Published:Updated:

என் ஊர்!

மல்லாங்கிணறு''நான் அஞ்சாத அப்பா!''

##~##
ன் சொந்த ஊரைப்பற்றி மனம் திறக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. ''விருதுநகர் பக்கத்துல இருக்கிற மல்லாங்கிணறுதான் எனக்கு சொந்த ஊர். கண்மாய்ப் பாசனம், குளத்துப் பாசனம் நிறைஞ்ச ஊர். சுத்தி எல்லாப் பக்கமும் வயக்காடுதான். அங்கே அக்ரஹாரத்தில் எங்க வீடு இருந்துச்சு. தெருவோட கடைசியில் பெருமாள் கோயில் ஒண்ணு இருக்கும். அந்தக் கோயிலோட பட்டர் எனக்கு ஃப்ரெண்ட். சாமிக்கு அலங்காரம் பண்ணும்போது அவர் கூடவே இருந்து உதவி செய்வேன். மார்கழிப் பஜனை வந்தா... திருப்பாவை, நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் மனப்பாடமா சொல்வேன். பங்குனித் தேரோட்டம் வந்திருச்சுன்னா... நம்ம சாமி, நம்ம வீட்டு ஃபங்ஷன்னு பரபரப்பா வேலை பார்ப்பேன்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

நாலாம் கிளாஸ் படிக்கும்போது எங்களுக்கு பிடிச்ச தர்மராஜ் வாத்தியார் டிரான்ஸ்ஃபர் ஆகிப் போனார். எங்க மேலே ரொம்ப அன்பா இருப்பார். அவருக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. எல்லாரும் காசு போட்டு அவருக்கு ஒரு வாழைப்பழமும், ஒரு கறுப்பு கலரும் வாங்கிக் கொடுத்தோம். தர்மராஜ் சாருக்கு கண் கலங்கிருச்சு. எங்களை வாரி அணைச்சு கண் கலங்க பஸ் ஏறிப் போனார்.

என் ஊர்!

நான் கணக்கில் கொஞ்சம் வீக். என்ன பண்ணினாலும் கணக்கு வருவேனான்னு மல்லுக்கட்டும். என் கூடப் படிச்ச பூங்காவனம் சூப்பரா கணக்கு போடும். பூங்காவனத்தை ஃப்ரெண்ட் பிடிச்சு அதோட நோட்டைப் பார்த்து கணக்கு எழுதுவேன். பூங்காவனம் பெரிய கணக்கு டீச்சரா வரும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அவங்க குடும்பமே திடீர்னு வேற ஏதோ ஊருக்குப் போயிட்டாங்க.  

எங்க ஊர் நாடகத்துக்கு ஃபேமஸான ஊர். அரிச்சந்திரன் மயான காண்டம், வள்ளித் திருமணம், வீரபாண்டியக் கட்டபொம்மன்னு சுத்துப்பட்டியில் நடக்கிற எல்லா நாடகத்திலும் எங்க ஊர்க்காரங்க நடிப்பாங்க. சுப்பையா வாத்தியார்னு ஒரு நடிகர் இருந்தார். அரிச்சந்திரனோ, முருகனோ, ஜாக்சன் துரையோ... என்ன வேஷம்னாலும் பிச்சு உதறுவார். சுப்பையா வாத்தியார் நடிக்கிறார்னா... சுத்துப்பட்டி மக்கள் வண்டி கட்டிட்டுக் கிளம்பி வந்திருவாங்க. எங்க ஊருக்கு பெருமை சேர்த்ததில் சுப்பையா வாத்தியாருக்குப் பெரிய இடம் உண்டு.  

அப்பா அரசியலில் இருந்ததால், தலைவர் கலைஞர் வரை நிறைய வி.ஐ.பி-கள் என் ஊருக்கு வந்திருக்காங்க. 74-ம் வருஷம் நான் ஐந்தாவது படிச்சுட்டு இருந்தேன். எங்க ஊரில் நடந்த நிதியளிப்புக் கூட்டத்துக்கு கலைஞர் வந்திருந்தார். கலைஞர்கிட்டே என்னை அறிமுகப்படுத்தினதும் ''நீங்க எல்லாரும் ஜெயிலுக்கு போய் வந்திட்டீங்க. என் அப்பா மட்டும் ஏன் போகலை?''னு கேட்டேன். கலைஞர் சிரிச்சுட்டார். அடுத்த வருஷமே அப்பாவை மிசா சட்டத்தில் ஒரு வருஷம் உள்ளே வெச்சுட்டாங்க.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அழகிரி அண்ணன் பழக்கமானார். அப்போ அவருக்கு 35 வயசு இருக்கும். அப்பாவைப் பார்க்க அடிக்கடி ஊருக்கு வருவார். அவர் மகள் பெயர் அஞ்சு. அதனால அவரை அஞ்சப்பான்னு கூப்பிடுவேன். ஒருநாள் என்னை நிறுத்தி ''நான் அஞ்சப்பா இல்லை... அஞ்சாத அப்பா!''ன்னு கம்பீரமா சொன்னார். அவருக்கு மட்டன் கோலா உருண்டையும் புறாக் கறியும் ரொம்பப் பிடிக்கும். அவர் வீட்டுக்கு வந்தா, இந்த ரெண்டும் ரெடியா இருக்கும். வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு வயக்காட்டுப் பக்கம் அவர் நடக்குற அழகு இப்பவும் கண்ணிலேயே இருக்குது.

என் ஊர்!

ஹாஸ்டலில் தங்கி காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்குப் போனா, எங்க வீட்டுத் தோட்டத்தில் பூங்காவனம் வேலை பார்த்துட்டு இருக்கு. எனக்கு பகீர்னு ஆகிருச்சு. கல்யாணம் ஆகி வறுமை தாங்க முடியாம தோட்ட வேலைக்கு வந்ததா பூங்காவனம் சொன்னப்ப, எனக்குக் கண்ணீர் வந்திருச்சு. நான் எம்.எல்.ஏ ஆனதும் பூங்காவனத்துக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்போ பூங்காவனம் நல்லா இருக்கு.

ஊர் மக்களுக்கு எங்க குடும்பத்து மேலே எப்பவும் பாசமும் மரியாதையும் உண்டு. அப்பா ஸ்கூல் வாத்தியாரா இருந்து எம்.எல்.சி ஆனவர். அதனால, ஊர்க்காரங்க எப்பவும் அப்பாவை 'சார்’னுதான் கூப்பிடுவாங்க. நான் மந்திரி ஆனாக்கூட ஊருக்கு எப்பவும் 'தம்பி’தான். கொஞ்சம் பேர் அப்பாவை மறக்க முடியாம 'அரசப்பா’ன்னு கூப்பிடுவாங்க. இந்த உரிமையான பாசத்துக்காகவே மல்லாங்கிணறை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!''

-  எஸ்.கலீல்ராஜா,
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி