Published:Updated:

மதுர குலுங்க... குலுங்க 'என் விகடன்' ரிலீஸ்!

மதுர குலுங்க... குலுங்க 'என் விகடன்' ரிலீஸ்!

##~##
லீர் ரகளையும் ஜிலீர் ரசனையுமாக வாழும் தென் தமிழக மக்களுக்கு விகடன் வழங்கும், மண் மணக்கும் இணைப்பு 'என் விகடன்’ வெளியீட்டு விழா இது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மார்ச் 2-ம் தேதி மதுரை பாண்டியன் ஹோட்டலில் குடும்பத் திருவிழாவாக அரங்கேறி யது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய 'ஈரோடு’ மகேஷ் வரவேற்பு உரையிலேயே களைகட்டத் துவங்கியது அரங்கம்... ''என் அம்மா... என் அப்பா... என் நண்பன்... என்கிற பட்டியலில் இனி, 'என் விகடன்’ இதழுக்கும் முக்கிய இடம் உண்டு. பிரமாண்ட விருட்சமாகத் தழைத்து நிற்கும் விகடன், தன் வேர்களை இன்னும் ஆழத்துக்கு ஊடுருவிப் பரவச் செய்வதற்கு இனி 'என் விகடன்’தான் உரம். இப்பவே தமிழகத்தின் பிரபலங்கள் பலரை விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்தான் அடையாளம் காட்டி இருக்கு.

மதுர குலுங்க... குலுங்க 'என் விகடன்' ரிலீஸ்!

அந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு விகடனில் வெளிவரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்தான் அவர்களுக்கு ஊடகத்தின் முதல் வெளிச்சப் புள்ளியாக இருக்கும்! அப்படித்தான் எனது முகமும் ஒரு சுபயோக சுப தினத்தில் விகடனில் வெளிவந்தது. (சும்மா... ஒரு விளம்பரம்!) அப்படி மாணவர்களுள் இளம் திறமைசாலிகளை உலகத்துக்கு அறிமுகப் படுத்தும் விகடன், 'மாணவர்கள் மட்டும்’ என்ற கட்டுப்பாடு இல்லாமல், இனி எல்லாத் தரப்பு மக்களையும், மண்ணின் பழக்கவழக்கங்களையும் 'என் விகடன்’ பிரதிபலிப்பான். இனி, உங்களில் யாரும்... எவரும் 'என் விகடன்’ பக்கங்களை... அலங்கரிக்கலாம். ஏனெனில், இனி 'என் விகடன்’ எப்போதும் உங்கள் பக்கம்!'' என்று முத்தாய்ப்பு வைக்க, அதிர்ந்து அடங்கியது அரங்கம்!

மதுரை போலீஸ் கமிஷனர் அ.பாரி ஐ.பி.எஸ்., பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகிய சிறப்பு விருந்தினர்களோடு இணைந்து விகடன் குழும நிர்வாக இயக்குநர்  பா.சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி, விழா வைத் துவக்கிவைத்தார். பாரி 'என் விகடன்’ புத்தகத்தை வெளியிட, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.

மதுர குலுங்க... குலுங்க 'என் விகடன்' ரிலீஸ்!

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, மதுரை டால்ஃபின் மெட்ரிக் பள்ளி மாண வர்களின் நடனம். 'நடனம்’ என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிட முடியாத மிக ஸ்பெஷல் ஷோ அது. உடல் முழுக்க ஃப்ளோரசன்ட் வெளிச்சத்தைப் பிரதி பலிக்கும் சிறப்பு ஆடைகள் அணிந்து, குட்டிக் குட்டிப் பிள்ளைகள் மேடை ஏற, அரங்கின் விளக்குகள் அனைத்தும் இருள் போர்வை போர்த்திக்கொள்ள, மேடையில் இருந்த அல்ட்ரா வயலட் விளக்குகள் மட்டும் ஒளிர்ந்தன. அந்தப் பளீர் வெளிச் சத்தினை குழந்தைகளின் ஃப்ளோரசன்ட் ஆடைகள் ஜெகஜ்ஜோதியாகப் பிரதி பலித்தன. முகம் தெரியாமல் உடல் முழுக்க இருளில் ஒளிரும் சூரியகாந்திப் பூக்கள் ஜொலிக்க... மாணவிகள் ஆடிய நடனம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடனத்தின் நிறைவில் 'என் விகடன்’ என்ற எழுத்துக்கள் ஒளிர, விகடன் தாத்தா மேடையில் தோன்றினார் குறும்புச் சிரிப்புடன்! அதுவரை மெய்ம் மறந்து மாணவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த பார்வையாளர்கள், உச்சக்கட்ட உற்சாகத்துடன் கரவொலிகளால் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள்!

''எல்லாரும் முகம் தெரியணும்னு மேடை ஏறி பெர்ஃபார்ம் பண்ணுவாங்க. ஆனா, முகத்தை மறைச்சு அட்டகாசப்படுத்திட்டாங்க இந்தப் பசங்க. அதுல விகடன் தாத்தாவுக்கு பேரன் கணக்கா இருக்கிற இந்தப் பையன் பட்டையைக் கிளப்பிட்டான்!'' என்று பாராட்டினார் மகேஷ்.

மதுர குலுங்க... குலுங்க 'என் விகடன்' ரிலீஸ்!

''நம்ம எல்லோர் மனசிலும் விகடனுக்குன்னு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். மதிப்புக்குரிய மனிதர்களின் மனதில் விகடனுக்கு என்ன இடம்னு இப்போ தெரிஞ்சுக் கலாமா?'' என்று மகேஷ் அறிவிக்க... அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆங்காங்கே இருந்த வீடியோ திரைகள் ஒளிர்ந்தன.

சிவகுமார், விஜய், சூர்யா, சரத்குமார், கார்த்தி, சேரன், லிங்குசாமி, அமீர், வசந்தபாலன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் எனத் திரைப் பிரபலங்கள்; விஜயகாந்த், திருமாவளவன், சீமான், சுப்ரமணியன் சாமி என அரசியல் பிரபலங்கள்; வாலி, வைரமுத்து என கவிப் பிரபலங்கள்; குன்றக்குடி

பொன்னம்பல அடிகளார், சாலமன் பாப்பையா, பாலபாரதி எம்.எல்.ஏ., தமிழச்சி தங்கபாண்டியன் என்று தெக்கத்தி மாந்தர்கள் எனப் பல்துறைப் பிரபலங்கள் விகடனுடனான தங்கள் நெருக்கத்தைப் பெருமிதமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

''ஆனந்த விகடன்னாலே எனக்கு எப்பவும் பயம் கலந்த மரியாதைதான். அதுவும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு, கிட்டத்தட்ட ஒரு புரொஃபசரைப் பயத்தோட பார்க்கும் மாணவன் மாதிரிதான் நான் விகடனைப் புரட்டத் தொடங்குவேன். கரெக்டாப் பண்ணுனா, பாராட்டுவாங்க. தப்பு பண்ணுனா, தயவு தாட்சண்யமே இல்லாம குட்டுவாங்க. விகடன்னாலே எப்பவும் எதிலும் பெர்ஃபெக்ட்தான்!'' என்று சூர்யா பவ்யம் காட்ட, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ''விகடன் என்கிற நாங்கள் நேசிக்கிற, மதிக்கிற, எங்கள் குடும்ப உறுப்பினரான விகடன் தாத்தாவுக்கு 85 வயசாம். நம்பவே முடியலை. ஏன்னா, 85 வருஷம் கழிச்சும் ஒரு சுட்டிக் குழந்தையா, வால் பையனா இருக்கிற இமேஜ்தான் விகடன் பத்தி நினைச்சதும் மனசுல தோணுது!'' என்று சிலாகித்தார்.

வீடியோ ஒளிபரப்பு முடிந்ததும் 'அசத்தப்போவது யாரு?’, 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான மைக்கேல் அகஸ்டினின் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் மிமிக்ரி நிகழ்ச்சி. ரயில் இன்ஜின், ஆம்புலன்ஸ், குதிரை வண்டி, ரேஸ் கார் என வாகனங்களை அரங்கினுள் வலம் வரவைத்தவர், அரங்கத்தைக் கலகலக்கிவிட்டார்.

மிமிக்ரி நிறைவடைந்ததும் வீடியோ பதிவின் மூலம் பார்வையாளர்களுடன் உரையாடினார் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

''வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். 85-ம் வருஷத்தை வெற்றிகரமாகக் கடக்கும் இந்த சிலிர்ப்பான நேரத்தில் எங்கள் நெடுநாள் கனவு ஒன்று நிறைவேறுகிறது.கடைக்கோடி கிராமம் வரை காலடி எடுத்து வைக்க வருகிறோம்.

தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரிச்சு, ஒவ்வொரு மண்டலத்திலும் எங்களோட நிருபர்கள் புகுந்து விளையாடப்போறாங்க. அக்கம்பக்கத்தைக்கூடத் தாண்டாத ஆச்சர்யங் கள், சாதனைகள், கொண்டாட்டங்கள், குறிப் பிடத்தக்க சம்பவங்கள் எல்லாம் இனி 'என் விகடன்’ல அட்டகாசமா வெளிவரப் போகுது. எழுதத் துடிக்கிற உங்களுக்கும் பக்கங்கள் கொடுத்து பக்காவான படைப்பாளியா மாத்தப் போகுது 'என் விகடன்’.

'விகடன்ல நம்மளைப் பத்திலாம் எழுத மாட்டாங்களா? நம்ம படம்லாம் அதுல வராதா?’ன்னு இனி நீங்க ஏங்க வேண்டியதே இல்லை. உங்களோட அத்தனை கனவுகளையும் நிறைவேற்றவே 'என் விகடன்’!'' என்றார் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக!

தொடர்ந்து ஒளிபரப்பானது 'என் விகடன்’ தீம் ஸாங். 'டான்... டான்... டான்... ஆனந்த விகடன். என்றும் நம் விகடன், இன்று என் விகடன்...’ என்று பாடல் பட்டையைக் கிளப்ப, முதல் கவனிப்பிலேயே தாளம் போடவைத்தது. கவிஞர்கள் நா.முத்துக்குமார், 'நெல்லை’ ஜெயந்தா கூட்டணியில் உருவான பாடல் இது.

ஒட்டுமொத்தத் தமிழகமும் பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பாடல் வரிகளை கலர்ஃபுல் ஆகக் காட்சியாக்கி இருந்தார்கள் மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தினர்.

தீம் ஸாங்கின் பாடல் வரிகள் பார்வையாளர்கள் உதடுகளில் முணுமுணுத்துக்கொண்டுஇருந்த வேளையில், 'என் விகடன்’ இதழ்கள் அவர்களின் கரங்களில் கொண்டுசேர்க்கப்பட்டன.  

விழாவின் க்ளைமாக்ஸாக மதுரை D's Charac குழுவினரின் நடன நாடகம் இளமைத் துள்ள லுடன் அரங்கேற, விழா இனிதே நிறைவு பெற்றது!  

உற்சாகமாக கைகளில் 'என் விகடன்’ இதழை இறுகப் பற்றிக்கொண்டு கலைந்த விருந்தினர்கள் முகங்களில், 'இனி, இது... என் விகடன்’ என்ற பூரிப்பு!

- கே.கே.மகேஷ்
படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன்