##~##

போன வாரம் என்னைத் தேடி பெரியவர் ஒருவர் வந்திருந்தார். ஒல்லியான தேகம், திருத்தமாகக் கட்டப்பட்ட வேட்டி சட்டை, கம்பீரக் குரல்...

 ''எனக்கு ஏதாவது டி.வி-யில வேலை வேணும் சார். வாங்கித் தாரீயளா?'' என்று கேட்டார். 50 வயதுக்கு மேல் இருக்கும் அவரை, சிறிது குழப்பத்தோடு பார்த்தேன். ''நான் நல்லா பேசுவேன் தம்பி... ரைமிங்கா, டைமிங்கா பேசுறதுல எங்க ஊர் பக்கம் நான் ரொம்ப ஃபேமஸ்'' என்றார். வயதுக்குச் சம்பந்தமே இல்லாத அவருடைய குரலில் ஒரு கம்பீரமும் வசீகரமும் ஒளிந்திருந்தது. இயல்பான பேச்சிலேயே அழகான வாக்கியக் கோவைகளோடு பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  ''சந்தைல அனௌன்ஸ் பண்ற வேலை பார்த்துட்டு இருந்தேன். சந்தைக்கு வர்ற ஜனம் முழுக்க நாம எங்க இருக்கோம்னு தேடும். நாலு ஊர்ல ஏழெட்டு வருஷம் நம்ம அனௌன்ஸ்மென்ட்தான். ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு வேலையே இல்லைனு ஆகிப்போச்சு. பஸ் ஸ்டாண்ட் டி.வி. விளம்பரத்துக்கு குரல் கொடுத்தேன். அதுலயும் புதுசு புதுசா நிறைய ஆளுங்க வந்துட்டாங்க. என் பாணி அங்கே பழசுன்னுட்டாங்க. ஆனா, என் பேச்சு மேல எனக்கு நம்பிக்கை இருக்குப்பா. இன்னைக்கு எனக்கு சரியான வாய்ப்பு கிடைச்சா ஒரு ரவுண்டு வருவேன்!'' - நம்பிக்கையோடு சொன்னார் அந்தப் பெரியவர்.

எனக்கு, எங்கள் ஊர் செவ்வாய்க்கிழமை சந்தை ஞாபகத்துக்கு வந்தது. வார நாட்களில் அது ஒரு வைபவம் போல இருக்கும். சந்தை இருக்கும் பகுதியில் அன்று காணக் கிடைக்கும் காட்சிகள் திருவிழா களையை உண்டாக்கும்.  முண்டாசுக் கட்டிக் கூடை சுமந்து, காய்கறி கட்டுகள் பிரித்து சந்தைப் பேட்டையே அல்லோலகல்லோலப்படும். அப்போது 'மைக் டெஸ்டிங்... மைக் டெஸ்டிங்...’ என்ற ஆரம்ப கரகரப்புகளுக்குப் பிறகு, 'மங்களம் ஸ்டோர்... உங்கள் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வகையான துணிமணிகளும் வாங்க கைராசியான ஸ்தாபனம்... டொய்ங் டொய்ங்’ என்றொரு குரல் ஒலிபெருக்கியில் உச்சஸ்தாயில் ஒலிக்கத் தொடங்கும். அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பது தெரியாது. ஆனால், சந்தை உலாவை அந்த விளம்பரங்கள் வெகு சுவாரஸ்யமாக்கும்!

பாஸ்வேர்டு்

'பளபளக்கும் பாத்திரங்கள், கல்யாண சீர்வரிசை சாமான்கள், தூக்கு, வாளி, தட்டுகள் என உங்கள் அடுப்படியை அலங்காரம் செய்யும் அருமையான நிறுவனம் கே.ஜே.பாத்திரக் கடை... 200 ரூபாய்க்கு மேல் பாத்திரங்கள் வாங்குபவர்களுக்கு எவர்சில்வர் தட்டு ஒன்று இலவசம்!’ - அட்சர சுத்தமாக கொஞ்சம் தென் தமிழகத்தின் வாடை வீசும் தமிழில் கணீர் குரலில் பேசிக்கொண்டு இருப்பார் சாமுண்டி.

இடையிடையே சமூக நல அக்கறை அறிவிப்புகளும் கலந்துகட்டி ஒலிக்கும்! 'சந்தைக்கு வர்றவங்க சாமான், செட்டு வாங்கிட்டுப் போறதுக்கு வசதியா, வண்டி ஓட்டிட்டுப் போறவங்க கொஞ்சம் ஓரமாப் போங்கப்பா. இந்தா... கொண்டை போட்டு டிசம்பர் பூ வெச்சுட்டுப் போற அம்மா, பிள்ளையைக் கைல புடுச்சுட்டு போ... கூட்டத்துல புள்ளையை காணாக்கிட்டு அழுதுட்டு நிக்காத!’

எங்கே உட்கார்ந்துகொண்டு இவரு இதையெல்லாம் கவனிக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். வெறும் விளம்பரச் சேவையாக மட்டுமல்லாமல் நிறைய அறிவிப்புகள் சொல்கிற, அறிவுரைக்கிற, நலம் விசாரிக்கும் பல செய்திகள் எங்கிருந்தோ வந்து விழுந்தபடி இருக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் அந்தக் குரல் திசையெங்கும் ஒலித்தபடி இருக்கும். இன்றைக்கும் காட்சிப் படிவமாக செவ்வாய்க்கிழமை சந்தையை யோசித்துப் பார்த்தால், கடும் சத்தத்துக்கும் இரைச்சலுக்கும் மத்தியில் அந்த ஒலிபெருக்கி அறிவிப்புக் குரல் மட்டும் கணீர் எனக் கேட்கிறது. ஆனால், அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. சின்னச் சின்ன டவுன்களிலும் கிராமங்களிலும் இந்த வர்த்தக ஒலிபரப்பு புழக்கத்தில் இருந்தாலும், தன்னுடைய பேச்சுத் திறமையால் வசீகரித்த பலரும் இப்போது வேறு தொழில்களை நாடிப் போய்விட்டனர்.

ல்லூரியில் படிக்கும் சமயம் பேராவூரணியில் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அன்று சந்தை நாள். களை கட்டியிருந்தது. எங்கள் ஊரில் கேட்ட அதே மாதிரியான வர்த்தக விளம்பரங்களை, வேறொரு தொனியில் ஒருவர் முழங்கிக்கொண்டு இருந்தார்.

'கபம், சளி, நீண்டநாள் பட்ட காய்ச்சல், மூட்டு வலி, முதுகு வலி, காலைக்கடன் கழிப்பதில் சிரமம் என அன்றாடம் அவஸ்தையாக இருக்கிறதா? கவலை வேண்டாம் நம்ம சுவாமியப்பன் நாட்டு மருந்துக் கடைக்குப் போங்க... பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள்... அத்தனையும் குறைவான விலையில்...’

பாஸ்வேர்டு்

மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்து பூரித்த நண்பன், ''அந்த  விளம்பரம் பேசுறது என் மாமாதான்'' என்று சொல்ல, அவர் பேசுவதை நேரில் பார்த்துக் கேட்டே ஆகவேண்டும் என்று நண்பனிடம் கோரிக்கை வைத்தேன். 'அந்தா இருக்கிற லாட்ஜ் மாடியில்தான் இருப்பார்... வா’ என்று அழைத்துப்போனான். பத்துக்குப் பத்தில் சின்ன அறை ஒன்று. மைக், ஸ்பீக்கர் மாதிரியான கருவிகள் என ஒரு சின்ன செட் அப். அறைக்குள் சென்றபோது ஒரு பையன் மட்டும்தான் உட்கார்ந்திருந்தான். மாமாவைக் காணவில்லை. ''அவரு ஒரு வேலைக்காக பட்டுக்கோட்டை வரைக்கும் போயிருக்காப்ல'' என்றான் அந்தப் பையன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 'வெள்ளையம்மா புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டீங்களா? கவலைப்படாதீங்க அவன் படிச்சு பெரிய ஆளா வருவான்’ என்று பெர்சனல் டச் வைத்தது ஒலிபெருக்கியின் குரல். அந்தப் பையன் அடுத்த கேசட்டை மாற்றுகிற வேலையில் மும்முரமாக இருந்தான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

கமுக்கமாக சிரித்துக்கொண்டே நண்பன் சொன்னான், ''லூஸாடா நீ? வாரா வாரம் மைக்ல கத்திட்டே இருப்பாங்களா என்ன? மாமா ரொம்ப பிசியான ஆளுடா. ரவுண்டு அடிச்சுக்கிட்டே இருப்பாரு. ஒரே நாள்ல நாளு ஊர்ல சந்தை நடக்கும். நாலு இடத்துலயும் உக்காந்து பேசிக்கிட்டு இருக்க முடியுமா? அதான் இப்படி டேப்ல ரெக்கார்ட் அடிச்சு ஓடவிட்ருவாங்க!'' என்றான்.

நினைத்துப் பார்த்தால் அவர்களின் அறிவிப்புகளில் இருந்த நேர்த்தியும், சமயோசித சிந்தனையும், அவர்கள் பின்பற்றிய உத்திகளும்  ஆச்சர்யப்படுத்துகின்றன. கொண்டை போட்டு டிசம்பர் பூ வைத்த பெண் ஒருவர் சந்தைக் கூட்டத்துக்குள் இல்லாமலா போவார்? 'பிள்ளைகளைப் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்!’ என்று தட்டையாக அறிவிக்காமல், அதற்கு ஒரு கேரக்டரை உருவாக்கிய க்ரியேட்டிவிட்டியை எந்த 'பி’ ஸ்கூலில் படித்திருப்பார்கள்? வெள்ளையம்மாவிடம் நலம் விசாரித்ததன் மூலம் எல்லோரிடமும் ஒரு நெருக்கம் உண்டாக்கிய உத்தி எத்தனை சமயோசிதமானது!  

அதற்குப் பிறகு திருச்சி சிங்காரத்தோப்பு ஏரியாவில் ஆட்டோவில் இருந்து லாட்டரி விளம்பரம் கேட்கும்போது, உள்ளே ஆள் இருக்கிறார்களா என்று எட்டிப் பார்ப்பேன். சீட்டு விற்கிற பையன் மட்டும்தான் அமர்ந்திருப்பான். ரெக்கார்ட் செய்யப்பட்ட கேசட்டிலிருந்து குரல் குற்றால அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கும்.

'அண்ணே பத்தே பத்து சீட்டுதான்... இன்னும் கொஞ்சம் நேரத்துல அத்தனையும் வித்துப்போகும்... வாங்கண்ணே... வாங்க... இந்தாங்க அதிர்ஷ்ட தேவதை உங்க பக்கம்தான். நாளைல இருந்து நீங்க கோடீஸ்வரர்’ என்று சீட்டு விற்பனையை நேரில் பார்த்து விவரிப்பதைப் போலவே ரெக்கார்டு ஒலிக்கும்.

பாஸ்வேர்டு்

அந்தக் குரலுக்கு சொந்தக்காரரான குமாரசாமி அண்ணன், எங்கோ ஒரு கோயில் திருவிழாவில் லைவ் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்பார். அவரை எனக்குத் தெரியும். லாட்டரி விளம்பரம், கபடிப் போட்டி, கோயில் கும்பாபிஷேகம், கோயில் திருவிழா விளம்பரங்கள் என, எங்கு பார்த்தாலும் குமாரசாமி அண்ணனின் குரல் ஒலிக்கும். இன்றைக்கு இருக்கிற ஊடக வளர்ச்சி அன்றைக்கு இருந்திருந்தால் குமாரசாமி அண்ணன் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டிய இடமே வேறு என்று இப்போது தோன்றுகிறது.

உள்ளூர் சேனல் விளம்பரங்கள், எஃப்.எம். ரேடியோக்கள், ஃப்ளெக்ஸ், போஸ்டர்கள், சாட்டிலைட் சேனல்கள், தட்டி விளம்பரங்கள், எஸ்.எம்.எஸ். விளம்பரங்கள் எனப் பல புதிய வடிவங்கள் இந்தக் கலைஞர்களின் குரலை காணாமல் செய்துவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி இப்படிப் பலரையும் அக்கரைக்கு அடித்துச் சென்று ஒதுக்கிவிடுகிறது.

இது தவிர்க்க இயலாத ஒன்றுதான் என்றாலும், அந்த அறிவிப்பாளர்களின் குரலும், அவர்களின் உத்திகளும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இன்னமும் ஒலிபெருக்கி போன்ற ஒரு மைக்கை வைத்துக்கொண்டு தன் கடையின் சிறப்புகளை பேசும் சில அறிவிப்பாளர்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. அவர்களையும் காலம் வேறு இடம் நோக்கி கடத்தக்கூடும்.

அந்தக் கணீர் குரலின் அறிவிப்புகள் இல்லாத சந்தையில் உலவினால், சத்தமில்லாமல் டி.வி. பார்ப்பதுபோல சாதாரணமாகத் தெரிகிறது. திருவிழா உணர்வுகளைத் தந்த சந்தை நாட்கள், மற்றுமொரு  நாளாகக் கடந்து செல்கின்றன.

குமாரசாமி அண்ணன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. 'ஸ்ரீரங்கத்து சிங்கம் ரைடு போகுது... பயந்தவனெல்லாம் சைடு வாங்கிக்க. முன்ன வந்து நிக்கிறவன் மூஞ்சிய பார்த்துக்க’! எப்போதாவது டி.வி-யில் பார்க்கிற கபடிப் போட்டியை கண்முன்னே நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த, குமாரசாமி அண்ணன் குரலால்தான் முடியும்!

- ஸ்டாண்ட் பை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism