பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீன சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி!

சிறுதானியச் சமையல் !

இந்த இதழில் பரிமாறுபவர்... சென்னை, சமையல்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீனிவாசன்.

 வெள்ளை மக்காச்சோள புட்டு

சிறுதானியச் சமையல் !

தேவையானவை:

மக்காச்சோளம் - 100 கிராம்

தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு

நெய் - 20 கிராம்

சர்க்கரை - 50 கிராம்

வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10 கிராம்

ஊறவிட்ட கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

வாழைப்பழ வில்லைகள் - சிறிதளவு

சிறுதானியச் சமையல் !

 செய்முறை:

மக்காச்சோளத்தைப் புடைத்து, சிவக்க வறுத்து, வெளுப்பாக வரும் வரை மிக்சியில் பொடிக்கவும். இதை, சிறிது உப்பு, வெந்நீர் தெளித்து, ஊறவைத்த கடலைப் பருப்புடன், மூட்டைக் கட்டி, 10-15 நிமிடம் துணியில் இட்லிப் பானையில் வேக விடவும். வெந்தவுடன் நன்கு உதிர்த்து சர்க்கரை, நெய்,  தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வாழைப்பழ வில்லை கலந்து பரிமாறவும்.

சர்க்கரைக்குப் பதிலாக, 75 கிராம் பாகுவெல்லத்தை உருக்கி, சேர்த்தும் செய்யலாம்.

 சாமை நொய் காஞ்சிபுரம் இட்லி

 தேவையானவை:

சாமை நொய், குண்டு உளுத்தம் பருப்பு - தலா 200 கிராம்

கருப்பு உடைத்த உளுத்தம் பருப்பு -

2 டீஸ்பூன் (ஊறவிட்டது)

சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு - தேவைக்கேற்ப

நெய் எண்ணெய் சேர்ந்து - 100 கிராம்

சிறுதானியச் சமையல் !

செய்முறை:

முதல் நாள் மாலையில் குண்டு உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் உப்பு, சாமை நொய், சுக்குப்பொடி, பெருங்காயம், ஊறிய கருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து, கெட்டியாக அரைத்து கரைத்து வைக்கவும். மறுநாள் காலை நெய் மற்றும் எண்ணெயைக் காய்ச்சி, அதில் மிளகு, சீரகத்தைப் பொரியவிட்டு மாவில் கொட்டி கலந்து, எண்ணெய் பூசிய உயரமான பாத்திரத்தில் முக்கால் பாகம் வரை கொட்டி, குக்கரில் வைத்து, வெயிட் இல்லாது வேகவிட்டு எடுக்கவும். இது வேக அரை மணி ஆகும். ஆறிய பின் கவிழ்த்து, துண்டுகளாக்கி இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும். சாமை காஞ்சி இட்லி, வழக்கமான காஞ்சிபுரம் இட்லி போல் கனமாக இருக்காது. லேசாகத்தான் இருக்கும். ருசி அபாரமாக இருக்கும்.

 வருங்காலம்... சிறுதானிய காலம்!

இயற்கை விவசாய ஆர்வலரான நடிகர் பசுபதி, சிறுதானிய உணவுகள் குறித்து பகிர்ந்துகொண்ட தகவல்கள்:

சிறுதானியச் சமையல் !

''இன்னிக்கு மூதாதையர்கள பத்தி பெருமையா பேச ஆரம் பிச்சாலே... அவங்களோட உடல் வலிமை, நோயில்லா வாழ்வு முறை பத்திதான் பேசுவோம். அதுக்குக் காரணம்... அரிசி உணவு இல்லாம, சிறுதானியங்கள அவங்கல்லாம் அதிகமா சாப்பிட்டதுதான். ஆனா, நாம அதையெல்லாம் ஒதுக்கிட்டோம்.

கடந்த நாலு வருஷமா இயற்கை முறையில் விளையுற உணவுப் பொருளை சாப்பிட்டு வர்றேன். இதுல சிறுதானியங்கள அதிகமா எடுத்துக்கிறேன். கேழ்வரகு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி எல்லாமே சாப்பிடுவேன். எங்க தோட்டத்துல விளையுறது போக, மீதியை வெளியில வாங்கிக்கிறேன். கஞ்சி, இட்லி, தோசை, பொங்கல், சாதம்னு செஞ்சு சாப்பிடுவேன்.

வேற எந்த பொருள்லயும் இல்லாத அளவுக்கு நார்ச்சத்து, சிறுதானியங்கள்ல இருக்கு. உதாரணமா, கோதுமையில

4 சதவிகிதம்தான் நார்ச்சத்து இருக்கு. இதுவே சிறுதானியங்கள்ல 9 சதவிகிதம் இருக்கு. புரோட்டீன், தாது சத்துக்களும் இருக்கு.

அரிசி, பெரும்பாலும் பாலிஷ் போட்டு வர்றதால... அதுல எந்த சத்தும் இல்லாம போகுது. வயிறு மட்டுமே நிறையும். சிறுதானியங்கள முதல்ல சாப்பிடும்போது சாப்பிட்ட மாதிரியே இல்லனு சொல்வாங்க. சாப்பிட சாப்பிடத்தான் அதோட நன்மைகள் தெரியும். நுண்ணூட்டச் சத்துக்கள்னு கடைகள்ல விற்கப்படுகிற எல்லா பொருள்கள்லயும் நம்மோட சிறுதானியங்கள்தான் கலந்திருக்கு. அப்படியிருக்க, சிறுதானியங்கள நாம ஏன் உணவா எடுத்து சாப்பிடக் கூடாது. இத குழந்தைகள்கிட்டயும் அறிமுகப்படுத்தணும். வருங்காலங்கள்ல சிறுதானியங்கள்தான் உணவு பொருள்கள்ல முக்கிய இடத்த பிடிக்கும்'' என்றார்.

லஷ்மி ஸ்ரீனிவாசன் படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு