Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 22

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன் - 22

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ளினி ஜமீலா... பாலியல் தொழிலாளியின் சுயசரிதை. கையில் சிக்கியது இந்தப் புத்தகம்.

ஏதோ ஒரு விஜயதசமிக்கு சாமிக்கு முன் படையல் வைத்திருப்பார்கள் போல. முன் அட்டை நளினி ஜமீலாவின் நெற்றியில் வட்டமாகக் குங்குமம் பதிந்திருந்தது. அதைப் பார்த்த அடுத்த நிமிஷம், இமைகளுக்கு நடுவே மனச்சிலந்தி வலைப் பின்னத் தொடங்கிவிட்டது.

  நெற்றியில் நிஜமான குங்குமத்தோடு கையில் குடை இல்லாமல் அருகில் சின்னப்பதாஸ் இல்லாமல் 'கடலோரக் கவிதைகள்’ ஜெனிஃபர் டீச்சரைப்போல சின்னதாக பல்லில் உதடு ஒட்ட சிரித்துக்கொண்டிருந்த நளினி ஜமீலாவைப் பார்க்கும்போது, திருநெல்வேலி சொட்டு அக்காவின் ஒற்றைப் பித்தளை மூக்குத்தி வந்து நினைவுக்குள் மினுக்கியது. அடுத்த நொடி பஸ் ஏறிவிட்டேன், சொட்டு அக்காவைத் தேடி!

சொட்டு அக்காவைப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் நண்பன் கணேசனைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில், சொட்டு அக்காவின் அத்தியாயத்தில் கணேசன்தான் எங்கள் எல்லோரையும்விட மூலக் கதாபாத்திரம்.

யார் இந்தச் சொட்டு அக்கா? சொட்டு அக்காதான் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் பாலியல் தொழிலாளி. அப்போது,  ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு துறையில் நான் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். நண்பன் கணேசன், வொர்க்ஷாப் ஒன்றில் பைக் மெக்கானிக்காகவும் ஓனராகவும் இருந்தான். அந்த ஏரியா இளைஞர்கள் கணேசனை 'திருமலை’ விஜய்யாக நினைத்துக் கொண்டிருந்தனர். காதல் முதல் களவு விவகாரம் வரை எல்லாமே கணேசனிடம் வரும்.

மறக்கவே நினைக்கிறேன் - 22

'உன்னைப் பாக்கிறப்பவே வேற யாரையாச்சும் பாத்துச் சிரிக்கிறாளா? அப்படின்னா அவகிட்ட போய்ப் பேசாத. லூசுல விடு. ஒரு வாரத்துக்கு அவளப் பாக்காம, பைக்ல கடந்து சரட்னு போயிடு. அப்புறம் பாரு... நீ பைக்க எங்க ஸ்டார்ட் பண்றியோ, அங்க வந்து உனக்கு முன்னாடி நிப்பா அவ!’ என்று முன் சக்கரத்தைக் கழட்டும்போது ஒரு காதல் விவகாரத்தை முடித்துவைத்தால், 'ஆமா, ஆமா... அந்தப் பொண்ணை விசாரிச்சேன். அது ரோஸ்மேரி ஸ்கூல்ல டீச்சரா இருக்கு. ரெண்டு பேர் பின்னாடியே அலைஞ்சிருக்கானுவ. முறைக்கிற முறைப்புலயே எரிக்கிறாளாம். அவ்வளவு நல்ல புள்ளை. நம்பி பொண்ணு எடுக்கலாம். உங்க அண்ணன்கிட்ட சொல்லு... நான் கியாரன்ட்டி’ என்று பின் சக்கரத்தைக் கழட்டும்போது ஒரு கல்யாணத்தையே முடித்துவைத்துவிடுவான்.

கணேசனின் வொர்க்ஷாப்புக்குச் சென்று தினமும் அரை மணி நேரம் இருந்தால் போதும், திருநெல்வேலியில் தினமும் என்ன நடக்கிறது என்பதை ஒரு செய்திப் படம்போல காட்சியாகப் பார்த்துவிடலாம். அதற்காகவே அப்போது நான் கணேசனைத் தேடிப் போவேன். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போது சொட்டு அக்காவைப் பார்ப்பதற்காக கணேசனைத் தேடிப் போகிறேன்.

துவும் மாறவில்லை. எப்போதும் போனவுடன் கிடைக்கும் தேநீரும் பழைய வாரப் பத்திரிகைகளுமாக கணேசனின் வொர்க்ஷாப் அப்படியேதான் இருந்தது. கணேசன்தான் குழந்தையும் குட்டியுமாக, தொப்பையும் தொந்தரவுமாக ஒரு முதலாளி தோற்றத்துக்கு மாறியிருந்தான்.

கணேசனே இப்படி மாறிவிட்டானென்றால், சொட்டு அக்கா எப்படி மாறியிருப்பாள்? கண்டிப்பாக முடி எல்லாம் நரைத்திருக்கும். ஒன்றிரண்டு பற்கள்கூட விழுந்திருக்கும். அதனாலென்ன, உயிரோடு இருந்தால் போதும். 'சொட்டு அக்கா’ என்று கூப்பிடும்போது, 'என்ன’ என்று திரும்பிப் பார்த்தால் போதும். ஆனால், இத்தனை வருடம் கழித்து ஆசையுடன் ஓடி வந்து கட்டிப்பிடித்த நண்பனிடம், எப்படி வந்ததும் வராததுமாக ஒரு பழைய பாலியல் தொழிலாளியைப் பற்றி விசாரிப்பது?

இருப்பினும், தயங்கித் தயங்கிச் சொட்டு அக்காவின் பெயரை நான் சொன்னதும், தலையைக் குனிந்தபடி ஒரே ஒரு கேள்விதான் கேட்டான் கணேசன். ''ஆமா, அதெல்லாம் நடந்து எவ்வளவோ வருஷமாச்சே... சென்னைல எவ்வளவோ பொண்ணுங்களைப் பார்த்திருப்ப. அவங்களை எல்லாம் விட்டுட்டு எதுக்குச் சொட்டு அக்காவைப் பாக்க வந்திருக்க?'' என்றவனிடம் கையிலிருந்த நளினி ஜமீலா புத்தகத்தைக் காட்டினேன். வாங்கிப் பார்த்தான். ''இந்தப் புத்தகத்தைக் கொடுத்து இதே மாதிரி சொட்டு அக்காவையும் எழுதச் சொல்லலாம்னு ஆசை. அதான்...'' என்று சொன்னதும், எந்த மறுப்பும் சொல்லாமல் சொட்டு அக்காவைப் பார்க்க அழைத்துப் போனான் கணேசன். அவனோடு நடக்கும்போது 'அந்த நாள்’ நினைவுக்கு வந்தது.

ன்று கணேசனுக்குப் பிறந்த நாள். மொத்த  வொர்க்ஷாப்புமே நட்பும், அது வாங்கிக் கொடுத்த போதையுமாக இருந்தது. கணேசனுக்குத் திடீர் பிறந்த நாள் பரிசாக, ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறையில் 'வாலிபப் பெண்கள் தேவையா?’ என்று எழுதியிருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து ஒரு பெண்ணை நண்பர்கள் வரச்சொல்லியிருந்தார்கள். சொன்ன நேரத்துக்குச் சொன்னபடி  ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், எங்கள் எல்லோருக்குமே அவ்வளவு அதிர்ச்சி. காரணம், ஆட்டோவிலிருந்து இறங்கியது பெரிய தொப்பையும், கனத்த உருவமும், நீட்டிய பற்களும் கொண்ட நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய சொட்டு அக்கா!

மறக்கவே நினைக்கிறேன் - 22

'ஏலேய்... சொட்டு அக்காவை அனுப்பி ஏமாத்திட்டானுவளேய்’ என்று ஏற்கெனவே சொட்டு அக்காவைத் தெரிந்திருந்த பல நண்பர்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஏற்பாடு செய்த நண்பர்களோடு கணேசன் வெறிபிடித்த மாதிரி சண்டை போட, வொர்க்ஷாப்பே கூச்சல் குழப்பமானது. எதையும் கண்டுகொள்ளாத சொட்டு அக்கா, வொர்க்ஷாப்புக்குள் சென்று அமர்ந்துகொண்டாள். என்ன செய்வது, உள்ளே சென்று அந்த அக்காவிடம் யார் பேசுவது, யாருக்கு அத்தனை வயதான பெண்ணிடம் பேசத் தைரியம் இருக்கிறது என யோசித்து தயங்கி, யாருமே போக மறுத்துவிட்டார்கள். 'படித்தவனென்று’ படுபாவி என்னை போய் பேசச் சொன்னான் கணேசன். விரதம் இருக்காமல் தீக்குழி இறங்குவதுபோல் இருந்தது உள்ளே நான் நகர்ந்து சென்ற அந்த நொடி.

இடுப்பிலிருந்து பவுடர் தாளை எடுத்து முகத்துக்கு அப்பிக்கொண்டிருந்த சொட்டு அக்காவின் பின்னால் நின்றபடி, 'அக்கா’ என்றதும் சிரித்துக்கொண்டே திரும்பி, 'சொல்லு தம்பி’ என்று சொட்டு அக்கா சொன்னதும், மீன் குழம்புச் சட்டியைக் கழுவி சுளீரென முகத்தில் வீசியதுபோல் இருந்தது எனக்கு. நான் தயங்கித் தயங்கி ஏதோ ஒரு மொழியில் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசத் தொடங்குவதற்குள், நல்லவேளை அக்காவே பேசிவிட்டாள்!

'இங்க பாருங்க தம்பி... எனக்கும் நல்லாத் தெரியும். என்னை அனுப்புனவங்களுக்கும் நல்லாத் தெரியும்... உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னு! உங்களுக்கென்ன... யாருக்குமே என்னைப் பிடிக்காது. ஆனாலும், யார் எப்போ போன் பண்ணாலும் என்னைத்தான் அனுப்புவாங்க. வேற வழியில்லை. நீங்க பேசுன மொத்தக் காசையும் கொடுத்துதான் ஆகணும். வாங்காமப் போனா, அங்கே என் தோலை உரிச்சிடுவாங்க. நீங்க கொடுக்கலைன்னா, இங்கேயே உட்காந்து உங்களைத் தொந்தரவு பண்ணச் சொல்லுவாங்க. பேசாம காசைக் கொடுத்திருங்க... நான் போறேன்!’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, கேட்ட காசை நண்பர்கள் எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். சொட்டு அக்கா, அதோடு போகவில்லை. 'எப்பா வாங்கப்பா... யாரவது என்னை பைக்ல கொண்டுபோய் லட்சுமி தியேட்டர்கிட்ட விட்டுருங்க. பயப்படாதீங்க... நான் முகத்தை மூடிக்கிறேன்!’ என்று சொன்னாலும் கூட்டிப்போக துணிச்சலுள்ள ஆள் இல்லை எங்கள் கூட்டத்தில். நல்லவேளை, எனக்கு அப்போது பைக் ஓட்டத் தெரியாது. வேறு வழியில்லாமல் கணேசன்தான் பற்களை நறநறவெனக் கடித்தபடி பைக்கில் ஏற்றிக்கொண்டு விடப்போனான்.

தன் பிறகு இப்போதுதான் சொட்டு அக்காவைப் பார்க்கப்போகிறேன். கையிலிருக்கும் நளினி ஜமீலாவைப் போல சொட்டு அக்காவுக்கு ஒரு பெரிய பொட்டு வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. கணேசன் போய் வண்டியை நிறுத்திய வீடு பெரிய வீடாக இருந்தது. 'இத்தனை பெரிய வீட்டிலா சொட்டு அக்கா இருக்கிறாள்?’ என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதவைத் தட்டினால், உள்ளிருந்து யாரோ அழகான பணக்கார அம்மா வந்து கதவைத் திறந்தார்.

மறக்கவே நினைக்கிறேன் - 22

''சொட்டு அம்மா இருக்காங்களா?'' என்று கணேசன் விசாரிக்க, ''என்ன இப்போதான் உங்க அம்மா வந்து பேசிட்டுப் போனா. அதுக்குள்ள நீ வந்துட்ட. ரெண்டு பேருக்கும் அவ மேல அம்புட்டுப் பாசம்னா, எதுக்கு இங்க அனுப்புனீங்க? அங்கேயே வெச்சுக்க வேண்டியதுதானே!'' என்று அவர் சொல்ல, எதுவும் புரியாத குழப்பத்துடன் கணேசனைப் பார்த்தேன்.

அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு பெரிய கதை இருப்பது அப்பட்டமாகத் தெரிய, அவன் கைகளைப் பிடித்து அழுத்திக் கேட்டேன். தலையை குனிந்துகொண்டு அவன் சொன்னதுதான் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் கதை!

''அன்னைக்கு சொட்டு அக்காவை விடப் போனேன்ல, அப்போ எங்க அம்மா பார்த்துட்டாங்க. நல்லவேளை அவங்க என்னைப் பார்க்கலைனு பார்த்தா, ஓடிப்போய் சொட்டு அக்காவைக் கட்டிப்பிடிச்சு பேசிக்கிட்டு இருக்காங்க. 'இது என்னடா?’னு அப்புறமா போய் விசாரிச்சா, அம்மாவும் சொட்டு அக்காவும் பழைய பேட்டை ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சவங்களாம். அதைக் கேட்டதுல இருந்து பத்து நாளைக்கு, அம்மா முகத்தைப் பார்க்க முடியாம, ஒழுங்கா சாப்பிட முடியாம, தூங்க முடியாம, நான் பட்ட வேதனை இருக்கே... அப்படியே க்ரூடாயிலை எடுத்துக் குடிக்கலாம்போல இருந்துச்சுடா.

'என்ன ஆனாலும் சரி’னு ஒருநாள் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். கேட்டவுடனே கன்னத்துல சப்புனு ஒரு அறை அறைஞ்சாங்க. அதே கையோட அப்படியே போய்ச் சொட்டு அக்காவைத் தேடிப் பிடிச்சு, அவங்களுக்கு ஒரு அறை. அப்புறம் அவங்களைக் கூட்டிட்டு வந்து இங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டுட்டாங்க. அன்னையிலிருந்துதான் மச்சான், எனக்கு அவங்க சொட்டு அம்மா ஆனாங்க!'' என்று சொல்லி முடித்த நண்பனை, எப்படி நிமிர்ந்து பார்ப்பது என்று தெரியாமல் குனிந்து நின்றுகொண்டிருக்கும்போதே, சொட்டு அக்கா வந்துவிட்டார்.

சொட்டு அக்கா அப்படியேதான் இருந்தார். கொஞ்சம் முடி நரைத்து உடம்பு தளர்ந்திருந்தது. அவளோடு 15 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்றிருந்தான்.

''இது என்னோட ஃப்ரெண்ட். உங்களைத்தான் பார்க்க வந்திருக்கான்!''

''அன்னைக்கு அந்தக் கூட்டத்துல தம்பியும் ஒரு ஆளா?'' என்ற சொட்டு அக்காவின் கேள்விக்கு கணேசனின் 'இல்லை’ என்ற பதிலும், என்னுடைய 'ஆமாம்’ என்ற பதிலும் முட்டிமோதி சொட்டு அக்காவின் சிரிப்பாக உதிர்ந்தது.

நளினி ஜமீலா புத்தகத்தை வாங்கி சொட்டு அக்காவின் கையில் கொடுத்து, ''இதைப் படிச்சிட்டு இதே மாதிரி நீங்களும் எழுதணும்னு சொல்ல வந்திருக்கான்'' என்றான்.

என்ன ஏதென விசாரித்தவள், ''எனக்கு எழுதத் தெரியாதே!'' என்றாள்.

''நீங்க எழுத வேணாம். சொன்னாப் போதும். இவனே எழுதிக்குவான்!''

''ஓ... அப்படியா? ஆனா, ஒருவேளை சொல்லும்போது நான் நெஞ்சு வெடிச்சு செத்துட்டா என்ன பண்றது?'' என்று சொட்டு அக்கா சொன்னவுடன் அருகில் நின்றுகொண்டிருந்த அவளுடைய கண் தெரியாத 15 வயது பையன், ''அப்படிச் சொல்லாதேனு உன்னைச் சொல்லிருக்கேன்ல!'' என்று சொல்லிவிட்டு அழுத அழுகைதான், கதை தேடிப்போன நான் கண்டடைந்த வாழ்க்கை!

- இன்னும் மறக்கலாம்...