Published:Updated:

என் ஊர்!

''தமிழ் சினிமாவின் தாய் பூமி!''

##~##
பா
லிமர் சேனலின் நிர்வாக இயக்குநர் கல்யாணசுந்தரம். பிறந்தது ராசிபுரம் அருகே பட்டணம். 'பாலிமர்’ கல்யாணசுந்தரமாக வளர்ந்தது சேலத்தில். கேபிள் டி.வி-யாக பாலிமரைத் தொடங்கி, இன்று சேட்டிலைட் சேனலாக வளர்த்த வித்தகர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வருஷம்தோறும் பட்டணம் ஏரி நிரம்பி வழியும். அந்தத் தண்ணி எங்க தோட்டத்து வழியாத்தான் போவும். நானும் என்னோட நண்பர்களும் வேட்டியை விரிச்சு மீன் பிடிப்போம். ராசிபுரத்துல பாலசுப்ரமணியா, கிருஷ்ணான்னு ரெண்டு தியேட்டர்கள் இருக்கும். '16 வயதினிலே’, 'நிறம் மாறாத பூக்கள்’, 'அலைகள் ஓய்வதில்லை’ எல்லாம் கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு அங்கதான் பார்த்தோம். இன்னிக்கு ஏரியில தண்ணியும் இல்லை; அந்தத் தியேட்டர்களும் இல்லை.

என் ஊர்!

ராசிபுரம்னு சொன்னா எல்லோருக்கும் முதல்ல நினைவுக்கு வர்றது வெண்ணைய். சுத்து வட்டாரத்து கிராமங்கள்ல இருந்து பெண்கள் நெய்க் கூடையை தலைச்சுமையா வெச்சிக்கிட்டு சந்தைக்கு வருவாங்க. ராசிபுரத்துல இருந்து தொழிலுக்காக சேலம் வந்தேன். எத்தனையோ ஜாம்பவான்களை வளர்த்த ஊர், எனக்கும் வாழ்க்கை கொடுத்தது. எந்த ஊருல மாம்பழம் சாப்பிட்டாலும், அது சேலத்து மாம்பழம் மாதிரி வராது. இன்னிக்கும் அயோத்தியாப்பட்டணம் பக்கத்துல விளையுற மாம்பழத்தை இங்கிலாந்துக்கு பார்சல் பண்றாங்க.

இன்னிக்கு உலகப் படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்களை எடுக்கிறாங்க. அந்த தமிழ் சினிமாவின் தாய் பூமி சேலம்தான். திருச்செங்கோட்டுல பிறந்த டி.ஆர்.சுந்தரம்தான் மாடர்ன் தியேட்டர்ஸை நிறுவினார். அங்கே இருந்து ஜொலித்தவர்கள்தான் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, சிவாஜி எல்லாரும். இப்ப மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவின் ஆர்ச்சை மட்டும் விட்டுட்டு உள்ளே வீடு கட்டிட்டாங்க.

என் ஊர்!

செவ்வாய்பேட்டைனு ஒரு ஏரியா இருக்கு. அங்கே அத்தனை பேருக்கும் கால்ல சலங்கையைக் கட்டிவிட்டது மாதிரி கொலுசு சத்தம் கேட்கும். வீட்டுக்கு வீடு வெள்ளிக் கொலுசு தொழில்தான். இளம்பிள்ளைனு ஒரு ஏரியா. இங்கே தயாராகிற அபூர்வா பட்டுப் புடவைகளைப் பார்த்து காஞ்சிபுரம் பட்டுப் புடவையே வெட்கப்படும். கோட்டை மாரியம்மனும், கோட்டைப் பெருமாளும்தான் சேலத்து மக்களின் நம்பிக்கைத் தெய்வங்கள். ஆடி மாசம் பிறந்தா, தெருவுக்கு தெரு இருக்குற மாரியம்மன், காளியம்மன் கோயில்கள்ல திருவிழா களைகட்டும். தினமும் கிடா வெட்டு, கஞ்சிசோறுன்னு குஷியா இருக்கும்.

நம்ம காவிரித் தாய் இளைப்பாறுவது எங்க மேட்டூர் அணையில்தான். இங்கு இருந்துதான் டெல்டாவுக்குப் பாய்ஞ்சு தமிழ்நாட்டுக்கே சோறு போடுறா. இடைப்பாடி பக்கத்துல இருக்கிற பூலாம்பட்டி கிராமம் நடிகர் பாக்யராஜுக்குப் பிடிச்ச ஊர். பல படங்களை அங்கேதான் எடுத்தார். இங்கே ஊரைப் பிளந்துக்கிட்டு காவிரி ஓடுது. ஊரின் மறுபக்கத்துக்குப் படகுலதான் போகணும். ஏழைகளோட ஊட்டினு சொல்ற ஏற்காட்டுக்கு சேலத்தில் இருந்து அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் போயிடலாம். ஏற்காடு ரொம்பவும் குளிராது; ரொம்பவும் வெயில் அடிக்காது. வருஷம் முழுவதும் ஏ.சி. போட்ட மாதிரி ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா ஊரிலேயும் சாப்பிட்டு இருக்கேன். ஆனா,  சாப்பாடுன்னா அது சேலம் மாதிரி வராது. வண்டியோரக் கடையில ஆரம்பிச்சு, பெரிய ஹோட்டல்கள் வரைக்கும் உணவு தரமாகவும் ருசியாகவும் இருக்கும். தட்டு வடை செட்டு ஒண்ணு இருக்கு. இது சேலத்தில் மட்டும்தான் கிடைக்கும். ரெண்டு தட்டு வடைக்கு நடுவில் தக்காளி சட்னி, பச்சை மிளகாய் சட்னி, கொத்தமல்லி சட்னி, துருவின கேரட், பீட்ரூட், வெங்காயம்வெச்சு நல்லெண்ணெய் விட்டுத் தருவாங்க. சும்மா சுர்ர்ருன்னு இருக்கும். விலை ஒரே ரூபாய்தான். அம்மாப்பேட்டைப் பக்கம் போனா எந்நேரமும் சுடச்சுட மட்டன் கறி வடை, போண்டா கிடைக்கும். செவ்வாய்ப்பேட்டையில் இன்னிக்கும் சாதத்தை எடை போட்டு ஜனதா சாப்பாடு விக்கிறாங்க. லீ பஜார் பக்கம் லாரி மார்க்கெட்டுக்குப் போனா, விடியற்காலை 4 மணிக்கும் சுடச்சுட புரோட்டாவும் கோழிக் குருமாவும் கிடைக்கும்.

சாப்பாடு மட்டுமில்லைங்க... உதவும் குணமும் சேலத்து மக்களுக்கு அதிகம். ரோட்டுல யாராச்சும் கீழே விழுந்துட்டா, 'நமக்கு என்ன?’னு போக மாட்டாங்க. ஆஸ்பத்திரி வரைக்கும் வருவாங்க. காலத்தோட மாற்றத்தால வசதி வாய்ப்புகள் பெருகலாம். ஆனா, மக்களோட குணம் மட்டும் மாறாம இருக்கணும்னுதான் நான் தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிறேன்!

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம்
  படங்கள்: வி.செந்தில்குமார்