Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 23

ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன் - 23

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ண்பர்கள் யாருடைய அறைக்குச் சென்றாலும் சரி, 'நிஜமாவே சரக்கு அடிக்க மாட்டீங்களா மாரி?’ என்ற ஒற்றைக் கேள்வியால், என்னைக் கட்டித் தூக்கி அறையின் நடுவே அந்தரத்தில் வறுத்த கோழியாட்டம் தொங்கவிட்டுவிடுவார்கள்.

'சினிமால இருக்கீங்க, கதை, கவிதை எழுதுறீங்க, காதலிக்கிறீங்க, அரசியல் பேசுறீங்க, அநாதையா அலைஞ்சிருக்கீங்க, அவமானப்பட்டிருக்கீங்க... இது எல்லாத்தையும்விட பழைய காதலிங்க எல்லாம் பிள்ளை பெத்து ஆன்ட்டி ஆன பிறகும்  தேடித் தேடிப் போய் பார்த்திருக்கீங்க... அப்புறம் எப்படி பாஸ் சரக்கு அடிக்காம இருக்கீங்க? என்ன ஆனாலும் சரி, இன்னைக்கு ராத்திரி இந்தத் தேசத்தின் சாமான்ய மக்களின் விடுதலைக்காக இல்லாட்டியும் நண்பனின் அக்கா குழந்தைக்கு மொத மொட்ட போட்டதுக்காகவாவது நீங்க உங்க மொதக்குடியைக் குடிச்சே ஆகணும் மாரி’ என்று பலப்பலவாறு வற்புறுத்தி இருக்கிறார்கள் நண்பர்கள். ஆனால், அவர்களிடம் ஏதேதோ காரணங்களைக் கசிந்துருகும் கதைகளாகச் சொல்லிக் குடிக்காமல் தப்பியிருக்கிறேன். அதில் நிறையக் கதைகள், உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நிறைய கதைகள் வெறுமென போதையில் சொல்லிச் சொல்லி சிரிக்கப் பட்டிருக்கின்றன. நிறைய கதைகள், பொய்யென தொடக்கத்திலேயே அவமானப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், இன்னும்  யாரிடத்திலும் சொல்லாத ஒரு கதை என்னிடம் மிச்சம் இருக்கிறது. அதை நிச்சயம் உங்களால் நிராகரிக்கவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது.

அது கொத்தனார் வேங்கையன் அண்ணாச்சியின் கதை என்றும் சொல்லலாம்... என் அப்பாவின் கதை என்றும் சொல்லலாம் ஏனெனில், கதையில் இருவருக்கும் நான் கொடுத்தது ஒரே மேடை, ஒரே வேடம், ஒரே குரல், ஒரே வசனம்!

மறக்கவே நினைக்கிறேன் - 23

ல்லூரியில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்தின்போது  குருட்டுக் கோபத்தில் கழிவறை கோப்பைகளை உடைத்தற்காக நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன். 'கண்டிப்பாக அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்தால் மட்டுமே, மாரிசெல்வம் கல்லூரிக்கு வரமுடியும்’ என்று வகுப்பில் சர்க்குலர் வாசித்துவிட்டுப் போனார்கள். உடனடியாக சாலையில் போய்கொண்டிருக்கும் நிறைய 'சித்தப்பா’க்களை, 'அத்தை’களை, 'மாமா’க்களை எல்லாம் விரட்டிப் பிடித்து கூட்டிவந்து தேவையான வசனத்தைச் சொல்லிக்கொடுத்து நிறுத்தினாலும், கல்லூரி நிர்வாகம் சம்மதிக்கவில்லை. 'அப்பாவோடுதான் வந்தே தீர வேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நின்றது.

'பாத்தீங்களா... நீங்க கஷ்டப்பட்டு படிக்க அனுப்புன புள்ள, என்ன பண்ணியிருக்குனு’ என்று பத்துப் பேர் சேர்ந்து சொன்னால், தூக்கிப்போட்டு மிதிக்கிறவரில்லை...  அதற்காக துடிதுடித்து அழுகிற தகப்பன் என் அப்பா. ஆகவே, என்ன ஆனாலும் சரி அப்பாவை மட்டும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், அப்பா இல்லாமல் கல்லூரிக்கும் போகமுடியாது என்பதால், ஒரு வாரம் என்ன செய்வதென்று தெரியாமல், கல்லூரி வளாகத்தையே சுற்றிக்கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் நண்பர்கள் சிலர் கொத்தனார் 'வேங்கையன் அண்ணாச்சி’ என்கிற மகா நடிகரையும் பல கல்லூரிகளில், பள்ளிகளில் பல மாணவர்களுக்கு அப்பாவாகச் சென்று அவர் செய்திருந்த சாகசங்களையும் எனக்குச் சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். பார்த்தவுடனே யாருடைய அப்பா என்றும் அவரை தைரியமாகச் சொல்லலாம். அப்படி ஒரு முகம் வாய்த்திருக்கிறது அவருக்கு. சிமென்ட் கலவையோடு நாடிநரம்பு தெறிக்க மூச்சு வாங்கிக்கொண்டு 'பொன்வண்டு’ சோப்பு பனியனோடு அவர் நின்ற கோலம், தூத்துக்குடி உப்பளத்தில் உப்பு வெட்டபோன என் அப்பாவின் தோற்ற எச்சமாக இருந்தது. சொல்கிற ஒரே வார்த்தையில் கேட்பவரின் நெஞ்சில் ஆட்டு ஈரலாட்டம் ஒட்டிக்கொள்கிற வித்தை ஒன்றை அவர் கைவசம் வைத்திருப்பது அவரைச் சந்தித்தபோது எனக்குப் புரிந்தது.  

''எந்த காலேஜ்டே?''

''லா காலேஜ்!''

''என்னது வக்கீல் காலேஜா..? துருவித் துருவி கேள்வி கேட்பானுவளே... என்னால சமாளிக்க முடியுமா?''

''அவங்க நிறைய பேசுவாங்க... நீங்க எதுவும் பேசாம சும்மா என்னை முறைச்சிட்டு இருந்தாலே போதும். கடைசியா நான் கண் சிமிட்டும்போது ஓடிவந்து ரெண்டு சாத்து சாத்துங்க... எல்லாம் சரியாகிடும்!''

''சரி விடு... அப்படியே செஞ்சிடுவோம்!'' என்றவரை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, உச்சி எடுத்து வாரிய தலை, பழைய செயின் வாட்ச், நெற்றியில் திருநீறு என முடிந்த அளவுக்கு கல்லூரியில் பையனைப் படிக்க வைத்திருக்கும் ஏழை அப்பாவின் தோற்றத்துக்கு  உருமாற்றி அழைத்துச் சென்றேன்.

ல்லூரியில், வேங்கையன் அண்ணாச்சியிடம் என்னைப் பற்றி புகார் பட்டியல் வாசித்தார்கள்.  

''உங்க புள்ள சேட்டை பண்றான்!'' - வேங்கையன் அண்ணாச்சி மௌனம்.

''உங்க புள்ளைக்கு சேர்க்கை சரியில்லை!'' - வேங்கையன் அண்ணாச்சி முறைப்பு.

''உங்க புள்ள  ஒழுங்கா கிளாஸுக்கு வர்றது இல்லை!'' - வேங்கையன் அண்ணாச்சி சின்ன இருமல்.

''உங்க புள்ள ஃபர்ஸ்ட் செமஸ்டர்ல எல்லா பாடமும் ஃபெயிலு. அதாவது தெரியுமா உங்களுக்கு?''

'போதும்’ என்றபடி அண்ணாச்சிக்கு  கண்ணைச் சிமிட்டிவிட்டேன். அந்த சமிக்ஞை கிடைத்ததும் வேங்கையன் அண்ணாச்சி ஓடிவந்து கொடுத்த அடிகள் ஒவ்வொன்றும் நான் எதிர்பார்த்து தயாராக இருந்ததைவிட பலமாகவே இருந்தது. அண்ணாச்சி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் போல..!  

''நிறுத்துங்க... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய இப்படி அடிச்சு வளக்காதீங்க...  அதுக்கு அடிதடி பழகிடும். புத்திமதி சொல்லி வளர்க்கப் பாருங்க. அப்புறம் அப்பாலஜி கடிதம் ஒண்ணு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டுப் போங்க'' என்றதும், எல்லாம் திட்டமிட்டதைப் போல சுபமாக முடிந்ததில் என்னைவிட வேங்கையன் அண்ணாச்சிக்குத்தான் ஏக மகிழ்ச்சி. அப்போதே அந்த அறைக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் என்னைப் பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டார் அண்ணாச்சி. அதுதான்... அந்தச் சிரிப்புதான் அவர் சாகசத்தின் குறுகுறுப்பு என்று அப்போது தோன்றியது எனக்கு.

''தம்பி என்ன அடி ரொம்ப வலிக்குதா? அது ஒண்ணுமில்ல தம்பி. கரண்டி பிடிச்ச கொத்தன் கையிலா... அதான் லேசா தடவினாலும் பச்சபுள்ள உனக்கு அப்படி வலிக்குது'' என்றவருக்கு, சொன்னதைவிட அதிகமாக இரண்டு குவார்ட்டர்களை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அன்றிலிருந்து எனக்கு மட்டுமல்ல நிறைய நண்பர்களுக்கு நிறைய கல்லூரிகளுக்கு நானே அவரை அப்பாவாகக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். எங்களால் முடிந்தது அவருக்கு ஒரு குவார்ட்டர். அவரால் முடிந்தது எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பு... அவ்வளவுதான்!  

மறக்கவே நினைக்கிறேன் - 23

னி கல்லூரியில் என்ன பிரச்னை வந்தாலும் அப்பாவாக வந்து அசால்டாக அப்பாலஜி எழுதிக்கொடுக்க வேங்கையன் அண்ணாச்சி இருக்கிறார் என்ற தைரியத்தில் முன்நின்று மூக்கை நுழைத்துக்கொண்டு நிகழ்த்திய போராட்டங்களும் சேட்டைகளும் நிறைய. அதில் ஒன்றுதான், கான்ஸ்டிட்டியூஷன் வகுப்புக்கு வெள்ளை பேன்ட்டும் வெள்ளை சட்டையுமாக வந்திருப்பது புது பிரின்சிபால் என்று தெரியாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, தூயத் தமிழில் நடத்தச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து ஒற்றை ஆளாக பெஞ்ச் மீது ஏறி நான் உட்கார்ந்தது. வந்தவர் கோபமாகத் திரும்பிப் போனார். போன வேகத்திலேயே தன் முதல் சர்க்குலரை என் பெயர் போட்டு அனுப்பியிருந்தார்.

'அப்பாவைக் கூட்டி வந்தால் மட்டும்தான், ஹால் டிக்கெட் கிடைக்கும்; பரீட்சை எழுத முடியும்!’

'அதனாலென்ன... எனக்குத்தான் வேங்கையன் அண்ணாச்சி இருக்காரே!’ என்று அண்ணாச்சியைத் தேடிப் போனேன். அவர் வீட்டுக் கதவைத் தட்டியதும் பள்ளிக்குச் செல்லும் அவருடைய மகன், கதவைத் திறந்தான். ''அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. ரெண்டு நாளா ஒரே வயித்து வலி. ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரில வெச்சிருக்கு. அங்கதான் போறேன். வர்றீங்களா?'' என்று அவன் கேட்டதும், கையில் குவார்ட்டர் பாட்டிலோடு போயிருந்த என் முகத்தில் கொத்தனாரின் சிமென்ட் கரண்டியில் சிமென்ட் கலவையை அள்ளி சப்பென்று அறைந்ததுபோல் இருந்தது. வேறு வழியில்லாமல் அவனோடு மருத்துவ மனைக்குச் சென்றேன்.

அவசர சிகிச்சைப் பிரிவில் வாயிலும் மூக்கிலும் நிறைய டியூப்களோடு கண்களை மூடியபடி கிடந்த வேங்கையன் அண்ணாச்சியை, கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

இப்போது என்ன செய்வது? கல்லூரியில் எல்லோரும் வேங்கையன் அண்ணாச்சியைத்தான் என் அப்பாவாக நினைத்துக் கொண்டிருக்கி றார்கள். தோழி சத்யா, 'உங்க அப்பா முகம் ஒரு சாயலுக்கு நடிகர் ஜெய்சங்கர் மாதிரியே இருக்கு!’ என்று  சொல்லியிருக்கிறாள். திலகவதி மேடம், 'பையனுக்கு இங்கிலீஷ்தான் வரமாட்டேங்குது. அதை மறைக்கத்தான் அவன் இவ்வளவு சேட்டை பண்றான்’ என்று சொல்லியிருக்கிறாரே! இப்போது யாரை அப்பாவாகக் கூட்டிக்கொண்டு போனாலும் சிக்கல்தான். என் அப்பாவையே கூட்டிக்கொண்டும் போனாலும், 'சாமர்த்தியம்’ என்று நான் நினைத்தது இவ்வளவு சீக்கிரம் அசிங்கமானதாக அருவருப்பானதாக மாறிவிடக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், வேறு வழியில்லை. என்ன ஆனாலும் சரி என் அப்பாவையே கூட்டிவந்து எல்லா கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டியதுதான் என்று நான் முடிவு செய்த போது, எனக்குத் துளிர்த்த கண்ணீரில் வேங்கையன் அண்ணாச்சியின் முகமும் அப்பாவின் முகமும் சரிபாதியாகத் தெரிந்தன!

ப்பாவிடம், 'கல்லூரியில் வரச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று மட்டும் சொன்னேன். 'சரி’ என்றவரை, வேங்கையன் அண்ணாச்சியின் முகச் சாயலில் இருக்கும் 'ஜெமினி’ கணேசனாக கொண்டுவர நான் படுத்திய பாடு... பெரும்கதை. தன் பையன் படிப்பது சட்டக்கல்லூரி என்ற அச்சத்தில் நான் எப்படிச் சொல்கிறேனோ அப்படியே மாற அப்பா சம்மதித்ததில் எனக்கு ஆச்சர்யமில்லை. அவர் அப்படித்தான். மெத்தப் படித்த அதிகாரத்தின் மீது அப்படியோர் அச்சம் கொண்ட பழைய கதாபாத்திரம்.

வேங்கையன் அண்ணாச்சியை மனதில் வைத்துக்கொண்டு அப்பாவின் வளர்ந்த முடியைக் கட்டையாக வெட்டச் சொல்லி, நடு உச்சி எடுத்து சீவியதோடு, அவருடைய பழைய ஓடாத செயின் வாட்சை கையில் கட்டிவிட்டு, மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டைக்குள் பவர் சோப்பு பனியன் தெரிகிற மாதிரி போட்டுவிட்டேன். கிட்டத்தட்ட வேங்கையன் அண்ணாச்சி மாதிரி மாறியிருந்த அப்பாவை கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன்.எதற்காக தன்னை இப்படி யாரோ மாதிரி உருமாற்றி அழைத்து வந்திருக்கிறான் என்று ஒரு வார்த்தைகூட அப்பா கேட்காதது, அந்த நேரத்தில் பேரழுகையாக மாறி நெஞ்சுக்குள் உறுத்திக்கொண்டிருந்தது.

எது நடந்தாலும் அது என் அப்பா முன்தான் நடக்கப்போகிறது. அவர் எல்லா நாட்களையும் போல இன்றும் எல்லாருக்கும் முன் எனக்காக கண்ணீர் வடிக்கப்போகிறார். நான் ஒரு மரக்கட்டையைப் போல தலையைக் குனிந்து கொண்டு அப்பாவைப் பார்க்காத மாதிரி  சொரணையே இல்லாமல் நிற்கப்போகிறேன். இது அப்பாவுக்கும் எனக்கும் பள்ளியிலேயே பழக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் வலியோடு அதை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ச்சப்பட்டதைப் போல கல்லூரியில் பெரிதாக அப்பாவை யாரும் அடையாளம் கண்டுகொள்ள வில்லை. முன்னாடி அப்பாவாக வந்தவரும் இப்போது என்னுடன் அப்பாவாக வந்திருப்பவருக்கும் உருவமாற்றம் இருப்பதை துளி அளவுக்குக்கூடக் கண்டுபிடிக்கவில்லை  என்பதைப் போலத்தான் அவர்கள் நடவடிக்கை இருந்தது. ஆனால், 'இதுக்கு முன்னாடி நாலு முறை நீங்க வந்து மன்னிப்பு கேட்டு எங்க முன்னாடி உங்க புள்ளையை ஓடி ஓடி அடிச்சு அப்பாலஜி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டுப் போயிருக்கீங்க. ஆனா, உங்க புள்ளை இன்னும் மாறலை. என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?’ என்று அவர்கள் கேட்டபோது, அப்பா நிமிர்ந்து என்னைக் கண்ணீர் தேங்கும் கண்களோடு பார்ப்பார் என்பதால், படக்கென்று திரும்பிவிட்டேன்.

அவர் எதுவும் சொல்லாமல் வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்து, 'என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவன் உங்கள் மாணவன்’ என்று எழுதி கொடுத்துவிட்டு வேகமாக வெளியே வந்தார். தலைகுனிந்தபடி அவர் பின்னாலேயே வந்து நின்ற என்னிடம், எந்தப் பதற்றமும் இல்லாமல் விசாரித்தார்.

மறக்கவே நினைக்கிறேன் - 23

''வேற யாரையும் 'அப்பா’ன்னு கூட்டி வந்தியா?''

''ஆமா... வேங்கையன்னு ஒருத்தர்!''

''அவர் உன்னை அடிச்சாரா?''

''ஆமா... நான் சொல்லித்தான் அடிச்சாரு!''

''அவரோட வேஷத்தைதான் எனக்கு  இப்போ போட்டிருக்கியா?''

''ஆமா!''

''அவர் வீடு எங்கே... அவரை நான் பார்க்கணும். கூட்டிட்டுப் போ'' என்றவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி வேங்கையன் அண்ணாச்சி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

ந்தச் சூழ்நிலையை எப்படி விளக்க? வேங்கையன் அண்ணாச்சி இறந்து ஒரு நாள் ஆகியிருந்தது! அந்தப் பள்ளிச் சிறுவன் மொட்டைத் தலையோடு என்னைப் பார்த்து சிரிக்க, அவன் அம்மா எங்களை வேங்கையன் அண்ணாச்சியின் நண்பர்கள் என்று நினைத்து, ''அவன் வாங்கிக் கொடுத்தான்... இவன் வாங்கிக் கொடுத்தான்னு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து நடுவூட்டுல வெச்சி ஊத்தி ஊத்திக் குடிச்சி, இன்னைக்கு என்னையும் குழந்தைகளையும் நடுத்தெருவுல வுட்டுட்டுப் போயிட்டானே சண்டாளப் பாவி'' என்று கதறினார்.

என் மனம் அந்த இரண்டு வருடங்களில் வேங்கையன் அண்ணாச்சிக்கு அப்பாவாக நடித்ததற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த பாட்டில்களை எண்ணி குற்ற உணர்ச்சியில் குறுகிக்கொண்டிருக்க, அது நாள்வரை ஒருமுறைகூட என்னை எதற்கும் அடித்திடாத அப்பா எந்தக் காரணமும் சொல்லாமல், பளாரென்று என் கன்னத்தில் ஓர் அறைவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்துபோன அந்த நாளின் பேரதிர்ச்சிதான், குடியின் மீது நான் இன்றும் கொண்டிருக்கும் பேரச்சமாக இருக்கிறது!

- இன்னும் மறக்கலாம்...