Published:Updated:

ஆறாம் திணை - 52

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 52

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

 டந்த வாரம் மலேசியா சென்றிருந்தேன். கோலாலம்பூரில் பூச்சோங் பகுதியில் பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து உலர்ந்திருந்த முருங்கைக்காய்களை, சீனர் ஒருவர் பறித்துக்கொண்டி ருந்தார்.

''காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?'' எனக் கேட்டபோது, ''ரத்தக்கொதிப்பு வராமலிருக்க முருங்கையின் உலர்ந்த விதைக்குள் உள்ள பருப்பை நாங்கள் சாப்பிடுவோம்!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  முன்பு ஒருமுறை தாய்லாந்தில் நடந்த உலகத் தாவரவியல் மாநாட்டில் குவாந்தமாலா நாட்டின் பேராசிரியை ஒருவர், 'நாங்க உணவில் நிறையக் கீரைகள் சேர்ப்போம். சின்னக் கீரைகள்தான் பெரிய மருந்துகள்!’ என்று சொன்னது, இன்னும் என் நினைவில் இருக்கிறது. மற்றொரு முறை ஜெர்மானிய உணவியல் விஞ்ஞானி, 'இந்தக் கீரை, உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட’ எனக் காட்டிய கீரை... நாம் மஞ்சள் காமாலைக்குக் காலங்காலமாகக்  கை வைத்தியம் அளிக்கும் கீழா நெல்லி.

குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளும், உலக வல்லரசுப் பட்டத்தை எட்டிப்பிடிக்கும் போட்டியில் இருக்கும் சீனா போன்ற பெரிய நாடுகளும், ஆய்வின் உச்சங்களில் இருக்கும் ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகளும்... தம் பாரம்பரிய அறிவுகளையும் உணவுக் கலாசாரத்தையும் உற்றுப்பார்த்து அதன் மாண்பை மீட்டெடுக்க முழுவீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒப்புநோக்குகையில் பாரம்பரிய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு.

'காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பரிய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன.

'செறிமந்தம் வெப்பந்த்
தெறிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை
கண்ணோய் விலகும்’

ஆறாம் திணை - 52

என முருங்கையைப் பற்றி சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டாகரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர்.

ன்றைய உணவறிவியல், 'கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கை சாம்பார் வைத்து அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக் கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின் பப்பாளிப் பழத் துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் A சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். இதற்கான செலவு ரொம்ப ரொம்பக் குறைவு. ஆனால், மரபணு மாற்றி வைட்டமின் A செறிவூட்டப்பட்ட கோல்டன் அரிசியை இந்தியாவுக்குள் நுழைத்தால்தான் ஆச்சு என கங்கணம் கட்டி அசுர வேகத்தில் வேலை பார்க்கின்றனர் இந்திய அரசின் உயர்மட்ட விவசாயக் கங்காணிகள்.

வைட்டமின் A செறிவூட்டப்பட்ட கோல்டன் அரிசி, ஒருவேளை கண்ணுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், மற்ற உறுப்புகளுக்கு என்ன ஆகும் என்று முழுதாகத் தெரியாது. ஆனால், விலை மட்டும் முருங்கைக் கீரையைவிட 10,000 மடங்கும், அரிசியைப் போல 10 மடங்கும் இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.

முருங்கையின் பொட்டாசியச் சத்து வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச் சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும் நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் C-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில் இந்த முருங்கை சங்க காலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.

சர்க்கரை நோயாளிகள், வாரம் இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை/ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துகள் கிடைப்பதுடன், சர்க்கரை நோய் உண்டாக்கும் சோர்வும் தீரும்.

சித்த மருத்துவப் பரிந்துரைப்படி முருங்கை, ரத்தக்கொதிப்பு நோய்க்கும் மருந்து. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற 'காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை, தாய்த் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஹீரோ!

நம் குழந்தைகளிடம் முருங்கைக் கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அதை மெள்ளவைப்பதும் சிரமம்தான். பிரபல மருத்துவமனைகளோ, மருத்துவக் காப்பீடு தரும் காப்பீட்டு நிறுவனங்களோ நம்மை நோயின் பிடியிலிருந்து தடுக்காது. நோய் வந்த பிறகு, கொடுக்கும் பைசாவுக்குத் தகுந்தபடி நோயையும் நம்மையும் நிர்வகிக்குமே தவிர, நோயின் பிடியிலிருந்து நம்மை நிரந்தரமாக வெளியேற்றாது. ஆக, உணவின் மீதான அக்கறையும், சூழல் மீதான கரிசனமும், பாரம்பரியம் மீதான பற்றும், மகிழ்வான மனதுக்கான மெனக்கெடலும் மட்டுமே நோய் வராது தடுக்கும்... காக்கும்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism