயில் அகவினாலும்,  மழை வரப்போவதாகச் சொல்வாள் திவ்யா. அதெல்லாம் சரி, கிளி ஒன்று தினமும் கனவில் வந்து கீச்கீச்சென்று ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்?

கொல்லம் - மதுரை பேசஞ்சர் ரயிலுக்காக, நள்ளிரவு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். என்னோடு சேர்ந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள். சில குழந்தைகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓடியாடி விளையாடித் திரிய, அந்த நேரத்தில் என் கவனம் முழுதும் என் பக்கத்தில் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த ஒரு பெரியவரின் மீதுதான் இருந்தது. காரணம், அவரின் தலைக்கு அருகில் இருந்த கிளி; ஜோசியப் பெட்டிக்குள் கத்திக்கொண்டிருந்தது அந்த ஒற்றைக் கிளி.

கிளி ஜோசியக்காரர்கள் என்றாலே, எனக்கு எப்போதும் ஆர்வமான ஓர் அவதானிப்பு வந்துவிடும். காரணம், அவர்கள் எப்போதும் ஒரு பறவையுடனேயே பேசுகிறார்கள்; நடக்கிறார்கள்; வாழ்கிறார்கள். அந்தப் பறவையால்தான் வாழ்கிறார்கள். ஒற்றை நெல்லுக்காக, ஒரு விரல் அசைப்பில் ஒருவனின் எதிர்காலத்தையே தன்னுடைய சிவப்பு அலகால் அலட்சியமாக தூக்கிப்போட்டுவிட்டு, கூண்டுக்குள் போகும் எத்தனையோ ஒற்றைக் கிளிகளின் மீதான பாவமும் பிரமிப்பும், அப்படியே அடிநாக்கில் தங்கிவிட்ட அந்தக் கால ஆரஞ்சு மிட்டாயின் ருசிதான் எனக்கு.

ரயில் வந்தது. எல்லோரும் ஏறினார்கள்; நானும் ஏறினேன். பலமான குறட்டையோடு உறங்கிக்கொண்டிருந்த அந்த ஜோசியக்காரர் எப்படித்தான் விழித்தாரோ தெரியவில்லை... பதறியடித்து எழுந்தவர், கிளி ஜோசியப் பெட்டியோடு ஓடிவந்து நான் இருந்த பெட்டியில் ஏறினார். என் முன்னால் உள்ள இருக்கையில் மிகச் சரியாக அவர் வந்து அமரும்போதே தெரிந்துவிட்டது, பெரியவர் சரியான போதையில் இருந்தார். அப்படியும் இப்படியுமாக நிதானத்துக்கு வந்தவர் கேட்ட முதல் கேள்வியே எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

மறக்கவே நினைக்கிறேன் - 21

'தம்பி, இந்த ரயிலு எங்கப்பா போகுது?'

'ஏங்க, எங்க போகுதுனு தெரியாமலா ஏறுனீங்க? இது கொல்லம் கேரளாவுக்குப் போகுதுங்க.'

'கேரளாவுக்கா... எப்போ போய் சேரும்?''

'காலையில போய் சேரும். அது சரி, நீங்க டிக்கெட் எடுத்தீங்களா?'

'இல்ல தம்பி, எங்க போகணும்னு நான் இன்னும் முடிவே பண்ணல. அதுக்குள்ள இந்த ரயில் வந்துட்டு, அதான் ஓடிவந்து ஏறிட்டேன். 'டிக்கெட் எடுக்கல’னு என்னைய எங்க இறக்கிவிட்டாலும் ஒண்ணும் பிரச்னை இல்லை தம்பி. எல்லா ஊரும் எனக்கும் என் ராசாத்திக்கும் நம்ம ஊருதான்' என்றவர். 'அப்படிதானடா என் செல்லம்..!’ என்று கிளியைக் கொஞ்சத் தொடங்கினார்.

அவரிடம், அந்த நேரத்தில் கிளி ஜோசியப் பெட்டியையும் அதற்கு உள்ளே எந்நேரமும் கத்திக்கொண்டே இருக்கும் கிளியையும் தவிர வேறு எதுவும் இல்லை. எங்கேயாவது விரித்துப் படுக்கவோ, கொட்டும் பனிக்கு தலை மூடவோ அவசரத்துக்கு சிறு துண்டுகூட அவரிடம் இல்லை. உடுத்திய வேட்டி - சட்டையோடு இருந்தாலும் ஒரு மாதிரியான கம்பீரத்துடனேயே அவர் காணப்பட்டார்.

'தம்பி, ராசத்தியைக் கொஞ்சம் பாத்துக்கோங்க!’ என்று அடிக்கடி சொல்லிவிட்டு, அந்தக் கிளி ஜோசியப் பெட்டிக்குள் இருந்து பாட்டிலை எடுத்து மறைத்தபடி கழிப்பறைக்குள் போனவர், பலமான இருமலோடும் எச்சில் வழிந்த வாயோடும் கண் சிவக்க வந்து 'நெல் சாப்பிடுறியா... அரிசி சாப்பிடுறியா தங்கம்?’ என்று கிளியோடு பேசியபடியே அந்தப் பெட்டியைத் திறந்து, சின்ன பாலிதீன் பையில் இருக்கும் அரிசியையும் நெல்லையும் அள்ளி கிளிக்குப் போட்டபடி பழக்கப்பட்டவரின் பார்வையோடு என்னிடம் பேசத் தொடங்கினார்.

'ஏன் தம்பி, இந்த மலையாளிங்க எல்லாம் கிளி சோசியம் பாப்பாங்களா?'

'தெரியலீங்களே...'

'மாந்திரீகம், மந்திரம் எல்லாம் நிறையப் பண்ற பயலுவ...' என்று சொன்னவர், 'நாம ரெண்டு பேரும்தான தாயி. ஒரு நாளைக்கு ஒருத்தன் வந்து நம்மகிட்ட சோசியம் பார்த்தாலும் போதும்!’ என்று தன் கிளியிடம் ஏதோ ரகசியம் சொல்வதைப்போல சொல்லிவிட்டு, சிவந்த கண்களோடு மறுபடியும் என்னிடம் கேட்டார்.

'தம்பிக்கு எந்த ஊரு, எங்க போறிய?'

'திருநெல்வேலிதான். கேரளாவுக்கு ஒரு வேலை விஷயமாப் போறேன்'

'அப்பா என்ன தொழில் பண்றாரு?'

'விவசாயம்தான்.'

'இப்பவும் அதான் பண்றாரா?''

'ஆமா.'

'பாத்தா படிச்ச பையன் மாதிரி இருக்கீங்க...  உங்க அப்பா இன்னமும் விவசாயம் பார்க்கிறது உனக்குக் கஷ்டமா இல்லையா தம்பி?'

'ஏன் அப்படிக் கேக்குறீங்க?'

'இல்ல... எம் புள்ளைங்களுக்கு நான் இன்னும் கிளி சோசியம் பார்க்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்காம். எப்பவும் எங்க வீட்ல சண்டை. அதான் கேட்டேன்' என்றவர் அதன் பிறகு, அவராகவே தொடர்ந்து என்னிடம் சொன்னதெல்லாம் ஆயிரமாயிரம் கூண்டுக் கிளிகளின் சொல்லப்படாத கதைகள்.

''தம்பி, நான் சரியா 17 வயசுல 'காமாட்சி’னு மொதக் கிளியோட இந்த சோசியப் பெட்டியைத் தூக்கினேன். அம்புட்டு ஊர், அம்புட்டு மனிதர்கள், அம்புட்டு வாழ்க்கைனு கிளியோடு சேர்ந்த கிளியா, சோசியக் கிளியா ராகம் போட்டுப் பாடித் திரிஞ்சேன். 25 வயசுல கல்யாணம். நாலு பிள்ளைங்க. ரெண்டு பொண்ணு, ரெண்டு ஆணு. எல்லாரையும் படிக்கவெச்சேன். ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சேன். மூத்தவனுக்கு, கடை வெச்சுக் கொடுத்தேன்; இளையவனுக்கு கலெக்டர் ஆபீஸ்ல கிளார்க் வேலை கெடச்சுது.

மறக்கவே நினைக்கிறேன் - 21

40 வருஷம், காமாட்சி, செண்பகம், துர்கா-னு 15 கிளிங்க. இந்தா இந்தப் பெட்டிக்குள்ள இருக்காளே ராசாத்தி, இவ 16-வது கிளி. அநியாயமாப் பிடிச்சிட்டு வந்து றெக்கையை ஒடிச்சி ஒவ்வொரு நெல்லாக் கொடுத்துப் பழக்கி, வயித்தக் கட்டி, வாயக்கட்டி அடுத்தவன் முகத்தைப் பார்த்து அவன் மனசைக் கண்டுபிடிச்சு வாய்ப்பாட்டுப் பாடி எல்லாரையும் காப்பாத்திக் கரை சேத்தேன். ஆனா இன்னைக்கு, நான் கிளி சோசியம் பார்க்கிறது என் புள்ளைங் களுக்குக் கேவலமா இருக்குதாம். மூணு வேலை சாப்பாடு முழுசா இருக்கும்போது, எதுக்கு கிளி சோசியம் பார்க்கணும். சாராயம் குடிக்கிறதுக்குத்தான் நான் இன்னும் கிளி சோசியம் பார்க்கிறேனாம். யாரும் எனக்கு சாராயம் குடிக்கக் காசு தரக் கூடாதுன்னு தடுத்துவெச்சா, இந்த ராசாத்திதான் எனக்குக் கிளி சோசியம் பார்த்து ஊத்திக்கொடுத்து கெடுக்குறானு, அந்தத் தெய்வபட்சிய அறுக்க நேத்து கத்தி எடுத்துட்டாம்பா என் கடைசிப் பையன். அதான் நானும் ராசாத்தியும் வீட்டைவிட்டு வெளிய வந்துட்டோம். அந்த நன்றிகெட்ட பிசாசுங்க இருக்கிற திசைகூட நாங்க இனி போக மாட்டோம் தம்பி. எனக்கு ஒரு குவாட்டர், என் ராசாத்திக்கு ஒரு குத்து நெல்லு. அது சம்பாதிக்க முடியாதா என்னால...'' என்று தள்ளாடும் போதையிலும் கண் கலங்கி அவர் சொன்னபோது, அவரிடமும் ராசாத்தியிடமும் உடனே சோசியம் பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. 10 ரூபாயை எடுத்துக்கொடுத்து என் பெயரைச் சொன்னேன்.

'என்ன தம்பி, சோசியம் பார்க்கணுமா?'

'ஆமாங்க.'

'மன்னிச்சிருங்க தம்பி. இப்போ என்னால சோசியம் பார்க்க முடியாது. நான் குடிச்சிருக்கேன். குடிச்சிட்டுக் கூப்பிட்டா, ராசாத்தி வாக்குச் சொல்ல வரவும் மாட்டா, பேசவும் மாட்டா. அப்புறம் ரெண்டு பேருக்கும் சண்டையாகிடும். அவகிட்ட சத்தியம் பண்ணிருக்கேன், 'குடிச்சா, உன்ன குறி சொல்லக் கூப்பிட மாட்டேன்’னு' என்று சொன்னவர், நான் கொடுத்த 10 ரூபாயையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். ராசாத்தியைப் பார்த்தேன். 'ஆமாங்க, அவர் சொல்றது அம்புட்டும் உண்மை’ என்பதுபோல, அங்கிட்டும் இங்கிட்டுமாகத் தலையைத் திருப்பிக்கொண்டு இருந்தது.  கிளியை என்னென்னமோ சொல்லி கொஞ்சிக் கொஞ்சி ராகம் போட்டு பாடிக்கொண்டிருந்தார். அந்தப் பாடலையும் அதற்கு தகுந்தாற்போல கீச்சிட்ட கிளியின் குரலையும் கேட்டபடி, அப்படியே மேலே ஏறி உறங்கிவிட்டேன்.  

விழிக்கும்போது, விடிந்ததோடு திருவனந்தபுரமும் வந்திருந்தது.  ரயிலிலிருந்து எல்லோரும் இறங்கினர். வேகவேகமாகக் கீழே இறங்கும் போதுதான் எனக்கு கீழே இருந்த கிளி ஜோசியக்காரரின் ஞாபகம் வந்தது. இருக்கையைப் பார்த்தேன். கிளியும் கிளி ஜோசியப் பெட்டியும் இருந்ததே தவிர, ஜோசியக்காரரைக் காணவில்லை. பாத்ரூமுக்குள் பார்த்தேன். அங்கும் இல்லை. ரயில் பெட்டி முழுவதும் தேடிப் பார்த்தேன். அவர் கண்ணில் அகப்படவே இல்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். 'ஏதோ ஒரு ஸ்டேஷன்ல இறங்கிக் கடையைப் பார்த்துப் போனாரு தம்பி. அப்புறம் திரும்பிப் பெட்டியில ஏறலப்பா’ என்றவர்கள், 'அவசரத்துல பெட்டி தெரியாம வேற பெட்டியில ஏறியிருப்பார். இறங்கி கிளியைத் தேடிக்கிட்டு வந்தாலும் வருவார். பாவம், எடுத்துட்டுப் போப்பா!’ என்றார்கள்.

மறக்கவே நினைக்கிறேன் - 21

ரயில் கொல்லத்துக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தது. வேறு வழி இல்லாமல் கிளியோடும் கிளி ஜோசியப் பெட்டியோடும் திருவனந்தபுரத்திலேயே இறங்கிவிட்டேன். ஒரு கையில் கேமரா பை, இன்னோரு கையில் கரும்பச்சை கலரில் இரண்டு கூண்டுகளில் ஒரு கிளி மட்டும் அடைக்கப்பட்ட கிளி ஜோசியப் பெட்டி. என்னைப் பார்ப்பதற்கு எனக்கே விநோதமாக இருந்தது. ஜோசியக்காரர் தேடி வந்தால் சுலபமாக அவருக்கு அடையாளம் தெரிகிற மாதிரியான இருக்கையில்  உட்கார்ந்து கொண்டேன்.

கூண்டுக்குள் கிடந்த கிளி, கத்திக்கொண்டே இருந்தது. கடையில் ஒரு வாழைப்பழத்தை வாங்கி, தோலை உறித்து கூண்டுக்குள் போட்டேன். அதன் பிறகு, அதனிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. கொல்லம் ரயிலின் கடைசிப் பெட்டியும் என்னைக் கடந்துபோனது. ஆனால், ஜோசியக்காரர் வந்து சேரவில்லை. அவர் வராமலே போய்விட்டால் இந்தக் கிளியையும் பெட்டியையும் என்ன செய்வது என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல், கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி உட்காந்திருந்தேன்.

நேரம் சென்றுகொண்டே இருந்தது. என்னையும் கூண்டுக்குள் இருந்த கிளியையும் வேடிக்கை பார்க்க, நிறையப் பேர் கூடிவிட்டார்கள். ஜோசியக்காரர் சொன்னதைப் போலவே மலையாளிகள் கிளியைப் பற்றி தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வமாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களிடம், 'இந்தக் கிளியைச் 'சிறைக் கிளி’ என்று நினைக்காதீர்கள். இது 'தெய்வக் கிளி’ ராசாத்தி. இந்தக் கிளியால் உங்கள் எதிர்காலத்தைப் புட்டுபுட்டு வைக்க முடியும். இது நீங்கள் வணங்க வேண்டிய கிளி’ என்று நான் சொல்ல நினைத்ததை எந்த மொழியில் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் மௌனமாகவே இருந்தேன்.

சரியாகச் சொன்னால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தேன். ஜோசியக்காரர் வருவதாகத் தெரியவில்லை. நான் போக வேண்டிய இடத்துக்கும், செய்ய வேண்டிய வேலைக்கும் எனக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ராசாத்தியைத் தேடி எப்படியும் ஜோசியக்காரர் வந்து சேருவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இப்போது அவர் எங்கு இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார், எப்படி வந்து சேருவார் என்று நினைத்தபோதுதான் சூரியன் சுள்ளென்று முகத்தில் அறைவது தெரிந்தது.

அப்போது, மலையாள ரயில்வே அதிகாரிகள் இருவர் வந்தார்கள். ஒரே இடத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உட்காந்திருந்த என்னை விசாரித்தார்கள். தமிழும் மலையாளமும் கலந்து, அவர்களுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ... நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். எல்லாவற்றையும் கேட்ட அந்த அதிகாரிகள், கிளிப் பெட்டியை கையில் தூக்கி, அப்படியும் இப்படியுமாக வேடிக்கை பார்த்தபடி என்னை அங்கிருந்து வலுக்கட்டாயமாக போகச் சொல்லிவிட்டார்கள். கிளியையும் கிளிப் பெட்டியையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு கிளம்பிப் போய்கொண்டிருந்தபோது, நான் திரும்பிப் பார்த்திருக்கக் கூடாது.

திரும்பிப் பார்த்தபோது ஓர் அதிகாரி கூண்டைத் திறந்து சமாதானத் தூதுவரைப்போல கிளியை வெளியே எடுத்து வானத்தை நோக்கி வீச, பறக்கத் தெரியாத... இறக்கை இல்லாத அந்த ராசாத்தி, தரையில் சொத்தென்று விழுந்தது. மறுபடியும் எடுத்து அவன் இன்னும் உயரமாக மேல்நோக்கி தன் முழு விசையுடன் வீசி எறிய, அது மிகச் சரியாக தண்டவாளக் கற்களின் மீது போய் விழுந்தது. 'சத்தியமாக இப்போது அதன் உயிர் போயிருக்கும்’ என்று நான் எனக்குள் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட நிலையில், செய்வதறியாது பேதலித்த என் புத்திக்குள் அந்தக் கிளியின் குரலாகக் கேட்டது கல்யாண்ஜியின் அந்தக் கவிதை..

'கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி, எதற்கு
வந்தன சிறகுகள்? ’

- இன்னும் மறக்கலாம்...