Published:Updated:

துடியலூர் to தடாகம்

வழி : பன்னமடை

##~##
'பா
ஸ்... நம்ம ஏரியாவில் மினி பஸ் ரவுண்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்...’ என்று துடியலூர் பக்கம் இருந்து தகவல் வந்தது. துடியலூர் டு தடாகம் ரூட் மினி பஸ்ஸில் கருவாட்டு மூட்டை வாசத்தைக் கமகமத்தபடி பயணம் செய்தோம். ட்ரிப் செம ஜாலி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ஏ ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி போட்டு... சிலுசிலுக்குற ரவிக்கை போட்டு...’ - ஸ்பீக்கர் அதிர, மெதுவாக நகர ஆரம்பித்தது மினி பஸ். சரக்கு ஏற்றிவிட்டு வரும் குடிமகன்களின் சலம்பல்... இளசுகளுக்கு இடையே ஓடும் ரொமான்டிக் கெமிஸ்ட்ரி... சில்லறை பாக்கியில் ஆரம்பித்து சில்மிஷம் வரை நீளும் பஞ்சாயத்து... என்று மினி பஸ்ஸுக்குள் ஒரு மசாலா படமே ஓடிக்கொண்டு இருந்தது.

துடியலூர் to தடாகம்

அப்பநாயக்கன் பாளையம் தாண்டி, பன்னிமடை வளைவைத் தொட்டது பஸ். ''டெரைவர் கண்ணு, கொஞ்சம் முன்னுக்கு விட்டு வண்டிய நிப்பாட்டு. வூட்டு வாசல்ல இறங்கிக்குறேன்...'' என்ற ஆத்தாவின் வேண்டுகோளை ஏற்று, வீட்டு வாசலில் வண்டியை பார்க் செய்தார் டிரைவர் குமார்.  

பன்னிமடைப் பிரிவு அருகே பஸ்ஸை மறித்த சிறுவன், 'சோளக்காட்டுக்குள்ளே நேத்து ராத்திரி நுழைஞ்ச ஷகிலாவும் விருமாண்டியும் இன்னும் திரும்பிப் போகலையாம். ஊரை சுத்திக்கிட்டு போங்கண்ணா’ என்று அட்வைஸை தட்டிவிட்டு சென்றான். பக்கத்து ஸீட்டு வெள்ளரிக்காய் வியாபாரி, ''அடிக்கடி இந்த ரூட்டுல யானைங்க கூட்டமா வந்துடும். அப்படி புகுந்த ரெண்டு யானையைத்தான் பையன் சொல்லிட்டு போறான். அடிக்கடி அதுங்க இங்க வந்து போறதால ஒவ்வொரு யானைக்கும் பெயர் வெச்சுப் போட்டானுங்க...'' என்று விளக்கம் கொடுத்தார்.

துடியலூர் to தடாகம்

டிரைவர் குமார், ''யானைங்க வர்றப்ப ஸ்பீக்கரை அணைச்சுட்டு வண்டியை நிறுத்திடுவோம். அப்பவும் ஜன்னல் வழியா தும்பிக்கையைத் துலாவிட்டுத்தான் போகும். பஸ் பின்னாடி இருக்கிற ஏணியில முதுகை சொரிஞ்சுக்கும். அதுவும் இந்த குட்டி யானைங்க படிக்கட்டுல கால்வெச்சு ஏக ரவுசு செய்றப்ப நமக்கு ஈரக்குலையே நடுங்கிடும்...'' என்று கிலியடிக்கவைத்தார். எக்ஸ்ட்ரா தகவலாக, துடியலூர் பகுதியில் தனது இரண்டு குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று 'ரவுண்ட்ஸ்’ வருவதாக சொல்லி பயணிகளும் பயமுறுத்தினார்கள்!

வரப்பாளையம் தாண்டியது பஸ். கையில் நோட்டு, புத்தகம் - டிபன் பாக்ஸ் சகிதம் ஏறியது ஒரு ஜோடி. கல்லூரி மாணவி கணக்காக இருந்தவர் முகத்தில் மானாவாரியாக வெட்கம். கடைசி ஸீட்டின் மூலையில் ஒதுங்கிவிட்டார்கள்.

மினி பஸ்ஸினுள் நடக்கும் காதல் மேட்டர்களை, தனி புத்தகமாகவே எழுதலாமாம். கண்டக்டரை போஸ்ட்மேனாக்கி காதல் கடிதங்கள் பரிமாறுவது, கண்டக்டருக்கே லெட்டர் தட்டிவிடுவது, தன்னோட ஆளுக்குப் பிடித்த பாட்டை சி.டி-யில் பதிவு செய்து வந்து போடச் சொல்லி டார்ச்சர் கொடுப்பது, காதலர்களின் அப்பாக்கள் வந்து டிரைவர், கண்டக்டர் கழுத்தில் அருவாளை வைப்பது என்று ரகம் ரகமாக நீள்கின்றன விஷயங்கள்!

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஏறும் நேரங்களில்தான் செமத்தியான யூத் கெட்டப்புக்கு மாறுகிறது மினி பஸ். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சாக்லேட் பரிமாற்றங்கள் என்று கலர்ஃபுல் காட்சிகள் சகஜம். அதுவும் மார்ச் மாதம் வந்துவிட்டால், 'பஸ் டே’ என்ற பெயரில் கேக் வெட்டி கண்டக்டர், டிரைவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விடுவார்களாம் பாசக்காரப் புள்ளைகள்!

மினி பஸ்ஸில் 'பிளேடு பார்ட்டிகளுக்கு’ வாய்ப்பு இல்லை. சந்தேகத்துக்கிடமாக ஒருவர் ஏறினாலும், 'உஷாரய்யா உஷார்... ஓரஞ்சாரம் உஷாரு’ என்று சங்கேத சங்கீதம் இசைக்கிறார்கள் அலர்ட் ஆறுமுகங்கள்.  

இந்த ரூட்டில் இருக்கும் செங்கல் சூளைகளில் தென் மாவட்டங்களை சேர்ந்த குடும்பங்கள் தங்கி வேலை பார்க்கின்றன. அவர்களின் சவாரி, இந்த மினி பஸ்கள்தான். 'எலேய் மொக்கராசு! நம்ம கண்டக்டர் ஆளே மாறிட்டாவ பார்த்தியளா. காக்கி கலர் சொக்காயில சும்மா சொக்கவெக்கிறார்’ என்று லந்தடிப்பதும், 'அண்ணாச்சி, கொஞ்சம் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணிட்டு வர்றீயளா!’ என்று கண்டக்டர் கவுன்ட்டர் கொடுப்பதும் ஜாலித் தருணங்கள்.

இப்படியாக மேடேறி, பள்ளம் தொட்டு, 'கெக்கே பிக்கே’ கேரக்டர்களைத் தாங்கி தடாகம் பேருந்து நிறுத்தத்தை வந்தடைகிறது மினி பஸ். மகிழ்ச்சியுடன் கையசைத்து விடைபெற்றோம்!

- எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ், தி.விஜய்