Published:Updated:

“நான் ரொம்ப சீரியஸ் டைப்!”

ஜனகராஜ் பேட்டி...

##~##

சென்ற வாரம் நகைச்சுவை நடிகர் ஜனகராஜைச் சந்திக்க அவர்  வீட்டுக்குச் சென்றபோது அவசரமாகப் படப்பிடிப்புக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். ''கார்லே ஏறுங்க... பேசிக்கிட்டே போகலாம்...'' என்றார். கார் போரூருக்குப் பக்கத்திலுள்ள மூன்றாங்கட்டளை என்ற கிராமத்தை நோக்கிப் போக, பேச ஆரம்பித்தார் ஜனகராஜ்.

''காலேஜ் டேஸ்ல நிறைய நாள் நான் மட்டம் போட்டேனா... அட்டெண்டன்ஸ் இல்லைனு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அப்பத்தான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் எல்லாரும் அறிமுகமானாங்க. பாஸ்கர்தான், 'நீ ஏதாவது இன்ஸ்ட்ரூமென்ட் கத்துக்க’னு சொன்னாரு. சரின்னு தலையாட்டிட்டு வயலின் கத்துக்கிட்டேன்.

அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு 'ஓ நெஞ்சமே’னு வாணி மஹால்ல பாரதிராஜா ஒரு நாடகம் போட்டார். அதுல நான் ஒரு கேரக்டர் பண்ணேன். இளையராஜாதான் மியூசிக். கொஞ்ச நாள்ல பாரதிராஜா 'பதினாறு வயதினிலே’ படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்தாரு. அடுத்து அவர் 'கிழக்கே போகும் ரயில்’ படத்தை எடுக்க ஆரம்பிச்ச சமயம் அவர்கிட்ட போய், 'என்னை அசிஸ்டென்ட் டைரக்டரா வெச்சுக்குங்க’ன்னேன். அவர், 'நீ ஒரு நல்ல நடிகன்டா... உனக்கு அசிஸ்டென்ட் டைரக்டர் உத்தியோகம் எல்லாம் வேணாம். இந்தப் படத்தில் உனக்கு ஒரு நல்ல காரெக்டர் தர்றேன்’னாரு.

அவ்வளவுதான்... பயங்கர சந்தோஷம் எனக்கு. ஊர் முழுக்க நான் சினிமாவுலே நடிக்கப்போறதைச் சொல்லிட்டு அவர்கூட லொகேஷனுக்குப் போனேன். அங்க போன பிறகுதான் தெரிஞ்சது, எனக்கு அந்த கேரக்டர் இல்லைனுட்டு. 'அடுத்த படத்தில தர்றேன்’னு சொன்னாரு. ஆனா, நான் வுடலை. 'எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். ரொம்ப அசிங்கமாயிடும். ஏதோ கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க’ன்னேன். அப்புறம்தான் அந்தப் படத்தில வயசான (கெட்ட) பிராமணரா ஓல்டு கெட்-அப்பில் நடிக்க சான்ஸ் கிடைச்சது.

“நான் ரொம்ப சீரியஸ் டைப்!”

அப்புறம் அவரோட படங்கள்ல மட்டும் நடிச்சேன். நானாகப் போய் வெளி கம்பெனிகள்ல சான்ஸ் கேட்க எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவங்களா வரட்டும்னு இருந்தேன். அப்பதான் ராபர்ட் ராஜசேகர் அறிமுகம் கிடைச்சு, அவங்களோட 'பாலைவனச்சோலை’யில எனக்கு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் கொடுத்தாங்க. படம் சூப்பர் ஹிட்டாக, பட சான்ஸ் என்னைத் தேடி வர ஆரம்பிச்சது. அப்புறம் 'காதல் ஓவியம்’ படத்தில் அட்டகாசமான ரோல் கொடுத்தார் பாரதிராஜா. அதில நான் ரொம்ப நல்லாப் பண்ணியிருந்ததும், படம் சரியா ஓடாததாலே எனக்குப் பெரிய பேரு கிடைக்காமப் போச்சு. அந்த நேரத்திலதான் ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் நடந்தது!'' என்று சொல்லும்போதே ஷூட்டிங் லொக்கேஷன் வந்துவிட... சஸ்பென்ஸாகப் பேச்சை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி மேக்கப் போடப் போனார் ஜனகராஜ்.

'நான் புடிச்ச மாப்பிள்ளே’ படத்தின் ஷூட்டிங்குக்காக வயதான கெட்-அப்பில் வந்த ஜனகராஜ் ஒரு கதர் சட்டை, ஒரு லங்கோடு சகிதம் வயலில் வேலை செய்ய ரெடியானார்.

ஷாட் முடிந்து வந்தவர்... 'டைரக்டர் ராபர்ட் ராஜசேகரனோட குடும்பக் கல்யாணம் பாண்டிச்சேரியில நடந்தது. அதுக்குப் போயிட்டு ராத்திரி கார்ல மெட்ராஸ் திரும்பிட்டு இருந்தோம். எங்கேனு எனக்குச் சரியா ஞாபகமில்லே... கார்ல பின் சீட்ல ஜன்னலோரமா நான் உட்கார்ந்து இருந்தேன். லேசாக் கண்ணை மூடின சமயம், திடீர்னு ஒரு பெரிய கல்லு கண்ணாடியைப் பேத்துக்கிட்டு என் மூஞ்சியிலே வந்து விழுந்தது. 'அம்மா’னு அலறிட்டேன். லைட்டை போட்டுப் பார்த்தா, மூஞ்சியில இருந்து ரத்தமா ஒழுகுது. அவசரமா காரைத் திருப்பி ஜிப்மருக்குப் போனோம். அங்க கொஞ்ச நாள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு மெட்ராஸ் வந்து தனியார் ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். அந்தக் கல் மூஞ்சில வந்து விழுந்ததிலேதான், என் நெத்தி, தாடை எலும்பு உடைஞ்சு, இடது கண்ணு இப்படி ஆயிடுச்சு. ஆனா, அதுவே எனக்கு இப்ப ப்ளஸ் பாயின்ட்டாப் போச்சு. ஆனா, அன்னிக்கு கார்ல வந்து விழுந்த கல்லு எப்படி வந்ததுங்கறது மட்டும் இன்னும் ஒரு புதிராவே இருக்கு'' என்றபடி மௌனமானார் ஜனகராஜ்.

“நான் ரொம்ப சீரியஸ் டைப்!”

''நடிகர்களின் இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுலதான் நடிகர்கள் தங்களோட இமேஜ் பத்தி அதிகமாப் பார்த்துக்க வேண்டியிருக்கு. இதுவே கேரளால எடுத்துக்குங்க... மோகன்லாலும் மம்மூட்டியும் ஹீரோவாத்தான் நடிக்கணும்னு ஜனங்க நினைக்கலை. எந்த கேரக்டர் எடுத்து நடிச்சாலும் ரசிக்கறாங்க. ஆனா, இங்க அப்படியில்ல. 'நானே ஒரு படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோல் செஞ்சேன். படம் வந்ததும், 'நீங்க எங்களைச் சிரிக்கவைக்கிற மாதிரி கேரக்டர்லயே பண்ணுங்க ப்ளீஸ்’னு எனக்கு ஏகப்பட்ட கடிதங்கள். அது என்னை ரொம்ப யோசிக்க வெச்சது. ஸோ... அப்படிப்பட்ட படங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக் குறைச்சிட்டேன். அதுக்காக வில்லன் ரோலே பண்ண மாட்டேன்னு அர்த்தமில்லே. நல்ல டாமினேட் பண்ற மாதிரியான ரோல் கிடைச்சா பண்ணுவேன்!''

''அரசியலுக்கு நடிகர்கள் வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்... உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கிறதா?''

''எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்... அது எனக்குத் தேவையில்லைன்னு முடிவு எடுத்துட்டேன். சின்ன வயசிலே பசங்களோட சேர்ந்து 'கம்யூனிஸம்’, 'லெனின்’னு பேசிக்கிட்டிருந்தேன். இப்போ அதுவும் கிடையாது. ஜாதகம், ஜோசியம் இதிலயும் சுத்தமா நம்பிக்கை கிடையாது!''

''படங்களில் நீங்கள் காமெடி செய்கிறீர்கள்... நிஜ வாழ்க்கையில் எப்படி?''

''நான் ரொம்ப சீரியஸ் டைப்புங்க! பொதுவா காமெடி நடிகர்கள் ப்ராக்டிகல் லைஃப்லே சீரியஸாத்தான் இருப்பாங்கன்னு சொல்வாங்க. ஏன் அந்த மாதிரின்னு லாஜிக் எல்லாம் தெரியாது. ஆனா, நான் ரொம்ப சீரியஸ் டைப். இல்லைன்னு வெச்சுக்குங்க. இளிச்சவாயன்தானேனு நம்மை ஏமாத்திட்டுப் பூடுவானுங்க. பாருங்க... வெயில் கொளுத்துது. இறங்கி நடிச்சாவணும். டைரக்டரா இருந்தாக்கூட யாரையாவது விட்டு சில ஷாட்ஸ் எடுக்கலாம். ஆனா, நடிகனுக்கு வேற வழியே கிடையாது'' என்று சொல்லும்போதே ஆள் வந்து கூப்பிட... நம்மை ஒரு பார்வை பார்த்தபடி இறங்கிப்போனார். இடைவெளிவிடாமல் ஷூட்டிங் நடக்க... ஒருவழியாய் பேக்கப் ஆனபோது மணி ஆறாகி இருந்தது.

ஜனகராஜ் வீடு திரும்பியபோது அங்கு அவர் மகன் அழுதுகொண்டிருக்க, அன்பாக விசாரித்தார். அவர் மனைவி... 'கட்டிங் பண்ணிக்கிட்டான் குட்டு... அசிங்கமா வெட்டிட்டானாம்... அதான் அழுகை’ என்றார்.

'ஏண்டா முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள ஸ்டைலா?’ என்று செல்லமாய் ஜனகராஜ் அதட்ட... அழுகையை நிறுத்திய குட்டு, 'என்ன?’ என்றான் மிரட்டும் தொனியில்!

''பார்த்தீங்களா... அப்பனையே மிரட்டறான்!'' என்றவர், 'ஒரு நாள் ஷூட்டிங் போற அவசரத்தில லேசா இவன் கன்னத்தில் தட்டிட்டுப் போயிட்டேன். சாயங்காலம் வந்து, 'என்ன ராஜா?’னு சிரிச்சுக்கிட்டே பக்கத்துல போனேன். பளீர்னு ஒரு அறை வெச்சான் என் கன்னத்திலே. அவ்வளவு ஞாபகசக்தி'' என்றார் சிரித்தபடி!

- ந.சண்முகம்

படங்கள்: ஆர்.விஜி

அடுத்த கட்டுரைக்கு