Published:Updated:

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்...

##~##

எம்.முகேஷ், விழுப்புரம்.

'' ' 'டூயட்’ல நீதான் திலீப் கேரக்டர் பண்ற’னு பாலசந்தர் சொன்ன அந்த நிமிஷம், உங்களுக்கு எப்படி இருந்துச்சு?''

''தண்ணீர் தேடி பூமியின் எல்லாத் திசைகளுக்கும் வேரை அனுப்பிட்டுத் தாகத்தோடு வாடி நிக்கும் மரத்து மேல, ஒரு 'கோடை மழை’ அடிச்சு ஊத்துனா எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு!''

சி.கருணாகரன், திருமணஞ்சேரி.

'' 'நான் இப்படித்தான்’ என்று உள்ளது உள்ளபடி பட்பட்டென்று பொதுவெளியில் பேசும் துணிச்சலை எங்கிருந்து பிடித்தீர்கள்?''

''இரவு நேரங்களில் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குப் போனால், சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவாங்க. 'நான் எப்பவும் கொஞ்சம் 'சாப்பிட்டு’ அப்புறம் சாப்பிடுற ஆளுங்க’னு சொல்லிருவேன். உடனே சிரிச்சுட்டே விட்ருவாங்க. அப்படிச் சொல்லலைன்னா, 'வயித்து வலி, உடம்பு சரியில்லை, மீட்டிங் இருக்கு’னு ஏதாச்சும் பொய் சொல்லணும்.

மத்தவங்ககிட்ட வெளிப்படையா இருக்க முடியாத ஒரு விஷயத்தைச் செஞ்சா, அது மன்னிப்பு கேட்க வேண்டிய தப்பா மாறிடும். சொல்லப்போனா, பொய் சொல்லத்தான் துணிச்சல் வேணும். 'நான் இப்படித்தான்’னு வெளிப்படையா இருக்கும் மனுஷங்களிடம், மத்தவங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது. ஏமாற்றங்களும் குறைவு. இதையெல்லாம் யோசிக்கும்போதுதான் தோணுது, வெளிப்படையா இருப்பது எனக்கு வசதியாக இருக்கு. அதனால, அது எனக்குள்ள இருந்துதான் வருதுன்னு நினைக்கிறேன்!''

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

 எஸ்.சார்லஸ், விக்கிரவாண்டி.

 ''கல்லூரி மாணவன், வாய்ப்புக்காக அலைந்த இளைஞன், ஸ்டார் அந்தஸ்து நடிகன்... இந்த எல்லா காலகட்டத்திலும் நீங்கள் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் ஒரு நல்ல பழக்கம் என்ன?''

''பயணம்.

யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் என் பயணத்தை நிறுத்தியதே இல்லை!''

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 ''உண்மையைச் சொல்லணும்... உங்க ஃபேவரைட் வார்த்தையான 'செல்லம்’, நீங்களாப் பேசினதா? இயக்குநர் சொல்லிக்கொடுத்ததா?''

''நான் எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல லைட் மேன், மேக்கப் மேன், செட் உதவியாளர்கள் எல்லாரையும் 'செல்லம்’னுதான் கூப்பிடுவேன். 'இங்க வா செல்லம், இப்படி நில்லு செல்லம், செல்லம் ஏண்டா இப்படிப் பண்ற’னு நான் மத்தவங்களைக் கூப்பிடுறதைப் பார்த்து, இயக்குநர் தரணி, அதை 'கில்லி’ படத்துல அப்படியே வெச்சிட்டார். அந்த ஒரு படத்துல நான் த்ரிஷாவை 'செல்லம்’னு கூப்பிட்டேன். இப்போ தமிழ்நாடே என்னை 'செல்லம்’னு கூப்பிடுது.

ஒரு வழக்கறிஞர் தோழி சொன்னாங்க. 'பிரகாஷ், நான் ரெகுலரா பூ வாங்குற அம்மாகிட்டே, ஒரு ஆளு வம்பிழுத்துட்டே இருந்தான். அந்தம்மா கோபத்துல திட்டிட்டாங்க. அதுக்கு 'கோச்சுக்காத செல்லம்’னு அவன் சொல்ல, 'நீ என்ன பெரிய பிரகாஷ்ராஜா? என்னை செல்லம்னு கூப்பிடுற?’னு அந்தம்மா கோபப்பட்டாங்க’னு சொன்னாங்க.

இந்த அன்பு கிடைக்கிறதுக்கு நான் கொடுத்துவெச்சிருக்கணும். இதைவிட வாழ்க்கையில வேற என்ன வேணும் செல்லம்?''

எம்.ரமேஷ், பொன்னேரி.

 ''சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர் நீங்கள். மறைக்காமல் சொல்லுங்கள், இலவசப் பொருட்கள், ஓட்டுக்குப் பணம், ஊழல் இதையெல்லாம் பார்க்கும்போது அரசியல்வாதிகள் மீது உங்களுக்கு வெறுப்பு உண்டாகவில்லையா?''

 ''அரசியல்வாதிகள் பத்தி எங்கேயோ படிச்ச கவிதை. அது நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அப்படியே பொருந்தும்.

'உங்களைக் கடிக்க வந்த
நாய்களான எங்களுக்கு,
நீங்கள் சில எலும்புத் துண்டுகளை வீசினீர்கள்..
அதுவும் எங்களின் விலாவில் இருந்தே
உருவப்பட்டது!’

கவிஞன் பின்னிட்டான்ல!?''

கே.கல்யாணராமன், உளுந்தூர்பேட்டை.

 '' 'இருவர்’ படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ஜெயிச்சீங்க. ஆனா, அதுக்கு முன்னாடி அந்தப் படத்துல நடிச்ச சமயம் இயக்குநர் மணிரத்னம் உங்களைப் பாராட்டினாரா?''

''மணிரத்னம் அவ்வளவாப் பேச மாட்டார். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கலைனா, மௌனமா இருந்துடுவார். அதுவே நாம ஏதோ தப்பு பண்றோம்னு சொல்லிடும். நாம நடிச்சது பிடிச்சிருந்தா, சின்னதா ஒரு புன்னகை இருக்கும் அவர் முகத்துல. ஸ்பெஷலாப் பாராட்டணும்னு  அவர் நினைச்சா, ஒண்ணு ரெண்டு வார்த்தை வரும். அவ்வளவுதான். 'இருவர்’ படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைச்ச செய்தி வந்ததும் மணிரத்னம் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

'Prakash, now you know your benchmark!’ அப்படினு மட்டும் சொன்னார். அதுதான் மணிரத்னம்!''

இரா.முருகன், நங்கநல்லூர்.

  ''நீங்கள் நடித்ததில் எல்லா கேரக்டர்களுமே எனக்குப் பிடிக்கும். 'நான் நடித்ததில் இதுதான் பிடித்த கேரக்டர்’ என உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது?''

 ''உங்களுடைய இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டா, நான் நடிக்கிறதை நிறுத்திட்டேன்னு அர்த்தம். போன படத்துல நடிச்ச கேரக்டரை, அடுத்தப் படத்துல நடிக்கிற கேரக்டர் தூக்கிச் சாப்பிடணும்னு நினைக்கிறவன் நான். சினிமால நான் இருக்கிற வரை, என் உடம்பில் உயிர் உள்ள வரை இந்தக் கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாமலேயே போச்சுன்னா,.. ரொம்ப சந்தோஷப்படுவேன்!''  

ஜி.லலிதாகணேஷ், அம்மாப்பேட்டை.

''ரஜினியுடன் நீங்கள் தொடர்ந்து நடிக்காததற்கு என்ன காரணம்?''

''சரியான, முறையான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அவ்வளவுதான்!''

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

மா.அம்பேத்கர், விழுப்புரம்.

 ''உங்கள் தயாரிப்பு நிறுவனமான 'டூயட் மூவிஸ்’ படங்கள் ரெவ்யூவில் பெயர் பெற்றாலும், ரெவின்யூவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையே! அப்போதெல்லாம் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''கஷ்டமா இருக்கும். நல்ல முயற்சிக்கு அடி விழுந்தாலும், தாங்கிக்கிற பலம் எனக்கு இருக்கு. திரும்பவும் எழுந்துக்கிறேன். ஆனா, எல்லாருக்கும் அது சாத்தியம் இல்லை.  

'நல்லா இருக்கு’னு ரெவ்யூ சொன்ன எல்லாரும் போய் தியேட்டர்ல படம் பார்த்திருந்தாக்கூட, நான் எடுக்கிற பட்ஜெட் படங்களுக்கு நல்ல ரெவின்யூ வந்திருக்கும். ஆக, ரசிகர்களே நல்ல படம்னு வாயாரப் பாராட்டினா மட்டும் பத்தாது; பக்கபலமா பக்கத்துல நில்லுங்க... ப்ளீஸ்.''

வே.மகாலிங்கம், திருச்சி.

 ''பிரகாஷ்... நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்... இவற்றில் எந்த ரோல் கஷ்டம்?''

'' 'தோனி’ படத்தின் டப்பிங் வேலைகள் நடந்துட்டு இருந்தது. அதே ஸ்டுடியோவில் 'பசங்க’ பாண்டிராஜின் 'மெரினா’ படத்தின் வேலையும் நடந்துட்டு இருந்தது. என் படத்துக்கு 'டப்பிங்’ பேச வேண்டிய நடிகரால் சொன்ன நேரத்துக்கு வர முடியலை. படத்தோட இயக்குநரா நான் காத்துட்டு இருந்தேன். தொடர்ந்து இரவுபகலா வேலை நடந்துட்டு இருந்த நேரம். சரியான தூக்கம் இல்லாததால சோர்வுல அப்படியே அங்கிருந்த ஒரு பெஞ்ச் மேல படுத்துத் தூங்கிட்டேன்.

அதைப் பார்த்த பாண்டிராஜ், என் உதவி இயக்குநர்கள்கிட்டே சொன்னாராம், 'இதுவே நடிகர் பிரகாஷ்ராஜா இருந்தா, இந்நேரம் கேரவன்ல தூங்கிட்டு இருப்பாரு. இயக்குநர் பிரகாஷ்ராஜ் பெஞ்ச் மேல படுக்க வேண்டியதாகிடுச்சு பார்த்தீங்களா?’னு!

நடிகன்னா, இன்னொரு இயக்குநரோட ஓவியத்துல நானும் ஒரு நிறம். என்னை மாதிரி நிறைய நிறம் அந்த ஓவியத்துல இருக்கும். தயாரிப்பாளர்னா ஓர் இயக்குநரோட சிந்தனையை ஆதரிக்கிற பொறுப்பு மட்டும்தான். ஆனா, இயக்குநர் வேலை அப்படி இல்லை. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவங்ககிட்டே இருந்தும், அவங்க திறமையை முழுசா வெளிக்கொண்டு வரணும்.  

ரசிச்சுப் பண்ணும்போது இயக்குநர் வேலை கஷ்டம் இல்லை. ஆனா, நிச்சயம் கடினம்!''

வெ.இளமாறன், லாஸ் ஏஞ்சலஸ்.

''ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் பிரகாஷ்ராஜ் நீங்கள்தானா?''

''ஆமாம் இளமாறன்... நானேதான். ரொம்ப ஆக்டிவ்வா இருக்கேன். போலிகளைக் கண்டு ஏமாறாமல் இருக்க, இதோ என் அஃபிஷியல் ஐடிக்கள்...

என் ட்விட்டர் ஐ.டி..  <https://twitter.com/prakashraaj>

என் ஃபேஸ்புக் ஐடி. www.facebook.com/PrakashRajOfficial

என் யூ டியூப் சேனல். <http://www.youtube.com/prakashrajtv>

டச்ல இருங்க இளா!''

அ.குணசேகரன், புவனகிரி.

''உங்க வாழ்க்கைல மறக்க நினைப்பது எது... மறக்க முடியாதது எது?''

''ரெண்டுமே ஒரே சம்பவம்தான். என் மகன் சித்துவின் மரணம்!''

- அடுத்த வாரம்...

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

 ''சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி உங்க கருத்து?''

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

 ''ஒரு காதல் திருமணம் எப்போது தோல்வியடைகிறது?''

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

 ''மற்றவர்கள் வியந்து பார்க்கக்கூடிய ரஜினி, கமல் இருவரும் பல சந்தர்ப்பங்களில் உங்களைப் பாராட்டியிருக்கிறார்கள். அவர்களுடனான நட்புத் தருணங்களை பகிர்ந்துகொள்ளுங்களேன்?

- பேசலாம் செல்லம்...

"இயக்குநரின் கேன்வாஸில் நடிகன் ஒரு நிறம்!”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

பிரகாஷ்ராஜிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை- பிரகாஷ்ராஜ்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல்ப் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

அடுத்த கட்டுரைக்கு