##~##

ழு பேர் அமரக்கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட தன் புதிய எஸ்.யூ.வி. காரை விதவிதமாகப் படம் பிடித்து இ-மெயிலில் அனுப்பியிருந்தான் என் நண்பன். தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் அவனை ஒரு மாதத்துக்கு முன்பு சந்தித்தபோதுதான் தன் பொருளாதாரப் பிரச்னைகள் பற்றிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான். நண்பனோடு சேர்த்து வீட்டில் மொத்தம் நான்கு பேர். 'இரண்டு பிள்ளைகளின் பள்ளிக்கூடச் செலவு உள்ளிட்ட தேவைகள் அதிகரித்துக்கொண்டே போவதாக அப்போது அலுத்துக்கொண்டவன், இப்போது எதற்காக இத்தனை பெரிய கார் வாங்கியிருக்கிறான்?’ என்று எனக்குள் கேள்வி எழுந்தது!

பள்ளிப் பருவத்தில் இருந்து அவன் எனக்கு நண்பன். ஆனால், அவன் புதிதாக கார் வாங்கியிருப்பது எனக்கு அத்தனை சந்தோஷமாக இல்லை. அது தேவையில்லாத செலவு என்பதால் அப்படித் தோன்றியதா, இல்லை அவனுடைய புதிய கார் என் குட்டிக் காரைவிடச் சிறப்பாக இருக்கிறது என்பதால் அப்படித் தோன்றியதா என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் புதிய காரில் இரண்டு நாட்களுக்கு முன் என் வீட்டுக்கு வந்தான் அவன். அவனது பெரிய காருக்கு முன் என் கார், பொம்மைக் கார் போல பலமிழந்து காணப்பட்டது. ''மாப்ள... கார் எப்படி கப்பல் கணக்கா இருக்கா?'' என்று கேட்ட நண்பனின் கண்களில் அத்தனை பரவசம்.

பாஸ்வேர்டு்

அந்த வண்டியில் என்னை வைத்து ஒரு ரவுண்ட் அடித்து, அதன் சிறப்புகளை எல்லாம் அவன் பேசி ஓய்ந்த பிறகு, ''இப்ப இந்த வண்டி அவசியமா?'' என்று மெதுவாகக் கேட்டேன். இந்தக் கேள்வி அவனைக் கோபப்படுத்தும் என்பதால் மிகவும் தயக்கத்துடன்தான் கேட்டேன். ஆனால், அவன் எந்தக் கோபமும் இல்லாமல் கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று, ''தேவையில்லைதான்... என்ன பண்றது?'' என்று கேட்டான்.

நான் ஆச்சர்யத்துடன் அவனைப் பார்க்க, அவனே தொடர்ந்தான், ''ஆபீஸ்ல என்னைவிட ஜூனியர், எனக்குக் கீழே வேலை செய்யிறவன் எல்லாம் பெரிய  பெரிய காரா வாங்கிட்டுவந்து நிக்கிறான். 'ஓட்டிப் பாருங்க சார்’னு பந்தாவா கார் சாவியை என் கைல கொடுக்குறான். அவன் அந்த கார்ல வர்றப்போ, நான் பழைய கார்ல போயிட்டு வந்தா நல்லாவா இருக்கும். அதான், புதுசா இந்த காரை இறக்க வேண்டியதாப் போச்சு. மாப்ள... நமக்குத் தேவையோ தேவை யில்லையோ, இப்ப எல்லாம் இந்த மாதிரியான பந்தா ரொம்ப அவசியம்டா!'' என்று சிரித்தான். அத்தோடு அவன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். ''நீயே சொல்லு... இந்த கார்ல ஒரு ரவுண்ட் போனப்ப, 'அட... இவன் இவ்வளவு பெரிய கார் வாங்கிட்டானே..! நாமளும் உடனே ஒரு பெரிய கார் வாங்கணும்’னு உனக்குத் தோணுச்சா இல்லையா?'' என்று கேட்டுவிட்டு 'சொய்ய்ங்’ என்று புதிய காரில் பறந்துவிட்டான்.

அவன் சென்ற பிறகும், 'இதையெல்லாம் தேவையில்லாத செலவுனு நினைக்கக் கூடாது. பாசிட்டிவா எடுத்துக்கணும்’ என்று அவன் சொல்லிச் சென்றது நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது. கார், 42 இன்ச் கலர் டி.வி., லட்சம் ரூபாய்க்கு மேல் கொட்டி வாங்கிய சோஃபா, சத்தம் தெறிக்கும் சவுண்ட் சிஸ்டம், ஆறே மாதங்களுக்குள் 'எக்ஸ்சேஞ்ச்’ சலுகையில் மாற்றி வாங்கிய செல்போன், வாரம் ஒருமுறை மட்டுமே 'லாக்-இன்’ செய்யப்படும் விலை உயர்ந்த கணினி... என பல பொருட்கள் நம் கனவுகளின், ஆசைகளின் வெளிப்பாடா, அல்லது நம் கௌரவத்துக்கான குறியீடா என்ற சிந்தனை எனக்குள் அலையடித்துக்கொண்டே இருந்தது!

'என் தேவை இதுமட்டும்தான். இது போதும். என் சமூக மரியாதையை, அந்தஸ்தைத் தீர்மானிக்க நான் யாரோ ஒருவரைவிடப் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்ற தீர்மானத்தில் சில மாதங்களுக்கு மேல் நம்மால் உறுதியாக இருக்க முடியவில்லை. 'அட... அந்த பந்தா எல்லாம் இல்லைன்னா ஊர்ல ஒரு பய நம்ம மதிக்க மாட்டான்’ என்ற ஒரு லாஜிக்கான சமாதானம் அந்தத் தீர்மானத்தை அடித்து உடைத்து விடுகிறது.

பாஸ்வேர்டு்

என் கல்லூரிப் பேராசிரியர் அடிக்கடி இதைச் சொல்லுவார். 'செல்வச் செழிப்பான பணக்காரன்... சாதாரண ஏழை. இந்த ரெண்டு பேருக்கும் இந்தச் சமூக அந்தஸ்தைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை. இந்த ரெண்டு அந்தஸ்துக்கும் நடுவுல இருக்கிறவங்கதான், 'நான் யார் தெரியுமா’னு காட்டிக்க ரொம்பவும் முயற்சி பண்ணுவாங்க’ என்பார். அது ஓரளவு உண்மையும்கூட என்று இப்போதெல்லாம் அடிக்கடி எனக்குத் தோன்றுகிறது!

ம் அந்தஸ்துக்குச் சமமானவர்கள் என்று நாம் வைத்திருக்கும் பட்டியலில் இருக்கும் ஒருவர், தன் பொருளாதார உயர்வின் அடையாளமாக ஒன்றை வாங்கும்போது, அதைவிடப் பெரிதாகவோ, அல்லது அதற்கு இணையாகவோ நாமும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்பது இங்கே பொதுவிதியாகப் பதிந்துவிட்டது. யதார்த்தத்திலும் இந்தச் சமூகம் தன்னுடைய பொருளாதாரத்தை அடுத்தவரிடம் சொல்கிற, பிறரின் அந்தஸ்தை விசாரித்துத் தெரிந்துகொள்கிற அமைப்பாகத்தான் இருக்கிறது.

'அண்ணா நகர்ல கிரவுண்டு விலை எக்கச்சக்கமா ஏறிப் போச்சு’ என்று விலைவாசி பற்றிப் பேசுவது போலத் தொடங்கி, 'இப்பத்தான் நாங்க அங்கே ஒரு கிரவுண்ட் வாங்கினோம்’ என்ற தம்பட்டத்தை ஒருவர் நாசூக்காக அடித்துக்கொள்கிறார். புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடம், தன் பொருளாதார அந்தஸ்தைச் சொல்வதன் மூலம் தன் மீதான கவனிப்பு உயர்வானதாக இருக்கும் என்று பலரும் நம்புகிறோம். மிகச் சில நிமிடங்களே நடக்கும் உரையாடலில், 'உங்க வீடு எங்க இருக்கு?’ என்ற கேள்வியில் தொடங்கி, அது சொந்த வீடா, வாடகை வீடா என்று அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம். பல நேரங்களில் இப்படியான கேள்விகளே நம் அந்தஸ்து குறித்த தெளிவின்மையை நமக்கு உணர்த்துவதாக அமைகின்றன!

'டேய் நீ வேணும்னா உன்னைப் பத்தி கவலைப்படாம, கண்டுக்காம இருக்கலாம். ஆனா, உன் கைல கட்டுற கடிகாரத்துல இருந்து கால்ல போட்டுருக்குற ஷூ வரை அங்குலம் அங்குலமா இந்த உலகம் அளந்துட்டேதான் இருக்கும். அதுக்காகவே நீ இந்த வேஷம் போட்டுத்தான் ஆகணும்’ என்று சொன்ன ஒரு நண்பன், அந்த அடையாளங்களால், விலை மதிப்புமிக்க அந்தப் பொருளாதாரக் குறியீடுகளால் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. ஆனால், 'அவன் என்ன பிராண்ட் கடிகாரம் அணிகிறான்’, 'இவன் என்ன கார் வைத்திருக்கிறான்’ என்று எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு நண்பன் பத்து மீட்டிங்குகளில் கலந்துகொண்டு ஆறு வணிக ஒப்பந்தங்களை முடித்துக் காரியம் சாதித்துவிடுகிறான். இப்படியான சூழல்களில் 'உலகம் ஆளைக் கவனிக்கிறதா அல்லது அவன் திறனைக் கவனிக்கிறதா?’ என்று ஒரு குழப்பம் வரத்தான் செய்கிறது.

பாஸ்வேர்டு்

டா படா ஒப்பந்தப்புள்ளிகள் பெற்று ஏற்றுமதி தொழில் செய்யும் ஒரு நண்பன், இரண்டு அலைபேசிகள் வைத்திருந்தான். ஒன்று சாதாரண, பேசும் வசதி மட்டுமே கொண்ட போன். இன்னொன்று ஒரு குட்டிக் கணினி போல இருக்கும் நவீனரக போன். 'எதற்கு இந்த இரண்டு போன்கள்?’ என்று அவனிடம் கேட்டால், 'ஒண்ணு பேசுறதுக்கு... இன்னொன்னு பெரிய ஆட்களைப் சந்திக்கும்போது மேஜைல அவங்க பார்வைல படுற மாதிரி வைக்கிறதுக்கு’ என்கிறான். லட்சக்கணக்கில் வர்த்தகம் செய்யவிருக்கும் கோடீஸ்வர முதலாளி ஒருவர், நவீன ரக அலைபேசியைப் பார்த்து மயங்கிப் போவாரா என்பது தெரியவில்லை. ஆனால், சில நேரங்களில் அப்படியான ஷோ தேவைப்படுகிறது என்று அவன் அழுத்தமாகச் சொல்கிறான்!

இதை உண்மை என்று ஆணித்தரமாக நம்பினால், அதைவிடச் சிக்கல் வேறு இல்லை. இந்த உலகத்தில் நம் இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் சில அலங்காரங்கள் தேவைப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய அலங்காரங்கள்தான் நம்மைச் சார்ந்த அத்தனை விஷயங்களையும் தீர்மானிக் கின்றன என்று முடிவெடுப்பது சரியானதல்ல. உயர்பதவியில் இருக்கும் ஒருவர், தன் குழுவில் இருப்பவர்களைவிட உயர்வானவனாக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என முனைவது மிகப் பெரிய அபத்தம்! உறவுகளிடமும், சுற்றங்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் தான் யார் என்று நிரூபித்துதான் வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தெரிந்தோ, தெரியாமலோ நமக்கு மிக இளம் பருவத்திலிருந்தே மனதில் பதிய வைக்கப்பட்டு இருக்கிறது! இதனாலேயே தேவையற்ற பொருட்களை வாங்கிச் சேர்க்கும் பழக்கம் அதிகரித்து பொருளாதாரரீதியாகவும் நாம் முடங்கிப்போகிறோம்! 'இந்தப் பொருள் இப்போது எனக்கு அவசியம் தேவையா?’ என்ற நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலைச் சொல்லாமல் 'நிரூபிப்பு’ என்ற நெருக்கடி நிலைக்குத் தள்ளி நம்மை முடிவெடுக்க வைக்கிறது புறச்சூழல்!

அடுத்தவரின் வளர்ச்சியைப் பார்த்து அதே போல் நாமும் வளர வேண்டும் என்று முயல்வது தவறல்ல. ஆனால், தன்னை அடுத்தவருக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, தனக்கு தேவைப்படாத அந்தஸ்தை எட்ட எம்பிக் குதிப்பவர்கள், வீட்டுக்குள் புலம்பிக்கொண்டும், வெளியே சிரித்துக்கொண்டும்தான் வாழ வேண்டி இருக்கும். இந்த வாழ்க்கை யாரையும் முந்துவதற்கான போட்டி அல்ல. நாம் அனுபவித்து உணர்வதற்கானது. இன்னொருவருக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நாம் எடுக்கும் சில அபத்த முடிவுகள், முடிவற்ற வேதனைப் பயணத்துக்கான ஆரம்பமாக இருந்துவிடும்!

'எனக்கு எது வேண்டும்... எது வேண்டாம்’ என்று தீர்மானிக்க வேண்டியது நாம்தான்... மற்றவர்கள் அல்ல!

- ஸ்டாண்ட் பை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism