##~##

கோயம்புத்தூரில் என் நண்பரின் அலுவலகம் இருக்கும் அந்த வணிக வளாகத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் காவல். ஆள் செம ஸ்டைலாக இருப்பார். 'தி லிஃப்ட் இஸ் ஆன் யுவர் ரைட் சைட் சார். தி ஆபீஸ் இஸ் இன் த ஃபோர்த் ஃப்ளோர் மேடம்’ என அசத்தல் ஆங்கிலம் பேசுவார்.

நண்பன் வரும்வரை காத்திருந்த ஒரு நாளில், அவரோடு நிறைய பேச முடிந்தது. கிட்டத்தட்ட 20 வருடம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மேனேஜர் வரை பல உயர் பதவிகளை வகித்து, பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கி, நட்டப்பட்டு, கடைசியில் கஞ்சி போட்ட யூனிஃபார்மோடு வாசலில் நின்று 'வணக்கம்’ சொல்லிக்கொண்டிருக்கிறார்.

''சங்கடமா இல்லையா சார்..?''

''சங்கடப்பட்டா சாப்பாட்டுக்கு என்ன செய்ய முடியும்?''

''வேற வேலை ஏதாச்சும் பார்க்கலாம்ல... நல்லா இங்கிலீஷ் பேசுறீங்க. மேனேஜர் வேலை வரை பார்த்திருக்கீங்க!''

''இந்த நாட்டுல 50 வயசுக்காரன் கொடுக்குற அப்ளிகேஷனைப் பிரிச்சுக்கூடப் பார்க்க மாட்டேங்குறாங்களே தம்பி. 50 வயசுக்கு மேல ஒருத்தனுக்கு என்ன தகுதி இருந்தாலும், புதுசா ஒரு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தம்பி. அட... இவ்வளவு ஏன்? நான் நாடகம்லாம்கூட போடுவேன். வசனம் நல்லா எழுதுவேன். மீடியா ஆளுதானே நீங்க... எங்க, என் திறமைக்குத் தக்க வேலை ஏதாவது இருந்தா வாங்கித் தாங்களேன்'' என்று அவர் கேட்டபோது, என்ன பதில் சொல்வதென தெரியாமல் திரும்பி வந்தேன்.

பாஸ்வேர்டு்

ஒரு காலத்தில் மேனேஜர், நாடகம் எழுதும் திறன் பெற்றவர் இன்று செக்யூரிட்டியாக நிற்கிறார். அது ஒன்றும் மோசமான அல்லது மரியாதையற்ற வேலை கிடையாது. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் செக்யூரிட்டியாகப் பணிபுரிபவர்கள் பலர் வயதானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் இரண்டு ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள்.

நீங்கள் குடியிருக்கும் ஃப்ளாட்டில் இரவு முழுக்க அரைத் தூக்கத்தோடு கதவு திறந்துவிட்டவர், பகலில் நீங்கள் செல்லும் ஏதேனும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வாசலில் சோர்வாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இரவு நேரம் அபார்ட்மென்ட் வாசல் கூண்டுகளில்,

'யாரை நம்பி நான் பொறந்தேன்...

போங்கடா போங்க ’ - பாடல் எஃப்.எம்-களில் ஒலிக்கும்போது, கால் மேல் கால் போட்டுக்கொண்டு வெற்றுப் பார்வை பார்த்தபடி அமர்ந்திருக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. தங்களுக்குக் கிடைத்த பாதுகாவலர் பணியைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாமல் நிற்கும் பலருடைய கடந்த காலம், கடந்து போகிற பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சிறு கடை முதலாளி, ஏக்கர் கணக்கில் விவசாயம் பார்த்த விவசாயி, தொழிற்பேட்டை டெக்னீஷியன், முன்னாள் ராணுவ வீரர், ஏற்றுமதி தொழில் செய்தவர் என, தங்களுக்கென்று ஓர் அடையாளத்தோடு வாழ்ந்த பலர் இப்போது, 'அது ஒரு அழகிய நிலாக் காலம்...’ பாட்டை எஃப்.எம்.-மில் கேட்டபடி அபார்ட்மென்ட் கதவுகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  

திரேசன் அண்ணன் கார்ப்பரேட் அலுவலகங்கள் நிறைந்த ஒரு கட்டடத்தின் கார் பார்க்கிங் தள பாதுகாவலர். மெல்லியதாக ரேடியோ வைத்துக்கொண்டு எஸ்.பி.பி-யோடு சேர்ந்து இவரும் பாடுவார். 'அண்ணே சத்தமா பாடுங்கண்ணே’ என்றால், 'சும்மா இருங்கப்பா!’ என்று பாடுவதை நிறுத்திக்கொள்வார். அந்தக் கட்டடத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து ஒருநாள் இரவு வெளியே வரும்போது,  'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’ - பாடலை அத்தனை அழகாகப் பாடிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு, 'இந்தப் பாட்டும் குரலும்தான் எனக்கு நானே ஆறுதல் சொல்வதற்கான ஒரே வழி தம்பி’ என்று உடைந்த குரலில் சொல்லும் போதே அவரின் குரல் தழுதழுத்தது.

கதிரேசன், ஒரு காலத்தில் மேடைப் பாடகர். திருவிழாக் காலங்களில், கோயில் கச்சேரிகளில் கதிரேசனின் 'இளமை இதோ இதோ...’ பாடலைக் கேட்பதற்கென்றே பெருங்கூட்டம் கூடுமாம். வண்ண விளக்குகள், ரசிகர்களின் விசில் சத்தம், ஆரவாரம் என்று தனக்கென்று ஓர் அடையாளத்தோடு வாழ்ந்தவர் இப்போது, 'பார்க்கிங்கில் பைக் நகர்த்தி வைச்சே நெஞ்சுக்கூடு சுருங்கிருச்சுப்பா’ என்று சொல்லும் வார்த்தைகளுக்குப் பின்னால் விரவிக்கிடக்கும் வேதனையும் ஆற்றாமையும் அவருக்கு மட்டுமே விளங்கும்.

'அம்பிகையே ஈஸ்வரியே...’ - பாட்டை பாடச் சொல்லி துண்டுச்சீட்டும், 50 ரூபாய் பணப்பரிசும் கொடுத்த ஒருவர், கதிரேசனை செக்யூரிட்டியாக பார்க்க நேர்ந்தபோது, 'வாங்கண்ணே... ஊருக்கே போயிரலாம்’ என்று அழைத்திருக்கிறார். 'ஊருக்குப் போயி என்ன செய்ய?’ என்று கேட்ட கதிரேசனுக்கு, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

'அட நீங்க வேற... நியாயமாப் பார்த்தா செக்யூரிட்டிலாம் முழிச்சுட்டுத்தானே இருக்கணும். ஆனா, பெரும்பாலானவங்க தூங்கிட்டுத்தான் இருக்காங்க’ என்று நீங்கள் குற்றம்சாட்டலாம். ஆனால், சர்க்கரை, பி.பி, இதய நோய் போன்ற பாதிப்புக்கு உள்ளானவர்கள்தான் பெரும்பாலும் செக்யூரிட்டி வேலைக்கு வருகிறார்கள். இரவுக் குளிருக்கே சுருங்கிவிடும் அவர்கள், எவரையும் எதிர்க்கும் உடல் வலிமையற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பாஸ்வேர்டு்

ஏ.டி.எம். வாசல்களில் கொலை செய்யப்பட்டவர்கள், பட்டப்பகலில் வங்கிக் கொள்ளையில் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள், நகைக் கடை வாசலில் நள்ளிரவில் மூர்ச்சையாக்கப்பட்டு விடியும் வரை கேட்பாரின்றிக் கிடந்தவர்கள் என செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்கும் தகவல்களில் வயதானவர்கள்தான் அதிகம் இடம்பிடிக்கிறார்கள். குறைந்த சம்பளத்துக்கு வயதானவர்கள்தான் கிடைக்கிறார்கள் என்பதால், நிறுவனங்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த வேலையைவிட்டால் வேறு வழியில்லை என்பதால், முதியவர்களும் அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

''நாட்டுக்காக ராணுவத்துல வேலை பார்த்தவன் தம்பி நான். நேத்து ஒருத்தன் தண்ணியைப் போட்டு வந்து தீப்பெட்டி கேட்டான். 'இல்லை’னு சொன்னதுக்கு அடிச்சுப் போட்டுட்டான். கம்பெனில சொன்னா, 'முடிஞ்சா இரு... இல்லாட்டி போ’னு திட்டுறாங்க. 'இந்த மாதிரி சோப்ளாங்கிய எல்லாம் எதுக்கு எங்க ஃப்ளாட்டுக்கு அனுப்புறீங்க?’னு ஃப்ளாட் அசோசியேஷன்ல புகார் பண்ணிட்டாங்க. அடுத்து என்ன செய்யப் போறேன்னு தெரியலை'' என்று புலம்பிய அந்த அண்ணா நகர் செக்யூரிட்டி ஐயாவுக்கு ஊரில் 'மிலிட்டரிக்காரர்’ என்று பெயர்!

வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வயதானவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத, இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களாகத்தான் நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம். வருகிற போகிற மனிதர்களுக் கெல்லாம் சல்யூட் அடித்து வரவேற்கிற அந்த வயதான மனிதரின் முகத்தை எத்தனைப் பேர் ஏறெடுத்துப் பார்த்திருப்போம்.

'யாரைச் சந்திக்க வந்திருக்கிறோம்?’ என்று தகவல்களைப் பூர்த்திசெய்யும் புத்தகத்தை நீட்டும் வயதான செக்யூரிட்டியிடம் சின்னதாக ஒரு புன்னகைப் பூத்து பேனா வாங்கியிருப்போமா? காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் வீட்டுக்கு வரும்போதும் அபார்ட்மென்ட் வாசலில் கதவு திறந்துவிடுகிற மனிதரிடம் நலம் விசாரிப்பவர்கள் எத்தனைப் பேர்?

''ஊர்ல மக படிக்குது சார். அதுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணணும்... அண்ணன், தம்பி எல்லாம் அவனவன் வேலையப் பார்த்துக்கிட்டு போயிட்டானுக. தாயில்லாப் புள்ளை... அதுக்கு ஒரு நல்லது நடந்திருச்சுன்னா, அப்புறம் சந்தோஷமா சாவேன்!'' காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வந்து, இரவு நேரம் அபார்ட்மென்ட்டிலும், பகல் நேரம் வணிக வளாகத்திலும் வேலை பார்க்கும் நம்பி தாத்தாவுக்கு ஒரே குறிக்கோள் தன் மகளின் எதிர்காலம்தான்.

'உடம்பு ஃபுல்லா சுகர். மாத்திரை வாங்கிக் கட்டுப்படியாகலை. தொண்டை வேற அடிக்கடி வறண்டு போவுது’ என்று சொல்லி சுவரில் சாய்ந்துகொள்கிறார். கம்பிக் கதவுக்குப் பின்னால் 'பாங்ங்ங்’ என்று ஹாரன் அலற, திடுக்கிட்டு அதிர்ந்து மூச்சிரைக்க ஓடுகிறார். ஊரில் படிக்கும் மகளிடம், 'ஜவுளிக்கடையில் சூப்பர்வைசர் வேலை’ என்று சொல்லி வைத்திருக்கிறார் நம்பி.

பாஸ்வேர்டு்

என் நண்பனின் தம்பிக்காக டூட்டி முடிந்த பின்னும் காத்திருக்கிறார் அந்த ஃப்ளாட் செக்யூரிட்டி. வந்ததும் வராததுமாக அவனுடைய புல்லட்டை அவரிடம் கொடுக்கிறான் நண்பனின் தம்பி. அவர், ஆசை ஆசையாக அதில் ஏறி ஒரு ரவுண்டு செல்கிறார்.

''எனக்கு நல்ல ஃபிரெண்டுன்ணே அவரு. ஊர்ல புல்லட் வெச்சிருந்தாராம். இங்கே தினமும் என் வண்டியை ஒரு ரவுண்ட் ஓட்டுவாரு. சின்ன மிஸ்டேக் வண்டில தெரிஞ்சாக்கூட கரெக்டா சொல்லிடுவாரு!'' என்று சொன்னான் தம்பி.

ரவுண்டு முடித்து வந்த அந்தப் பெரியவரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷம். 'செலவுக்கு எதுவும் காசு வேணுமாண்ணே’ என்று சிநேகமாகக் கேட்கிறான் அந்தத் தம்பி. 'அதெல்லாம் வேண்டாம்யா..!’ என்று புல்லட்டை தடவிக் கொடுத்தபடி நகர்கிறார் அவர்.

கச்சேரியில் பாடுவதற்கென்றே விதவிதமான ஆடைகள் வைத்திருந்த கதிரேசன் அண்ணன், நைந்துபோன யூனிஃபார்முக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார். 'நான் மண்ணுக்குப் போறதுக்குள்ள என் மவளுக்கு கல்யாணம் பண்ணணும்’ என்று சிதைந்த உடம்போடு நம்பிக்கை மிளிர திரிகிறார் நம்பி. தன்னுடைய புல்லட் கால நினைவுகளோடு இரவின் சத்தங்களில் கரைகிறார் இன்னொரு செக்யூரிட்டி தாத்தா.

'பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின்
பந்த பாசமே ஏதடா...
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா...’
ஏதோ ஒரு எஃப்.எம்-மில் யாரோ ஒரு செக்யூரிட்டி தாத்தாவுக்காக ஒலிக்கத் தொடங்குகிறது அந்தப் பாட்டு!

- ஸ்டாண்ட் பை...