Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

லகில் ஏழு பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கினருக்கு இணையத்தில் இணைந்துகொள்ளும் வசதியில்லை. 'இணைய வசதி என்பது, மக்களது அடிப்படை உரிமை’ என்ற கோஷத்துடன் ஃபேஸ்புக், அலைபேசி சாதன தயாரிப்பாளர்கள் பலருடன் கூட்டு சேர்ந்து பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகளில் இணைய வசதியை கொண்டுவர இயக்கம் ஒன்றை சென்ற வாரத்தில் தொடங்கியிருக்கிறார்கள். www.internet.org என்ற தளம், தங்களது திட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாக ஊடகங்களுக்கான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

விவரங்கள் அதிகம் இல்லை என்றாலும், ஃபேஸ்புக் இதுவரை செய்துவந்திருக்கும் பரிசோதனைகளில் இருந்தும், இந்தக் குறிப்பிட்ட முயற்சியில் கூட்டு சேர்ந்திருக்கும் நிறுவனங்களின் திறன்களில் இருந்தும் பார்க்கும்போதும், இந்தக் கனவை நினைவாக்க ஃபேஸ்புக் எந்தவிதமான முயற்சிகளை எடுக்கும் என்பதை ஒருவாறாக ஊகிக்க முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்குச் செல்வதற்கு முன்னால், 'இது தேவைதானா?’ என்ற கேள்வி எழலாம். 2011-ம் ஆண்டில் 'மெக்கின்சி’ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்படி தேவைக்கான முக்கியமான காரணமாகக் காட்டுகிறது ஃபேஸ்புக். பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தகவல்களைத் திரட்டி அலசி எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின் பெயர் Gross Domestic Product சுருக்கமாக GDP. அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது ஏழு சதவிகித வளர்ச்சிக்கு காரணம் இணையத்தின் பயன்பாடுதான் என்று அடிக்கோடிட்டு சொல்கிறது. அறிக்கையை தரவிறக்கம் செய்து முழுமையாகப் படிக்க, செல்ல வேண்டிய உரலி... bit.ly/189yLEm

அறிவிழி

'உன்னதமான முயற்சியாக இருக்கிறதே’ என்று மனம் ஒருபுறம் பாராட்டத் துடித்தாலும், சோழியன் குடுமி சும்மா ஆடாத குறையாகவும் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்கள், தொடர்ந்து சேர்ந்தவண்ணம் இருக்காவிட்டால், 'ஃபேஸ்புக்’ என்ற நிறுவனத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும் என்ற உண்மையை அதைச் சாதிக்க முடியாத சமூக ஊடகத் தளங்கள் சரிந்துபோனதில் இருந்து புரிந்துகொள்ள முடியும். myspace, hi5 போன்ற பல நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள்.

  அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் இணைய இணைப்புகள் முதிர்ச்சி நிலையை அடைந்த நிலையில் இருக்கின்றன. இந்தியா, பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் அலைபேசி இணைப்பு அதிகமாக இருந்தாலும், இணைய இணைப்பு வசதி குறைவாகவே இருக்கிறது. இந்த நாடுகளைக் குறிவைத்துதான் காயை நகர்த்துகிறது ஃபேஸ்புக். இதைச் செய்வதற்கு அலைபேசி சாதன தயாரிப்பாளர்களின் கூட்டைவிட முக்கியமானது, அந்தந்த நாடுகளில் மொபைல் சேவை நிறுவனங்களை நடத்திவரும் நிறுவனங்களின் ஒத்துழைப்பு.

அதற்கான காரணத்தை விளக்குகிறேன்...

 ஃபேஸ்புக் என்பது, மனிதர்களை இணைக்கும் மென்பொருள் சேவை. அலைபேசி சாதனம் என்பது, பயனீட்டாளர்களால் ஒருமுறை பணம் கொடுத்து வாங்கப்படுவது. உங்கள் அலை பேசியை இணையத்தில் இணைத்து ஃபேஸ்புக் மென்பொருளைப் பயன்படுத்தி நிலைத்தகவலை எழுதுவதற்கோ, உங்கள் நண்பர்கள் பதிவேற்றி  இருக்கும் புகைப்படங்களைப் பார்ப்பதற்கோ தேவைப்படுவது வலுவான அலைவரிசை (Band width).

  நீங்கள் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தினால், அதிகளவில் நீங்கள் தகவல் அலைவரிசையைப் பயன்படுத்துவீர்கள். இதற்காகும் செலவை யாராவது கொடுத்தாக வேண்டும். நோக்கியா போன்ற அலைபேசித் தயாரிப்பு நிறுவனங்கள் ஃபேஸ்புக்குடன் மேற்படி முயற்சியில் கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் தங்களது வணிகத்தை அதிகரிக்கும் உள்ளார்ந்த நோக்கம் புரிகிறது. ஆனால், அலைபேசி சேவை நிறுவனங்கள் தாங்கள் கொடுக்கப்போகும் அலைவரிசைக்கு தகுந்த வருமானம் கிடைக்கவில்லை என்றால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

  ஃபேஸ்புக், அலைபேசி சேவை நிறுவனங்களுடன் இணைந்து சில பரிசோதனைகளை செய்து வந்திருக்கிறது. உதாரணத்துக்கு, 0.facebook.com என்ற தளத்துக்கு உங்களது அலைபேசியில் இருந்து சென்றால், அதைப் பயன்படுத்துவதற்காக அலைவரிசை செலவை ஃபேஸ்புக் ஏற்றுக்கொள்கிறது. உதாரணத்துக்கு, Airtel நிறுவனம் இயங்கும் பல நாடுகளில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. (பின்குறிப்பு: ஃபேஸ்புக்கை பொறுத்தவரை இந்தியாவில் Airtel அலைபேசி நிறுவன சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி இருக்க வேண்டும் என் றாலும், இது சரிவர இயங்கவில்லை என்ற கோபக் குரல்களை இணையத்தில் பார்க்கிறேன். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை @antonprakash-க்கு ட்வீட்டுங்கள்!)

பை தி வே, ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி அத்தனை உன்னதமானது அல்ல என்பது மட்டுமல்ல, இது புதுமையானதும் அல்ல. ஊடகங்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும், கூகுளின் 'லூன் திட்டம்’ ஃபேஸ்புக்கின் திட்டதைவிட புதுமையானது என்பதுடன் அவர்களது நோக்கமும் வெளிப்படையானது.

பரிசோதனையில் இருக்கும் இந்தத் திட்டத்தின் செயல்பாடு ரொம்பவே கூல். வயர்லெஸ் இணைப்புச் சாதனங்களை பலூன்களில் இணைத்து வான்வெளியில் மிதக்கவிட்டு, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி, இணைய இணைப்பு தேவைப்படும் இடங்களில் குறைந்த விலை ஆன்டனாவை நிறுவி, இணைய இணைப்பு பெற்றுக்கொள்ள முடியும். கலிஃபோர்னியா, நியூஸிலாந்து போன்ற சில இடங்களில் நடத்தப்பட்டுவரும் பரிசோதனைகள் வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பதாக சொல்கிறது கூகுள். மிதக்கும் பலூன்களின் வாழ்வு கிட்டத்தட்ட ஒரு வருடம்; பூமியின் சுற்றுப்புறத்தை இந்த பலூன்களால் நிறைக்க ஐந்து லட்சம் பலூன்களை ஏவ வேண்டும். அதிக தகவல்களுக்கு லூன் புராஜெக்டின் வலைத்தளத்தை பாருங்கள்... https://plus.google.com/+ProjectLoon

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism